பேரன்பின் உயிரோவியங்கள்

maalan_tamil_writer

தி.ஜானகிராமனின் குறுநாவல்கள்

மாலன்

நேரம் நிசியை நெருங்கிக் கொண்டிருந்தது.திறந்த வெளி. மார்கழிப் பனி மெல்ல மெல்ல மேனியைத் துளைக்க இறங்கிக் கொண்டிருந்தது. கைகள் மார்பின் குறுக்கே நீண்டு தோளை இறுக்கிக் கொண்டிருக்கின்றன. குளிருக்காக மட்டுமல்ல. நெஞ்சு நிறைந்து கிடக்கிற இந்த அமுதத்தை அப்படியே நிறுத்திக் கொள்ளவும்தான். மாலி இசைத்துக் கொண்டிருக்கிறார். இமைகள் மூடியிருக்க, பருத்த இதழ்கள் பிதுங்கி குழலை முத்தமிட்டுக் கொண்டிருக்க இசை பெருகி நதி போல நனைத்துக் கொண்டு ஓடுகிறது. ஒருஅடி, மிஞ்சிப் போனால் ஒன்றரை அடி மூங்கில் குழலா என்னை இப்படிச் சாய்க்கிறது! ‘மண்ணுலகத்து நல்லோசைகள்’ அனைத்தும் பண்ணிலிசைத்துப் பார்த்துவிடுவோம் என்று இன்று கங்கணம் கட்டிக் கொண்டுவிட்டாரா மாலி என்ன இப்படிப் பொழிகிறார்!

“குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? மூச்சிலே பிறந்ததா? அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது: குழல் தனியே இசை புரியாது. உள்ளம் குழவிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும். இஃது சக்தியின் லீலை” என்று இதைத்தான் எழுதினாயா பாரதி!

என்னோடு வருவதாகச் சொல்லிப் பின் ஏதோ காரணத்தால் பிணங்கி விட்ட நண்பன் எப்படி இருந்தது கச்சேரி எனக் கேட்டான் மறுநாள். என்னத்தைச் சொல்வேன்? எப்படிச் சொல்வேன்? கற்பனையில் பறந்து அளைந்து திளைத்தார் என்று சொல்வேனா? கேட்டுப் பழகிய பாட்டை ஏதோ புதுசு பண்ணியதைப் போல மாற்றிய மாஜிக்கை சொல்வேனா? ஒரு இடத்தில் குழல் அப்படிக் குழைந்ததே அதை செல்வேனா? இல்லை பிறிதொரு இடத்தில் கம்பீரமாக ராஜநடை போட்டதே அதைச் சொல்வேனா?  என்னலாமோ சொல்லலாம். ஆனால் அதை எல்லாவற்றையும் வார்த்தையாகவும் வர்ணனையாகவும்தான் சொல்ல முடியும். அத்தனை வார்த்தையும் என்னைக் காட்டுமே தவிர அந்தக் கலைஞனைக் காட்டுமா? அதில் அந்த வாசிப்பைக் கேட்க முடியுமா? படத்தை விவரிக்கலாம். சிற்பத்தை விவரிக்கலாம். கவிதையை விளக்கி விடலாம். சங்கீதத்தை என்ன செய்வது? அனுபவிக்க வேண்டும். அதை விவரிப்பதாவது!

“என்ன சொல்லேன், எப்படி இருந்தது? சொல்லேண்டா!”

“செத்துடலாம் போல் இருந்தது!”

“என்ன!”

“உனக்குப் புரியாது. நல்ல சங்கீதம் கேட்கும் போது அப்படியே மனசு நிறைந்து தளும்பும். இது போதுமேனு தோணும். போதுமே!. என்னத்திற்கு இதற்கப்புறம் இந்தத் தகர டப்பா கொட்டுக்குக் காதைக் கொடுக்கணும்? போதுமே!”

தி.ஜானகிராமனைப் படிப்பதும் மாலியைக் கேட்பதும் ஒன்றுதான். அவரைப் படிக்கும் போது கிடைக்கிற சுகமும் ஆனந்தமும் உள்ளம் நிறைந்து ததும்பித் திளைப்பதும் அலாதியானது. அதற்கப்புறம் அதை விவரி, விளக்கு, விமர்சி, வியாக்யானம் செய், என இறங்குவது வியர்த்தமான காரியம். ஜானகிராமனை அனுபவிக்கணும். அவ்வளவுதான். அவ்வளவேதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. பீரியட். டாட். முற்றுப்புள்ளி.

இங்கே நான் எழுதப்போவது எல்லாம் இசையைப் பற்றிய வார்த்தைகளால் ஆன விவரிப்புதான்.அது கச்சேரியைப் பற்றிய விவரணையை உங்களுக்குத் தரலாம். ஆனால் அதன் அனுபவத்தைத் தராது

தி.ஜா எழுதிய குறுநாவல்கள் என நமக்குப் படிக்கக் கிடைப்பவை ஏழு. அவற்றில் பெரும்பாலானவை (ஐந்து) சுதேசமித்ரன் தீபாவளி மலருக்காக  எழுதியவை. அனேகமாக ஆண்டுக்கொன்று என 1959 முதல் 1964 வரை (1960 நீங்கலாக) எழுதப்பட்டவை. ஒன்று அகில இந்திய வானொலிக்கு எழுதப்பட்டது. 1964க்குப் பின். 15 வருடங்களுக்குப் பிறகு, 1979ல் மோனா மாத இதழுக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில்   எழுதிய அடிதான் அவரது கடைசிக் குறுநாவல் (அடி மோனாவில் வெளியானதில் அடியேனுக்கு ஓர் அணில் பங்குண்டு. அவரது நாவல் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில், பத்திரிகையில் வெளிவராமல் நேரடியாக நூலாக வந்த, அம்மா வந்தாளை சாவியில் தொடராக வெளியிட்டு வந்தோம். எங்களுக்காக ஒன்று புதிதாக எழுதக் கூடாதா என்று கேட்டு வந்ததன் பேரில் ஒருநாள் அடியை அனுப்பி வைத்தார். மொத்தமாகப் போட்டுவிடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அது மோனாவில் வெளி வந்தது. என் வேண்டுகோளை ஏற்று மோனாவிற்கு எழுதிய இன்னொரு இலக்கிய ஜாம்பவான் லா.ச.ரா. அவரது கல் சிரிக்கிறது அதில்தான் பிரசுரமாயிற்று)

இந்தப் பஞ்சாங்கக் கணக்கைப் பார்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு. குறுநாவல் என்பது மனிதனாகவும் இல்லாமல், குழந்தையாகவும் இல்லாமல், வளரிளம் பருவத்து ஆண்/பெண்ணைப் போலத் தோற்றம் கொண்டது. ‘நிமிஷத்தை நித்தியமாக்கும்’ சிறுகதையைப் போலவும் இல்லாமல், பாத்திரங்கள், சம்பவங்கள், காலம் இவற்றினூடாக, மனிதனின்/மனிதர்களின் அல்லது சமூகத்தின் பயணத்தை, மீளக் கட்டும் நாவலைப் போலுமல்லாத, ஒரு வடிவம் குறுநாவலுக்கு. சிறுகதையின் கூர்மையும் நாவலின் வீச்சும் கொண்ட ஒரு வடிவம். வாமனனும் இல்லாத திரிவிக்ரமனும் இல்லாத ஒரு பிரகிருதி. கையாளச் சவாலானது.

குறுநாவல் என்ற இந்த வடிவத்தை மிக அபூர்வமாகக் கையாண்டார் தி.ஜா. அவரது குறுநாவல்கள் அனைத்துமே யாரோ ஒருவரது அல்லது சிலரது வேண்டுகோளின் பேரிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடியும். கச்சேரி மொழியில் சொன்னால் அது நேயர் விருப்பம். ‘வீடு’ எழுதியதற்குப் பிறகு, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் ‘அடி’ எழுத இசைந்ததும் இந்தப் பேரன்பினால்தான்.

அடி அவரது அவரது தில்லி வாழ்க்கையின் போது எழுதியது 1968ஆம் ஆண்டே தில்லிக்குப் பெயர்ந்து விட்டார் என்றாலும், மறைவதற்கு மூன்றாண்டுகள்  முன்புவரை கூட, அவர் மனதில் அவர் காலத்துத் தஞ்சையும் அதன் மனிதர்களும் நிறைந்து கிடந்தார்கள் என்பதற்கு இது ஓரு சாட்சியம்.. இந்தக் குறுநாவல்களில் பலவும் தஞ்சைக் கிராமங்களில்  வாழ்ந்தோரை அல்லது அங்கிருந்து பெயர்ந்தோரைப் பற்றிய சித்தரிப்புக்கள். அவர் கதை எழுதிய காலத்திற்கும் கதை நடக்கும் காலத்திற்கும் இருபது முப்பது வருஷ இடைவெளியாவது இருக்கும். இப்போது வாசிக்கும் தலைமுறையின் காலத்திற்கும், எழுதப்பட்ட காலத்திற்கும் இடையேயும் முப்பது ஆண்டுக்கு மேலேயே இடைவெளி விழுந்து விட்டது. இந்த இடைவெளியில் ஊர் மாறிவிட்டது. அவர் சித்தரிக்கிற ஊரின் பசுமையும், குளுமையும் மாறிவிட்டன. ஜிர்ர்ரிடுகிற சுவர்க் கோழிகளும் சில்வண்டுகளும் மெளனித்துவிட்டன போலத் தோன்றுகிறது. ‘கேட்டுக் கொண்டே இருக்கக் கூடிய நிசப்தம்’ நிலவும் கிராமங்கள் இப்போது பெரும்பாலும் மறைந்து விட்டன. நிசி நெருங்கும் நேரத்தில் கூட தொலைகாட்சியோ, திரைப்படப்பாடல்களோ பேசிக் கொண்டிருக்கின்றன.

‘எட்டு ரூபாய்க்கு பதினாறு முழப்புடவை’ விற்கிற காலம் போயிற்று. ‘ஐந்நூத்திரண்டு ரூபாய்க்கு’ ‘நாலுபவுனில் ஒரு சங்கிலி, கைக்கு இரண்டு ஜோடி வளையல், காதுக்கு ஒரு ஜதை ஜிமிக்கி, காலுக்குக் கொலுசு, நாலரை ரூபாய்க்குத் தங்க முலாம் பூசிய வெள்ளி வேல்’ இவற்றை வாங்கும் காலம் கனவுகளில் கூட இல்லை. கங்காளம், வெந்நீர் அண்டா, அகப்பைக் கூடு, கறுப்பாக மண்ணெண்ணெய்த் தகரம், பச்சையும் நீலமுமாக (தகர) டிரங்குப் பெட்டி இவையெல்லாம் வீட்டை விட்டு வெளியேறிவிட்டன. தர்ஷணாத்தூள் கொண்டு பல்விளக்குகிற பெண்கள் இல்லை. ‘குடுமி, சிவப்புக் கடுக்கன், கோட்டு, அதற்கு மேல் ஜரிகை போட்ட, மடித்த அங்கவஸ்திரம், சட்டையை உள்ளுக்குள் விட்டு அதற்குள் வெள்ளை வெளேர் என்று சலவை மல் வேஷ்டி’ அணிந்து ‘எடுப்பாக’ அலுவலகம் போகிற ஆண்கள் இல்லை 

வெளித் தோற்றத்தில் மட்டுமல்ல, அகத் தோட்டமும் மாறிவிட்டது. இன்று அங்கு என்னென்னவோ களை கட்டுகிறது. ஆனால் மனமெல்லாம் அன்பு கசிய, தேசப்படம் எட்டாத பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆறும் ஊரும் காட்டச் சொல்லி, சரியாகச் சொன்ன பையனுக்கு ஒரு ரோஜா மிட்டாயும், தப்பாகச் சொல்பவனுக்கு இரண்டு மிட்டாயும் கொடுக்கிற ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட அபூர்வமாகி வருகிறார்கள்

இடம், காலம், மனிதர்கள் அவர்களின் மொழிகள் எல்லாம் மாறிவிட்டன.  மக்களின் வழக்கங்கள், வாழ்வாதாரங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் மாறிவிட்டன. தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், சாமர்த்தியம், சத்தியம், ஒழுக்கம், ஒழுக்கக் குலைவு என்பதற்கான அளவுகோல்கள் மாறிவிட்டன. ஆனாலும் இந்தக் குறுநாவல்கள் ஒவ்வொன்றும் நம்மை அசைக்கின்றன, திகைக்கச் செய்கின்றன, மூடி வைத்த பின்னும் மனதுக்குள் மெளனமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றன. ஞாபகத்தைத் தூங்கவிடாமல் அடிக்கின்றன.

என்ன காரணம்? ஏன் இப்படி? இவை ஜீவித்திருக்கும் சித்திரங்கள். மனித மனங்களைப் பற்றிய உயிரோவியங்கள். ஏனெனில் தி.ஜா எழுதியது ஏதோ ஒரு காலத்திய இடத்தையோ வாழ்வையோ பற்றிய காட்சிகளை அல்ல. அவர் எழுதியது, அவற்றின் ஊடாக மனித மனங்களை. அவற்றின் சித்திரங்களை, அவற்றின் விசித்திரங்களை. அவை இன்னும் பெரிதும் மாறிவிடவில்லை.

மனித மனங்களின் பொருளாசையை, பெண்ணாசையை, ஆணாசையை, அதிகாரப் பசியை, அப்பாவித்தனத்தை, ஆஷாடபூதி நடத்தையை, அற்ப லட்சியங்களை, அவற்றின் தடுமாற்றங்களை, அதில் எழும் குற்ற உணர்வை, அறச் சீற்றத்தை, அருள் சுரப்பை, நம்பிக்கை துரோகத்தை இந்தக் குறுநாவல்களில் எழுதுகிறார் தி.ஜா. அவைதான் இவற்றை ஜீவ ஓவியங்களாக மாற்றுகின்றன.  

இவற்றையெல்லாம் அவர், கடுஞ்சொல் கொண்டு விமர்சித்து, இதழ்க் கடையில் குறுஞ்சிரிப்பை ஒதுக்கிக் கொண்டு ஏளனமோ, எகத்தாளமோ செய்து, அல்லது தலைக்குப் பின் ஒளிச்சக்கரம் சுழல உபதேசித்து எழுதவில்லை. எழுத்தாளன் என்பவன் சமூக விஞ்ஞானி, அல்லது சாக்க்டை இன்ஸ்பெக்டர் என்ற பிரமைகளோடோ, பேதமைகளோடோ எழுதவில்லை. இருட்டில் ஒவ்வொன்றாக அவிழ்த்தெறிந்து கிளு கிளுப்பூட்டும் வணிகக் காமத்தோடு எழுதவில்லை.  

தி.ஜாவை, அவரது எழுத்தை இயக்கியவை இடத்தின் மீதும் மனிதர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பேரன்புதான். குலாப்ஜாமூனின் கோளத்தை அழுத்தினால் கசிந்து கையில் ஒட்டிக் கொள்கிற ஜீராவைப் போல மனிதர்களின் மீதான பேரன்பு அவரது படைப்புகளில் கசிந்து கொண்டே இருக்கிறது. இதை இந்தக் குறுநாவல்களில் பல இடங்களில் பார்க்கலாம்

திருமணத்திற்கு வெளியில் உள்ள ஆண்களிடம் மனதையும் உடலையும் கொடுத்துவிடுகிற பட்டு (அடி) அம்பு (வீடு) என்ற இரு பெண்களைப் பற்றி விரிக்கிற கதைகளில் அவர்களைப் பற்றிய வசையோ சாபமோ இராது. அம்புக்கு ஏற்பட்டது ஒரு சலனம். அவளது கணவன் அன்பானவன்தான். ஆனால் அன்பை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாதவன். அவளுடைய ஆர்வங்களில் பங்கெடுத்துக் கொள்ள முனையாதவன். அவள் அழகைக் கண்டு மிரள்கிறவன். ‘என்ன கம்பீரமான முகம்  ஏதோ ராஜ்யம் ஆள்கிற பெண் மாதிரி தோற்றம் அவளுக்கு! என்று அவளை நெருங்க பயப்படுகிறவன். ‘இவள் சாதாரண மனித இன்பங்களால் சந்தோஷம் அடைகிறாளா?’ என்றும் சந்தேகம். அவன் இயங்கியதும் முயங்கியதும் இருட்டில்தான். ஆனால் பெண்களுக்கு திருமணம் உறுதி செய்யும் உடல் மட்டுமல்ல, மனமும் தேவைப்படுகிறது.

அம்பு அயல் ஆடவனின் பால் ஏற்பட்டுவிட்ட ஈர்ப்பை மறைக்காதவள். தனித்துப் போவது என்ற தீர்மானத்தைக் கணவனிடம் வாய் விட்டுப் பேசும் துணிவு கொண்டவள். அவள் காதலை அல்லது காமத்தின் தேடலை ஒரு மரணம் நொறுக்குகிறது.

தி,ஜா அந்தக் கணவனின் பார்வையில் கதையை எழுதிச் செல்கிறார். அவனது ஆற்றாமையும் பொருமலும் புழுக்கமும் அழுத்தமாகக் கதையில் பதியும்படி எழுதிச் செல்கிறார். அவரது விவரிப்பு முழுவதும் ஒரு மெலிதான கண்டனம் கொண்டது. ஆனால் வாசிப்பவனின் அனுதாபம் என்னவோ அம்பு மீது விழுகிறது. அதுதான் தி.ஜா.வின் எழுத்தின் மாயம். அவர் செய்திறனின் நுட்பம்.

அடியின் நாயகி பட்டுவும் அழகானவள்தான். தைரியமானவள்தான். அவள் கணவன் சிவசாமி அவளைப் புறக்கணித்தவனோ அல்லது ஆள அஞ்சுகிறவனோ அல்ல. இன்னும் சொல்லப் போனால், அவன்தான் தன் கணவன் என்று தீர்மானித்தவளும் பட்டுதான். ஆனால் பின்னாளில் தன் கணவனுக்குக் கை கொடுத்துத் தூக்கி விட்ட செல்லப்பா மீது, அவரது ஐம்பது வயதுக்கு மேல், ரிட்டையர் ஆகச் சில வருடங்களே இருக்கும் போது, அவளுக்கு காதல் ஏற்படுகிறது. அது நன்றிக் கடனல்ல. சபலம் அல்ல. ஆழமான பந்தம் என்று செல்லப்பா நினைக்கிறார்.   

இந்த ஆழமான பந்தம் செல்லப்பாவின் மனைவிக்குத் தெரியவரும் போது அவள் அந்த உறவை முறித்துப் போடுகிறார். அதற்கு அவள் கையாளும் உத்திதான் வித்தியாசமானது. மகான் மகான் என்று குடும்பம் வழிபடும் பெரியவர் அம்பா கடாட்சம். அவர் ஆசிர்வதிக்கும் பாணி அலாதி. ஆசிர்வதிப்பவர் முதுகில் படார் படார் என்று அடி போடுகிறவர் அவர். அவரை அணுகுகிறார் மனைவி. அம்பாகடாட்சம் செல்லப்பாவிற்கு அடி போடவில்லை. ஆனால் செல்லப்பாவினுடைய மனைவியின் வேண்டுகோளையே தண்டனையாக விதிக்கிறார். அந்தத் தண்டனைக் கொடூரமானது. “நான் பட்டு மாமியோடு தகாதபடி நடந்து கொண்டேன்” என்று செல்லப்பா, தன் குடும்பத்தினர் முன்னிலையில், தனது மகனின் காதில் சொல்ல வேண்டும்!

இதைவிட அவருக்குப் பெரிய அடி என்ன இருக்க முடியும்? பின்னாளில் மனதின் ரணம் ஆறி, பொருக்கு உதிர்ந்து விட்டால் அது ஓர் ஆசிர்வாதமாகக் கூட மாறலாம். ஆனால் தி.ஜாவின் இந்த முடிவை வாசித்த போது எனக்கு அன்றும் சரி, இன்றும் சரி முறு முறுவென்று கோபமே வந்தது. என்ன அரக்கத்தனமான அடி! “தகாத” ஆத்ம பந்தம், ‘குடும்பத்தை மணலில் கொண்டு சொருகிவிடும் ஆபத்து’ என்று எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இரண்டு குழந்தைகளைப் பெற்ற தந்தை, குடும்பத்தலைவன், என்றெல்லாம் சொல்லலாம். இருந்தாலும் செல்லப்பா ஒரு மனிதன். அவனுக்கென்று அந்தரங்கங்கள் இருக்கலாகாதா? குடும்பம் என்ற இயந்திரம் இப்படியா எல்லாவற்றையும் சுரண்டித் தின்றுவிடும்?

தி.ஜா. குடும்பம் என்ற அமைப்பை நிராகரிக்கும் மனோபாவம் கொண்டவரல்ல என அவரது பல படைப்புக்ளின் அடிப்படையில் முடிவுகட்டலாம். ஆனால் குடும்பத்தில் பெண்ணின் இடம் என்ன. ஒரு மனுஷியாக அவளது நிலை என்ன, என்பது அவரை உறுத்திக் கொண்டே இருந்த கேள்வி. குடும்பம் என்ற அமைப்பின் கட்டுக்கள் தளராத, ஆனால் கிராமம் என்ற பெருங்குடும்பத்திலிருந்து பெயர்வது தொடங்கி விட்ட காலகட்டத்தில் கல்வியின் வெளிச்சம் படராத, பொருளாதாரச் சுயச் சார்பில்லாத, பெண்களின் நிலை, அந்த அமைப்பில் என்ன? அதை எதிர்கொள்வதற்கு அவளிடம் இருப்பது என்ன? இந்தக் கேள்விகளைத் தன் படைப்புகளில் பெரிதும் விவாதிக்கிறார் தி.ஜா. இந்தக் குறுநாவல்கள் உட்பட.

தி.ஜா ‘டிராமாட்டிக்’ ஆன முடிவுகளைத் தன் குறுநாவல்களில் வைக்கிறார். கமலத்தில், சாமிக்கும் கமலத்திற்கும் இடையே உறவு இருப்பது போலக் கதையைக் கொண்டு போய், இறுதியில் அந்த உறவு அத்து மீறிய உறவு அல்ல, அது தாய் –மகன் உறவு போன்றது, அத்துமீறிய உறவு போன்று தோன்றுமாறு தாங்கள் நடத்தியது நாடகம் என்று கமலம் சொல்வது போல முடிக்கிறார். அப்பாவியான நாலாவது சார் மீது சாமி வந்து அவர், அம்மாவை வைத்துக் காப்பாற்றாத மகனைப் போட்டுத் தாக்குவதாக முடிகிறது நாலாவது சார். அடுத்த வீட்டுக் குழந்தை மீது அசூயை கொண்ட கிழவர் காயாப்பிள்ளை பிராயச்சித்தம் செய்து விட்டு, துறவு பூணுகிறார் அவலும் உமியில்.திருமணத்திற்கு முன்பிருந்தே பணிப்பெண்ணுடன் உறவு கொண்டிருந்த கணவன் ஓரிரவில் மனம் மாறுகிறான் தோடு குறுநாவலில்.  

தவறுகள் தண்டிக்கப்படும், அல்லது தவறு செய்பவர்கள் மனம் திருந்துவார்கள் என்ற ‘காவிய நியாயத்தின்’ பொருட்டு தி.ஜா. இத்தகைய முடிவுகளைத் தேர்ந்திருக்கலாம். ஆனால் அவர் குறுநாவல்கள் எழுதிய காலகட்டமான அறுபதுகளில் நிலவிய விழுமியங்களின் நிர்பந்தமாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் மனது ஆறமாட்டேன் என்கிறது.

II

ஆனால் மெருகு போட்ட தி.ஜா.வின் நடையில் மனம் கரைந்து போகிறது. அவர் காட்சிகளைக் கண்முன் நிறுத்துவது உணர்ச்சிகளைப் புரிய வைப்பது, ஆங்காங்கு தெளிக்கும் உவமைகள் இவற்றில் இந்த மெருகைக் காணலாம். ‘சொல்லாதே, காண்பி’ (Show, don’t tell) என்ற உத்தி அவருக்குக் கை வந்தது. சில எடுத்துக்காட்டுகள்:

  • விடியற்காலை என்றால் காற்றுக் கூடக் கண்ணை அமட்டி வந்து நடசத்திரங்களின் மெளன ஓளியின் கீழ் உறங்குமே அந்த விடியற்காலை அல்ல. இருட்டு மெதுவாக அவிழத் தொடங்கி, கிழக்கில் நரை கண்டு, காற்ரும் விழித்து, மெதுவாகத் தவழத் தொடங்குமே அந்தச் சிறுகாலை. அப்பொழுது பார்த்தால் சன்னதித் தெருப் பெண்டுகள் நின்று கோலம் போடுகிறதை வாசல் வாசலாகப் பார்க்கலாம். கரிச்சான் கத்துகிறபோதே எழுந்து, பல் தேய்த்து, சாணம் கரைத்து, வாசல் தெளித்து, பெரிய சதுரமாக அல்லது நீள் சதுரமாக பெருக்கித் துப்புரவு செய்திருப்பார்கள். அப்போது கரிச்சானின் குழைவோடு இன்னும் பல கூவல்களும் சேர்ந்திருக்கும். நார்த்தங்குருவிகள், தினைக்குருவிகள், காடைகள், கோவில் கோபுர மாடத்தை விட்டுப் பறந்து தெருவில் நடைபோடும் புறாக்களின் கூவல், சாலியத் தெருவிலிருந்து புழுக் கொத்துவதற்காக வரும் இரண்டு மூன்று சேவல்கள் தொண்டைக்குள்ளேயே பாடிக் கொள்ளும் கொரிப்பு –எல்லாம் சேர்ந்துவிடும் லேசான குளிர் காற்று வேறு. (தோடு)
  • தெரியும் கால்கள் எத்தனையோ வகை. கொலுசுக் கால்கள், உருட்டுக் கால்கள், எலும்மிச்சம்பழக் கால்கள், சந்தனக் கட்டைக் கால்கள், மாநிறக் கால்கள், கறுப்புக் கால்கள், குச்சிக் கால்கள், சப்பைக் கால்கள், பித்தவெடிக் கால்கள், வெண்ணைக் கால்கள், சொறிந்துவிட்ட வெள்ளைக் கோடு மறையாத கால்கள், எலும்பிலிருந்து பற்றுவிட்ட சதை தளர்ந்த கால்கள், கிழக்கால்கள், மசக்கை மெருகு பூத்த கால்கள் இத்தனையையும் எழுந்து ஆற்றங்கரைக்குப் போகிறவர்கள் பார்த்துக் கொண்டேதான் போவார்கள் (தோடு)    

 விவரிக்கவே முடியாத உணர்வுகளை அநாயசமாக சில வார்த்தைகளில் விவரித்து விடுகிறார் தி.ஜா

  • “சக்கரையை வறுத்து கரியால்ல ஆக்கிப்பிட்டா!”  (நாலாவது சார்)
  • பனை ஓலை விசிறியைத் தரையில் இழுக்கிற ஒரு சிரிப்புச் சத்தத்துடன் நிறுத்துவார் (வீடு)
  • அவனுக்கு ஏதோ பெரிய காற்று அடித்து, தெருக்குப்பைகளைத் திரட்டி, பிறகு ஒரு மழை பெய்து, தெருவே நறுவிசாக ஆகிவிட்டாற்போல் நெஞ்சு அவளைப் பார்த்து தெளிந்து போகும் (அடி)                    

தி.ஜா.வின் உவமைகள் தனித்துவமானவை

  • ஈரக் கார்க்கை சீசாவிலிருந்து இழுப்பது போல மங்களத்தாமாவின் சிரிப்புக்கு அந்த ஓசைதான்.
  • அம்மா கை ஜில்லென்று இருக்கிறது, வாழை இலையைக் கையில் சுற்றிக் கொள்வது போல
  • கார்த்திகை விளக்கு வேப்பம் பழம் போல ஊர்த்திண்ணையெல்லாம் மின்னிக் கொண்டிருந்த சமயம்
  • அவர் சிரித்த முகத்துடன் கேட்டது அழகாக இருந்தது-பட்டு வேட்டி மாதிரி
  • வாழைப் பூவை உரித்துக் கொண்டே போனால் முதல் உள்தண்டு தெரியுமே-அந்த மாதிரி மஞ்சளுக்கும் வெள்ளைக்கும் நடுவான வர்ணம்.

இவையெல்லாம் தி.ஜா.வை ‘ரொமாண்டிஸத்தில்’ விருப்புக் கொண்ட ஓர் எழுத்தாளர் என்ற தோற்றத்தைத் தரலாம். ஆனால் அவர் கதைகளில் காணப்பட்ட உளவியல் பேசப்பட்ட அளவு, அவரது அறச்சீற்றம் பெரிதும் கவனத்தைப் பெறவில்லை. பின்னாட்களில் அவரது சிறுகதைகள், பஸ்ஸும் நாய்களும், மனிதாபிமானம், மாப்பிள்ளைத் தோழன், சிவப்பு ரிக்க்ஷா ஆகியவற்றில் வெளிப்பட்ட அறச்சீற்றத்தை இந்தக் குறுநாவல்களிலும் காணலாம்

“டிக்கெட்டை வாங்கிவிட்டுக் கீழே நிற்கிற நூற்றுக்கணக்கான  ஜனங்களைப் பார்த்தேன். எண்ணூறு பேர் கொள்ளுகிற வண்டிக்கு இரண்டாயிரம் டிக்கெட் எப்படிக் கொடுத்தார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டேன். பாரதமாதாவின் புத்திரர்களையும் புத்திரிகளையும் சில சமயம் நெல்லிக் காய்களாகவும் சில சமயம் புளியாகவும் பெரியவர்கள் நினைக்கும் விந்தையைப் பார்த்தேன்”

அந்த அறச்சீற்றம் எப்போதும் இப்படி அடங்கிய குரலில் பல்லைக் கடித்துக் கொண்ட அரற்றலாக இருப்பதில்லை. சில நேரம் அனலாகவும் வீசுவதுண்டு. கீழே உள்ளது ஒரு திரைப்பட படப்பிடிப்பு பற்றியது:

“அங்கே காட்சியில் வைத்திருந்த தென்னை மரங்கள் அங்கேயே வளர்ந்த மரங்கள் இல்லையாம் இன்று காலையும் நேற்று இரவும் இதற்காகவே வெட்டி வந்த மரங்களாம்! அட பாவிகளா! தென்னை மரத்தை எவனாவது வெட்டுவானோ? எந்தக் கொலைக்கும் துணிந்த பயல் கூட இந்தக் கற்பகத் தருவைச் சாய்க்கமாட்டானே!”

தி.ஜா.வின் அறச்சீற்றத்தைப் போல அதிகம் பேசப்படாதது அவரது நகைச்சுவை. அவை இதழ் பிரியாமல் சிரிக்கும் நகைச்சுவை. ஆங்கிலத்தில் Tongue in cheek என்பார்களே அந்த ரகம்:

“அம்புவுக்கு சினிமா, டிராமா, நாடகம் என்றால் உயிர். எந்த சினிமா வந்தாலும் சரி,தமிழோ, தெலுங்கோ,இங்கிலீஷோ, ஜப்பான் படமோ, எது வந்தாலும் முதல் காட்சிக்கே மிக உயர்ந்த வகுப்பில் ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்து விடுவாள்.நல்ல படம் என்று தோன்றினால் நாலு தடவை பார்ப்பாள். நல்ல படம் இல்லை, நல்ல நாடகம் இல்லை, நல்ல பாட்டு இல்லை என்று நீங்களும் நானும் பத்திரிகைகளும் சொன்னால் போதாது. அவளுக்காகத் தோன்றினால்தான் மூன்றாவது தடவை பார்க்காமல் இருப்பாள்”

“சினிமாக்காரர்கள் வந்தார்கள். இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் மனைவிக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்றேன். ஓடிப் போய்விட்டார்கள்.நம் சினிமாக்காரர்களுக்குப் பாரதப் பண்பாடு ரொம்ப அதிகம். தும்முவதற்குக் கூட நாள் பார்ப்பார்கள்.பூசை போடுவார்கள்”

III

தி.ஜா.வின் முதல் சிறுகதையும் (மன்னித்து விடு) இரண்டாவது சிறுகதையும் (ஈஸ்வரத் தியானம்) முறையே அவரது 16,17 ஆம் வயதில், 1937, 1938ல், ஆனந்த விகடனில் பிரசுரமாயிற்று. நமக்கு இன்று வாசிக்கக் கிடைத்திருக்கும் அவரது கதைகளில், (அவற்றில் பெரும்பாலானவை அவர் வாழநாளிலேயே அவரின் சம்மதத்துடனோ, அவரது சம்மதத்தின் பேரிலோ தொகுக்கப்பட்டவை) ஆறாண்டு காலத்திற்கு எதையும் காண முடியவில்லை. முதல் பிரசுரத்திற்குப்பின் ஏறத்தாழ ஏழாண்டுகளுக்குப் பிறகு பிரசுரமான கதைதான் நமக்குப் படிக்கக் கிடைக்கிறது. ஆரம்ப எழுத்தாளனுக்கு சிறுகதைக்கு ஆறேழுண்டுகள் என்பது பெரிய இடைவெளிதான். அதுவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆனந்த விகடன் போன்ற பிரபல இதழில் தனது கதைகளின் பிரசுரங்களைக் காண்கிற பதின்பருவ இளைஞன் மேலும் மேலும் எழுதிக் குவிக்கவே உந்தப்படுவான். ஆனால் தி.ஜா. ஆறாண்டுகள் எடுத்துக் கொண்டார்.

அது போலவே அவரது முதல் நாவல் அமிர்தம் 1945ஆம் ஆண்டு வெளியானது.ஆனால் அவரது இரண்டாவது நாவல் மோகமுள் ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு சுதேசமித்திரனில்  வெளியாயிற்று

ஆனால் தி.ஜா.வை அறிந்தவர்களுக்கு இந்த இடைவெளிகள் வியப்பளிக்காது. அவர் ‘காத்திருத்தலில்’ நம்பிக்கை கொண்டவர். அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டு எழுதுபவர். கற்பனைகளின் அடிப்படையில் மாத்திரம் கோட்டைகள் சமைப்பவர் அல்ல. அனுபவங்களைச் சேகரிப்பவர் மட்டுமல்ல, அவற்றை உள்வாங்கி, “ஊறப்போட்டு” அதிலிருந்து படைப்பூக்கம் பெறுபவர். “எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஒர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து உணர்ந்து, சிந்தித்து சிந்தித்து, ஆறப் போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே.கிருஷ்ணமூர்த்தி அடிக்கடிச் சொல்லும் Choiceless awareness என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி” என்பதைத் தன் படைப்புகளின் அடிப்படையாகக் கொண்டவர் தி.ஜா. (எழுதுவது எப்படி, 1969). இதே கருத்தைப் பின்னாளில் கணையாழியில் உரையாடல் ஒன்றில் ‘தவமிருக்க வேண்டும்’ என்ற ரீதியில் சொன்னார்.

ஆனால் சிறுகதைகள், நாவல் இவற்றிற்கிடையே நீண்ட இடைவெளிகள் விட்ட தி.ஜா. இந்தக் குறுநாவல்களை ஆண்டுக்கொன்று எனத் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. ஆனால் அதே சமயம், இவற்றை எழுதிய காலம் அவரது படைப்பூக்கம் உச்சத்தில் இருந்த காலம் என்பதையும், அவர் இந்தக் குறுநாவல்களை பத்திரிகைகளின் அழைப்பின் பேரில் எழுதினார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 1944லில் இரண்டு, 1945ல் ஒன்று எனச் சிறுகதைகள் எழுதிச் சிறு ஊற்றாகத் தொடங்கிய அவரது படைப்பூக்கம், 1946லிருந்து மெல்ல மெல்ல வேகம் பெற்று ஐம்பதுகளின் மத்தியில், அறுபதுகளில் பெருநதியாக, பிரவாகமாகப் பெருகியது. அவரது சிறந்த சிறுகதைகள் (எ-டு: பிடிகருணை, யோஷிகி,காண்டாமணி, மேரியின் ஆட்டுக்குட்டி) இந்தக் காலகட்டத்தில்தான் வெளியாகின.அவரது நாவல்கள், மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே, மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி ஆகியவையும் உருவான காலமும் இவைதான். இதைக் கருத்தில் கொண்டு அவரது குறுநாவல்கள் அணுகப்பட வேண்டும்.

அவரது சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றைப் போலவே இந்தக் குறுநாவல்கள் தி.ஜா. வரைந்த உயிரோவியங்கள்.

5.7.1980 அன்று தில்லியிலிருந்து தி,ஜா என் முதல் நாவல் பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில் “ஞாபகத்தைத் தூங்கவிடாமல் அடிப்பதுதான் நல்ல படைப்பு. அதனால்தான் உங்கள் கதை அருமையாக வந்திருக்கிறது  என்று சொல்கிறேன்” என்று எழுதியிருந்தார். ஞாபகத்தைத் தூங்கவிடாமல் அடிக்கிற இந்தக் குறுநாவல்களை வாசிக்கும் இந்தத் தருணத்தில் அந்த வரிகள் மனதில் ஓடுகின்றன. ஓர் ஆரம்ப எழுத்தாளனை உற்சாகப்படுத்த சொன்ன அந்த வரிகளுக்குப் பின்னால் இருந்த தி.ஜாவின் பேரன்பிற்கு இந்தக் குறுநாவல்களும் இன்னொரு சாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.