முற்றுகைப் போராட்டத்தில் முடங்கிக் கிடக்கும் உங்களை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல ஆசை. முதலில் ஓடந்துறை போகலாம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய பஞ்சாயத்துதான் ஓடந்துறை. ஓடந்துறை போனால் பவானி ஆற்றைப் பார்க்கிறோமோ இல்லையோ சண்முகத்தைப் பார்க்க வேண்டும். உங்களைப் போல் அயல்நாட்டில் போய்ப் படிக்க, ஏன் கல்லூரிக்குப் போகக் கூட வாய்ப்புக் கிடைக்காத எளிய கிராமத்து மனிதர் அவர்.
இந்த எளிய மனிதர்தான் இந்தியாவிலேயே யாரும் செய்ய நினைத்திராத அரிய செயலைச் செய்தவர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை ஓடந்துறை மக்கள் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் அவருக்கு அப்போது நிர்வாகத்தில் பெரிய அனுபவம் ஏதும் கிடையாது. காடும் கழனியும் கற்றுக் கொடுப்பதைவிடவா பாடப் புத்தகங்கள் பயிற்றுவித்து விடப் போகின்றன?
பஞ்சாயத்து தலைவர் பதவியில் உட்கார்ந்த பிறகுதான் ஓர் உண்மை அவருக்கு உறைக்கத் துவங்கியது, வரிப் பணத்தில் 40 சதவீதம் தெருவிளக்குகளின் மின்சாரக் கட்டணமாகச் செலவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அந்த உண்மை. நூறு சதவீதம் வரி வசூலித்தாலும் கரண்டு பில் கட்டியே கிராமம் திவாலாகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த அவர் என்ன செய்வது என்று அண்ணாந்து பார்த்து யோசிக்க ஆரம்பித்தார். வானத்திலிருந்து வந்தது உதவி. ஆம். தெருவிளக்குகள் எல்லாம் சூரிய ஒளியில் கிடைத்த மின்சாரத்தில் எரிய ஆரம்பித்தன.
அவர் அதோடு நிற்கவில்லை. அவரது பஞ்சாயத்து உடுமலைப் பேட்டைக்கருகில் உள்ள மயிலாடியில் ஒரு காற்றாலையை நிறுவியது (கடன் வாங்கித்தான்).சின்னக் காற்றாலைதான். ஆண்டுக்கு ஆறே முக்கால் லட்சம் கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம். அவர்கள் கிராமத்தின் தேவை நாலரை லட்சம் கிலோவாட். மிச்சத்தை மின்வாரியத்திற்கே விற்றுக் கடனைக் கட்டி வருகிறார்கள். ஒரு காலத்தில் பஞ்சாயத்து மின்வாரியத்திற்குப் பணம் கட்டிக் கொண்டிருந்தது. இன்று மின்வாரியம் பஞ்சாயத்திற்குப் பணம் கொடுக்கிறது. தலைகீழ் மாற்றம்!
ஓடந்துறையிலிருந்து இறங்கி வந்தால் கூத்தம்பாக்கத்திற்கும் போய் வர வேண்டும். இங்கேதான் சென்னைக்குப் பக்கத்தில் பூவிருந்தவல்லியிலிருந்து 10 கீமீ தொலைவில் இருக்கிறது. அங்கே போய்ப் பார்த்தால் அசந்து போவீர்கள். குடிசைகளே கிடையாது. காங்கீரிட் வடிகால்கள். தார்ச்சாலைகள். சூரிய ஒளியில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் விளக்குகள் ஒளிர்கின்றன. விசிறிகள் சுற்றுகின்றன. அடுப்புகள் சுடுகின்றன.
இத்தனைக்கும் காரணம் இளங்கோ என்று ஒருவர். விஞ்ஞானியாகப் பார்த்துக் கொண்டிருந்த வேலையைக் கடாசிவிட்டு களம் இறங்கினார். காட்சிகள் மாறின.
சண்முகத்தையும் இளங்கோவையும் பற்றி ஊடகங்கள் அதிகம் எழுதியதில்லை. உங்களுக்குக் கிடைக்கும் விளம்பரத்தில் ஒரு பத்து சத்வீதம் கூட அவர்களுக்குக் கிடைத்ததில்லை.
ஆனால் ஊரறிந்த ஓர் உதாரணம் ஒன்றுண்டு, அவர்தான் குரியன்.
உங்கள் முற்றுகைப் போராட்டம் பற்றிய செய்திகள் வந்திருக்கும் நாளிதழ்கள் அவர் மரணத்தைப் பதிவு செய்திருக்கின்றன. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி நொடித்துக் கொண்டிருந்த கிராமத்து மனிதர்கள் வயிற்றில் பால் வார்த்து நிமிர்த்தியவர்.
நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அணுமின்நிலையத்திற்கு எதிரான உங்கள் ஆட்சேபங்களையெல்லாம் இரண்டு வல்லுநர் குழுக்களும், உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சும் ஒதுக்கித் தள்ளிவிட்டன. அச்சம் தவிர் என்று அறிவுரை தந்துவிட்டன, அவற்றையெல்லாம் நீங்கள் ஏற்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
இனியும் சொன்னதையே சொல்லிக் கொண்டு விடாப் பிடியாக வீம்பு பிடித்து அரசோடு மோதிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு, சண்முகத்தைப் போல், இளங்கோவைப் போல், குரியனைப் போல் நீங்கள் நேசிப்பதாகச் சொல்லும் கிராம மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர நீங்கள் ஏன் முயற்சிக்க கூடாது? நினைவிருக்கிறதா, காந்தி அறப்போரை மட்டுமல்ல, ஆக்கபூர்வமான நிர்மாணத் திட்டங்களையும் முன் வைத்தவர்.
நீங்கள் சுட்டிக் காட்டும் அதே சூரிய ஒளி, அதே காற்றாலை இவற்றைக் கொண்டு அந்தக் கிராமங்களை ஒளியேற்றக் கூடாது? அதன் பின் அவற்றையே முன்மாதிரியாகக் காட்டி உங்கள் வாதங்களை வைத்தால் உலகம் ஒருவேளை அவற்றுக்குச் செவிசாய்க்கக் கூடும்.
யோசிப்பீர்களா?
நம்பிக்கையுடன்
இளந்தமிழன்