இரத்தத்தில் மணலைக் கலந்து இழுசியது போல என் ஜன்னலுக்கு வெளியே சிவந்து கிடக்கிறது அந்தி வானம். இத்தனை நீள வர்ணனை இல்லாமல், ஆப்கானிஸ்தான் போல என்ற ஒற்றைச் சொல்லில் இதை விவரித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
ஆப்கான் இரத்தத்தில் நனைந்து கொண்டிருந்த போது என்னுள் ஓசையில்லாத் துக்கம் ஒன்று எழுந்து, உயர்ந்து, ஓய்ந்தது.நம்மைப் போல நெடிய கலாசாரம் கொண்ட நாடு அது. நேற்று முளைத்த கலாசாரங்களைப் போல நெடிய கலாசாரங்கள் ஒரு அடியில் உடைந்து நொறுங்கிவிடுவதில்லை. அவை அடிகள் பல கண்டு குற்றுயிரும் குலை உயிருமாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகும். இதுபோல் ஒரு வசனம் பல ஆண்டுகளுக்கு முன் வந்த கரம் ஹவா (வெப்பக் காற்று) என்ற படத்தில் ஒலித்தது. இப்போது என் நினைவில் அது மீண்டும் கேட்டது.
ஆப்கானில் வீசும் வெப்பக் காற்று, பழைய கலாசாரத்தை மீட்டெடுக்குமா அல்லது இடையில் வந்ததை இழுத்து எறியுமா என்ற விவாதங்களுக்குள் இப்போது நான் போகப் போவதில்லை. அதைப் பற்றிப் பேச இன்னொரு வேளை அகப்படாமலா போகும்? என்னைப் பொறுத்தவரைக் கலாசாரம் என்பது இடையறாது நிகழ்ந்து கொண்டிருப்பது. காலையில் பல்துலக்கும் பற்பசையிலிருந்து இரவில் ஏற்றி வைக்கும் கொசுவர்த்தி வரை எல்லாவற்றிலும் கலாசாரம் நிழலிட்டிருக்கிறது. நகர்ந்து கொண்டேயிருக்கும் நதித் தன் கரைகளைத் தானே தீர்மானித்துக் கொள்வது போல கலாசாரம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது என்பது அடியேனின் அபிப்பிராயம்
வேங்கையின் பசியோடும், வெற்றியின் களிப்போடும் ஆப்கானில் துப்பாக்கிகள் அலையத் தொடங்கிய வேளையில் அதன் இலக்கியத்தில் நான் இளைப்பாறிக் கொண்டிருந்தேன்.
ஓயாது யுத்தம் கண்ட பூமி என்றாலும் ஆப்கானியர் வாழ்வில் எப்போதும் கவிதைக்கு இடமுண்டு.போர்க் காலங்களிலும் அங்கே கவிதைகள் பூத்துக் கொண்டிருந்தன. போர்க் கோலம் பூண்ட வீரர்கள், ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக எழுந்தவர்கள், மதவாதிகள், புதுமை காண விரும்பியவர்கள், பழமையில் தோய்ந்து ஊறியவர்கள் எல்லோரிடமும் கவிதை ததும்பிக் கொண்டிருந்தது. போர்க்களம் போகிறவனுக்கு உற்சாகம் ஊட்டவும், இழப்புகளின் வலியை அழுது தீர்க்கவும், அழக்கூட முடியாத மன அழுத்தங்களுக்கு மருந்தாகவும், வெற்றியைக் கொண்டாடும் விருந்தாகவும் அவர்களுக்குக் கவிதைகள் தேவைப்பட்டன. நம் சங்ககாலக் கவிதைகளைப் போல காதலும் வீரமும் பிரிவும் சோகமும் அந்தக் கவிதைகளுக்குக் கனல் ஏற்றின.
எல்லோருக்கும் தெரிந்த பெயர் ரூமி. பதிமூன்றாம் நூற்றாண்டு ஞானி. அந்தப் பாரசீக மொழிக் கவிஞரின் தாயகம் ஆப்கானிஸ்தான். கஸல் என்று இன்று கொண்டாடப்படும் கவிதைகளுக்குச் செழுமை சேர்த்தவர் அவர். சுருக்கமான வரிகளில் சுடரேற்றியவர்.
அவரும் அவரது தோழரும் ஒரு திராட்சைத் தோட்டம் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது தோழர் சொன்னார்: “நீங்கள் நிறைய எழுத வேண்டும். எதிர்காலத்தில் வருவோருக்கு அவை இசையாகி இதயத்தை நிரப்பும்.” ரூமி சொன்னார்: “அதோ, அந்த மூங்கில்கள் பாடுவதைக் கேள்!”
எனக்குப் பிடித்த ரூமியின் வரிகள் இவை:
ஒரு தோழனாய்
எனக்குள் இருக்கும் அரசனை
எவ்விதம் நீ அறிவாய்?
என் பொன் முகத்தை மாத்திரம் காணாதே
எனக்கு உண்டு இரும்புக் கால்கள்
ஆப்கானின் தேசியக் கவி என்றறியப்படுபவர் கெளஷல் கான். அவர் ஓரு போர் வீரரும் கூட. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் கவிதைகள் பொதுவாக, வீரம், மானம், போர், காதல் என்று அமைந்திருக்கும். அவர் இயற்கையைப் பற்றி எழுதிய அபூர்வமான கவிதை இது.
ஆனால் அதை ரசிக்க நாம் கொஞ்மேனும் குளிர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது நம் கற்பனையில் கொஞ்சம் பனி உறைந்திருக்க வேண்டும்.
குளிர் காலத்தில் போர் இல்லை.கனத்த ஆடைகளுக்கும், காதலுக்கும் குடிப்பதற்கும் தின்பதற்கும் வாய்க்கும் தருணமது. கெளஷல் எழுதுகிறார்:
கோடையின் வெப்பத்தில் நலிந்த உலகம்
மீண்டும் வலிமை பெற வந்தது பனிக்காலம்
உண்ணலாம் உல்லாசமாய்
தண்ணீரும் தித்திக்கிறதே!
கரமும் இதழும் இணையக்
காதலர் பின்னிக் கொள்கிறார்கள் மீண்டும்
போர்வீரன் கோட் அணிகிறான்.
மகிழ்வோடு துணிகளில் புதைகிறான்
அவன் குதிரைக்கும் குதூகலம்
அவனும் குதிரையும் சேணத்தின்
கனத்தை, ஆயுதத்தைச் சுமக்க வேண்டாம்.
யாத்திரை போன யோகியைப் போலக்
கழுகுகள் திரும்புகின்றன
பொலியும் நிலவொளியில்
இரைந்து கொண்டு நாரைகள்
வானில்.
ஆண் கவிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல ஆப்கான் பெண்கவிகள். அங்கு பிரபலமான பெண் கவிஞர் ரபியா பால்கி.காதல் ததும்பும் கவிதைகள் எழுதியவர். அடிமை ஒருவனைக் காதலித்தற்காக அவரது சகோதரரால் சிறை வைக்கப்பட்டு சிறையிலேயே கொல்லப்பட்டவர். அவர் தனது ரத்தத்தைக் கொண்டு சிறைச் சுவர்களில் கவிதைகள் எழுதியதாகச் சொல்வார்கள்.
காதெலென்பது விரிந்து பரந்த பெருங்கடல்
அதில் எந்த இடத்திலும்
எந்த ஒரு கெட்டிக்காரனும்
நீந்தியதில்லை
என்றெழுதும் அவரது ஒரு கவிதை வரி என் சிந்தையை நெடுநேரம் பிராண்டிக் கொண்டிருந்தது. அது: ‘விஷம் அருந்து. அத்துடன் கொஞ்சம் இனிப்பையும் ருசி பார்’ என்று முடிகிறது காதலைப் பற்றிய ஒரு கவிதை.
நம்மூர் எசப்பாட்டைப் போலக் கவிதைக்குக் கவிதையாலேயே பதில் சொல்லும் வழக்கமும் அங்கு உண்டு. இந்தக் ‘கவிதைச் சண்டைக்கு’ ஷெர் ஜங்கி என்று பெயர். நம்முடைய குறளைப் போன்று அங்கும் லண்டாய் என்ற குறுங்கவிதைகள் உண்டு.குறளுக்கு ஏழு சீர். லண்டாய்க்கு 21 சிலபல்.ஆனால் முக்கியமான வித்தியாசம் ஒன்றுண்டு. இந்தக் குறுங்கவிதைகளை எழுதியவர்கள் ‘முகமற்றவர்கள்’. அதாவது எழுதியவர் பெயர் தெரியாது. அதனால் அனேகமாக அதை எழுதியவர்கள் பெண்களாக இருக்கக்கூடுமென்று கருதப்படுகிறது. அதற்கு இன்னொரு காரணம் இந்தக் கவிதைகள் ஆண்களை போருக்கு ஊக்குவிப்பவைகளாக அமைந்திருப்பது.
ஆப்கானிய கவிதைகளுக்கும் நம்மைப் போன்று ஆயிரம் ஆண்டு வரலாறும் தொடர்ச்சியும் உண்டு. அங்கும் புதுக் கவிதைகள் உண்டா?
உண்டு. ஆப்கான் புதுக் கவிதைகளின் தந்தை கலீலுல்லா கலிலி. 11 வயதில் பெற்றோரை இழந்தார். அவரது தந்தை ஹபிபுல்லா கான் என்ற அரசரின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர்.அரசரின் மகன் அமானுல்லா கான் அரசரைக் கைது செய்து ஆட்சியைக் கைப்பற்றிய போது கலீலுல்லாவின் தந்தை தூக்கிலடப்பட்டார்.அன்னை தற்கொலை செய்து கொண்டார். கபூலில் இருந்து தப்பியோடிய கலீலுல்லா காந்தகாரில் ஒளிந்து கொண்டார். காந்தகார் வாழ்க்கையில் நிறையக் காதல் கவிதைகள் எழுதினார்.
இயற்கை போதும் எனக்கு
வேண்டாம் வேறெதுவும்
இயற்கை ஆளட்டும்
ஆனந்தமும் சிரிப்பும்
ஆதிக்கம் செலுத்தட்டும்
நம் இருவரின் இடையே
என்பது போன்ற காதல் கவிதைகள்
1987ல் தனது 80ஆம் வயதில் கலீலுல்லா இறந்து போனார்.
ஆனால் ஆப்கானில் கவிதை வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொன்று தொட்டு யுத்தங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அந்த குன்று சூழ் குளிர் பூமியில்தான் காலங்காலமாகக் கவிதைகளும் பூத்துக் கொண்டிருக்கின்றன. அதில் எனக்கு ஆச்சரியமில்லை.காரணம்: ஆயுதங்கள் அரசியலைத் தீர்மானிக்கலாம். ஆனால் கவிதைகள் ஆன்மாவின் குரல்.