இருள் கவிந்த பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அதாவது லா. ச. ரா பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேச ஆரம்பித்தால் வார்த்தைகளைத் தேடுகிற இடைவெளியோ, சில கருத்துக்களைச் சொல்லும்போது ஏற்படும் தயக்கமோ, செருமலோ, கனைப்போ இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பர். இடையிடையே சில கேள்விகளை வீசுவார். அந்தக் கேள்விகள் எதிரே இருப்பவரை நோக்கி வீசப்படுபவை அல்ல. தனக்குத்தானே கேட்டுக் கொள்ளப்படும் கேள்விகள். ‘அந்தச் சிரிப்பே நெருப்பு மாதிரி இருந்தது’ என்பது போன்ற சொல் முரண்கள், அவரது வாழ்க்கை அனுபவங்கள், அனுபவங்களில் இருந்து கிடைத்த தரிசனங்கள், எப்போதாவது படித்ததில் பிடித்தவை என்றுதான் பெரும்பாலும் பேச்சு இருக்கும். மற்ற எழுத்தாளர்களைப் பற்றி கசந்தோ, காழ்ப்போடோ பேசி நான் கேட்டதில்லை. அன்றும் அவரது சிந்தாநதி, ஆரவாரமின்றிப் பெருகிக் கொண்டிருந்தது. அதன் சில திவலைகள் என்மீது தெறித்து சிலிர்ப்பூட்டிக்கொண்டிருந்தன.
வாய்த்த ஒரு சிறு இடைவெளியில் நான் கேட்டேன்: “ இலக்கிய உலகில் உங்களுக்கு முன்னோடிகளும் இல்லை. வாரிசுகளும் இல்லை. எப்படி உணர்கிறீர்கள்?” அரைநொடிக்குப் பிறகு அமைதியைப் பிளந்து கொண்டு வந்தது லாசராவின் குரல்: How Tragic!
தன்னைப் போல் இன்னொரு எழுத்தாளன் இலக்கிய உலகில் இல்லை என்ற எண்ணம் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் கர்வத்தையோ, அல்லது பெருமித்த்தையோதான் கொடுத்திருக்கும். ஆனால் அது லாசராவிற்குத் தனிமையையோ, மெலிதான துயரத்தையோதான் தந்திருக்கக் கூடும். காரணம் வம்சம், சந்ததி, என்ற சங்கலிகளில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தவர் லாசரா.
லாசராவினுடைய எழுத்தின் அடிநாதமே குடும்பம்தான், குடும்பம் என்ற பாற்கடலை, பரவசத்தோடு, இடைவிடாமல் கடைந்து கொண்டிருந்தவர் அவர்.
“என் மேல் இன்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் குடும்பத்தைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன்.ஒரே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று. ஏன் எழுதக் கூடாது? சொல்லின் உச்சரிப்பை, அதன் சத்யத்தை, செளந்தர்யத்தை ஏன் குடும்பத்தில் தேடக்கூடாது? குடும்பம் என்பது உலகத்தின் ஆரம்பம், வளர்ச்சி எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான கண்ணாடி. மானுடத்தின் பரம்பரை, பண்பு, மாண்பு எல்லாவற்றின் தொட்டில். தாயின் மடி. எவ்வளவோ மகத்துவம் நிறைந்த உபதேச பீடம். கோட்பாடுகள், Values, இவைகளின் பிறப்பிடம். ஞானக் கோவில்” என்று அடுக்கிக் கொண்டே போகும் லாசரா தன் எழுத்தின் ஊற்றுக்கண், தேடலின் மூலம், குடும்பம்தான் என்பதை இறுதிவரை உறுதியாக நம்பியவர். குடும்பத்தைப் பற்றிப் பேசுவது தெய்வீகத்தை ஆராய்வதற்கு நிகரானது என்று கருதியே தன் எழுத்தின் மூலம் அதனைச் செய்து வந்தார்.
“ தெய்வத்தை நாம் கண்ணால் பார்க்கவில்லை. ஆனால் குடும்பம் என்கிற ஊர் உறவுகள் மூலம் தெய்வீகத்தின் தன்மைகளை நாம் ஆராய முடியும். குடும்பம் என்கிற உழற்சியில் ஏதோ Mysticism இருக்கிறது. என் தேடல் இந்த மூலத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது” என்கிறார் லாசரா.
தனது குடும்பத்தைப் பெருந்திருக் குடும்பம் என்பார் லாசரா. பெருந்திரு அவரது பூர்வீக ஊரான லால்குடியில் கோயில் கொண்டுள்ள கடவுள். அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம். ப்ரவிருத்த ஸ்ரீமதி என்ற சமஸ்கிருதப் பெயரின் தமிழ் பெருந்திரு. அவளோடு உடனுறைத் தெய்வம் சப்தரிஷீசன்.
லாசரா தன் குடும்பத்தைப் பெருந்திருக்குடும்பம் என்றழைத்துக் கொள்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. லாசராவின் அன்னையின் பெயரும் ஸ்ரீமதிதான். தந்தையின் பெயர் சப்தரிஷீசன்.
லாசராவின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தியவர்களில் அவரது தாய், மற்றும் தந்தையைப் பெற்ற பாட்டி இருவருக்கும் முக்கியப் பங்குண்டு. இருவரையும் வியந்து, பாற்கடல் என்ற தனது குடும்ப வரலாற்றில் நிறையவே எழுதியிருக்கிறார்..
பாட்டியைப் பற்றி லாசரா தரும் குறிப்புகள் அவரது பாட்டியைப் பற்றியது மட்டுமன்று. அவற்றிற்குள் ஒரு தலைமுறைப் பெண்களின் துயரமும் தியாகமும் பொதிந்து கிடக்கின்றன.
தனது தாயைப் பற்றி லாசரா தீட்டியிருக்கும் சொற்சித்திரம், அவரை நாம் எங்கோ சந்தித்திருப்பது போலத் தோன்றும். ஆம் அவரை நாம் சந்தித்திருக்கிறோம், லாசராவின் கதைகளில்!.
தாயைப் பற்றிய லாசராவின் சொற்சித்திரம் இது:
அம்மா செக்கச் செவேலென்று
சற்றுப் பூசினாற் போல
சற்றுத் தழைந்திருப்பாள்
காமதேனு
தனது அன்னையைப் பற்றி லாசரா குறிப்பிடும் ஒரு சம்பவம், லாசராவினுடைய தாயின் விழுமியங்களை மட்டுமல்ல, லாசராவின் இயல்புகளையும் கூட வெளிப்படுத்துகிறது.
“அப்போ அம்மாதான் குடித்தனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சம்பளத்தைக் கொடுத்துவிடுவேன். என் கைச் செலவுக்கே அம்மாதான் தருவாள். நிம்மதி. விட்டதையா பொறுப்பு. கடை கண்ணி, மார்க்கெட், வெளிவேலை, பால் கணக்கு, கொடுக்கல் வாங்கல் எந்த ஜோலியும் எனக்கு இல்லை.
ஆனால் மாதா மாதம் அம்மா கணக்குப் புத்தகத்துடன் என்னிடம் வருவாள். கைகூப்பி விடுவேன்.
“அம்மா, எதுவும் எனக்கு வேண்டாம். உன்னிடம்தான் கொடுத்தாச்சே!”
“அப்படியில்லேடா. என்னிடம் ஒப்படைச்சிருக்கே. என்ன போச்சு, வந்தது, உனக்கே தெரிய வேண்டாமா? ஆற்றில் போட்டாலும்..”
‘சரிதாம்மா, ஆளை விடு. வேளா வேளைக்கு எனக்கு கலத்தில் சோறு விழறதா, அதோடு நான் சரி. ஒரு பத்து நிமிஷம் முன்னாலே என்னை விரட்டி, அந்த 9-15ஐ நான் பிடிக்கிற மாதிரி பாரேன் –”
அம்மா பண்ணாத நிர்வாகமா? நாங்கள் குழந்தைகளாக இருந்த நாளிலிருந்தே, அப்பாவுக்கு முப்பது ரூபா சம்பளத்தில்….
அப்படியும் ஒருமுறை அம்மா கணக்குப் புத்தகத்துடன் வந்தாள். அவசரமா ஆபீசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். எப்படியும் அந்த 9-15ஐ என்னால் பிடிக்க முடியாது. நான் கேட்டபடி அம்மா என்னைத் தயார்ப்படுத்தினாலும் என்றுமே நான் 9-15ஐப் பிடித்ததில்லை.
நான் கை கூப்பினேன்.
“இல்லை, நீ பார்த்துத்தான் ஆகணும். இந்த மாசம் பெரிய துண்டா விழும்போல இருக்கு. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருக்கும்போல இருக்கு. எனக்கே புரியலை. என் கூட்டல் கழித்தல் சரியா பாரேன்.”
“அதுக்கெல்லாம் எனக்கெங்கேம்மா டைம்? எவ்வளவு துண்டு விழறது?”
“போன மாசம் அப்பா தெவசம் வந்ததா? அப்புறம் குணசீலம் போனோமா….?”
“அம்மா, அதெல்லாம் எனக்கு வேண்டாம். எவ்வளவு குறையறது?”
“ஒரு நூறு ரூபாய்….”
“நூறு ரூபாய்!” அதிர்ச்சியில் என் குரல் கோணிக் கொண்டது. முப்பது வருடங்களுக்கு முன்னால் நூறு ரூபாய் எவ்வளவு பெரிய தொகை, புரட்டுவது எத்தனை கடினம் என்று இந்நாளவர்க்கு எங்கே புரியப் போகிறது! ஆத்திரத்தில் அம்மா கையிலிருந்த நோட்டைப் பிடுங்கிக் கொண்டேன்.
“அம்மா, நீ பொய் சொல்றே-”
இந்த வாக்கியம் எப்படி என் வாயிலிருந்து வந்தது, இந்த ரூபத்தில் ஏன் வரணும்? இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே மலம்—உடம்பு என்கிற சாக்கில் மனத்திலா, மனம் என்ற சாக்கில் உடம்பிலா? எவ்வளவு ஓடிக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்று என்பது தவிர வேறு தெரியவில்லை.
“பொய் சொல்றேனா?” அம்மா ஒரு அடி பின்னடைந்தாள். அவள் பேச்சு ‘திக்’கென்ற மூச்சில் தொத்திக் கொண்டு வந்தது.
“பொய் சொல்றேனா?”
“பொய் சொல்றேனா?”
மடேரென விழுந்துவிட்டாள்.
நான் வெலவெலத்துப் போனேன். “அம்மா! அம்மா!” அம்மா தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன். பேச்சு மூச்சுக் காணோம்.
“அம்மா! அம்மா!”
என் அலறல் கேட்டு மற்றவர்கள் ஓடி வந்தனர். யோரோ அம்மா முகத்தில் ஜலம் தெளித்து முகத்தை ஓற்றி விசிறியால் விசிறி—
கண்கள் மெல்ல மலர்ந்தன.
“எங்கே இருக்கேன்?” எழ முயன்றாள். என் கையைத் தள்ளி எழுந்து உட்கார்ந்தாள். “என்ன ஆச்சு?”
“என்னவோ உளறிட்டேன் அம்மா. அம்மா, என்னை மன்னிச்சுடு.”
“ஓ! ஓ! ஓஹோ!” மூழ்குபவன் பிடியில் அவள் கைகள் என்னைப் பற்றின. “ராமாமிருதம், என்ன சொன்னாலும் அந்த வார்த்தை மாத்திரம் சொல்லாதே. என்னைச் சொல்லாதே—”
தனது அன்னையைப் பற்றியும் பாட்டியைப் பற்றியும் எழுதிய அளவிற்கு லாசரா தனது மனைவியைப் பற்றி எழுதியதில்லை ஆனால் மல்லிகை மாலையில் தொடுத்த பச்சை மாதிரி அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடுத்துள்ள தகவலகள் அவர் மனைவியைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போதுமானவையாக இருக்கின்றன.
‘நமக்கு ஒரு தோழி இருக்கிறாள். நம் பக்கத்திலேயே இருக்கிறாள் என்ற தைரியத்தை எனக்கு ஏற்படுத்துகிறது” என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் மனைவியைப் பற்றிப் பெருமிதமாகச் சொல்கிறார்.
“ஹைமவதியிடம் சில விசேஷ குணங்கள் இருக்கின்றன. .. படு சுத்தம். A great letter- writer தினக்குறிப்பு (டையரி) எழுதுகிறாள். தான் உண்டு, தான் எழுதும் கடிதங்கள், டையரி உண்டு, தான் படிக்கும் புத்தகங்கள் உண்டு என்று பிறர் வழிக்குப் போகமாட்டாள். அவள் கடிதம் எழுதுகையில் முகத்தில் குழுமும் மனமுனைப்பில் (Concentration) ஒரு தினுசான அழகு. குழந்தைத்தனம், முகத்துக்கு வருகிறது. …..’ என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறார்.
தனது மகன்களோடு லாசராவிற்கு ஒரு தோழமை நிறைந்த உறவிருந்தது. அவரது படைப்புக்களை விவாதிக்க மதுரைப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் தனது மகனை தன்னுடைய ‘அம்பிகாபதி’ என்று அறிமுகப்படுத்துகிறார். பத்திரிகை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்ட தனது கதை பற்றி இன்னொரு மகனிடம் கருத்துக் கேட்கிறார். அவர்களோடு சைக்கிளில் ‘டபுள்ஸ்’ போகிறார். வகுப்பைக் கட் அடித்துவிட்டு சினிமாவிற்குப் போனதை அவர்கள் அவரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவரது குடும்பத்தைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசுவதற்குக் காரணம் குடும்பம் என்ற அமைப்புத்தான் லாசராவின் அடித்தளம். அவரது படைப்புக்களுக்கு மட்டுமல்ல, அவருக்குமே கூட. இதைப் புரிந்து கொள்ளாமல் லாசராவின் எந்தப் படைப்பையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.
லா.ச.ரா முதலில் ஆங்கிலத்தில்தான், Short story magazine என்ற பத்திரிகையில்தான் தனது எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.
லாசரா ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்ததும், அதைப் பிரசுரத்திற்குக் கொண்டு போனதும் கூடத் திட்டமிட்டதல்ல. ஒரு விபத்துதான் அந்த விபத்தை லாசராவே விவரிக்கிறார்;
“என் வீட்டிற்கெதிரே என்னைவிட நான்கு வயது பெரியவனான ஒரு பையன் இருந்தான். அவர்கள் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அடிக்கடி நான் அங்கு போவேன். அவன் அண்ணா அப்போது பிரசிடென்ஸி கல்லூரியில் இங்கிலீஷ் துறைத் தலைவர். அவன் என்னுடைய ஆங்கில அறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டான். அவ்வளவு கச்சிதமாக, அவ்வளவு நன்றாகப் பேசுவேன். அந்த ஆங்கிலமெல்லாம் கச்சடா ஆங்கிலமல்ல. அப்படி ஆங்கிலத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அந்தப் பையன், நாம் ஏதாவது எழுதினால் என்ன? ஏதாவது Describe பண்ணேன் என்றான். ஆளுக்கொரு நோட் புத்தகத்தில் எழுதினோம். அவனுக்கு எதுவும் வரவில்லை. நான் கடகடன்னு ஒரு கதையே எழுதி விட்டேன். அந்தக் கதையின் தலைப்பு ‘மாஹுஜி’.
மாஹுஜி என்னன்னா, எதிர் வீட்டிலே ஒரு குழந்தை. அதுதான் கதையின் Character. சின்னக் காஞ்சிபுரத்திலே யானைக்கு மதம் பிடித்து அது எல்லாரையும் துரத்த ஆரம்பித்து, என் கையிலிருந்த அந்தக் குழந்தை யானையைக் கண்டு பயந்து ஜுரம் வந்து இறந்து போய் விடுகிறது. நான் அதைத் தூக்கிக் கொண்டிருந்தபோது அது எனக்கு ஒரு முத்தம் தருகிறது. அப்பொழுது வயது எனக்கு 15. கதையின் கரு இது தான். கதையை எழுதி அதை விட்டெறிந்து விட்டுப் போய்விட்டேன். அப்பொழுது மஞ்சேரி ஈஸ்வரன் Short Story என ஒரு இதழ் நடத்தினாரோ, நடத்த ஆரம்பித்திருந்தாரோ சரியாக நினைவில்லை.
அவரிடம் என்னுடைய இந்தக் கதையை யாரோ கொண்டு போய்க் கொடுக்க, அவர் என்னைக் கூப்பிட்டனுப்ப, ஓரே பரபரப்புடன் தைரியமாக அவர் முன் போய் நின்றேன். போனபிறகு, அந்தக் கதையைப் படித்திருந்த மஞ்சேரி ஈஸ்வரன், ‘தாகூரின் சாயல் உன்னிடமிருக்கு. நான் இந்தக் கதையைப் போடப் போறேன். காசு கீசு ஒண்ணும் எதிர்பார்க்காதே. ஒண்ணும் கிடைக்காது’ என்று சொல்லி விட்டார். இப்படியாக எனது முதல் கதையே பதிப்பானது” .
லாசரா தமிழில் எழுதத் துவங்கியபோது தன்னுடைய சொந்தப் பெயரில் எழுதவில்லை. காமாஷி என்ற பெயரில்தான் எழுத ஆரம்பித்தார்.
லாசராவை மணிக்கொடி எழுத்தாளர் என்று பல வரலாற்றாசிரியர்களும், விமர்சகர்களும் குறித்திருக்கிறார்கள். ஆனால் அவர் வ.ரா ஆசிரியராக இருந்த மணிக்கொடியிலோ, பி.எஸ்.ராமைய்யா ஆசிரியராக இருந்து அவ்வ்வ்வ்வளவும் சிறுகதைகள் என்ற முழக்கத்தோடு நடத்திய மணிக்கொடியிலோ எழுதியவர் அல்ல. ப.ராமசாமி நடத்திய மணிக்கொடியில், அந்த இதழ் நிற்பதற்கு முன், அதன் இறுதியாண்டில், புலி ஆடு,, ஜ்வாலை என்று இருகதைகள் மட்டுமே அவர் மணிக்கொடியில் எழுதினார். அவற்றையும் காமாஷி என்ற பெயரில் எழுதினார்.
சக்தி, ஹிந்துஸ்தான், போன்ற பத்திரிகைகளிலும் கதைக்கோவை போன்ற தொகுப்புகளிலும் அவர் எழுதியிருந்தாலும் அவரை வளர்த்த பத்திரிகை அமுதசுரபி
அமுதசுரபியின் முதல் இதழிலேயே. அவருடைய மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான பூர்வா பிரசுரமாயிற்று “சுரபியின் பிறப்பிதழில் என் கதை வெளியாயிற்று, குழந்தையின் தொட்டிலை ஆட்டியவர்களில் நான் ஒருவன். சுரபிக்கும் எனக்கும் நீண்ட சொந்தம்.ஒரு காலத்தில் அமுத சுரபியின் ஆஸ்தான எழுத்தாளன் எனக்குப் பெயர் உண்டு” என்கிறார் லா.ச.ரா. பெருமை பொங்க.
“பூர்வாவைத் தொடர்ந்து எனக்குப் பேர் தந்த பல கதைகள், எழுத்தில் நான் நடத்திய சோதனைகள், பயின்ற சாதகத்தினிடையே கிட்டிய சாதனைகள், நான் எட்ட முடிந்த ஆசைகள், முயன்ற பேராசைகள் எல்லாம் சுரபி ஆசிரியர் இடம் கொடுத்த பெருந்தன்மையால், அவருக்கு என்னிடமிருந்த நம்பிக்கை மூலம்தான். என் எழுத்துலகிற்கு அமுதசுரபி வாசற்படி” என்பது அமுதசுரபி குறித்த லா.ச.ரா.வின் நன்றி ததும்பும் வார்த்தைகள். அது வாசற்படி மட்டுமல்ல. அவரது கடைசிக் கதையும் அமுதசுரபியில்தான் பிரசுரமாயிற்று.
*
லாசராவின் அகஉலகில் குடும்பம் அலை எழுப்பிக் கொண்டிருந்ததைப் போல, அவர் மீது தாக்கம் ஏற்படுத்திய இன்னொரு விஷயம் கடவுள். கடவுளைப் பற்றிய கேள்விகள் அவரிடம் எப்போதுமிருந்திருக்கின்றன
“தெய்வம் உண்டா, உண்மை என்பது என்ன? தெய்வமோ உண்மையோ, அது அவனா? அவளா? அதுவா? என்னையும் அதையும் பிணைத்து என்னைத் தூண்டிக் கொண்டேயிருக்கும் கேள்வி- கேள்விகளின் மர்மம் என்ன? கேள்வி மேல் கேள்வி. கேள்விகள் பயக்கும் ஆச்சர்யம்.அதையோ, அவனையோ, அவளையோ கண்டு விடப் போகிற்மோ என்கிற ஆர்வம். ஆர்வம் சேர்க்கும் ஏக்கம், ஏதோ ஒரு சமயத்தில், ஒரு சின்ன சம்பவத்தில் பதில் கிடைத்து விட்டது, அல்ல, கிடைத்து விடும் போல் அது காட்டும் கண்ணாமூச்சி , தன்னைக் காட்டினார்போல் காட்டி, உடனே ஏமாற்றிவிட்ட, அல்ல, நான் ஏமாந்து போன நொடியில், அது வாழ்வுக்கும் மறக்கமுடியாதபடி தொண்டையில் தீட்டிவிட்ட ருசி, ருசி மயக்கம், ருசி போதை தூண்டும் மறுபடி தேடல் அவ்வப்போது நேரும் மனநெகிழ்ச்சி, சொல்லொண்ணா உள்பரப்பு, சமயங்களில் பரவசம், இவையெல்லாம் மிஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ். சுருங்கச் சொல்லப் போனால் a state of constant wonder at life. அதில் அவ்வப்போது நேரும் சட்டையுரிப்பு. இந்தச் சட்டையுரிப்பின் விளைவாய்ப் புதுப் பிரஞ்கை, புதுப் புது பிரஞகை .இவையே (இதுவேவா?) என்னுடைய Mystic Expeiience. என்னுடைய தேடல் தத்துவம்.” என்று தன் தேடலை விவரிக்கிறார் லாசரா.
மேலுள்ள வரிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு (அவை வெறும் சொல்லடுக்குகள் அல்ல) நுணுகிப் பார்த்தால், கடவுள் உண்டா என்ற ஒரு கேள்வியில் துவங்கி, கடவுளைக் கண்டல்ல, அந்தத் தேடலில் போதை கொண்டு, கிறங்கி, வாழ்வின் மீது தொடர்ந்த ஆச்சரியம் தரும் நிலை என்ற பரவசத்திற்குள் ஆழ்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த ‘வாழ்வின் மீதான தொடர்ந்த ஆச்சரியம்தான்’ லாசரா எழுத்தின் மொத்த சாரமும். அவரது படைப்புக்கள் அத்தனையும் எதைச் சொல்கிறது என்பதை ஒரு வரியில் சொல்லச் சொன்னால் அதை a state of constant wonder at life என்பதைத்தான் .
சரி, மிஸ்டிஸத்திற்கும் சமுதாயத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழக்கூடும் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார் லா.ச.ரா என் பதில் இதுதான். தெய்வம் இருக்கிறது சமுதாயம் தன் செளகரியத்திற்கு ஏற்படுத்திக் கொண்ட ஒரு அனுமானம். என்று கொண்டால், அதைச் சுற்றிய மதம், சித்தாந்தம், தத்துவம், சடங்குகள் எல்லாமே சமுதாயப் பார்வைதான்.. சமுதாயம் என்பது என்ன? நானும் நீயும் என்னும் உறவின் விஸ்தரிப்புத்தானே?”” என்று பதிலும் சொல்லிக் கொள்கிறார்.
அதாவது தானே அதுவாகி அதில் தன்னையும் காண்பது லாசராவிற்குக் கடவுளோடு நின்றுவிடுவதில்லை.சமுதாயத்தையும் தனதாகவும் தானேயாகவும்தான் காண்கிறார்.
தன்னை ஒரு செளந்தர்ய உபாசகன் என்று அறிவித்துக் கொண்டவர் லாசரா. இந்த செளந்தர்ய உபாசனை, அழகின் வழிபாடுதான் அவரது எழுத்தின் இலக்கு என்று எடுத்துக் கொள்ளலாமா?
“ என் எழுத்துதான் எனக்கு உறுதுணை. இதனால் பயன் ஏதும் இல்லை என்று தெரிந்த பின்னரும் இதன் துணைதான் என் தைரியம். இதன் மர்மம். இந்த ஆச்சரியம் என்ன?இதுவும் செளந்தர்யத்தின் ஒரு சாயைதான்” என்று எழுதுகிறார் லாசரா.
ஆனால் லாசராவின் இலக்கு செளந்தர்யம் அல்ல, எழுத்தோ சொல்லோ அல்ல, மெளனம்தான். என் மொழியின் நோக்கமே மெளனம்தான் என்கிறார் அவர்.
ஆனால் அவர் மொழியை சங்கீதமாகப் பார்த்தார், சங்கீதமாக்க முயன்றார் என்பதுதான் உணமை. “”என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது. சங்கீதம், ஓவியம், எழுத்து போன்ற எல்லா கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன? மௌனத்தை நோக்கிதான். மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும் போது இடையில் திடிரென்று பேச்சு நின்றுவிடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்து போவது போல் இருக்கும்.” என்கிறார்.
மெளனம் கலைக்கு முக்கியம் என்றால் ஏன் எழுதவேண்டும். மெளனமாய் சும்மாயிருக்கலாமே? இது குறித்த லாசராவின் தேடல் நம்மை மெளனத்திற்கும், சொல்லிற்கும், சொல்லிற்கும் எழுத்துக்கும், உள்ள உறவைப் பற்றிய சிந்தனையில் ஒளியேற்றுகிறது.
“”மெளனம் என்பது சும்மாயிருப்பதல்ல.அது சொல்லின் ஒரு ஸ்தாயி. வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் வடிக்க முயல்கையில் அவை நழுவுகின்றன/ஊடலாடுகின்றன.சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன.
சொல்லை எழுத்து ஓடிப்பிடிக்கும் இந்த முயற்சியில் இன்னொருவிதமான உறவும் ஏற்படுகிறது. வேட்டைக்காரனுக்கும், விலங்குக்கும் இடையேயான உறவு. பரஸ்பர வேட்டை.ஒன்றன் மேல் ஒன்று பாயக் காத்திருந்து களவு காட்டும் தன்மை. எது முன்? எது பின்? தருண நெருக்கடி.Oh I love you beloved enemy!The hunter and the hunted stalking each other.
எழுத்தையும் சொல்லையும் மெளனத்தையும் பற்றி இப்படி தீர்க்கமான எண்ணங்களைக் கொண்டிருந்த லாசரா, எழுத வருகிறவனுக்கு, அல்லது எழுதிக் கொண்டிருக்கும் சமகாலத்தவருக்கு இதைக் குறித்து ஒரு ‘டிப்ஸ்’ கொடுக்கிறர்.”தன் கலையைத் தீவிரமாகப் பேணும் கலைஞனிடம், ஒரு இரக்கமற்ற தன்மை வேண்டும். எத்தனை அழகான வார்த்தை அவனுக்கு உதித்தாலும் இடத்திற்கு அது பொருந்தாவிடின் அதை வெட்டி எறியும் நிர்தாட்சண்யம் வேண்டும் (Ruthless Artistry) வார்த்தை மோகம் அவனைச் சறுக்கிவிடக் கூடாது. சொல் சிக்கனம் ஒரு நல்ல படைப்பின் வீர்யத்திற்கு அடிப்படை. சொல்லைக் குறுக்க குறுக்க அதற்கு அழுத்தம் Pressure out of compression ஏற்படும். அது அதன் இடத்தில் பிரயோகம் ஆகுகையில் முகத்தில் பட்டாசு வெடித்தார் போன்று மனதில் அதிர்வு ஏற்பட வேண்டும்” என்பது அவர் தரும் பயனுள்ள குறிப்பு.
லா.ச.ராவின் மொழியை, கதையாடலை, படைப்பாற்றலைக் குறித்து எத்தனை பக்கங்கள் எழுதினாலும், அவற்றை முழுமையாக விவரித்துவிட முடியாது.ஏனெனில் அவரது படைப்புக்கள் சம்பங்களையோ அவற்றிலிருந்து உருவாகும் ’கதை’யையோ அல்லது அதை விவரித்துச் செல்லும் மொழி நடையையோ மாத்திரம் சார்ந்த்து அல்ல. அவை அவரது மனவெளியில் நேர்ந்த தரிசனங்களில், அவை எழுப்பிய பரவசத்தில் அல்லது அதீத உணர்வலைகளில் எழுந்தவை. அதனால் அது தரும் வாசக அனுபவம் பல நேரங்களில் ஒவ்வொருக்கும் தனித்துவமானவை (Personal)
எனவே லாசராவை அறிந்து கொள்ள ஒரே வழி அவரைப் படிப்பதுதான், புரிந்தாலும் மீண்டும் மீண்டும் படிப்பதுதான்.ஏனெனில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வாசக அனுபவத்தைத் தரக்கூடியவை அவை. புரியவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் படிப்பதுதான் ஒரே வழி. ஏனெனில் அவற்றிற்குப் பொழிப்புரையோ, கதைச்சுருக்கமோ சொல்லி விளக்கமுடியாது.
அவரது அக உலகில் அலையடித்துக் கொண்டிருந்த பாற்கடல் ஓயாது அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தது. அது உரையாடல். மேடைப் பேச்சல்ல. ஒரு பொருள் குறித்து விளம்ப உரைக்கும் கருத்தரங்க உரையல்ல. திட்டமிடாத, நோக்கங்கள் அற்ற உரையாடல். பின் கட்டில் பூத்திருக்கும் செம்பருத்தியில் துவங்கி, பிரபஞ்சம் வரை தாவியும் தத்தியும் நகர்கிற உரையாடல். அங்கு சொல் முக்கியம் ஆனால் இலக்கணத்திற்கு இடமில்லை. கருத்துக்கு சுதந்திரம் உண்டு. என்றாலும் மெளனம் கூட முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த உரையாடலை வாசகனோடு பகிர்ந்து கொள்ள அவர் கண்ட உபாயம் எழுத்து. அந்த உரையாடல்கள் நம்மில் சிலருக்கு வார்த்தைக் கோபுரமாக, வாய்ப்பந்தலாகத் தோன்றலாம் அல்லது நமக்கும் புரியலாம். ருசிக்கலாம். நம்மையும் உசுப்பலாம். அவர் வார்த்தைகளில் சொல்வதானால்
அவரவர் பூத்ததற்குத் தக்கபடி.