அறிவியல் புனைகதை போல் ஆரம்பிக்கிறது அந்த விளம்பரம். பெரிய நகரத்தின் பிரம்மாண்டமான கட்டிடங்கள் வழியே ஓடுகிற ஒரு கண்ணாடிக் குழாய். உற்றுப் பார்த்தால் உள்ளே நடமாட்டம் தெரிகிறது. நடமாட்டம் அல்ல அணிவகுப்பு ஒன்று போல உடலுக்குப் பொருந்தாத தொள தொள சட்டைகளை அணிந்த மொட்டைத் தலை அடிமைகளின், அணிவகுப்பு. சாம்பல் வண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகள் சட்டென்று வண்ணம் பெறுகின்றன. விளையாட்டு வீராங்கனை ஒருத்தி கையில் கனமான சம்மட்டி ஒன்றை ஏந்திக் கொண்டு ஓடி வருகிறாள். அடிமைகள் இப்போது அரங்கில் அமர்ந்து, மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட டிவியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டிவியில் ‘தலைவர்’ உரையாற்றிக் கொண்டிருக்கிறார். உணர்ச்சிகள் தெரியவில்லை. அவர் அணிந்திருக்கும் அகலக் கண்ணாடி அதை மறைக்கிறது. விளையாட்டு வீராங்கனையை முகமூடி அணிந்த காவலர்கள் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்கள். அரங்கில் அனுமதி இல்லாமல் நுழைந்து விட்டாள் போலும். அவள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மைதானத்திற்குள் ஓடி வந்து கையில் இருக்கும் கனமான சம்மட்டியைச் சுழற்றி எறிகிறாள். அது பிரம்மாண்டத் திரையைத் தாக்கி நொறுக்குகிறது. அதிலிருந்த தலைவரின் பிம்பம் சுக்குநூறாக உடைந்து சிதற எங்கும் ஒளி. கண்ணைக் கூசும் ஒளி.
ஒரு நிமிடம் ஓடும் இந்த விளம்பரப்படம், ஆப்பிள் நிறுவனம் அதன் மெக்கிண்டாஷ் கணினிகளை அறிமுகப்படுத்திய போது வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம். ஒரு நிமிடத்திற்குள் எத்தனை செய்திகள்!
அப்போது கணினி உலகின் ’தல’ ஐபிஎம். அவர்கள் பெரும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் கணினிகளைத் தயாரித்து வெற்றிக் கொண்டிருந்தார்கள்.. அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் அறிமுகமாகிவிட்டன. ஆனால் பிரபலமாகவில்லை. தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்த அறிவியல் புனைகதைகளிலும், சினிமாவிலும் வெள்ளைக் கோட்டணிந்த ‘விஞ்ஞானிகள்’ அவற்றை இயக்குவதைப் பார்த்த சாதாரண ஜனங்கள் அதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அந்த எண்ணத்தை மாற்றினால்தான் இந்த சொந்தக் கணினிகளை விற்க முடியும். அதற்கான உருவான விளம்பரம் அது. கணினி என்பது இயந்திரமல்ல, உங்களுக்கு வலிமை சேர்க்கும், சுதந்திரம் அளிக்கும் (empowerment) சாதனம் என்று சொல்ல முயலும் படம் அது. இயந்திரத்தனமான ஒரு சூழலில் துணிச்சலான ஒரு பெண் எல்லாவற்றையும் உடைத்தெறிகிறாள்.
இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப முதலில் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் ஒன்றரை நிமிடம் விலை கொடுத்து வாங்கியிருந்தார்கள். இந்தப் படத்தைப் போட்டுக் காண்பித்த போது கம்பெனியின் இயக்குநர்கள் ”என்னையா படம் இது, ஐபிஎம்மைப் பாருங்க, பெஞ்சமின் பிராங்க்ளின்னு அறிவியல் உலக மேதைகளை காண்பிச்சு விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்கான்” என்று நிராகரித்தார்கள். விளம்பரத்திற்கு வாங்கிய நேரத்தில் முப்பது நொடிகளைத்தான் விற்க முடிந்தது. வேறு வழியில்லாமல் ஒரு நிமிடமாகச் சுருக்கி வெளியிட்டார்கள். வெற்றி, பிரம்மாண்டமான வெற்றி.
எல்லாக் காலத்திலும் எல்லா மக்களுக்கும் பிடிக்கும் ஒரே சொல் சுதந்திரம். அதுதான் அந்த வெற்றிக்குக் காரணம்
பெர்சனல் கம்ப்யூட்டர்களின் யுகம் தொடங்கியது இது போன்ற ஒரு ஜனவரியில்தான் ஜனவரி 24, 1984.