நாம் எதற்காக ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கிறோம்?
தண்ணீர் தேங்காத சாலைகள், தடையில்லா மின்சாரம், அடிப்படை சுகாதார வசதிகள், ஆதாரமான கல்வி வாய்ப்பு, படித்து முடித்தால் வேலை வாய்ப்பு, பட்ஜெட்டைப் பதம் பார்க்காத விலைவாசி, சங்கடமில்லாத போக்குவரத்து, சமூகவிரோதிகளிடமிருந்து பாதுகாப்பு இது போன்ற காரணங்களுக்காக அரசு என்ற ஒன்று நமக்குத் தேவைப்படுகிறது. அதன் காரணமாக அதனைத் தேர்தெடுத்து அதன் கையில் அதிகாரமும் கொடுத்து, அது செயல்படுவதற்குத் தேவையான நிதியையும் வரியாகச் செலுத்துகிறோம்.
ஆனால் அரசை நடத்துபவர்கள் அந்த அதிகாரத்தைச் சொந்த குரோதங்களின் அடிப்படையில் ‘கணக்கு’த் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள். நாம் அவர்களைக் கணக்கு ஆரம்பிக்கச் சொல்கிறோம். அவர்கள் கணக்குத் தீர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆளுகை (Governance) என்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக் குறுக்கிவிடுவதுதான் இன்றைய இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள் பெரிய ஆபத்து
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற எண்ணும் அரசின் முடிவு இந்தக் காழ்ப்புணர்ச்சியின் அடையாளங்களில் ஒன்று.
ஒரு சமூகத்திற்குப் புத்தகங்களைவிடக் குழந்தைகள் முக்கியம், உடலாலும் மனதாலும் ஆரோக்கியமான குழந்தைகள் எதிர்காலத்திற்கு நாம் ஊன்றுகிற விதைகள் என்பதிலெல்லாம் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால்-
உண்மையிலேயே அரசின் நோக்கம் ஒரு பல் திறன் குழந்தைகள் மருத்துவமனையை நிறுவுவதுதான் என்றால் அதைத் தகுந்த வேறு இடத்தில், வேறு நகரில் நிறுவக்கூடாதா? சென்னையில்தான் சட்டமன்றத்திற்காகக் கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வரவிருக்கிறதே. இந்தக் குழந்தைகள் மருத்துவமனையை வேறு நகரில் அமைக்கக் கூடாதா? சென்னை மட்டும்தான் தமிழகமா?
இருக்கிற நூலகத்தை இழுத்து மூடுவதற்கு பதிலாகப் புதிதாகப் பயனுள்ள ஒன்றைச் செய்ய முற்படால், அதனை மக்கள் வரவேற்பார்கள். ஒன்றை அழித்துத்தான் இன்னொன்றை உருவாக்க வேண்டுமா? இன்றையத் தமிழகத்தின் தேவைகள் ஏராளம்.
வீடு தோறும் கலையின் விளக்கம், வீதி தோறும் இரண்டொரு பள்ளி வேண்டும் என்று கேட்டு, தேடு கல்வி இல்லாத ஊரைத் தீயினுக்கு இரையாக்க வேண்டும் எனச் சீறிவிட்டுச் சென்றான் மகாகவி. இன்று வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்பதோடு ஊருக்கொரு நூலகம் என்று கூடுதலாகக் கோருவது குற்றமாகி விடாது.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலமாக உள்ளாட்சிகள் தோறும் நூலகம் ஏற்பட வாய்ப்பு ஒன்று வந்தது. புதிதாக சென்னைப் பள்ளிக் கல்வி வளாகத்தில் ” அறிவுத் தோட்டம்“ ஒன்றை அமைப்பதற்கு பதில் அந்த நூலகங்களை வலுப்படுத்துகிற பணியில் அரசு இறங்கட்டும். எல்லாவற்றையும் சென்னையிலேயே குவிக்க வேண்டாம். நூலகமோ, மருத்துவமனையோ, ஏன் இனி எந்தத் திட்டமானாலும் தமிழகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் குறியாகக் கொள்ள வேண்டும்.
புதிய தலைமுறை 17.11.2011