குயில் கூவித் துயில் எழுவது ஒரு கொடுப்பினைதான்,காக்கைகள் கரைகிற காலைப் பொழுதுகளில்தான் பெரும்பாலும் கண் விழித்திருக்கிறேன்.குயில்கள் எப்போதாவது கூவும்.அல்லது அதன் கூவல்கள் காக்கையின் குரல்களுக்கு நடுவில் காணாமல் போயிருக்கும். ஆனால் இன்று அதன் கூவல், கூவல் கூட இல்லை, கெஞ்சுவதைப் போல் ஒரு கேவல், வலியின் ஒலி, தெளிவாகக் கேட்டது. இது அதிகாலையும் இல்லை. கருமேகங்கள் கவிந்து கிடந்ததால் இரவைப் போல் இருண்டிருந்தது இந்தப் பகல்.
வெளியே பார்த்தேன். முதலில் ஒரு துளி உதிர்ந்து ஜன்னல் கம்பியில் வந்தமர்ந்தது. குயிலின் கூவல் கூடியது. வானம் பார்த்தேன்.பார்த்துக் கொண்டிருக்கும் போதே பரபரவென்று வந்திறங்கியது மழை.
கோடைகாலம்தான் பெரும்பாலும் குயில்கள் குதூகலிக்கிற நேரம். ஏப்ரல் மே இந்தியக் குயில்களின் இனப் பெருக்கக் காலம். மழைக்காலத்தில் அவை மெளனித்து விடும். ’ஆடின மயில்கள்; பேசாதுஅடங்கின குயில்கள்’ என மழைக்காலத்தைப் பற்றி எழுதுகிறான் கம்பன் (அந்தக் கவிதைச் சித்திரத்தை வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள் – ‘பாடலம் வறுமை கூர- கிஷ்கிந்தா காண்டம்- கார்காலப் படலம்)
மழைக்காலத்தில் குயில் கூவுகிறது என்றால் அது ஏதோ துன்பத்தில் இருக்கிறது என்று அர்த்தம். துணையோடு கூடுகிற வாய்ப்பைத் தொலைத்துவிட்ட துயரமாக இருக்கும் என நினைத்துக் கொண்டு எதிரிலிருந்த மரத்தை, மழைத்திரையை ஊடுருவித் துழாவினேன். குயில் கண்ணில் படவில்லை. குரலோசையும் நின்றுவிட்டது. என்றாலும் அது எங்கோ நனைந்து நடுங்கிக் கொண்டுதானிருக்கிறது என்றது மனது.
காதில் கேட்காத ஒலியெல்லாம் சில சமயம் மனதில் கேட்கும் உங்களுக்கும் புத்தகங்களுக்கும் உறவு இருந்தால் மனதில் அந்த மாயம் நிகழும். எனக்கும் அது நேர்ந்தது. மழைக்காலமும் குயிலோசையும் என்று மா.கிருஷ்ணனின் புத்தகத் தலைப்பு மனதில் மிதந்து சென்றது. கிருஷ்ணன், நானறிந்தவரையில் பசுமை இலக்கியம் என்று தமிழில் இன்று பகுத்துப் பேசப்படுகிறதே, அந்தத் துறையின் முன்னோடி. அவரது தந்தையைப் போல. அவர் தந்தை –அ.மாதவைய்யா- தமிழ் நாவல்களின் முன்னோடி. கிருஷ்ணன் அப்பாவின் நண்பர். இரண்டொருமுறை வீட்டிற்கு வந்த போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அப்பா புத்தகங்களின் நண்பரும் கூட. புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைத்ததும் அவர்தான், என் பிள்ளைப் பிராயத்தில் ஆரம்பித்தது அது. அந்தச் சித்திரம் அச்சுப் போட்டது போல் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது.
.வாரந்தோறும் நூலகம் போவது அப்பாவிற்கு வாடிக்கை. வீட்டில் இருப்பவர்கள் மேய்க்க முடியாத அளவிற்கு விஷமம் செய்து கொண்டிருந்தேனோ அல்லது அம்மாவிற்கு வேலை நிறைய இருந்ததோ அன்று என்னை அவர் வசம் ஒப்படைத்து விட்டார்கள். அதிகம் போனால் அப்போது எனக்கு ஐந்து வயதிருக்கும். அவரது சைக்கிளில் அமர்த்தி அப்பா என்னையும் நூலகம் அழைத்துப் போனார்.
இங்கேயே இரு எனச் சொல்லி நூலகர் முன் என்னை அமர்த்திவிட்டு, புத்தகம் தேடிப் போனார், அப்பா. என்ன செய்வது எனத் தெரியாமல் நான் எட்டுத் திசையும் கண்ணைச் சுழட்டுகிறேன். எல்லாப் பக்கமும் புத்தகங்கள். பெரிதும் சிறிதுமாய் சுவர் நெடுகப் புத்தகங்கள். கண்ணாடிப் பேழைக்குள் சில. கவிழ்ந்து மேசை மேல் கிடந்தவை சில. அரைகுறையாய் எழுந்த தூண் போல் அடுக்கி வைக்கப்பட்டவை சில. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரைந்து கிடந்தவை சில.
அப்பா திரும்பி வந்தார். புறப்படலாம் என எழுந்த என்னை இரு எனச் சொல்லி நூலகரிடம் ஏதோ கேட்டார். அங்கே என்று அலமாரியைக் காட்டினார் அவர். தேடிப்பார்த்தேன் இல்லையே என்றார் அப்பா. நூலகர் இடத்தை விட்டு எழுந்து போனார். அடுக்கியிருந்த வரிசையை நெருங்கிப் பார்த்துக் கொண்டே வந்தவர் அதிலிருந்து ஒன்றை ’சரக்’கென்று உருவி எடுத்தார். அப்பா மலர்ந்தார்.
அந்த லாகவத்தை ஆண்டுகள் பல சென்ற பின் ஆழ்வாரிடம் பார்த்தேன். அவர் நூலகர் அல்ல. மைலாப்பூரில் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை வியாபாரி.ஒரு சில பதிப்புகள் வந்து ஓய்ந்து போன பழைய புத்தகங்கள் அவரிடம் கிடைக்கும். அபூர்வமான புத்தகங்களும் அங்கே அகப்படும். கேட்ட புத்தகத்தை நொடிகளில் தேடிக் கொடுப்பார். இல்லை என்றால் இராமனைப் போல் இன்று போய் நாளை வா என்பார். வேறு கடைகளோடு ஒப்பிடுகையில் விலை சற்றுக் கூடத்தான். ஆனால் கடந்த காலப் பொக்கிஷங்களை காசைக் கொண்டா அளக்க முடியும்?
ஐந்தாம் வகுப்புவரை படித்தஆழ்வார் 1948ல், அவரது 20, வயதில் அந்த பிளாட்பாரக் கடையை ஆரம்பித்தார்., அறுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்று அவருக்கு 85. உடல் நலம் குன்றி வீட்டில் முடங்கி விட்டார். அவர் மனைவி மேரி வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போல புத்தகங்களைப் பார்த்துக் கொள்கிறார்.
இந்த. 65 வயதுக் கடைக்கு இப்போது ஒரு சோதனை. ஆழ்வார் புத்தகக்கடையை அகற்றுவதற்கு மாநகராட்சிஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அது நீதிமன்ற உத்தரவு. முதற்கட்டமாக கடையின்மேற்கூரையை சென்ற வாரம் இடித்துத்தள்ளிவிட்டார்கள்..
இடிந்து போயிருக்கிறார் ஆழ்வார் மனைவி. கூரை போய்விட்ட நிலையில் கொட்டும் மழையில் புத்தகங்களை எப்படிக் காக்கப் போகிறோம் எனக் கலங்குகிறார்.
ஆழ்வாரின் வாழ்வாதரம் அசங்குவதை எண்ணும் போது எனக்கும் கலக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக மழையை மறுத்து விடமுடியுமா? நம் அத்தனை பேருக்குமே ஆதாரம் அதுதானே? ’மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா’ என்ற இன்னா நாற்பதின் வரியை எனக்கு நினைவூட்டியது அறிவு. சரி அதை உனக்குச் சொன்னதே ஒரு புத்தகம்தானே என எதிர் வாதிட்டது மனது. அறிவுக்கும் மனதுக்குமிடையே ஒரு விவாதம் எனக்குள் துவங்கியது.
எதிர்மரத்துக் குயில் இன்னொரு முறை கூவிற்று. இந்த முறை எனக்கு அதில் ஆழ்வாரின் குரல் கேட்டது.மழைக்காலத்துக் குயிலின் வலியின் ஒலி.
புத்தகங்கள் சமூகத்திற்கு வழி காட்டுமென்றால் சமூகம் புத்தகத்திற்கு வழிகாட்டாதா?
புதிய தலைமுறை ஜூன் 13 2013