ஆரல்வாய்மொழி.தமிழகத்தின் கடைக்கோடியில், கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு சிற்றூர். ஏசுராஜ் அந்தச் சிற்றூரில் சூளையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி.அவர் மகள் நிஷா நந்தினி பத்தாம் வகுப்பு மாணவி. அங்கிருந்த தேவாளை அரசு மேல் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், ஒரு வித்தியாசமான அதிகாரி.வெறுமனே நாற்காலியில் உட்கார்ந்து நிர்வாகம் செய்பவர் அல்ல. பள்ளிகளை மட்டும் பார்வையிட்டுத் திரும்புபவர் அல்ல. அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் வீடுகளுக்கு, குறிப்பாக வசதியற்ற குடும்பத்துப் பிள்ளைகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களைப் படிக்க ஊக்கப்படுத்துவது அவர் வழக்கம். ஏனெனில் பொருளாதார நிர்பந்தங்கள் காரண்மாகப் படிப்பைக் கைவிடுவது பெரும்பாலும் அவர்கள்தான். அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகள். குடுமபத்திற்குப் பண நெருக்கடி ஏற்படும் போது பலருக்கு எழும் எண்ணம் பெண் குழந்தைகளின் படிப்பை நிறுத்துவது.
அப்படி ஆரல்வாய்மொழிப் பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கற்கும் திறனை ஆய்வு செய்த போது நிஷா நந்தினியின் வீட்டுக்கும் ராதாகிருஷ்ணன் சென்றார். மின் இணைப்பு இல்லாத அந்த வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஷா படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்கான செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார். (காண்க: புதிய தலைமுறை கல்வி இதழ், 18 மார்ச் 2013)
இப்படி விளக்கேற்றி வைத்தது ஓர் உதாரணம். இதைப் போன்ற எத்தனையோ முயற்சிகள். படிக்க வசதி இல்லாதவர்கள் கூடிப் படிக்க ஒரு வீடு எடுத்துக் கொடுத்து உதவியதாகக் கூட நமக்குச் செய்திகள் வந்தன.
அவரது முயற்சியும் நம்பிக்கையும் வீண் போகவில்லை. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அதிக அளவில் தேர்ச்சி கண்ட மாவட்டம் அந்த ராதாகிருஷ்ணன் பணியாற்றும் கன்னியாகுமரி. அந்த மாவட்டத்திலிருந்து தேர்வு எழுதியவர்களில் 97.29 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
,தினமும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற தச்சுச் தொழிலாளியின் மகள், டீ மாஸ்டரின் மகள், கூலித் தொழிலாளியின் குழந்தை,என அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். வறுமையைத் திறமையால் வென்ற இவர்களது சாதனைகள் மாநிலத்தில் முதலிடம் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளின் சாதனைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல.
அவர்களைப் பாராட்டுகிறோம் அதே நேரம், இந்தச் சாதனைகளுக்கும் இதைப் போன்ற சாதனைகளுக்கும் பின்னால், ராதாகிருஷ்ணனைப் போல் ஒர் அதிகாரி அல்லது ஆசிரியர் ஒளிந்து நிற்கிறார், இந்த வெற்றியைக் கண்டு விழிகள் நீரால் நிறைய மனம் புன்னகைக்க பூரித்து நிற்கிறார், அவர் பாராட்டுதலுக்கு மட்டுமல்ல வணக்கத்திற்கும் உரியவர்,
தரம் என்பது தனியார் பள்ளிகளுக்கே உரியது என்ற எண்ணத்தில் அரசுப் பள்ளிகள் கைவிடப்பட்டுவருகிற ஒரு கால கட்டத்தில்,அதற்க்கு ஆசிரியர்களும் ஒரு காரணம் எனப் புகார்கள் புறப்படும் நேரத்தில், எளியவர்களையும் கல்வியின் மூலம் வலியவர்களாக்க வேண்டும் என்ற வேட்கையில் தன்னலம் கருதாது கடமையாற்றி ஏழைகளைக் கை தூக்கி விடும் இந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் சாதாரணமானதல்ல.
ஆண்டுதோறும் நல்ல மாவட்ட ஆட்சியர்களை அழைத்து முதல்வர் பரிசு கொடுத்துப் பாராட்டுவதைப் போல நல்ல கல்வி அதிகாரிகளையும் அரசு பாராட்டி கெளரவிக்க வேண்டும். இலட்சிய நோக்கோடு இயங்குகிற அதிகாரிகள், இந்தப் பாராட்டு இல்லாவிட்டாலும் தங்கள் கடமையைத் தொடர்ந்து செய்வார்கள். ஆனால் அவர்களைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் தவறுவோமேயானால் நாம்தான் நன்றி கொன்றவர்களாவோம். அது நமக்குத்தான் இழுக்கு.
-புதிய தலைமுறை இதழ் (13.ஜுன் 2013) தலையங்கம்
4 thoughts on “முயற்சி திருவினையாக்கும்”
புதியதலைமுறை தலையங்கமே திரு.ராதாகிருஷ்ணனுக்கு மகுடம் சுட்டியதைப் போலத்தான். அவர் பணி மேலும் சிறக்கட்டும். நிறைய ராதாகிருஷ்ணன்கள் உருவாகட்டும். நல்ல வெள்ளி இன்று!
nice article.Mr.Radha Krishnan efforts should be appreciated… congrats to Mr.RK and appreciation for Mr.Maalan for exploring such personalities
நன்றி கொன்றவர்களாவோம். அது நமக்குத்தான் இழுக்கு ! correct Sir
I was able to find good advice from your blog posts.