வணக்கம். ஆம். தமிழ் வணக்கம். உங்கள் சிங்கள ஆயுபவன் அல்ல. வணக்கம் ஒரு வெற்றுச் சொல் அல்ல. அது தமிழர்களின் தனி அடையாளங்களில் ஒன்று. தன்னைத் தமிழர் என்று நினைப்பவர்களும், தமிழர்களின் மனதைக் கவர நினைப்பவர்களும் அந்தச் சொல்லை உச்சரிப்பதைத் தவிர்க்க முடியாது. வட இந்தியாவிலிருந்து வாக்குக் கேட்க வருகிற தலைவர்கள் தவறாமல் அதைச் சொல்லாமல் தமிழகத்திலிருந்து திரும்ப முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நாவில் உரையாற்றும் போது உங்கள் அண்ணன் கூட அந்த வார்த்தையைச் சொல்லித்தான் பேச ஆரம்பித்தார். ஆனால் தமிழர்கள் உங்களிடம் கேட்பது ஒப்புக்கு உதடுகள் உதிர்க்கிற அடையாளச் சொற்களை அல்ல.
அவர்கள் கோருவதெல்லாம் தங்கள் தாய் மண்ணில் கெளரவத்தோடு வாழ்வதற்கான ஒர் வாழ்க்கையை. அதைக் கோருவது அவர்களது உரிமை. அப்படி ஒரு வாழ்க்கையை உறுதி செய்வது அரசுகளின் கடமை.
அதைக் கோரி அவர்கள் பேசிப் பார்த்தார்கள். அது பயனற்றுப் போன போது மோதிப் பார்த்தார்கள். இப்போதும் கூட அதை ஜனநாயக வழியில் அடைய வேண்டும் என்றுதான் கருணாநிதி கருத்துக் கணிப்பு யோசனையை முன் மொழிகிறார்.
அதற்கு ஏன் இப்படி அவர் மீது பாய்கிறீர்கள்? உலகத்தில் நடக்காத ஒன்றையா அவர் சொல்லி விட்டார்? கிழக்கு தைமூர், கொசாவா, தெற்கு சூடான் என்று சமீபத்திய சரித்திரங்கள் எத்தனையோ சாட்சிகளை தன் முதுகில் சுமந்து நிற்கிறது.
வரலாற்றில்தான் நீங்கள் வீக். ஆனால் நகைச்சுவையில் நீங்கள் கில்லாடி. கருணாநிதியை பயங்கரவாதி என்று வர்ணித்திருக்கிறீர்கள். இதை விட ஒரு சிறந்த ஜோக்கை இந்த நூற்றாண்டில் எவரும் சொல்லிவிட முடியாது. அவர் அரசியல் வாழ்வில் எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார். ஆனால் துப்பாக்கியை எப்படித் தூக்குவது என்று கூட அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்த ஆயுதம் எல்லாம் பேனாவும், நாவும்தான். உங்கள் நாட்டில் யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்த போது அவர் உண்ணாவிரதம் என்ற உத்தியை முயற்சித்துப் பார்த்தார். (ஆனால் அது பெரிதாகக் கை கொடுக்கவில்லை என்பது வேறு விஷயம்) உண்ணாவிரதத்தை ஆயுதம் என்று நீங்கள் எண்ணினால் காந்தி கூட பயங்கரவாதிதான்.
அவர் பயங்கரவாதி என்றால் ஆயிரக்கணக்கான தமிழர்களை -அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உட்பட- குண்டு வீசிக் கொன்ற நீங்கள் யார்? புத்தரா?
கருணாநிதியை விடத் தனி ஈழத்திற்காகத் தங்கள் குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிற தலைவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வளவு ஏன் சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தனி ஈழம் பெற்றுத் தருவேன் என ஜெயலலிதா மேடைதோறும் முழங்கி வந்தார். அப்போதெல்லாம் அவர்களை ஏளனம் செய்து உங்கள் நா அசையவில்லை. இரட்டை வேடம் போடுகிறார் என்று ஈழத் தமிழர்களாலேயே விமர்சிக்கப்படவரை நோக்கித்தான் இன்று உங்கள் விரல் நீள்கிறது.
ஏன் என்பது ஊரறிந்த –அல்ல அல்ல – உலகறிந்த ரகசியம். ஜெனீவாவில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் உங்கள் அண்ணனைப் போர்க் குற்றவாளி எனச் சொன்னதைப் பொறுக்க முடியாமல் புழுங்கிப் புழுங்கி இன்று இவர் மீது பாய்கிறீர்கள் என்பதை ஊகிக்க முடியாதா என்ன?
உங்கள் செயல்களை உந்தித் தள்ளுவது ஒன்றுதான் அது: அச்சம். நீங்கள் நடத்திய போர் ஆனாலும் சரி, முள் வேலிக்குப் பின் தமிழர்களை முடக்கி வைத்த கொடூரமானாலும் சரி, பிள்ளை பிடிப்பவர்களைப் போல பிடித்துப் போன வெள்ளை வாகனங்களாலும் சரி, அனைத்துமே உங்கள் அச்சத்தைதான் சொல்கின்றனவே அன்றி வீரத்தையோ நேர்மையையோ அல்ல. இப்போது கூட, தோற்றவர்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், மீண்டும் துளிர்த்து விடுவார்களோ என்ற அச்சம் உங்கள் உச்சந்தலையில் உட்கார்ந்து கொண்டிருப்பதுதான் இந்த உளறல்களுக்குக் காரணம்
வாய்ப்புக் கிடைக்கும் போது வரலாற்றை வாசித்துப் பாருங்கள். துப்பாக்கியையும் துவேஷத்தையும் தூக்கி வைத்து விட்டு உலக வரலாற்றை ஒரு முறை புரட்டிப் பாருங்கள். வாசிக்கும் வழக்கம் இல்லாவிட்டால் அதை ஒரு வாசனையாவது பாருங்கள். அது உங்களுக்கு ஓர் உணமை சொல்லக் காத்திருக்கிறது.
ஆயுதம் எடுத்தவர்கள் எல்லாம்,–அது செங்கிஸ்கானாலும் சரி, ஹிட்லரானாலும் சரி, அமெரிக்காவானாலும் சரி – அடைந்ததெல்லாம் தற்காலிக வெற்றிகளே. இறுதி வெற்றி என்றும் அவர்களுக்கு எட்டியதே இல்லை.
அந்தப் பட்டியலில் அடுத்து இடம் பெறப் போகும் பெயர் உங்களுடையதுதான். இனியாவது இந்தியத் தலைவர்களை இகழ்வதை நிறுத்திக் கொண்டு யதார்த்தங்களைப் பரிசீலியுங்கள். ஏனெனில் வரலாறு இரக்கமற்றது.
ஒரு போதும் உங்களை மன்னிக்க முடியாத
இளந்தமிழன்