குழந்தையின் புன்னகையைப் போலக் கூப்பிட்டது அந்த நிலவு. கண்ணுக்குள் மிதக்கிற கனவைப் போல கைக்கெட்டாமல் இருந்தாலும் மனதிற்குள் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் இறைத்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது அது. மின்சாரம் நின்று போயிருந்ததால் எனக்குச் செய்ய ஏதுமில்லை. என் ஜன்னலைத் திறந்து கொண்டு நிலவைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.
செய்ய ஏதுமில்லை என்றாலும் கூடச் சிந்தனை நதியின் சிற்றலைகள் ஓய்வதில்லை. நேற்றுப் படித்த கதை ஒன்று நெஞ்சில் வந்து போயிற்று.
நாட்டுக்காகப் போரிட்ட வீரன் அவன். களத்தில் கண்ட காயங்கள் அவன் முகத்தை அலங்கரித்திருந்தன.அந்த வடுக்களை அழகென்று ஊர் ஒப்புக் கொள்ளாது. ஆனாலும் அவனது கம்பீரம் அவனுக்குத் தெரியும்.சொந்த வாழ்க்கையில் சுகம் தேடிய போது கண்ட காயங்கள் அல்ல அவை. தேசத்தை நேசித்ததால் அளிக்கப்பட்ட பரிசுகள் அவை
ஆனாலும் அண்மைக்காலமாக உள்ளே ஓரு கேள்வி உறுத்திக் கொண்டிருந்தது.அவன் வாழ்ந்த ஊரில் ஓர் துறவி. அவரைப் பார்க்க தினம் தினம் திக்குகள் எட்டிலிருந்தும் தேடி வருவார்கள். தங்கள் மனச் சுமையை இறக்கி வைப்பார்கள். துறவி அதை உன்னிப்பாகக் கேட்பார். ஏதோ இரண்டொரு வார்த்தைகள் இதழில் ஒளிரும் சிரிப்பு மாறாமல் சொல்வார்.வந்தவர்கள் முகத்திலும் அந்தச் சிரிப்பு ஏறிக் கொள்ளும். புண்பட்ட நெஞ்சோடு வந்தவர்கள் புன்னகையோடு திரும்பிப் போவார்கள். போகிற போது துறவியை புகழ்ந்து கொண்டே போவார்கள்.
அவர்களது புகழ்ச்சியைக் கேட்கும் போதெல்லாம் இவனுக்குள் ஓரு புழுக்கம். என்ன செய்து விட்டார் இந்தத் துறவி? என் போல் வாளேந்தினாரா? களம் புகுந்தாரா? எதிரியை நேருக்கு நேர் எதிர் கொண்டாரா? இந்த தேசம் இன்னொருவன் கையில் விழுந்து விடாமல் காத்து நின்றாரா? என்னைவிடப் பெரிதாக என்ன செய்து விட்டார்? இவரைக் கொண்டாடுகிற தேசம் ஏன் என்னைக் கண்டு கொள்ளவில்லை?
இந்தக் கேள்வியைத் துறவியிடமே கேட்டுவிட வேண்டும் எனக் கிளம்பி அவரிடம் வந்தான் அந்த வாள் வீரன். நேருக்கு நேர், முகத்துக்கு எதிரே கேட்டும் விட்டான். வாளைக் கண்டு அஞ்சாதவனா வார்த்தைக்களுக்குத் தயங்கப் போகிறான்?
ஆனால் துறவி அந்தக் கேள்விக்கும் புன்னகைத்தார். “ எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. இன்று என் தியானத்தை இன்னும் நான் துவக்கவில்லை. அதை முடித்து விட்டு அவர்களைப் பார்க்க வேண்டும்” எனக் காத்துக் கொண்டிருந்த கூட்டத்தைக் காண்பித்தார்.”அவர்களைப் பார்த்து விடுகிறேன். அப்புறம் நாம் ஆறுதலாகப் பேசலாம்” என்றார்.
வாள் வீரன் வெளியே வந்தான். நந்தவனத்தில் கொஞ்ச நேரம் நடந்தான். குளத்தில் கல்லெறிந்து கொஞ்ச நேரம் பொழுது போக்கினான். அண்ணாந்து ஆகாயத்தில் சுழலுகிற சூரியனைப் பார்த்தான். மலர்களைப் பறித்து இதழ்களைப் பிய்த்து மகரந்தத்தை முகர்ந்தான். எதைச் செய்தாலும் பொழுது போகமாட்டேன் என அடம் பிடித்தது. அங்கேயோ, துறவியைப் பார்க்க வந்தவர்கள் வரிசை வளர்ந்து கொண்டே இருந்தது.இப்போதைக்கு வேலை ஆகாது என்பது துல்லியமாகத் தெரிந்தது. மடக்கிக் கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு மர நிழலில் தூக்கம் போட்டான். எழுந்த போது மாலையாகிவிட்டிருந்தது. ஒளி குன்றி இருள் படர்ந்து கொண்டிருந்தது.
துறவியின் எதிரே போய் நின்றான் வீரன். “என் கேள்விக்கு பதிலுண்டா?” என்றான். “இரு இரு” என்ற துறவி எழுந்து போய் ஜன்னலைத் திறந்தார். அங்கே இரவுக்குத் திலகமிட்டது போல் நிலவு எழுந்து கொண்டிருந்தது.
”இந்த நிலவுதான் எத்தனை அழகு!” என்றார். ஆம் என்பதைத் தவிர அவனுக்குச் சொல்ல வேறு ஏதுமில்லை.
“ஆனாலும் சூரியனைப் போல இது அவ்வளவு பிரகாசம் இல்லை. சூரிய ஒளியில் இது இன்னதென்று தெளிவாகத் தெரியும்.பாம்பா கயிறா, கல்லா, நிழலா, எது என்னவென்று தெளிவாகத் தெரியும்” என்றான் வீரன்.
“நானும் இந்த நிலவை நாற்பது வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள் கூட அது என்னிடம் முறையிட்டதில்லை. சூரியனை விட எனக்கு ஒளி குறைவு. அதனால் நான் மட்டமா? என முனகியதில்லை”
“எனக்கு விளங்கவில்லை. எப்படி நீங்கள் சூரியனையும் நிலவையும் ஒப்பிட முடியும்?.இரண்டும் தனித் தனி. வெவ்வேறு இயல்புகள் கொண்டவை. வேறு வேறு வேலைகளைச் செய்பவை. எப்படி ஒப்பிட முடியும்?” என்றான் வீரன்
”இல்லை,உனக்கு விளங்கிவிட்டது.பார்! உன் கேள்விக்கான விடை உன்னிடமே இருந்திருக்கிறது!” என்றார் துறவி. நீயும் நானும் வேறு வேறு இயல்புகள் கொண்டவர்கள். செய்யும் வேலையும் வேறு வேறு. எப்படி…? அவர் முடிக்கவில்லை. ஆனாலும் வீர்ன் முகத்தில் முறுவல் படர்ந்தது.அவனது இதழிலும் அந்தப் புன்னகை வந்தமர்ந்திருந்தது.
இப்போது எதற்காக இந்தக் கதை? +2 தேர்வை எழுதிவிட்டு இனி என்ன செய்யலாம் எனக் கேட்டு எழுதும் என் இளைய நண்பர்களுக்காகத்தான். உங்களை ஒரு போதும் இன்னொருவருடன் ஒப்பிட்டுக் கர்வமோ கவலையோ கொள்ளாதீர்கள். எனக்குள் ஒரு கவிதை இருக்கிறது, என்றாலும் எல்லோரும் பொறியியல் படிக்கப் போகிறார்கள். நான் போவதா வேண்டாமா எனக் கேள்விகளால் உங்களைக் குடைந்து கொள்ளாதீர்கள். என்னை விடக் குறைந்த மார்க் வாங்கியவள் மருத்துவக் கல்லூரிக்குப் போய்விட்டாள் எல்லாம் இட ஒதுக்கீடு செய்கிற கோளாறு என்று குமையாதீர்கள்.
நீங்கள் நீங்களாகவே இருந்தால் நிச்சயம் ஜெயிப்பீர்கள். இந்த பூமியில் ஞாயிறுக்களுக்கு மட்டுமல்ல, நிலவுக்கும் இடமுண்டு. அது சரி, ஆனால் நான் யார் எனத் தெரியவில்லையே எனத் திகைக்கிறீர்களா?
தேடுங்கள் கண்டடைவீர்கள்!