பாரதியார் பல்கலைக்கழகத்தில் 20.11.2020 அன்று ஆற்றிய சொற்பொழிவு
மகாகவி என்று தமிழ் மக்களால் மதிக்கவும் துதிக்கவும் படுகின்ற பாரதி கவிஞர் மாத்திரம் அல்ல. அவர் ஏற்றுக் கொண்ட பத்திரிகைத் தொழில் அவரைப் பலவாறாகப் புடம் போட்டது. பல முகங்களாகப் பட்டை தீட்டியது. அவரின் அறியாத முகம் ஒன்றைக் குறித்து நான் உங்களோடு உரத்து சிந்திக்க முற்படுகிறேன்.
அறியாத முகம் என்பது என் ஆதங்கத்தின் குரல். தன் வாழ்நாளில், உரைநடையில் மாத்திரம் ஏறத்தாழ 75க்கு மேற்பட்ட புனைவுகள் எழுதினார் பாரதி. பல்வேறு வகைகளில், பல்வேறு நடைகளில், பல்வேறு வடிவங்களில் பல்வேறு பொருண்மைகளில் எழுதப்பட்ட அந்தப் புனைவுகள் அதுநாள் வரை தமிழ் எழுத்துலகம் அறிந்திராதவை. எனவே அவர் புத்திலக்கியத்தின் முன்னோடி என்று கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். கொண்டாட மனமில்லாவிட்டாலும் குறைந்த பட்சம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்குப் பின்வந்த வரலாற்றாசிரியர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் அவரது புனைவுகள் குறித்து அதிகம் பேசக் கூட இல்லை. இதில் நகை முரண் என்னவென்றால் அவர்கள் பாரதியை ஆராதித்தவர்கள்.
”குளத்தங்கரை அரசமரம் ஒன்றுதான் முப்பதுகளில் எடுப்பாகப் பேசப்பட்டது.ஆனால் ஆறிலொரு பங்கு பற்றி அப்படிப் பேசப்படவில்லை. மணிக்கொடி வட்டாரத்தைக் குறிப்பிட்டுத்தான் சொல்லுகிறேன். பாரதியை மகாகவியாகக் கண்ட வ.ரா.கூட பாரதியின் இந்தச் சிறுகதை பற்றி எனக்குத் தெரிந்தவரை பிர்ஸ்தாபிக்கவில்லை” என்று சி.சு. செல்லப்பா எழுதுகிறார் ( சி.சு.செல்லப்பா 1988 தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது இரண்டாம் பதிப்பு –காலச்சுவடு பக் 35)
சி.சு.செல்லப்பாவுமே கூட இதற்கு விலக்கல்ல. தமிழ்ச் சிறுகதை வரலாற்றைப் பல கதைகளை முன்னிறுத்தி விவரிக்கும் அவரது தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது என்ற நூலை அவரது சொந்தப் பதிப்பகமான எழுத்துப் பிரசுரம் 1974ல் வெளியிட்டது. ஆனால் அதில் பாரதியாரின் புனைவுகள் பற்றி ஒரு வரி கூடக் கிடையாது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பு வெளியிட்ட போது “ஆறிலொரு பங்கு தமிழில் குறிப்பிடத் தக்க முதல் சிறுகதையாக அமைந்திருக்கிறது, தமிழ்ச் சிறுகதைக்கும் பாரதிதான் மூலவர்’ என்று ஏற்றுக் கொண்டு ’தவறுக்குப் பிராயச்சித்தம் செய்து விட்டேன்’ என்று எழுதுகிறார் சி.சு.செல்லப்பா
இப்படி ஒரு பிழை நேர்ந்ததற்கான காரணம் ஒன்றுண்டு
தமிழ்ச் சிறுகதையின் வரலாறு, நவீனத் தமிழ்ச் சிறுகதை தோன்றியதற்கு வெகுநாட்களுக்குப் பின்னர் இன்னும் குறிப்பாகச் சொன்னால், அது ஒரு இயக்கமாகப் பரிணமிக்கத் துவங்கியதற்குப் பின்னர் – அப்படிப் பரிணமித்ததின் விளைவாக – எழுதப்பட்டது. இது இயல்பானது. தவிர்க்க இயலாதது. ஆனால், வரலாற்றை எழுத முற்பட்ட இலக்கிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விமர்சகர்கள் இவர்களெல்லோரும் வரலாற்றை, வரலாற்றுப் பார்வை கொண்டல்ல, அவரவரது சமகாலப் பிரக்ஞை கொண்டு எழுத முற்பட்டார்கள் என்பதுதான் துரதிஷ்டவசமானது.
தமிழில் நவீனச் சிறுகதை பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், சிறுகதை என்பதைவிட ‘நவீன’த்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வந்திருக்கிறது. இங்கு நவீனம் என்பது மேற்குலகைச் சார்ந்ததாகவே அறியப்பட்டு, அப்படியே போதிக்கப்பட்டு, அப்படியே விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஐரோப்பியக் கலை வடிவங்களை இந்திய எண்ணங்களைக் கொண்டு படைத்துக் காட்டுவதே நவீனம் என்று இங்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு நவீனம் என்பது மரபின் தொடர்ச்சி அல்ல. மரபில் இருந்து முரண்பட்டது. அதற்கு நேர்மாறானது என்றே கருதப்பட்டே வந்திருக்கிறது.
ஆனால் பாரதி அப்படிக் கருதவில்லை. அவர் மரபை நவீனப்படுத்த முயன்றார். மரபை நவீனப்படுத்துவது என்றால் என்ன?
வாய் மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியாகவே பாரதி தன்னுடைய சிறுகதையின் வடிவத்தைப் பெரும்பாலும் அமைத்துக் கொண்டார். அந்த வடிவத்தை, தான் வாழ்ந்த காலத்தில் அரசியல், சமூக விமர்சனங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார். அதாவது வடிவம் பழையது, விஷயம் புதியது
தமிழின் கதை சொல்லும் மரபு என்ன?
தொல்காப்பியத்தில் ‘பாட்டிடை வைத்த குறிப்பினானும்’ என்றொரு சூத்திரம் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் உரைநடை வரும் என்று சொல்லிக் கொண்டு போகும் அந்த சூத்திரத்தில் ’பொருள் மரபிலாப் பொய்மொழியானும்’ என்று ஒரு வரி இருக்கிறது. “யானையும் குருவியும் தம்முட் நட்பாடிப் பேசிக் கொள்வது போல என்று உரையாசிரியர்கள் அந்த வரிக்கு விளக்கம் தருகிறார்கள். அதற்கு அடுத்த வரி, ’ பொருளோடு புணர்ந்த நகை மொழியானும்’ என்பது. அதற்கு அர்த்தம் உணமை கலந்த வேடிக்கைப் பேச்சு.
மரபிலிருந்து இந்த இரண்டு அம்சங்களையும் அதாவது மரபு சாராத பொய்மொழி, அர்த்தம் நிறைந்த நகைச்சுவை என்ற இரண்டு அம்சங்களையும் எடுத்துக் கொண்டு தனது கதைகளின் வடிவத்தை உருவாக்குகிறார். இதை அவரது எல்லாக் கதைகளிலும் பார்க்க முடியும்.
ஆனால், வடிவத்தின் அடிப்படையிலேயே இதுநாள்வரை சிறுகதையை மதிப்பிட்டு வந்திருக்கும் விமர்சகர்களும் வரலாற்று ஆசிரியர்களும் சிறுகதை வரலாற்றில் பாரதிக்கு உரிய பங்கைக் கொடுக்கவில்லை. பாரதியாருடைய சிறுகதைகளில் உருவ அமைதி இல்லை, வடிவம் பற்றிய பிரக்ஞை இல்லை. அவருடைய கதைகள் சம்பவங்களை உள்ளவாறே குறிக்கிறதேயன்றி உணர்வு நிலையைக் காட்டுவனவாக இல்லை என்று பிற்கால ஐரோப்பிய இலக்கணங்களைக் கொண்டு அவரது கதைகளை விமர்சகர்கள் அளவிட முயற்சித்திருக்கிறார்கள்
இந்த இடத்தில் இன்னொரு கேள்வி எழுவது இயல்பானது. அது: ஐரோப்பியக் கதை வடிவங்கள் குறித்து பாரதி அறிந்து நிராகரித்தாரா? அல்லது அதைப் பற்றி அறியாமலேயே இந்திய மரபைத் தேர்ந்து கொண்டாரா? அதற்கான விடையை பாரதியின் குரலிலேயே கேட்கலாம்
” ‘நமது நாட்டுக் கதைகளிலே பெரும்பாலும் அடிதொடங்கிக் கதாநாயகனுடைய ஊர், பெயர், குலம், கோத்திரம், பிறப்பு, வளர்ப்பெல்லாம் கிரமமாகச் சொல்லிக் கொண்டு போவது வழக்கம். நவீன ஐரோப்பியக் கதைகளிலே பெரும்பகுதி அப்படியல்ல. அவர்கள் நாடகத்தைப் போல கதையை நட்டநடுவில் தொடங்குகிறார்கள். பிறகு போகப்போக கதாநாயகனுடைய பூர்வவிருத்தாந்தங்கள் தெரிந்துகொண்டே போகும். என்று சின்னசங்கரன் கதையின் முன்னுரையில் எழுதுகிறார்.
கவிதையில் புதுமை செய்த, கார்ட்டூன் போன்ற நவீன உத்திகளைத் தமிழ்ப் பத்திரிகை உலகில் அறிமுகப்படுத்திய, புதியன விரும்பு என்று உபதேசித்த பாரதியார், சிறுகதையில் மாத்திரம் ‘நவீன’ வடிவத்தை அறிந்தும் அதனை மறுதலித்து பழைய மரபினை விரும்பித் தேர்ந்தெடுத்தது ஏன்?
ஐரோப்பியக் கதை வடிவத்தை நிராகரித்து தமக்கென ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொண்ட பாரதியார் சிறுகதையின் பயன் குறித்தும் ஓர் மாறுபட்ட பார்வையே கொண்டிருந்தார். கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல, அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்பதுதான் அந்தப் பார்வை. அவர், கலை கலைக்காகவே என வாதிடும் சுதத சுயம்பிரகாச இலக்கிய வாதியாக இல்லாமல், ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட பத்திரிகையாளராகவும் இருந்ததுதான் இந்த நோக்கை அவரிடம் உருவாக்கியிருக்க வேண்டும். சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும், அரசியல் நடப்புக்களையும் சொல்வதற்கு எப்படிப் பத்திரிகையைப் பயன்படுத்தினாரோ, அதே போல சிறுகதையையும் அவர் ஓர் ஊடகமாக வரித்துக் கொண்டார்.
அவரது துளசிபாயீ, பெண்கள் உடன்கட்டை ஏற நிர்பந்திக்கும் வழக்கத்தைச் சாடுகிறது.பூலோக ரம்பை பொட்டுக் கட்டும் வழக்கத்தின் கொடுமைகளைச் சித்தரிக்கிறது.காந்தாமணி பெண்கள் ருதுவாவதற்கு முன்பே அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கத்தை இகழ்ந்து, அதற்கு மாற்றாகக் கலப்புத் திருமணத்தைக் கோடி காட்டுகிறது. ஸ்வர்ணகுமாரி, அரசியலில் மிதவாதத்தையும்,மத வழக்கங்களில் பழமைவாதத்தையும் பின்பற்றுவோரை நையாண்டி செய்து திலகரின் தீவிரவாதத்தையும் ராஜா ராம்மோகன் ராயின் பிரம்மசமாஜத்தையும் உயர்த்திப் பிடிக்கிறது.ஆறில் ஒரு பங்கு தீண்டாமையைக் கண்டிக்கிறது.துயற்றுற்ற மனிதர்களை மீட்பதே நாட்டு விடுதலைக்கான பணி என எடுத்துரைக்கிறது
ஆறில் ஒரு பங்கிற்கு அவர் எழுதிய முன்னுரையில் அவர் நோக்கம் அப்பட்டமாக வெளிப்படுகிறது:
“ஓரு ஜாதி, ஓருயிர். பாரதநாட்டிலுள்ள 30 கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்.பிரிவுகள் இருக்கலாகாது.வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்திலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது.மத பேதங்கள் இருக்கலாம். மதவிரோதங்கள் இருக்கலாகாது.இவ்வுணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். வேறு வழியில்லைஇந்நூலை பாரதநாட்டில் உழவுத் தொழில் புரிந்து, நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்போராகிய பள்ளர் பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதார்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.”
117 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களை நம்மை ரட்சிப்பவர்கள், பரிசுத்தத் தன்மை வாய்ந்தவர்கள், இந்தியர்கள் அனைவரும் ஓரு ஜாதி என்று பகிரங்கமாகச் சொல்லக்கூடிய சூழ்நிலை தமிழ்ச் சமூகத்திலே இருக்கவில்லை. அந்தச் சூழ்நிலையில், பெரும் செல்வந்தராக இல்லாத, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு வெளியிட்ட தனது நூலில் இந்தக் கருத்துக்களை முன் வைக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தால், அவர் இந்த விஷயத்தில் கொண்ட அக்கறை விளங்கும்
இந்தப் பின்னணியில் பாரதியின் புனைவுகளைப் பார்க்கலாம். அவரது அனைத்துக் கதைகளையும் தனித்தனியாக விவாதிக்க எனக்கு விருப்பம். என்றாலும் அதற்கு அவகாசம் இராது.. ஆனால் அவர் தமிழ்ச் சிறுகதைகளுக்குச் செய்துள்ள பங்களிப்புகளையும், புதுமைகளையும் பார்த்துவிடலாம்.
தமிழின் முதல் நவீன சிறுகதை
வருடக்கணக்கை வைத்துப் பார்த்தாலும் சரி, இலக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டாலும் சரி, தமிழின் நவீனச் சிறுகதை – வேறு பல சமகால இலக்கிய வடிவங்களைப் போல – சுப்ரமண்ய பாரதியிடமிருந்தே துவங்குகிறது. 1905லேயே, அவர், ஷெல்லிதாஸ் என்ற பெயரில் சக்ரவர்த்தினியில் ‘துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை எழுதியிருந்தார். 1905ம் ஆண்டு நவம்பர் இதழில் துவங்கி, 1906 ஜூலை வரை, இதழக்கு இரண்டு பக்கங்கள் அளவில், நடுநடுவே இடைவெளி விட்டு ஐந்து இதழ்களில் அத்தியாயப் பகுப்புடன் அது பிரசுரமானது. ஐந்து இதழகளில் வெளியானது, அத்தியாயப் பகுப்பு இருந்தது என்பதால் அதை நாவல் என்றோ குறுங்காவியம் என்றோ, நெடுங்கதை என்றோ அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.அதன் மொத்த நீளமே 11 பக்கங்கள்தான் [ பாரதிக்குப் பின் வந்த மறுமலர்ச்சிக்காரர்கள் இதை விட நீண்ட கதைகளை ‘சிறுகதை’ எனக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். பி.எஸ் ராமையாவின் தொண்டர் தூது 29 பக்கங்கள், புதுமைப் பித்தனின் துன்பக் கேணி 40 பக்கங்கள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் 64 பக்கங்கள்]
சில காரணங்களுக்காக இதை விட்டுவிட்டாலும் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரதி புதுச்சேரியிலே வசித்த போது, ‘ஆறில் ஒரு பங்கு ஓர் சிறிய கதை’ என்ற நூலைத் தன் சொந்த முயற்சியிலே மூன்றணா விலையுள்ள நூலாக வெளியிட்டார். அது 1911ம் ஆண்டு அரசு ஆணை ஒன்றின் மூலம் தடை செய்யப்பட்டது. அந்தத் தடையை நீக்குமாறு அரசாங்கத்தை அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி 1912ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஹிந்து நாளிதழுக்கு, ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதிக்குக் கடிதம் எழுதுகிறார் பாரதி
அந்தக் கதை பிரசுரமானபோதும், தடைசெய்யப்பட்டபோதும், அதை விலக்கக் கோரி பாரதி போராடிய போதும் குளத்தங்கரை அரசமரம் பிரசுரமாக மட்டுமல்ல, எழுதப்பட்டிருக்கக் கூடவில்லை
கதாபாத்திரங்களே கதையைச் சொல்லிச் செல்லும் உத்தி:
இன்று பல சிறுகதைகளில் கதையின் முக்கிய பாத்திரம் கதையை விவரித்துச் செல்லும் பாணியைக் காணலாம். ஆனால் தன்மையில் கதை சொல்லும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் பாரதி. அவரது ஆறில் ஒரு பங்கு கதையின் நாயகன் கோவிந்தராஜன் பார்வையில் தன் கூற்றாகச் சொல்லப்படுகிறது. ஆறில் ஒரு பங்கு மட்டுமன்றி, ஞானரதம், சும்மா, கடற்கரையாண்டி என்று பல கதைகளில் இந்தப் பாணி பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம் ”பாரதிதான் இந்த உத்தியை முதலில் கையாண்ட்தாகத் தெரிகிறது” என்கிறார் சி.சு. செல்லப்பா.
சொற்சித்திரம்
புனைகதைகளில் இன்றும் பின்பற்றப்படும் ஒர் உத்தி, பாத்திரங்களின் தோற்றத்தையோ, இயல்புகளையோ விவரிப்பாக இல்லாமல், சிறு வாக்கியங்களில் அமைந்த சொற்சித்திரமாகத் தீட்டுவது. Show, Don’t tell என்ற உத்தியை பாரதி பல கதைகளில் கையாளுகிறார். சில எடுத்துக் காட்டுகள்
வேதபுரத்தில் ஒரு புதுமாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான்….. உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை.நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தலையில் சிவப்புத் துணியால் வளைத்து வளைத்து பெரிய பாகை கட்டியிருக்கிறான் பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி அரிசி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு . மீசையும் கிருதவுமாக விரிந்த பெரிய முகத்திற்கும் அவனுடைய சிவப்பு நிறத்திற்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை. தடியன். காலிலே ஹைதராபாது ஜோடு மாட்டியிருக்கிறான்
(புதிய கோணங்கி)
நவீன உத்திகள்
அ.புனைவற்ற புனைவு Non Fiction -Fiction
Show, don’t tell என்பதைப் போல நவீனப் புனைகதைகளில் பின்பற்றப்படும் ஓர் உத்தி ‘புனைவற்ற புனைவு’ Non-fiction fiction. அதாவது மெய்யான மனிதர்கள், சம்பவங்கள் இவற்றைப் புனைவின் மொழி கொண்டு சொல்வது..சுருக்கமாகச் சொன்னால் கதை மாந்தர்கள், சம்பங்கள் நிஜமானவை. ஆனால் உரையாடல்கள், விவரிப்புக்கள் புனைவு. “The non-fiction fiction is a literary genre which, broadly speaking, depicts real historical figures and actual events woven together with fictitious conversations and uses the storytelling techniques of fiction. என்று இது ஆங்கிலத்தில் வரையறுக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக Faction அதாவது Fact+Fiction என்று சொல்வதுண்டு.
பாரதியின் மறைவுக்குப் பின் 1928ஆம் ஆண்டு Vítězslav Nezval செக்கோஸ்லோவிகிய நாட்டு எழுத்தாளர் ஒருவரால் இந்த உத்தி செக் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் 1968ல் அமெரிக்க எழுத்தாளர் நார்மன் மெயிலரின் ஆர்மீஸ் ஆஃப் தி நைட்க்குப் பிறகுதான் பிரபலமாயிற்று.
ஆனால் அதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பே, பாரதி இந்த உத்தியைப் பயனபடுத்தியிருக்கிறார். அவரது சந்திரிகையின் கதையில் அவரது சமகாலத்தவரான சுதேசமித்ரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணியம், வீரேசலிங்கம் பந்துலு போன்றவர்கள் பாத்திரங்களாக இடம் பெறுகிறார்கள். வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கின் முதல் நாவலை எழுதியவர். பத்திரிகையாளர். சமூக சீர்த்திருத்தங்களுக்காகவும் பெண்கள் உரிமைக்காகவும் போராடியவர். குழந்தை மணம், ஜாதி பேதங்களைக் கடுமையாக எதிர்த்தவர். இந்தியாவின் முதல் விதவைத் திருமணத்தை 1887ல் நடத்தி வைத்தவர்.
ஆறில் ஒரு பங்கு என்ற கதையில் கதாநாயகன் கோவிந்தராஜனையும், கதாநாயகி மீனாம்பாளையும் தாழ்த்தப்பட்டசமூகத்தினரை “சமூக வரம்பினுள்ளே சேர்த்து உயர்வு படுத்தும்” முயற்சிகளில் ஈடுபடச் செய்யும் அசுவினி குமார் தத்தர் என்பவர் 1908ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஆங்கிலேய அரசால் நாடுகடத்தப்பட்ட ஒன்பது தேசபக்தர்களில் ஒருவர். அவரைக் குறித்து பாரதி 1.5.1909 இந்தியா இதழில் “அசுவினி குமார் முதலிய ஒன்பது பேரையும் பிரிட்டீஷ் கவர்மெண்டார் சொந்தச் சாமன் மூட்டைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போடுவது போலக் கோர்ட்டா, சாக்ஷியா, விசாரணையா யாதொரு தொல்லையும் இல்லாமல் கடத்திய செய்கையில் உள்ள நியாயா நியாங்களைப் பற்றிப் பலமுறை பேசியிருக்கிறோம்” என்று எழுதியிருக்கிறார்.
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்,
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி
என்று தனது கவிதையிலே குறிப்பிடும் குள்ளச்சாமியையும், பாரதி காளிதாசன் என்ற பெயரில் எழுதிய ஒரு சில கதைகளில் குறிப்பிடுகிறார்
சமகாலத்தில் வாழ்ந்த மனிதர்களை மட்டுமன்றி சமகால நிகழ்ச்சிகளையும் பாரதி தனது புனைகதைகளில் பேசினார்
“இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக் கொடுத்தாகிவிட்டதென்று சில தின்ங்கள் முன்பு ராய்டர் தந்தி வந்த்து. அதைப் பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்றில் ஸ்திரீகளின் ஜயம் என்ற மகுடத்துடன் சுதேசமித்ரன் பத்திரிகைகயில் எழுதப்பட்டிருந்தது.நேற்று மாலை நானும் என்னுடைய ஸ்நேகிதர் வேதாந்த சிரோன்மணி ராமராயரும் வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி சுதேசமித்ரன் பத்திரிகையைக் கையிலெடுத்துக் கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினி வேதவல்லியம்மை வந்தார்”
என்று தொடங்குகிறது அவர் 25.6.1917ல் சுதேசமித்ரனில் எழுதிய பெண்விடுதலை என்ற சிறுகதை.
“வேதவல்லியம்மை என்ன சாஸ்திரம் ஆராய்ச்சி செய்கிறீர்கள்?” என்று கேட்டாள். சங்கர பாஷ்யம் என்று சொன்னேன். வேதவல்லி சிரித்தாள். சங்கர பாஷ்யமா? வெகு ஷோக்! ஹிந்துக்களுக்கு ராஜ்யதிகாரம் வேண்டுமென்று சொல்லித்தான் மன்றாடப் போய் ஆனி பெஸான்ட் வலைக்குள் மாட்டிக் கொண்டாள். அவள் இங்லீஷ்கார ஸ்திரீ! நம்முடைய தேசத்து வீராதி வீர்ர்களாகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப் பொருள் விரித்துக் கொண்டிருக்கிறார்கள் ஷோக்! ஷோக்! இரட்டை ஷோக்! என்றாள்”
என்று விரிகிறது.
பாரதியைத் தவிர அவர் வாழும் காலத்திலோ, பின்னரோ நெடுங்காலம் தமிழில் இந்த உத்தியில் எழுதப்படாததால் பாரதியின் இதுபோன்ற கதைகள் கவனிக்கப்படவே இல்லை. அதைச் சில பதிப்பாளர்கள் கட்டுரைகளில் சேர்த்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பெருந்துயரம். இந்த உத்தியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். என்னளவில், என்னுடைய ஜனகணமன நாவலும், உயிரே உயிரே என்ற சிறுகதைத் தொகுதியும் இந்த உத்தியில் அமைந்தவை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தகவலுக்காக இதைச் சொல்கிறேன். சுயதம்பட்டமாக அல்ல.
ஆ.மாந்திரீக யதார்த்தம் (Magical Realism)
லத்தீன் அமெரிக்கா இலக்கியத்திற்குக் கொடுத்த கொடை மாந்திரீக யதார்த்தம். யதார்த்தமான சூழலைப் பின்புலமாகக் கொண்டு மிகை யதார்த்தக் கூறுகளைக் கொண்ட கதைகள் மூலம் உண்மைகளைச் சுட்டும் உத்தி மாந்தீரிக யதார்த்தம். Magical realism often refers to literature with magical or supernatural phenomena presented in an otherwise real-world or mundane setting, commonly found in novels and dramatic performances. Despite including certain magic elements, it is generally considered to be a different genre from fantasy because magical realism uses a substantial amount of realistic detail and employs magical elements to make a point about reality, while fantasy stories are often separated from reality என்பது அதன் வரைவிலக்கணம்.
அதாவது பறவைகள் இயற்கையில் மனித மொழியில் பேசா. பறவை என்பது இயற்கை. பறவைகள் மனிதருக்குப் புரிவதைப் போல பேசுவது என்பது மிகை இயற்கை. பறவைகள் மனிதருடைய சமகால வாழ்வை- அதாவது இன்றைய யதார்த்த்தைப் பேசுமானால் அது மாந்திரீக யதார்த்தம். நம்முடைய தொன்மங்களில் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் பேசுவதுண்டு. இராமாயணத்தில் ஜடாயு பேசுகிறது. ஆனால் அது அன்றைய சமூக யதார்தத்தைப் பேசவில்லை
ஆனால் பாரதியின் காக்காய் பார்லிமெண்ட் கதைகளில் காக்கைகள் வரிவிதிப்பைப் பற்றிப் பேசுகின்றன.
மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை
என்று கதையின் தொடக்கத்திலேயே இது இலக்கணத்திற்கு அல்லது யதார்தத்த்திற்கு மீறிய கதை என்பதை உணர்த்தி விட்டுக் கதையைத் தொடர்கிறார் பாரதி
அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: “மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்
சர்வதேச யதார்த்தம் பேசிவிட்டு இந்தியாவின் சமூக யதார்த்த்திற்கு வருகிறார் காக்கை அரசர்
“அடே காகங்கள், கேளீர்ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழு பேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம்
அரசர் இப்படிச் சொன்னால் அமைச்சர்கள் சும்மாயிருப்பார்களோ?
“மகாராஜா, தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டுச் சொல்லுகிறீர்கள்! அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என் போன்ற மந்திரிமாருக்கும் அவசரமுண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார் செலவுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது”
என்று சொல்லிற்று ஒரு கிழக்காகம் என்று விரியும் கதை ” உங்கள் இரண்டு பேரையும் உதைப்பேன்” என்று ஒரு காகம் சொல்வதாக முடிகிறது.
இதே போன்று சமகாலத்துக் கவிஞர்களை மனதில் கொண்டு, யாப்பிலக்கணம் படிக்க ஆசை கொண்டிருந்த காகம் கடைசியில் மதனசாஸ்திரம் படிக்கத் தொடங்கியதையும் கதையாக எழுதியிருக்கிறார்
புனைவு கொண்ட பத்தி எழுத்து
பறவைகள் மட்டுமல்ல உயிரற்ற அஃறிணைப் பொருளான தராசும் பாரதியின் கதைகளில் பேசுகிறது. அவரது தராசு என்பது உண்மையில் ஒரு தொடர் பத்தி (Column). பத்தி எழுத்தில் புனைவை அறிமுகப்படுத்தியதும் பாரதியார்தான்
கதைக்குள் கவிதை
இன்று பிரபலமாக அறியப்படும் பாரதியாரின் பல கவிதைகள் அவரது புனைகதைகளுக்காக எழுதப்பட்டவை
- அவரது புகழ் பெற்ற நந்தலாலா கவிதை சந்திரிகையின் கதையில் இடம் பெறும் பாடல். ஆனால் அங்கு அது காக்கைச் சிறகினிலே என்று தொடங்காமல் ‘பார்க்கும் மரத்தில் எல்லாம்’ எனத் தொடங்குகிறது. காக்கைச் சிறகினிலே இரண்டாம் அடியாக அமைகிறது. இந்தக் கவிதை மாத்திரம் தனியாக எந்த இதழிலும் வெளியாகவில்லை
- அவரது இன்னொரு கவிதையான ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்” 6.8.1917 சுதேசமித்திரனில் வெளியான ‘விடுதலை முத்தமா கதை’ என்ற கதையில் வேணுமுதலி என்ற பாத்திரம் பாடுவதாக இடம் பெற்ற கவிதை. இந்தக் கவிதையும் தனியாக இதழ்களிலே வெளியாகவில்லை. இதில் அக்கினிக் குஞ்சு என்று அவர் குறிப்பிடுவது இளம் பெண்களை. வெந்து தணிந்தது காடு என்பது அவர்களைக் கட்டிப் போட்டிருந்த அன்றைய சமூக வழக்கங்களை
- ’திக்குகள் எட்டும் சிதறி’ என்ற அவரது தீம்தரிகட பாடலும் 12.7.1917 சுதேசமித்ரன் இதழில் வெளியான மழை என்ற கதையில் இடம் பெற்ற பாடல் அது
- நல்ல காலம் வருகுது எனத் தொடங்கும் புதிய கோணங்கி பாடலும் அதே தலைப்புக் கொண்ட சிறுகதையில் இடம் பெற்றதுதான் அந்தக் கதை 8.11.1916 சுதேசமித்ரன் இதழில் வெளியானது
- ”தேடிச் சோறு நிதம் தின்று’ எனத் தொடங்கும் அவரது கவிதை வரிகள் மிகவும் பிரபலமானவை அவை யோக சித்தி என்ற கவிதையில் காணப்படும் ஒரு கண்ணியில் உள்ள வரிகள். அந்தக் கண்ணிக்கு அடுத்த கண்ணி “நின்னைச் சில வரங்கள் கேட்பேன்” எனத் தொடங்கும். அந்தக் கண்ணியை மாத்திரம் மலையாளத்துக் கதை என்ற சிறுகதையில் சேர்த்திருக்கிறார்.
- அவரது அதிகம் பேசப்படாத சில கவிதைகளும் கதைகளில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றான அகவிழியிற் காண்பது என்ற கவிதை.. 11.8.1917 அன்று சுதேசமித்ரனில் வெளியான வேணுமுதலி என்ற கதையில் இடம் பெற்றுள்ளது
நகை மொழி
புனைகதைகளில் பாரதியார் காட்டுகிற நகைச்சுவை அங்கதம் நிறைந்தது
”இந்தக் கதையா? இதெல்லாம் முத்திருளனிடம் வைத்துக் கொள்ள வேண்டாம். சென்னப் பட்டணத்தில் சி.வை தாமோதரன் பிள்ளை என்று ஒரு மகாவித்துவான் இருந்தாரே கேள்விப்பட்ட்துண்டா? அவர் சூளாமணி என்ற காவியத்தை அச்சிட்டபோது அதற்கெழுதிய முகவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியாவது கேட்டதுண்டா? திருவனந்தபுரம் பெரிய கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராகி அந்நிய பாஷைகள் ஆயிரங்கற்று நிகரில் புலவர் சிகரமாக விளங்கிய சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய நூல்களில் ஏதேனும் ஒன்றை எப்போதாவது தலையணையாக வைத்துப் படுத்திருந்ததுண்டா? அல்லது அவர் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியை மோந்து பார்த்த்துண்டா? அப்படி மோந்து பார்த்தவர்களையேனும் மோந்து பார்த்த்துண்டா?”
(சின்னச் சங்கரன் கதை)
அறிவுலகில் மிகச் சாதாரணமாக நடக்கும் பெயர் உதிர்த்தலை (name droping)சின்னச் சங்கரன் கதையில் இடிக்கும் பாரதி மத்தியதர வர்க்கத்தின் நிலையையும் நையாண்டிச் செய்யப் பின்வாங்குவதில்லை
”தமயனாருக்குக் கோட்டையிலே ரெவினியூ போர்டு ஆபிசிலே உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஆபிஸில் பத்து ரூபாயும் வீட்டில் இரண்டு குழந்தைகளும் ப்ரமோஷன்
(ஆறில் ஒரு பங்கு)
அசாதாரணமான பாத்திரங்கள்
ஆங்கிலம் படித்த, இங்கிலாந்து , பிரான்ஸ், அமெரிக்கா போன்ற தேசங்களுக்குப் போய் வந்த, உயிருள்ளவரை சாப்பாட்டிற்குப் போதுமான அளவு பணம் சேர்த்து வைத்திருக்கிற, அதே நேரம் பூர்வீகத் தொழிலை கைவிடாத, குடுகுடுப்பைக்காரனை பாரதியின் கதையில்தான் பார்க்க முடியும் (புதிய கோணங்கி) அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் அதைப் போன்ற பாத்திரத்தை புனைகதைகளில் நான் கண்டதில்லை. கத்திச் சண்டை போடுகிற சாமியாரை, கல்வி அறிவில்லாத ஆனால் திருக்குறள் சொல்கிற மீனவரை, ஆண்கள் எல்லாம் விழுந்து வணங்கும் காவி உடையும் சடை முடியும் தரித்த பெண்துறவியை, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரன்ச் நன்கு தெரிந்த ஆனால் தமிழ் சரளமாக வராத தமிழர்களையும் அவரது புனைவுகளில்தான் காண முடியும்
பாரதியின் பாத்திரங்களைப் பற்றிப் பேசும் போது அவரது பெண் பாத்திரங்களைப் பற்றிக் கட்டாயம் சொல்லியாக வேண்டும். உண்மையில் அது தனியொரு ஆய்வுக் கட்டுரைக்கானப் பொருண்மை.. அவர்களைப் பற்றி சிறிய நகச் சித்திரமாகச் சொல்லி மேலே நகர்கிறேன்.
பாரதி பெண்கள் மீது வைத்திருந்த மரியாதையும் நம்பிக்கையும் அவரது பெண்பாத்திரங்கள் வழியே வெளிப்படுகிறது. “சாதாரண ஞானத்திலும்,யுக்தி தந்திரங்களிலும் உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்மகனைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை:” என்று சந்திரிகையின் கதையில் எழுதுகிறார். பெண்களுடைய இந்தப் பண்புகளை –அதாவது ஞானம், யுக்தி, புத்திக் கூர்மை – கொண்ட பெண்களை அவருடைய பல கதைகளில் சந்திக்கலாம். அவர்கள் யாராயினும் அவர்கள் பேசுவது, கோருவது, பெண்விடுதலை. அது பெண்விடுதலைக் கதையில் நாம் சந்திக்கும் நடுவயதுப் பெண்ணான வேதவல்லியாக இருக்கலாம். விடுதலை முத்தம்மா கதையில் வருகிற முத்தம்மா போல மணமாகாத இளம் பெண்ணாக இருக்கலாம். அல்லது மிளகாய்ப் பழச் சாமியார் போலத் துறவியாக இருக்கலாம்.
மிளகாய்ப் பழச்சாமியார் என்ற பெயரைக் கேட்டால் ஏதொ ஒரு ஆண் சாமியார் என்றுதான் முதலில் தோன்றும். ஆனால் அவர் ஒரு பெண் துறவி. திருக்கார்த்திகையன்று அவருடைய அடியார்கள் மிளகாய்ப் பழத்தை அரைத்து உடம்பெல்லாம் தேய்த்து ஸ்நானம் செய்விப்பார்கள் ஆதலால் அவருக்கு மிளகாய்ப் பழச் சாமியார் என்று பெயர்.
ஒருநாள் இந்த மிளகாய்ப் பழ சாமியார் பாரதியைத் தேடி வருகிறார். ”பெண் விடுதலை முயற்சியில் எனக்குத் தங்களால் இயன்ற சகாயம் செய்ய வேண்டும்” எனக் கோரும் அந்தப் பெண் துறவி சொல்கிறார்: “பறையனுக்குப் பார்ப்பானும், கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறீர்கள். பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்கிறேன். எவனும் தன் சொந்த ஸ்திரியை அலட்சியம் பண்ணுகிறான். தெருவிலே வண்டி தள்ளி நாலணா கொண்டு வருவது மேல் தொழிலென்றும் அந்த நாலணாவைக் கொண்டு நாலு வயிற்றை நிரப்பி வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிறான். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக்கிறார்கள். ஆண் மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது, களவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண் சத்தம், படாடோபம், துரோகம், கொலை, யுத்தம்! இந்தத் தொழில்கள் உயர்வென்றும், சோற்றுக்குத் துணி தோய்த்து கோயில் செய்து கும்பிட்டு வீடு பெருக்கிக் குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் தாழ்வென்றும் ஆண்மக்கள் நினைக்கிறார்கள்” என்று பொரிந்து தள்ளுகிறார்.
பெண்ணடிமையைப் போல பாரதி வெகுண்டு எதிர்த்த இன்னொரு விஷயம் தீண்டாமை. அவரே நூலாகப் பதிப்பித்துப் பரப்பிய அவரது ஆறிலொரு பங்கு என்ற சிறிய கதையின் பெயரே அன்று மக்கள் தொகையில் ஆறிலொரு பங்கினராக இருந்த தீண்டத் தகாதவர் என்றழைக்கப்ப்பட்டவர்களைக் குறிப்பது. அந்த நூலை பாரதி அவர்களுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அந்தச் சிறுகதையில் வரும் தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்திவிட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும். நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததையெல்லாம் நமக்கு இப்போது அன்னியர்கள் செய்கிறார்கள் என்ற வரிகளுக்காக அது அரசால் தடை செய்யப்பட்டது
ஜாதி வேறுபாடுகளைக் கடுமையாகச் சாடியவர் பாரதி. அதன் பொருட்டு சுயஜாதியைக் கூட விமர்சிக்கத் தயங்காதவர். அவரைப் போல சுயஜாதியை அதன் குறைகளுக்காக கடுமையாகச் சாடியவர் அவர் காலத்தில் எவரும் இல்லை
“ பூனூலை எடுத்துப் போடுங்கள். இந்தியா முழுவதும் ஒரே ஜாதி ஒரே ஆசாரம் என்று செய்து விடவேண்டும் அதுவரை பிராமண சபை, அப்பிராமண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை, முதலியார் சபை இந்த இழவெல்லாம் தீராது ஒரே கூட்டம் என்று பேசு பூனுலென்ன, கீனூலென்ன! வீண்கதை! என்றார். பிரம்மராயர் சமாதானப்படுத்தப் போனார். வீரப்ப முதலியார் சொல்கிறார்: “ எல்லாம் தெரியும் தெரியும், யாரோ ஒரு ராஜாவாம். அபன் பூனுலை ஒரு தட்டிலும் பொன்னை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்தானாம். பூனூல் கீழே இழுத்ததாம். பொன் மேலே போய்விட்ட்தாம். இதென்ன மூட்டை! எல்லோரையும் சரிசமானமாக்கு ஐரோப்பியர்களைப் போல நடப்போம் ஜப்பானிலே அப்படித்தான். ஜாதி வித்தியாசத்தை முதலிலே நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கத் தொடங்கினார்கள். ஜப்பானியரைப் போல இருப்போம்”
என்று அவருடைய பாத்திரம் ஒன்று ஆவணி அவிட்டம் என்ற கதையில் பேசுகிறது. .
பாரதியின் புனைவுகளின் வரலாற்று முக்கியத்துவம், அவற்றில் காணப்படும் நவீனத்துவம், உத்திகள், நடை, பாத்திரங்கள் ஆகியவற்றை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்து விட்டோம்.
அவரது புனைகதைகளில் காணப்படும் ஒரு சில ஒளி பொருந்திய வாக்கியங்களில் சில:
- உண்மை பல வர்ணங்களுடையது
- வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு சத்தியம் புலப்படாது
- திருப்தி எதிலும் ஏற்படாதிருத்தல்- இந்த ஒர் குணமே மனிதப் பிறவிக்குக் காப்பாகவும் அதன் பெருஞ் சிறப்பாகவும் விளங்குகிறது
- முற்றிய ஞானத்திலே எவ்வாறு அபேத நிலை ஏற்படுகிறதோ அது போல பரிபூர்ணமான போகத்திலேயும் அபேத நிலை தோன்றுகிறது
- தின்பதற்கல்லாது தின்னப்படுவதற்கமைந்தன போன்ற பற்கள்
இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்லி உரையை முடித்துக் கொள்ள எண்ணுகிறேன்
பாரதியின் கவிதை முதலில் பிரசுரமானது 1904 ஆண்டு ஜூலை மாதம் *தனிமை இரக்கம் –விவேகபாநு- மதுரை) அதற்கு அடுத்த ஆண்டே சிறுகதை எழுதுகிற முயற்சிகளில் பாரதி இறங்கி விட்டார். 1905 நவம்பரில் சக்ரவர்த்தினியில் துளசீபாயி வெளியாகிறது. என்றாலும் அவர் அதிகமாகச் சிறுகதைகள் எழுதியது 1916-18 ஆகிய காலகட்ட்த்தில்தான். சுதேசமித்திரன் இதழிலும், அதன் வார அனுபந்தங்களிலும் காளிதாஸன், சக்திதாசன் ஆகிய பெயர்களில் எழுதினார். அனேகமாக வாரத்திற்கு ஒரு கதையோ பத்தியோ எழுதி வந்திருக்கிறார். அதற்காக அவருக்குக் கிடைத்த தொகை மாதத்திற்கு ரூ 30 மட்டுமே. அது மட்டுமல்ல, காளிதாஸன் என்பது பாரதியார்தான் என்று அறிவிக்கப்படவில்லை. சுதேசமித்ரன் வெளியிட்ட அவரது மரணம் பற்றிய செய்தியில்தான் காளிதாஸன், சக்திதாஸன் என்ற பெயரில் பாரதி எழுதி வந்தார் என்பது தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அவர் எழுதிய சிறுகதைகளைத் திரட்டுவதும் தொகுப்பதும் எளிதாக இல்லை. பாரதியின் புனைவுகள் முற்றிலுமாக நமக்குக் கிடைத்துவிட்டன என்பது ஐயத்திற்குரியதே
பாரதி தான் தொடங்கிய நெடுங்கதைகளை நிறைவு செய்யவில்லை. “ஞானரதம் போலொரு நூல் எழுத நானிலத்தில் ஆளில்லை” என்று பாரதிதாசனால் கொண்டாடப்பட்ட படைப்பு ஞானரதம். இப்போது கிடைத்திருப்பதைத் தொடர்ந்து அதற்கு ஓர் இரண்டாம் பாகம் எழுத பாரதி கருதியிருந்தார்.” புஸ்தமெழுதினால் அதற்கு ஒரு முகவுரை எழுதித்தீர வேண்டும் என்ற சம்பிரதாயம் ஒன்றிருக்கிறது. உலகத்தில் எந்த வேலை செய்யப்போனாலும் சம்பிரதாயம் என்ற தொல்லையொன்று முன் வந்து நிற்கிறது” என்ற அலுப்புடன் ஞானரதத்தின் முன்னுரையைத் தொடங்குகிற பாரதி “எனக்குப் போதிய தெளிவும் திறனும் கொடுத்து இதன் இரண்டாம் பாகம் எழுதி முற்றுவிக்கும்படி அவன் அருள் புரிந்தால் அது செய்வேன். இல்லாவிட்டால் நானாக மூண்டும் ஒன்றும் செய்யமாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இரண்டாம் பாகம் எழுதவே இல்லை
”அநேகமாய் பாரதியாரின் சுய சரிதம் என்றே சொல்ல்லாம் என்று வ.ரா.வால் குறிப்பிடப்படும் சின்னச் சங்கரன் கதையின் முப்பது அத்தியாயங்களை பார்தி எழுதியிருந்தார் ஆனால் இன்று நமக்குக் கிடைத்திருப்பது ஏழு அத்தியாங்களே. அவர் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பிரதி திருட்டுப் போயிற்று. அவரது பக்தராக அவரிடம் வேலை பார்த்து வந்த ஒருவர் அவரது மற்ற காகிதங்கள் ஆவணங்கள் அவற்றோடு இதனையும் திருடி ரகசியப் போலீசாரிடம் கொடுத்து விட்டதாக வதந்தி என்று வ.ரா எழுதுகிறார். அந்த நபரை பாரதியின் நண்பர்கள் கடுமையாகத் திட்டி கண்டித்தார்கள். ஆனால் பாரதி அந்த வதந்தியை நம்பவில்லை மீண்டும் அவரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். ஒரு வேளை சின்னச் சங்கரன் கதை முற்றிலுமாக நமக்குக் கிடைத்திருந்தால் பாரதி வாழ்வின் வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கலாம். புதிய பார்வைகள் கிட்டியிருக்கக் கூடும்
சந்திரிகையின் கதை என்ற நாவல் முற்றுப் பெறாமல் நிற்கிறது. சந்திரிகையின் கதை என்று பெயரிடப்பட்டாலும் இப்போது நம்மிடம் இருப்பது விசாலாட்சியின் கதைதான். விசாலாட்சியின் கதையைச் சொல்லிவிட்டு அவர் வளர்க்கும் சந்திரிகையின் கதையை சொல்ல பாரதி எண்ணியிருந்ததாக அதை நூலாகப் பிரசுரித்திருந்த பாரதி பிரசுராலயம் குறிப்பிடுகிறது.” ஆசிரியர் இந்தக் கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்று விட்டார் இதுவரை விசாலாக்ஷி அம்மாளுடைய சரித்திரம் விரித்துக் கூறப்பட்டது. இரண்டாவது பாகத்திலே சந்திரிகையின் வரலாற்றைச் சொல்வதாக உத்தேசித்திருந்தார் சுமார் பத்துப் பக்கங்கள் மாத்திரமே இரண்டாம் பாகத்தில் எழுதப்பட்டிருந்தன” என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்தப் பத்துப் பக்கங்கள் சுதேச மித்திரன் பிரஸ் மேனேஜரிடம் கொடுத்திருப்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பல தடவை விசாரித்தும் கிடைக்காமல் போய்விட்டது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் பாரதி மறைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு வெ.சாமிநாத சர்மா மூலம் ரா.அ.பத்மநாபனுக்கு காணாமல் போன அந்தப் பத்துப்பக்கங்கள் கிடைக்கின்றன. ஆனால் கையெழுத்துப் பிரதி குறுக்கே கிழிக்கப்பட்டு மேல் பாதி மட்டுமே கிடைத்தது. அதனால் சந்திரிகையின் கதையும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை.
இந்த வரம்புகளுக்குள்ளே நின்றுதான் நான் பாரதியின் புனைவுகளைக் கண்டிருக்கிறேன். அவற்றின் ஊடே நமக்குக் கிடைக்கிற தரிசனம் பிரமிக்க வைக்கிறது. .
.
2 thoughts on “பாரதியின் புனைகதைகள்”
புதிய கோணங்கி கவிதைக்கான விளக்கத்தை தர முடியுமா?
தந்தால் உதவியாக இருக்கும்.
விரைவில் எழுதி அனுப்ப முயல்கிறேன்