16
முக்கியமான 3 வார்த்தைகள்
நேற்றுப் போல இருக்கிறது, அமெரிக்காவின் தென்கோடி மூலையில் உள்ள இந்த சின்னஞ் சிறிய நகரில் வந்து இறங்கியது. அப்போது இரவு எட்டு மணி. ஆனாலும் ஆகஸ்ட் மாதத்து சூரியன் அடிவானில் ஆரஞ்சுப்பழம் போலப் பொலிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அது ஒரு விநோதமான அனுபவம்.
அதற்கப்புறம் எத்தனையோ விநோதங்கள், அனுபவங்கள், சம்பவங்கள். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று ஊருக்குப் புறப்படுகிறத நேரத்தில், ஒரு கேள்வியை மனது அலசிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?
அகில உலக அரசியலில் அது செலுத்துகிற ஆதிக்கமா? விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், விரும்பியதை அடைவதில் முனைப்புக் காட்டுகிற மூர்க்கமா? பிரம்மாண்டமாகக் கனவு காணவும், கண்ட கனவை மெய்ப்படுத்திக் காட்டவும் (உதாரணம் : நிலவில் கால் வைப்பது) வல்ல அதன் ஆளுமையா? வேண்டாத பொருளைக்கூட விரும்பி வாங்கச் செய்கிற அதன் விளம்பர உத்திகளா?
வியாபாரத் தந்திரமா? கம்ப்யூட்டர் அற்புதங்களா? எந்திரமா? தொழில் நுட்பமா? எது ? இந்தியா கற்றுக் கொள்ளவேண்டியது எது?
அதனிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இல்லை. மூன்று வார்த்தைகள். மூன்றே வார்த்தைகள். அதைக் கற்றுக் கொள்வது கடினம் இல்லை. ஆனால் முழு மனதோடு அந்த மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்திப் பழக வேண்டும். உதட்டின் ஒலியாக இல்லாமல் உள்ளத்தின் குரலாக பயன்படுத்த கற்க வேண்டும். ஒப்புக்குச் சொல்லாமல் உபசாரத்திற்கு அல்லாமல் உணர்ந்து சொன்னால் அங்கே இந்தியாவில் அற்புதங்கள் நிகழும். ஆளுமை, கௌரவம், மரியாதை எல்லாம் தானாகவே வரும்.
அந்த வார்த்தைகள் இவைதான்: மே ஐ ஹெல்ப் யூ (உங்களுக்கு நான் உதவ முடியுமா ? ) ஐ டோன்ட் நோ, (எனக்குத் தெரியவில்லை) ஸாரி (வருந்துகிறேன்.)
இங்கு எந்த அலுவலகத்துக்குள் நுழைந்தாலும் நீங்கள் முதலில் கேட்கிற வார்த்தை நான் உங்களுக்கு உதவ முடியுமா என்பதாகத்தான் இருக்கும். பேராசிரியர்கள், துறைத் தலைவர்களில் இருந்து பலசரக்குக் கடையில் பில் போடுகிற பெண்மணி வரைக்கும் எல்லோரும் பயன்படுத்துகிற தாரக மந்திரம் இது. ஓர் அலுவலகத்திற்குப் போகும்போது நீங்கள் யார், என்ன பெயர், எங்கிருந்து வருகிறீர்கள், யாரைப் பார்க்க வேண்டும் என்ன விஷயம் என்று எத்தனையோ விதங்களில் ஆயிரம் கேள்விகளோடு உங்களை வரவேற்க முடியும். ஆனால் அமெரிக்கர்கள் கேட்கிற கேள்வி, “நான் உங்களுக்கு உதவ முடியுமா?”
ஏதோ உபசாரத்திற்காக சொல்லுகிற வார்த்தை அல்ல இது. நிஜமான பேச்சு. நான் இங்க வந்த புதிதில் என் படிப்பு தொடர்பாக ஒரு புலனாய்வு (Investigate reporting) மேற்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஆராய வேண்டியது படி இர்பி என்ற அதிகாரியைப் பற்றி அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி. அவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்க வேண்டும். என்று, எங்கு பிறந்தார், படித்தார், திருமணம் ஆனவரா, எத்தனை முறை, விவாகரத்து உண்டா, சொத்து என்னென்ன, அவை எங்கே இருக்கின்றன, வரி கட்டுகிறாரா, வருட வருமானம் எவ்வளவு, அவரது வருமானத்திற்குள் வாங்கக் கூடிய சொத்துக்கள்தானா, தேர்தல் நிதியாக எவ்வளவு திரட்டினார், அதை எப்படி செலவழித்தார் என்பது போன்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இந்தப் புலனாய்வுக்கு ஒரு கண்டிப்பான நிபந்தனை; நான் இந்த அதிகாரியை நேரில் சந்திக்கக்கூடாது. போனில்கூட விசாரிக்கக்கூடாது. பல்வேறு அலுவலகங் களில் இருக்கக்கூடிய ஆவணங்களில் இருந்து அவற்றைத் திரட்ட வேண்டும்.
நான் ஊருக்குப் புதிது. இந்த ஊரில் கிழக்கு மேற்கு தெரியாது. அன்னியன். இத்துடன் நான் யாரைப் பற்றி விசாரிக்க வேண்டுமோ அவர்தான் இந்த ஆவணங்களுக்குப் பொறுப்பான அதிகாரி.
இந்த மாதிரி ஒரு சூழ்நிலை நம் நாட்டில் இருந்தால் என்ன நடக்கும்? ஆவணங்கள் இருக்கின்ற அலுவலகத்திற்குள் நுழைந்து அந்த மேலதிகாரியின் பெயரைச் சொல்லி அவர் சம்பந்தப்பட்ட கோப்புகளைப் பார்க்க முடியுமா, என்று கேட்டால், நீ யார், என்ன என்று ஆயிரம் கேள்விகளை அடுக்குவார்கள். அல்லது திசை திருப்பி அலைய விடலாம். அல்லது அது எதுவுமே இங்கு இல்லை என்று சாதிக்கலாம். அரசியல்வாதி சம்பந்தப்பட்டது என்பதால் அதட்டி உருட்டி கைகளை ஓங்கலாம். அல்லது அன்பளிப்பு கேட்டு கையை நீட்டலாம்.
வேறு யாருடைய ஆவணங்களை அல்ல, நம்முடைய சொத்துக்கு வில்லங்க சர்டிபிகேட் வாங்க, வரி பாக்கி எதுவுமில்லை என்று சர்டிபிக்கேட் வாங்க, என்.ஓ.சி என்ற நோ அப்ஜக்ஷன் வாங்க, ஜாதிச் சான்றிதழ் வாங்க நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு முறையாவது சிக்கல்களையும் சங்கடங் களையும் இழுத்தடிப்புகளையும் சந்தித்திருக்கிறோம்.
இங்கே? அலுவலகத்திற்குள் போனேன். அரசு அலுவலகம்தானா என்று சந்தேகம் எழுப்புகிற விதத்தில் படுசுத்தமாக இருந்தது. தகவல் என்று போர்டு போட்டிருந்த இடத்தில் ஓர் இளம் பெண். ‘உங்களுக்கு நான் உதவு முடியுமா’ என்று கேட்டாள்.
“படி இர்பியின் கோப்புகளைப் பார்க்க முடியுமா?” என்று கேட்டேன். “ஓ தாராளமாக!” என்றாள் ஒரு முறுவலுடன். “உங்களுக்கு கம்ப்யூட்டரை இயக்கத் தெரியுமா?” என்று கேட்டாள். “சுமாராகத் தெரியும்” என்றேன். “என்னுடன் வாருங்கள்” என்று அந்த அலுவலகத்தின் கீழ்த்தளத்திற்கு அழைத்துக்கொண்டு போனாள். அங்கு ஒரு ஆறு ஏழு கம்ப்யூட்டர், இரண்டு மூன்று பிரிண்டர்கள் இருந்தன. அவற்றை உட்கார்ந்து இயக்குமளவுக்கு வசதியாக நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன.
“இந்தக் கம்ப்யூட்டர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்றும் அவசரமில்லை. உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அத்தனை நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். இலவசம். ஏதாவது உதவி தேவைப் பட்டால் இந்த போனில் இண்டர் காமில் கூப்பிடுங்கள். என்னுடைய பெயர் சூசனா பாக்கிங். நீங்கள் சூசனா என்றோ சூபூ என்றோ கூப்பிடலாம்.” என்றாள்.
இன்னொரு அலுவலகம், சொத்து சம்பந்தமான பத்திரங்களைப் பார்வையிட வேண்டியிருந்தது. அங்கே ஒரு இளைஞன் ஜான் டூரான்ஸ் என்று பெயர். அங்கேயும் “உங்களுக்கு உதவ முடியுமா” நீங்கள் எந்தப் பத்திரத்தை வேண்டுமானாலும் பார்வையிடலாம். வேண்டுமானால் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளலாம். முதல் மூன்று பக்கங்கள் இலவசம். அதற்குமேல் என்றால் ஒரு பக்கத்திற்கு ஐந்து சதம். என்ன உதவி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்” என்று உறுதிமொழி. இதைச் சொல்லிவிட்டு நகர்ந்த ஜான், பத்து அடி போவதற்கு ஏதோ ஞாபகம் வந்தவனாகத் திரும்பி வந்தான். 1968க்கு முந்தைய பத்திரங்கள் உங்களுக்குத் தேவைப்படுமா என்றான். “இருக்கலாம் ஏன்?” என்றேன். “68-க்கு முந்தைய பத்திரங்களை மைக்ரோ பிலிம் பண்ணி வைக்கவில்லை. உங்களுக்குத் தேவைப்பட்டால் ஒரிஜினலையே பார்க்கலாம். ஆனால் அவை கீழே பாதாள அறையில் இருக்கின்றன” என்று சொல்லிவிட்டுப் போனான்.
இது ஏதோ அரசாங்க அலுவலகத்தில் மட்டும் என்றில்லை. பலசரக்குக் கடையில், பல்கலைக்கழக நூலகத்தில், பாங்கில், போஸ்ட் ஆபீசில் உங்கே போனாலும், என்னுடைய நண்பர் ஒருவர், பிலிம் ரோலைக் கழுவி பிரிண்ட் போடக் கொடுத்தார். ஸ்டூடியோக்காரர்களால் சொன்ன தேதியில் டெலிவரி கொடுக்க முடியவில்லை. ஒரு நாள் தாமதமாகிவிட்டது. “பணம் கொடுக்க வேண்டாம். இலவசம்” என்று சொல்லி விட்டார்கள். தவறுதலாக எதிர்த்திசையில் போகிற பஸ்ஸில் ஏறிவிட்டேன். என்னுடைய தவறுக்கு டிரைவர் மன்னிப்புக் கேட்டார். இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட தபால், கனமான கவரில் போட்டு அனுப்பப்படாததால் கவர் கிழிந்து வந்தது. கூடவே தபால் துறையினரிடம் இருந்து ஒரு கடிதம். “உங்கள் கடிதம் உங்களுக்கு மிக முக்கியமானது என்று தெரியும் அதைக் கிழிந்த நிலையில் டெலிவரி செய்ய வேண்டியிருப்பதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.”
ஏன் இப்படி? நல்ல பேர் வாங்குவதற்காகப் போடுகிற நாடகமா? நுகர்வோர் விழிப்புணர்வு பரவலாக இருப்பதால் ஏற்பட்டுள்ள நிர்பந்தமா? சட்டத்தின் கட்டாயமா? இல்லை. அதெல்லாம் இல்லை. நாடகம் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்காது. நிர்பந்தம் என்றால் அது ஒப்புக்கு கடமைக்கு என்று உணர்வுபூர்வமான ஈடுபாடு இல்லாமல் இருக்கும். சட்டம் என்றிருந்தால் அதற்கு ஓட்டையும் இருக்கும். இது இயல்பு. உடம்பிலேயே ஊறிப்போன சுபாவம். பிறவிக் குணம்.
வந்து இறங்கி நான்கு நாட்கள் ஆகியிருக்கும். தங்குவதற்கு இடம் பிடித்து மூட்டைகளைப் பிரித்து அடுக்கியாயிற்று. தனிக்குடித்தனம். அதாவது தன்னந்தனியனாக ஒற்றை ஆளாகத் தனிமையில் வசிக்கின்ற வாழ்க்கை. பால் ஸ்மியாக் என்ற பேராசிரியர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். “என்ன வீடு பிடித்து செட்டில் ஆகியாச்சா?” என்றார் “ம்” என்றேன். “பொழுதெல்லாம் எப்படிப் போகிறது” என்றார். “ஏதோ, போகிறது’ என்றேன். “என்ன அலுப்பு அதற்குள்” என்றார். “இல்லை. என்னடைய அறையில் என்னுடைய குரலைத் தவிர வேறு மனிதக் குரலே கிடையாது. எனக்கு நானேவா பேசிக் கொள்ள முடியும்? இன்னும் கொஞ்ச நாளில் அப்படி நடந்தாலும் கூட ஆச்சரியமில்லை” என்றேன். அவர் பெரிதாகச் சிரித்தார். “ஹேய், டேக் இட் ஈஸி” என்றார்.
அத்தோடு முடிந்தது என்று நினைத்தேன். அந்த ஞாயிற்றுக்கிழமை அவர் அறைக்கு வந்து கதவைத் தட்டுகிறார். கையில் ஒரு சிறிய டி.வி. “இங்கே இருக்கட்டும். நீங்கள் ஊருக்குப் போகும்போது திருப்பிக்கொடுத்தால் போதும். உங்களுக்கும் பொழுது போக வேண்டுமில்லையா?” என்றார்.
ஒரு நிமிடம் அப்படியே நெகிழ்ந்துவிட்டேன். இத்தனைக்கும் அவர் என் துறைப் பேராசிரியர் அல்ல. எனது கல்லூரிதான். ஆனால் ஒலிபரப்புத் துறையின் தலைவர். நான் Print Journalism என்று சொல்லப்படும் இதழியில் பிரிவைச் சேர்ந்தவன். இங்கு வரும்முன் எனக்கு அவரைத் தெரியாது. வந்த பின்னும் கல்லூரி வராந்தாவில் மாடிப்படியில் எதிர் எதிரே சந்திக்கும்போது “ஹாய்” சொல்கிற அளவுக்குத்தான் பழக்கம். அவருக்கு வீடு தேடிவந்து உதவ வேண்டும் என்று என்ன நிர்பந்தம்.
இன்னொரு பேராசிரியர். இவர் வேறு கல்லூரியைச் சேர்ந்தவர். (பல்கலைக் கழகத்திற்குள்ளேயே வெவ்வேறு கல்லூரிகள், இதழியல், பொறியில், மருத்துவம், ஆசிரியப் பயிற்சி, கலைகள் என்று இப்படி 12 கல்லூரிகள். ஒவ்வொரு கல்லூரிக்குள்ளும் பல துறைகள்) டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது இல்லையா, இங்கு அதற்கு ஒரு மாதம் முன்பு Thanks giving என்று ஒரு பண்டிகை ஆண்டவனுக்கு நன்றி செலுத்தும் நாள். ஆனால் அமெரிக்காவில் அது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகக்கூடி, பேசிச் சிரித்து, உண்டு, மகிழ்கிற நாள். அந்த ஒரு நாளுக்காக பல்லாயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்து வந்து கூடுகிற குடும்பங்கள் உண்டு.
இந்தப் பேராசிரியர் எனக்கு போன் செய்தார். “குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் இந்தியாவிற்குப் போக முடியாது. எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள்.” அன்று காலை மறக்காமல் மகனிடம் கார் கொடுத்து அனுப்பி, வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். சாப்பாட்டு வேளை வந்தது. அந்த வீட்டு அம்மா பைபிளில் இருந்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் வாசம் ஒன்றைப் படித்தார். அதற்குப் பிறகு பேராசிரியர் ஒரு கவிதைப் புத்தகத்தில் இருந்து கவிதை ஒன்றைப் படித்தார். சாப்பாடு வந்தது. என்னம்மா வான்கோழியைக் காணோம் என்று பையன் கேட்டான். Thanks giving நாளன்று வான்கோழிக் கறி சாப்பிடுவது என்பது தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம். “மாலன் மாமிசம் சாப்பிட மாட்டார். அவர் வீட்டிற்கு வந்திருக்கும் வேளை அவரை விட்டுவிட்டு நாம் சாப்பிடுவது சரியில்லை. எனவே இன்று வெஜிடேரியன் சாப்பாடுதான்” என்றார் அவர்.
என் வீட்டிற்கு பண்டிகை நாளன்று மாமிசம் சாப்பிடுகிற விருந்தாளி வந்தால் நான் மாமிசம் சாப்பிடுவேனா என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். அவர்களது அன்பின் பரிமாணம் புரிந்தது.
இவ்வளவு சொல்லும்போது இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும். உதவி செய்யட்டுமா என்று கேட்கிற அமெரிக்கர்களிடம் அவர்களால் முடியாத ஒன்றைக் கேட்கிறீர்கள் என்றால் அடுத்த வினாடியே அவர்கள், “ஸாரி, என்னால் முடியாது” என்று சொல்வதற்கும் தயங்க மாட்டார்கள். முடிந்ததை முடியாது என்று சொல்லித் தட்டிக் கழிக்கும் சுபாவமோ, முடியாததை முடியும் என்று சொல்லி ஏமாற்றுகிற போலி கௌரவமோ அவர்களிடம் கிடையாது.
முடியாததை முடியாது என்று சொல்வதைப் போலத் தெரியாததைத் தெரியாது என்று சொல்லவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். வகுப்பறையில் பகிரங்கமாக எல்லா மாணவர்கள் எதிரிலும், தெரியாத ஒரு விஷயம் பற்றிப் பேச்சு வந்தால் எனக்குத் தெரியாது என்று தைரியமாகப் பேராசிரியர் சொல்லுவார்.
விலாசத்தைக் கையில் வைத்துக்கொண்டு கே.கே.நகரில் வீடு எங்கே என்று தேடுகிறார் ஒருவர். நமக்கு இடம் தெரியாது. அவரது துரதிர்ஷ்டம் நம்மிடம் வந்து விசாரிக்கிறார். நேர் எதிர்திசையை காண்பித்து சுற்றிவிட்டாலும் விடுவோமே தவிர, தெரியாது என்று சொல்லுவோமா, தெரியாது என்று சொல்லுவது தலைகுனிவான விஷயம் அல்லவா?
சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவின் மக்கள் நேசம் மிகுந்தவர்கள். சிநேகபூர்வமானவர்கள். அவர்களுக்கும் ஆயிரம் துயரம், பிரச்சினை, சிக்கல், அவற்றையும் மீறி நிஜமாக அன்பு செலுத்துகிறார்கள்.
ஆனால், அமெரிக்காவில் உள்ள அமைப்பு, சிஸ்டம் என்று சொல்கிறோமே அது அவர்களுக்கும் நல்லது செய்யவில்லை. உலகத்திற்கும் நல்லது செய்யவில்லை. பலமுனைகளில் அது தோற்றிருக்கிறது. பல விதங்களில் அது தீங்கானது. அதில் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் திருப்தியின்மை.
என்றாலும் அமெரிக்க மக்களைத் துப்பாக்கிப் பிரியர்களாக, அமெரிக்கப் பெண்களைக் காம வெறியர்களாக, அமெரிக்க குடும்பங்களை, அன்பற்றுச் சிதறிப்போனவையாக மீடியா சித்தரித்து வந்திருக்கிறது. அமெரிக்க அமைப்பு முறை வளம் தரக்கூடியது. பலம் பொருந்தியது என்றும் அவை சித்தரிக்கின்றன.
இந்த இரண்டு சித்தரிப்புகளுமே பொய், அல்லது மிகை என்பது என் அனுபவம்.
உண்மையைக் கண்டுகொள்ள, உனக்குச் சொல்ல, உதவிய இன்னொருவர் – சரியாகச் சொல்வதனால் இன்னொன்று – இருக்கிறது / இருக்கிறார். அது ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் ரோட்டரி அறக்கட்டளை என்ற சர்வதேச அமைப்பு. அவர்கள்தான் எனக்கு இந்த ஸ்காலர்ஷிப் கொடுத்து உதவியது. அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள், அவை சொல்லிய உண்மைகள் ஆகியவற்றைத்தான் எனக்குப் பிரியமான உன்னிடம் பகிர்ந்துகொண்டேன்.
அவர்களுக்கு நன்றி சொல்லும் கடமை எனக்கும் – ஒரு வகையில் உனக்கும் – உண்டு.
நன்றி.
அமெரிக்கர்கள் சொல்வதைப்போல, அடிமனத்தின் ஆழத்தில் இருந்து.
3 thoughts on “முக்கியமான 3 வார்த்தைகள்”
இங்கே தமிழன் கேள்வி பதில்களையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
செய்யலாம் கார்த்திகேயன். ஆனால் அதன் பிரதிகள் என்னிடம் இல்லை. உங்களிடம் இருந்து நீங்கள் எனக்கு அனுப்பி வைத்தால் மகிழ்வேன். நன்றி உடையவனாவேன்
Nohntig I could say would give you undue credit for this story.