சின்னு வேலையில் சேர்ந்தபோது அவனுக்குப் பதினாறு வயதிருக்கும். மேல் உதட்டில் நிழல் மாதிரி பூனை மீசை அரும்பத் தொடங்கிய வயது.
அவனுடைய நிஜப்பெயர் சின்னு அல்ல. ஆழிவண்ணன் என்றோ அழகிய சிங்கம் என்றோ பெற்றோர் வைத்த அருமையான தமிழ்ப்பெயர் அடையாளமே தெரியாமல் மாறிப் போனது, அவன் வேலையில் சேர்ந்த அன்றுதான்.
அரைக்கால் டரவுசரும் அதில் சுருட்டித் திணித்த பழுப்பு வெள்ளைச் சட்டையுமாகப் பள்ளிக்கூடப் பையன் மாதிரியே வேலைக்கு வந்திருந்தான். வேலைக்குப் போகிற இடத்திற்கு குறைந்த பட்சம் வேட்டியாவது கட்டிக் கொண்டு போக வேண்டும் என்ற விபரம் அறியாத சின்னப் பையன்.
தலைவர் தாமோதரன்தான், “ சின்னப் பையா ! ” என்று முதலில் அழைத்தார். பக்கத்தில் கூப்பிட்டு வைத்துக் கொண்டு பேர், ஊர் விவரங்களை விசாரித்தார். பேச்சோடு பேச்சாக, பெண்கள் வேலை பார்க்கிற பேக்டரியில் இதுபோல் அரை டிராயரில் வரக்கூடாது என்று எடுத்துச் சொன்னார். “ ஏன் ? ” என்று எதிர்க் கேள்வி போட்டான் சிறுவன். மொத்த பேக்டரியும் கொல் என்று சிரித்தது – உலகநாதனைத் தவிர.
அதிகம் போனால் உலகநாதனுக்குச் சின்னுவை விட இரண்டு வயது கூட இருக்கும். முழுக்க முழுக்க நகரத்தில் வளர்ந்த பையன். பாடப் புத்தகத்தோடு வாரப் பத்திரிகைகளும் படித்து வளர்ந்த பையன். கூடப் பிறந்தவர்கள் எல்லாம் நன்றாய்ப் படித்து உயர்ந்த நாற்காலிகளைப் பிடித்துவிட, படிப்பு வரவில்லை என்று பத்தாவது வகுப்போடு ஒதுங்கிவிட்ட கடைசி பையன்.
படிப்பில் கெட்டி இல்லை என்பதால் முட்டாள் என்று கூற முடியாது. மத்தியான இடைவேளையின் போது கட்சி கட்டிக்கொண்டு நடக்கிற அரசியல், சினிமா, பட்டிமன்றங்களின்போது இவன் குரல் உரத்துக் கேட்கும். எல்லோரும் பேசுவதற்கு எதிர்க்கட்சி என்பதுதான் இவன் கொள்கை. பேக்டரி முழுவதும் சிரித்தபோது இவன் மட்டும் சின்னப் பையனை அனுதாபத்தோடு பார்த்தான். அனுதாபம் சிநேகமாக அதிக நாளாகவில்லை. ‘ சின்னப் பையனை ’ நவீனமாகச் ‘ சின்னு ’ என்று சுருக்கியவன் இவன்தான். என்றாலும் சின்னு வெகு நாட்களுக்குச் சின்னப் பையனாகவே இருந்தான்.
தைலி விழுந்து விழுந்து சிரிக்கும் வரை.
தைலியைப் பெரிய அழகி என்று சொல்ல முடியாது, ஆனால் அவளிடம் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வசீகரம் இருந்தது. அதற்குக் காரணம் உடைகளில் பிரதிபலிக்கும் அவளுடைய அபாரமான கலர் சென்ஸா, ஈரம் ததும்பும் விழியா, இடது உதட்டின் மேல் இருந்த மருவா, இல்லை எதைச் சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கிற சாகசமா என்று சொல்வது கடினம்.
சின்னு வருகிற பஸ்ஸில்தான் அவளும் வந்து கொண்டிருந்தாள். இரண்டு ஸ்டாப் தள்ளி ஏறுவாள் போலிருக்கிறது. மூன்றாவது நாள் பஸ்ஸில் ஏறியதுமே சின்னுவைப் பார்த்து ‘ குட் மார்னிங் ’ என்றாள். சின்னு வெலவெலத்துப் போனான். என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
“ மடையா ! மடையா ! ” என்று திட்டினான் உலகநாதன். ‘ ஒரு பெண் பிள்ளை உன்னைப் பார்த்து முகமன் சொன்னால் உடனே பிரமித்துப் போய் விடுவதா ? பதிலுக்கு ஒரு வணக்கம் சொல்லமாட்டாயா ? அட, வாய் வார்த்தையாய் வேண்டாம், சின்னதாய் ஒரு தலை ஆட்டல் ? இங்கிதம் தெரியாத காட்டானாக இருக்கிறாயே. வயசுப் பெண் என்றாலும் வலிய வந்து பேசுவது எங்கள் பட்டணத்தில் வெகு சாதாரணம். இதற்கெல்லாம் மலைத்துப் போகாதே ’ என்று உபதேசம் செய்தான்.
வெறும் பேச்சோடு நிற்காமல் தைலியைப் போய் பார்த்து, “ ஸாரி ! ” என்றான்.
“ எதுக்குங்க ? ” என்றாள் தைலி.
“ என் நண்பன் சார்பாக. ” என்று ஆரம்பித்து வேலைக்கு வந்த முதல் நாள் சம்பவத்தை உதாரணம் காட்டி நீளமாய்ப் பத்து வரி பேசி, “ மன்னித்துக் கொள்ளுங்கள், அவன் சின்னப் பையன் ” என்று முடித்தான்.
“ ம் ? சின்னப் பையனா ? சின்னப் பாப்பாவா ? ” தைலி விழுந்து விழுந்து சிரித்தாள்.
இந்தச் சிரிப்பில் சுருண்டு விழுந்தான் உலகநாதன். ‘ மலர விழி மயங்கிச் சிரி ’ என்று மனத்தில் ஒரு கவிதை வரி ஓடிற்று. ஓர் இளம் பெண்ணின் சிரிப்பிற்குள் எத்தனையோ எழுதப்படாத கவிதைகள் இருப்பதாகத் தோன்றிற்று. இந்தச் சிரிப்பையும் சிரிப்பிற்குரியவனையும் தன்னுடையதாக வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறி உணர்வு ஏற உலகநாதன் தன் வசம் இழந்து கீழிறங்கிக் கொண்டிருந்தான்.
இந்தச் சிரிப்பில் சின்னு சிலிர்த்து எழுந்தான். அவனுக்குள் இருந்த ஆண்பிள்ளை விழித்துக் கொண்டான். கிடுகிடுவென்று பெரிய மனிதன் ஆகிவிட வேண்டும் என்று பரபரத்தான்.
சின்னப் பையன் மீசை வளர்த்தான். உலகநாதன் கவிதை எழுதினான். ஜிம்மில் போய் கர்லா சுழற்றினான் சின்னு. கவிதை அவளுக்குப் புரிந்ததோ என்ற கவலையில் உடல் இளைத்தான் லோகு. போனஸ் பணத்தில் முழுக்கை சட்டை தைத்தான் அவன். அவளுக்குப் புடவை வாங்கத் திட்டம் வகுத்தான் இவன். முப்பது நாளில் இங்கிலீஷ் பயிற்றும் புத்தகம் வாங்கினான் சின்னு. காதலுக்குப் பரிசு கொடுக்கக் கவிதை புத்தகம் தேடினான் உலகநாதன்.
“ என்னது இது ? திடீர்னு புத்தகம் ? ”
“ கவிதைன்னா பிடிக்கும் சொன்னீங்களே அன்னிக்கு. ”
“ அடடா ! அப்படியா சொன்னேன் ? எனக்கு மறந்து விட்டது. ”
“ அப்படித்தான் சொன்னீங்க. பாரதியாரில் ஆரம்பிச்சு படபடன்னு பத்துப்பேர் பெயர் சொல்லி அத்தனை பேர் மேலும் உசிரையே வச்சிருக்கேன்னு சொன்னீங்க. ”
“ ஆமாம் சார் ! எனக்கு கவிதை எழுதறவங்களைப் படிக்கும். கவிதைகளை பிடிக்காது ! ”
“ இதென்ன புதுசா இருக்கு ? ”
“ கவிதை எழுதறவங்க கண்ணுக்குள்ளே பார்த்திருக்கீங்களா ? பளபளன்னு ஒரு கனவு மிதந்துகிட்டு இருக்கும். அவங்க உலகத்திலே அழுக்கு, காய்ச்சல், பசி, ஜலதோஷம் இதெல்லாம் கிடையாது. எதைப் பார்த்தாலும் மின்னல்தான். என்னிக்கானாலும் வசந்தம்தான். கபம் கட்டிக்கிட்டு இரண்டு இருமல் இருமி வெளியே துப்பற சளியைப் பார்த்தா நீங்க மூஞ்சியைச் சுருக்குவீங்க. அவன் அதை மல்லிகைப் பூ என்பான். ஜுவாலஜி கிளாஸ்லே தவளையை மல்லாக்கப் படுக்க வைச்சு ஆணி அடிச்சாங்க. அழுகையா வந்திச்சு. அந்த வயிற்றைப் பார்த்து சந்தன கட்டி தோற்கும்னான் ஒரு கவிஞன்.
“ ஆராய்ச்சியெல்லாம் பெரிசாதான் பண்ணி வச்சிருக்கீங்க. ”
“ ஆராய்ச்சி இல்லீங்க. இது அனுபவம். ”
“ அப்படீன்னா ? ”
“ இதுவும் கவிதை எழுதற கை. கனவு காண்கின்ற மனசுன்னு அர்த்தம். ”
உலகநாதனுக்குக் காற்றில் பறக்கிற மாதிரி இருந்தது.
பஸ்ஸில் கூட்டம் அதிகம் இல்லை. ஆனால் ஆண் பிள்ளைகள் வரிசை முழுவதும் நிறைந்திருந்தது. பெண் சீட்டில் தைலியின் பக்கத்து சீட் காலி.
“ எக்ஸ்க்யூஸ் மி. இங்கே உட்காரலாமா ? ”
தைலி திரும்பிப் பார்த்தாள். ஆச்சரியத்தில் கண்கள் அகன்றன.
“ என்ன சொன்னீங்க ? ”
“ இங்க உட்காரலாமான்னு … ”
“ அது இல்லை. அதுக்கு முன்னாலே …
“ எக்ஸ்க்யூஸ் மி ..
ஈர விழிகள் இன்னொருதரம் விரிந்தன.“ ஆங்கிலம் உங்க அப்பா வீட்டுச் சொத்தா ? இல்லை எங்களுக்கெல்லாம் நாக்கு புரளாதா ? ”
“ நீங்க ரொம்ப மாறிட்டீங்க சின்னு. ”
“ மாறிட்டேன்னு தெரியுதில்ல. அப்பறம் இன்னும் எதுக்கு ‘ சின்னு ’ ? ” என்றான் சின்னப் பையன் உஷ்ணமாக.
“ அப்பா, ஸ்ஸுங்கறதுக்குள்ளே கோபத்தைப் பாரு ! ” அந்த முகத்தையே இமைக்காது பார்த்தாள் தைலி. அது ஆச்சரியமா ? மரியாதையா ? காதலா ?
“ அவகிட்டே ரொம்பத்தான் இழைகிறாயாமே ? ” பேக்டரி கதவின் பக்கத்தில் மடக்கிக் கொண்டு கேட்டான் உலகநாதன். முகத்தில் கோபம் பளபளவென்று பொலிந்தது.
“ அதில உனக்கு என்ன கெட்டுப் போச்சு ? அவள் உன் பெண்டாட்டியா ? ” என்றான் சின்னு, பதிலுக்கு காட்டமாக.
“ கழுத்திலே கயிற்றைக் கட்டிக் கையைப் புடிச்சிக்கிட்டு நெருப்பைச் சுத்தினாத்தான் பொண்டாட்டியா ? எங்க மனசு ஏற்கனவே கலந்திடுச்சு. ”
“ அடி சக்கை ! அப்படி கனாக் கண்டுக்கிட்டு இருக்கியா ? ”
“ கனா கினான்னு கிண்டல் வேண்டாம். என் வழியிலே குறுக்க வராதே ! ”
“ என் வழிக்கு அதுல்ல வருது ? ”
“ அடிபடறதுன்னே முடிவா உனக்கு ? ”
“ அலட்டிக்காத லோகு. அது உங்கிட்ட வாயைத் திறந்து காதல்னு சொல்லிச்சா ? ”
“ இதையெல்லாம் வாய் வார்த்தையா சொல்லி முழக்கிட்டா திரிவாங்க. பொட்டைப் பிள்ளைங்க ஜாடை மாடையாத்தான் பேசும். அதெல்லாம் உனக்கு புரியாது. நீ சின்னப் பையன் ! . ”
“ இன்னொரு வாட்டி இங்கே எவனாவது சின்னப் பையன்னு வாயைத் தொறந்தா கொலை விழும் ! ” விருட்டென்று கதவில் செருகியிருந்த கை நீள ஆணியை உருவினான் சின்னு.
“ அதுக்கெல்லாம் பயந்தவன் இந்த லோகு இல்ல. உன் சந்தேகத்திற்காக வேணா அவளை கேட்டிடுவோம். ”
பீச் மணலைக் கிளறியபடி சூன்யத்தைப் பார்த்துக் கொண்டே பேசினாள் தைலி.
“ எப்படிச் சொற்துன்னே புரியலை எனக்கு. உடைச்சுச் சொன்னா, உங்களுக்கு வருத்தமாத்தான் இருக்கும் லோகு. அவர் – சின்னு – ஸாரி – சொல்றது உண்மைதான். எனக்கு உங்கமேலே ரொம்ப மரியாதை உண்டு. ஆனா காதல்ங்குறது மரியாதை மட்டும்தானா ? பாரதியார் படத்தைப் பார்த்தா கன்னத்தில் போட்டுக்கத் தோணுது. கல்யாணம் பண்ணிக்கவா தோணுது ? உங்களுக்கு மனசில சிம்மாசனம் போட்டிருக்கேன். ஆனா கழுத்திலே போடற மாலையை சின்னுவுக்குத்தான் போடணும். அவரோட ரோஷம், சுயமரியாதை, மத்தவங்களுக்கு சமமா முன்னுக்கு வரணும்கிற வெறி. இதுக்கெல்லாம் போடற மாலை இது. சின்னப் பையனுக்குள்ள இருக்கிற மனுஷனுக்குத்தான் எத்தினி பலம் ! நான் கவிதை எழுதற பொம்பளை. அலையிலே அப்படியே மிதந்துகிட்டு இருக்கிற கப்பல். அடி மணல்லே ஊணி நிற்கிற நங்கூரம், பலசாலியா பிராக்டிகலா வாழ்க்கையைச் சந்திக்கிறவனா இருந்தாத்தானே நல்லது ? நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா லோகு ? ”
உலகநாதனுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவன் இப்போது பெண்கள் எல்லாம் மாயப்பிசாசு என்று கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான்.
( குமுதம் )