Editor’s Choice
வரலாற்றின் கண்
அப்பாவின் ஆணையை ஏற்றுக் காட்டில் இருக்கும் ராமாயண காலத்து ராமருக்கு ஒரு கடிதம் வருகிறது, தபால் தலை ஒட்டி! இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரக் கதையில் வரும் ஓர் பாத்திரம் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தால் எப்படி இருக்கும்?
படிக்கும் போது உதட்டோரத்தில் ஓரு புன்னகை மிளிர்கிறதா? காமெடி கீமெடி செய்யவில்லை. இதெல்லாம் தமிழ் சினிமாவில் வந்த காட்சிகள்தான்.சீதா வனவாசம் (1934) படத்தில், தபால் தலை ஒட்டிய உறையைப் பிரிக்கிறார் ராமர்.
தமிழ் சினிமா ஓடி வந்த பாதை சுவையானது ஆனால் சிரமமானது. ஐரோப்பிய வடிவத்தை இரவல் வாங்கி அதில் தன் புனைவை ஊற்றித்தான் தமிழன் சிறுகதைகளை எழுதினான் எனினும் அவனிடம் அதற்கு முன்போ ஒரு நெடிய கதை சொல்லும் மரபு இருந்தது, திரைச்சீலை, விளக்குகள், ஒலிவாங்கி, ஒப்ப்னை என அரங்க நாடகங்கள் வரும் முன்பே அவனிடம் ஒரு நாடக மரபு இருந்தது, இங்கே. முன்னோர்களிடமிருந்து பெற்ற பொக்கிஷங்களாக இல்லாமல், தானே தேடிக் கொண்ட செல்வங்கள்தான் இதழியலும் சினிமாவும். தனிநபர்களின் திறன் சார்ந்து மட்டுமின்றி தொழில்நுட்பத்தின் பலத்தையும் உள் வாங்கிக் கொண்டு இயங்கும் இந்த ஊடகங்கள் ஆச்சரியங்கள் நிரம்பியவைதான்.
இந்த ஆச்சரியங்களின் ஊடே தமிழ் சினிமாவின் வரலாற்றைச் சொல்லிக் கொண்டு போகிறார் தியடோர் பாஸ்கரன். உதாரணத்திற்கு ஒரு சில:
· சம காலச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட முதல் பேசும் படம் கெளசல்யா, துப்பாக்கி ஏந்திய ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திகில் படம்.
· முப்பதுகளின் ஆரம்பத்தில் கஞ்சா புகைக்கும் வழக்கம் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது
· சினிமாவின் இலக்கணத்தையே மேம்படுத்திய செர்ஜி ஐஸன்ஸ்டீனின் பேட்டில்ஷிப் பொட்டம்கின் படத்தைத் திரையிட 1925ல் இந்தியாவில் தடை இருந்தது.
ஆனால் பாஸ்கரன் வெறுமனே செய்திகளைத் தூவிக் கொண்டே மட்டும் செல்வதில்லை.அந்தச் செய்திகள் நமக்கு அன்றைய சமூகத்தைப் பற்றி ஓர் பார்வை தருகின்றன.
வேறு சில உண்மைகளும் புலப்படுகின்றன.தமிழ் சினிமா காலந்தோறும் தன்னைத் தானே நகலெடுத்துக் கொள்கிறது என்பது அதிலொன்று தாழ்த்தப்பட்ட வேலைக்காரர் ஒருவர் வீட்டில் பிராமண விதவை அடைக்கலம் புகுகிறார் என கே.சுப்பிரமணியம் இயக்கிய பாலயோகினி கதையைக் குறிப்பிடுகிறார் பாஸ்கரன். ‘சிறை’யும் இதே போன்ற கதைதானே? “ ஒரு கதாபாத்திரத்தின் உள்ளக் கிடக்கையைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டியபோது இயக்குநர், கேமிராவை நேரிடையாகப் பார்த்து உரையாடுவதாக காட்சியை அமைத்து விடுகிறார். புதையல் படத்தில் கதாநாயகிக்காக சந்திரபாபு கடற்கரையில் காத்திருக்கும் போது, தான் அங்கே வந்திருக்கும் காரணத்தை உரத்த குரலில் தனி மொழியில் கூறுவார்.வடிவேலு நடித்த பல படங்களில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் காட்சிகள் இருக்கும்.” என்று நினைவுபடுத்துகிறார் பாஸ்கரன்
சினிமா துவக்கத்திலிருந்தே – குறும்பட பயாஸ்கோப் காலம், மெளனப் படக் காலம், பேசத் துவங்கிய காலம், சமகாலம்- எல்லாக் காலங்களிலும் கட்டணம் வாங்கிக் கொண்டு காட்சிகளை விரிக்கும் ஓரு கலையாகவே இருந்து வந்திருக்கிறது. இதை வைத்து நாலு காசு பார்க்கலாம் என்ற காரணத்தினால் அந்த்த் தொழில் நுட்பம் இங்கு பரவியது. இன்றும் அந்தப் பரிமாணத்தை அது இழந்து விடவில்லை. மாறாக தொழில் நுட்பத்தை வைத்துக் காசு சம்பாதிப்பது இப்போது மேலும் தீவிரப்பட்டிருக்கிறது. என்றாலும் அதன் வரலாற்றில் தமிழ்ச் சமூகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
சினிமாவை வரலாற்றுக் கண் கொண்டு காண விரும்புவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்
பாம்பின்கண் –சு.தியோடர் பாஸ்கரன் -கிழக்குப் பதிப்பகம் சென்னை விலை ரூ.150