நேர்மையான எழுத்து
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் எனத் துவங்கும் கண்ணதாசன் கவிதையொன்று உண்டு. "அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன் ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் என அந்தக் கவிதை முடியும்.
பத்திரிகையாளன் என்பவன் கிட்டத்தட்ட அந்தப் பரம்பொருள் போல. அனுபவங்களாலே ஆனது அவன் வாழ்க்கை. ஒரு அரசு அதிகாரிக்கோ, வங்கி நிர்வாகிக்கோ, கல்லூரிப் பேராசிரியருக்கோ, விஞ்ஞானிக்கோ கூட வாய்க்காத அரிய வாழ்க்கை அது. ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் தெருவோரத்தில் ரிக்ஷாக்காரரோடு உரையாடிக் கொண்டிருக்கும் அவன் அதற்குச் சில மணித்துளிகளுக்குப் பின முதலமைச்சரோடு கை குலுக்கிக் கொண்டிருப்பான்.
அதிலும் சினிமாச் செய்தியாளர்கள் நட்சத்திர மண்டலத்தின் ஊடே பயணிப்பவர்கள். தரையில் பயணிக்கும் போது காட்சிகள் மாறுகிற வேகத்தை விட விமானத்தில் பறக்கும் போது காட்சிகள் மாறுகிற வேகம் அதிகம். சினிமாச் செய்தியாளர்களோ ராக்கெட்டில் பயணிப்பவர்கள். அவர்கள் காண்கிற காட்சிகளும் அவற்றின் வேகமும் வித்தியாசமானவை. நேற்றிருந்தார் இன்றில்லை என்பது அந்த உலகின் இயல்பு. அதன் மெளன சாட்சிகள் அவர்கள்.
ஆனால் நாம் அந்த உலகின் பார்வையாளர்களே அன்றி அதன் பங்கேற்பாளர்கள் அல்ல என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும். அந்த உணர்வை அவர்கள் மறக்கிற நேரம் அந்தப் புதைகுழி அவர்களை விழுங்கி விடும்.
அந்த உணர்வு கொண்ட சினிமாச் செய்தியாளர்கள் மிகச் சிலரே. அவர்களில் ஒருவர் ’அலையோசை’ மணி. திரை உலகில் அவருக்கு இருந்த நட்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர் ஒரு தயாரிப்பாளராக ஆகி இருக்கலாம். அவரது எழுத்துத் திறமைக்கு வசனகர்த்தா ஆகியிருக்கலாம். அவர் அனுபவத்தில் கண்ட கதைகளை விற்று கதாசிரியர் ஆகியிருக்கலாம். இன்றைக்கு நாம் சினிமாவில் பார்க்கிற முகங்களை விட லட்சணமான முகமும் வசீகரமான சிரிப்பும் அவருடையது. அதைக் கொண்டு நட்சத்திரமாகக்கூட ஆகியிருக்கலாம்.
ஆனால் அவர் பிடிவாதமாக பத்திரிகையாளராக மட்டுமே இருந்தார். அந்தத் தொழிலின் கம்பீரத்தை உணர்ந்த பெருமிதம் மிக்க பத்திரிகையாளர். அதற்கு சாட்சி இந்த நூல்.
சினிமாச் செய்தியாளர்களின் பலவீனங்களில் ஒன்று தனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி மிகையாக எழுதுவது; பிடிக்காதவர்களைப் பற்றி எகத்தாளமாக எழுதுவது. அந்த பலவீனத்திற்கு பலியாகாதவர் மணி. அதற்கான ஆதாரம் இந்த நூல்.
இன்றும் திரை உலகில் பெரிய நட்சத்திரங்களாக ஆதிக்கம் செலுத்துபவர்கள், அரசியல் செல்வாக்குக் கொண்டவர்களைப் பற்றி அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிப்படையாக பெயர் சொல்லி எழுதுகிறார். நினைவில் தங்காமல் மறைந்து விட்டவர்களின் வாழ்க்கைக்குப் பின் இருக்கும் சோகங்களை அனுதாபத்தோடு எழுதுகிறார்.தனக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்களைப் பற்றிக் கூட ஒரு சில விமர்சனப் பார்வைகளை முன் வைக்கிறார்.
படித்து முடித்தவுடன் என் மனதில் ஓடி மறைந்த ஒரு வரி ‘நேர்மையான எழுத்து’
வறுமையில் தான் வாழ நேர்ந்த நாட்களை மறைத்தோ, அனுதாபம் பெறும் நோக்கோடு மிகையாகவோ எழுதவில்லை.தன்னுடைய குடும்பத்திற்கு போலியான கெளரவத்தை ஏற்படுத்தும் பொய்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய தாயாரை தன் தந்தை தெருவில் இழுத்துப் போட்டு அடிப்பார் என்ற தகவல்களைக் கூட வெளிப்படையாக எழுதியிருக்கிறார்
மனதைக் கலங்கடித்த எழுத்தும் கூட. அவர் தன் மகள் இறந்த காட்சியை விவரிக்கிற போது விக்கித்துப் போனேன். அது ஒரு அற்புதமான சிறுகதை. சிறுகதையாக எழுதப்பட்டிருந்தால் அது பல பரிசுகளை வென்றிருக்கும். கடன்காரர்களுக்குப் பயந்து ஒரு விடுதியில் பதுங்கியிருந்த போது அங்கு ‘தொழில்’ செய்து கொண்டிருந்த பாலியல் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு பெண் தன் குடும்பத்திற்கு உதவி செய்த சம்பவமும் ஓர் அற்புதமான சிறுகதை. மணி தான் ஒரு பத்திரிகையாளன் மட்டுமல்ல படைப்பாளியும் கூட என்பதை அந்தப் பக்கங்களில் மெய்ப்பிக்கிறார்.
இந்த நூலின் கடைசிப் பக்கங்களில் தன் தாயின் மரண்த்தைப் பற்றிய வரிகளை வாசித்த போது மனம் நெகிழ்ந்து கண்கள் கசிய ஒரு நிமிடம் உறைந்து போனேன்.
மணி பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்த நாட்களில் இருந்தது போல இன்றைய பத்திரிகை உலகம் இல்லை.அந்த நாள்களில் சினிமாச் செய்திகள் என்பது வணிகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் போல அது ஒரு தனித் துறையாக இருந்தது. இன்று சினிமாச் செய்திகள் இல்லாத பத்திரிகைகளே இல்லை (புதிய தலைமுறை தவிர). அதன் காரணமாக சினிமாச் செய்திகளை எழுதும் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் மணியைப் போன்ற பத்திரிகையாளர்கள் அதிகம் இல்லை. அவரது இடம் அங்கு வெற்றிடமாகவே இருக்கிறது.
மணி என் எதிர்வீட்டுக்காரர். அவரை நான் பத்திரிகையாளர் குடியிருப்பிற்கு வந்த பின்தான் அறிவேன். அதற்கு முன் ஏதோ ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். நன்கு பழகும் வாய்ப்பு குடியிருப்புக்கு வந்த பின்தான் வாய்த்தது. மிகச் சிறிய காலத்தில் அவர் நெருக்கமாகப் பழகிவிட்டார். என்னோடு மட்டுமல்ல, என்னோடு ஒருவார காலம் தங்கியிருப்பதற்காக வந்த என் தந்தையோடும் கூட. அதற்குப் பின் நான் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அப்பா அவரைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை. உண்மையில் அவர் மறைந்த செய்தியை அப்பாதான் முதலில் சொன்னார். அவர் மறைந்த போது நான் ஊரில் இருந்தேன். போனை அப்பாதான் எடுத்தார். செய்தி கேட்டு ஸ்தம்பித்துப் போனார். பின் மெல்லச் சொன்னார். ”மணி போயிட்டார்” என்றவர் சில நொடிகள் கழித்து “நல்ல மனுஷன்” என்றார்.
அந்த நல்ல மனிதனை பத்திரிகை உலகம் மட்டுமல்ல, நானும் கூட நிறையவே ‘மிஸ்’ செய்கிறேன்
அதை இந்தப் புத்தகம் சிறிது ஈடு செய்தது.
மாலன் சென்னை 41
10.7.2011