என் ஜன்னலுக்கு வெளியே சற்றே மரம் போல் தழைத்துவிட்ட போகன்வில்லா செடியில் வந்து அமர்கிறது அந்த வண்ணத்துப்பூச்சி. அதுவே ஒரு பூவைப் போல அழகாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் செடியில் மலர்ந்திருக்கும் பூவை விட அது அழகாக இருக்கிறது. உயிர்ப்போடும் இருக்கிறது. பல திசைகளைப் பார்த்து வந்த அனுபவம் அதன் சிறகில் படிந்திருக்கிறது. ஆனாலும் ஏனோ அது அந்தச் செடிக்கு ஏற்ற ‘பூவாக’ இல்லை. பாந்தமாக இல்லை. எதனாலோ செயற்கையாக இருக்கிறது.
போகன்வில்லாவும் இங்கிருந்தோ இந்த மண்ணுக்கு வந்ததுதான். ஆனால் அது இங்கேயே தழைத்து இந்த மண்ணுக்கே உரியதாக ஆகிவிட்டது. இந்த மண்ணில் வேர் கொண்டு, அதன் சாரங்களை உள்வாங்கிக் கொண்டு செழித்தது. இந்தச் சூழலுக்கே உரிய நோய்களை எதிர்கொண்டு போராடி, தன்னைத் தற்காத்துக் கொண்டது. முட்களுக்கு நடுவே பூத்துக் கொண்டும் இருக்கிறது. நான் வாழும் இடத்தை அடையாளம் காட்ட அந்தப் பூக்கள் உதவியாக இருக்கின்றன.
நான் எழுத வந்த காலத்தில் நவீன இலக்கியம் என்பது என் வீட்டு போகன்வில்லாச் செடியைப் போலிருந்தது. அன்று பரவலாகக் கையாளப்பட்ட சிறுகதை வடிவமும் சரி, புதுக்கவிதை என்றழைக்கப்பட்ட கவிதைகளும் சரி, இங்குள்ள பாரம்பரியத்தின் தொடர்ச்சி இல்லை. வெளியிலிருந்து வந்ததுதான். ஆனால் இந்த மண்ணில் வேரூன்றிச் செழித்து, இந்த மண்ணுக்கே உரியதாகிவிட்டது. இன்று, நவீனம் அந்த வண்ணத்துப் பூச்சியைப் போல ஆகிவிட்டது.
போகன்வில்லாவைப் போல, இந்த மண்ணில் கால்கொண்டு தழைப்பதா அல்லது அந்த வண்ணத்துப்பூச்சியைப் போல திசைகள் தோறும் திரிவதா என்று தேர்ந்து கொள்கிற வாய்ப்பு இன்று எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு இருக்கிறது. அடையாளமாக ஆவதா அல்லது கணநேர வியப்பாக இருப்பதா என்று தேர்ந்து கொள்கிற வாய்ப்பு இன்று எழுத வருகிறவர்களுக்கு இருக்கிறது.
இப்படியெல்லாம் திட்டமிட்டுத் தேர்ந்து கொண்டு நான் எழுத்தாள வரவில்லை. நானும் சிறுகதை எழுத நேர்ந்தது ஒரு விபத்துபோல் நிகழ்ந்தது. வெகு ஜனத்திரள் நடுவே முகமற்றுப் போகிற சாதாரண மனிதர்களைப் பற்றி என் முதல் சிறுகதை அமைந்தது. அதுவே என்னின் இன்னொரு முகமும் ஆயிற்று.
இந்த முகம் தேடல்தான் என்னுடைய எழுத்துக்களில் அது சிறுகதையானாலும் சரி, பத்திரிகையானாலும் சரி, பத்திரிகைப் பத்தியானாலும் சரி நடந்து கொண்டிருக்கிறது. தனி மனிதர்களுடைய முகங்களை மட்டுமல்ல. சமூகம் கொண்டிருந்த முகங்களையும், தொலைத்துவிட்ட முகங்களையும்கூட அவை தேடுகின்றன; ஆராய்கின்றன. இதைக் குறித்து நான் மகிழ்ச்சியே அடைகிறேன். நம்முடைய முகங்களையும், நம்மைச் சூழ்ந்துள்ள முகங்களையும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் முகங்களையும் அறிந்து கொள்வதும், ஆராய்ந்து தெளிவதும், ஆரத் தழுவிக் கொள்வதும், எத்தனை ஆனந்தமான விஷயம்! முகங்கள் எவ்வாறாயினும் அவையே நம்முடைய அடையாளங்கள் அல்லவா?
சிறுகதைகளுக்குப் பெயர் பெற்ற சி.சு.செல்லப்பா என் முதல் கவிதையை வெளியிட்டதையும், கவிதைகளுக்குப் புகழபெற்ற கண்ணதாசன் என் முதல் சிறுகதையை வெளியிட்டதையும் இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இதுவும் இன்னெரு விபத்தோ?
எழுத்துலகில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் விபத்துக்களைத் தவிர்க்க முடிவதில்லை. தவிர்ப்பதற்கான முயற்சிகள் எதையும் நான் மேற்கொண்டதுமில்லை. உண்மையை சொல்வதென்றால் எனக்கு ஏற்பட்ட விபத்துக்கள் என்னை முறித்துவிடவில்லை. மாறாகப் புதிய தரிசனங்களைத் தந்திருக்கின்றன. அவை வாழ்க்கையை மேலும் நேசிக்கத் சொல்கின்றன.
வாழ்க்கையின் மீதுள்ள நேசத்தினால்தான் (இலக்கியத்தின் மீதுள்ள காதலினால் மட்டும் அல்ல) இந்தக் கதைகளை எழுதினேன். என் மீதுள்ள நேசத்தினால்தான் (நேரமின்மையின் காரணமாக மட்டும் அல்ல) சில காலம் எழுதாமலும் இருந்திருக்கிறேன். ஒருவன் எழுதுவதற்கு முயல்வதைப் போலவே எழுதாதிருக்கவும் பயில வேண்டும். அதுவும் எழுத்தையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டவனுக்கு அந்த முதிர்வு வேண்டும். வாழ்வில் ஒரு பருவத்தில் எதையாவது எழுதிவிட வேண்டும் என்ற தவிப்பு ஏற்படுவதைப் போலவே எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்ற நம்பிக்கையும் ஒரு பருவத்தில் ஏற்படும். அந்த நம்பிக்கை வந்தபின் எழுதாமல் இருப்பதே பொறுப்புள்ள செயல்.
நான் எழுதும்போதும்? எழுதாமலிருக்க முடிவு செய்த போதும் ஒரே மாதிரி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியே தருகிறது. லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடையக் கூடிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பில் இருந்திருக்கிறேன். நான் எழுதுவதையெல்லாம் பிரசுரித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு என் வசம் இருந்தது. ஆனால் அதை நான் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. இந்தத் தொகுப்பில் நீங்கள் காணும் கதைகளில் நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்தபோது எழுதப்பட்ட கதைகள் ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அநேகமாக இல்லை என்றேதான் சொல்ல வேண்டும்.
இதைச் சொல்வதற்குக் காரணம், நான் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பொருட்டோ, எனக்கு பிரபலம் தேடிக் கொள்ளும் விருப்பிலோ என்னுடைய கதைகளை எழுதியதில்லை. இந்தக் கதைகளில் பல பத்திரிகைகளின் அழைப்பில் எழுதப்பட்டவை. ஆனால் அவை எதுவும் எந்த நிர்ப்பந்தத்தின் பேரிலும் எழுதப்பட்டவை அல்ல. பெண்கள் படங்களைப் பிரசுரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக, சிறுகதைகளை வாரப் பத்திரிகைகள் பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, நான் அந்த ஊடகங்களில், பெண் பாத்திரங்கள் இல்லாமலே கதைகள் எழுதியிருக்கிறேன். தணிக்கை அமலில் இருந்த அவசர நிலைக் காலத்தில் மனிதப் பாத்திரங்களே இல்லாமல் கூடக் கதைகள் எழுதியிருக்கிறேன். மனிதப் பாத்திரங்கள் இல்லாத கதைகள் என்ற போதிலும் அவை மனிதர்கள் குறித்த கதைகளே!
நான் அரசியல் குறித்தும், சமூகம் குறித்தும், பத்திரிகைகள் குறித்தும், கலாசாரம் குறித்தும், காதல் குறித்தும், கல்யாணங்கள் குறித்தும், ஏன் கடவுள் குறித்து ஏழுதுவதற்கும் கூட மனிதர்களும் அவர்கள் மீது நான் கொண்டுள்ள அன்பும், நம்பிக்கையுமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும், இந்த வாழ்க்கையும் அதன் மீது நான் கொண்டுள்ள காதலுமே காரணமாக இருக்கிறது.
இந்தக் கதைகள் வாழ்வின் மீது எனக்குள்ள காதலை மட்டுமல்ல, என் எழுத்தின் பருவங்களையும் பதிவு செய்கின்றன. நான் எழுதத் துவங்கிய புதிதில், நுட்பங்கள் நிறைந்த நாகலிங்கப்பூவைப் போலத் தோன்றியது வாழ்க்கை. அந்த நுட்பங்களுக்குரிய அழகு, அதற்கேற்ற நடையைத் தேர்ந்து கொண்டன. மகாகவி பாரதியை மீண்டும் மீண்டும் படிக்கத் தலைப்பட்டபோது ஓர் உண்மை பொட்டில் அறைந்தது. எழுத்தில் இரண்டு வகை. பூப்பூவாக எழுதுவது ஒரு ரகம். நாகாசு வேலைகள் இல்லாமல், நறுவிசு செய்யாமல், மட்டைக்கு இரண்டு கீற்று என்று எழுதுவது ஒரு பாணி. மகாகவி இந்த இரண்டாவது பாணியை உணர்வு பூர்வமாகவே, மனம் ஒப்பியே, வித்தியாசங்களை அறிந்தே இந்த இரண்டாவது பாணியைத் தேர்ந்து கொண்டிருந்தது யோசிக்க வைத்தது. மகாகவிக்கு மொழியின் மீதுள்ள காதலும், ஆளுமையும் அவனுள் பொலிந்த கவிமனமும் நாகலிங்கப்பூவைப் போல அழகும் நுட்பமும் மணமும் கவர்ச்சியும் கொண்ட ஒரு நடையை அவனுக்கு அளித்திருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம். ஆனாலும் அவன் அதை உதறித்தள்ளி நான்கு முழ வேட்டியைப்போல நுட்பங்கள் ஏதுமில்லாத ஒரு எளிமையை மேற்கொண்டது என்னை யோசிக்க வைத்தது. இலக்கணங்களை உதறிய புதுக்கவிதைக்கும், அலங்காரங்களை மறுதலித்த உரைநடைக்கும் அடிப்படை ஒன்றேதான். மரபுக் கவிதைகளில் ஆரம்பித்து, புதுக்கவிதைக்கு மாறி வந்த என்னை இந்த உண்மை ஈர்த்தது. வெடிப்புறப் பேசு என்ற மகாகவியின் வார்த்தைகள் மனத்தை வெகுகாலம் மொய்த்துக் கொண்டிருந்தது. அது வாழ்க்கையின் மீது ஓர் இளைஞனுக்குரிய கோபங்களும் விமர்சனங்களும் எழுந்த பருவம். என் நடை மாறியது. இந்த இரண்டு நடைகளையும் நீங்கள் இந்தத் தொகுப்பில் காணலாம். வியப்போடு பார்த்தபோதும் சரி, தகிப்போடு பார்த்தபோதும் சரி எனக்கு வாழ்வின்மீது காதல் இருந்ததைப்போலவே, கேள்விகள் இருந்தன.
என் கதைகள், நம் சமகால வாழ்க்கை நமக்கு வீசிய கேள்விகளைப் பற்றிய ஓர் உரத்த சிந்தனை. ஆனால் அவை உங்களுக்கு எந்த சித்தாந்தத்தையும் சிபாரிசு செய்வதில்லை. இந்தக் கதைகளில் சில உங்களைப் பரவசப்படுத்தலாம். சில துன்புறுத்தலாம். சில சிரிக்க வைக்கலாம். சில ஆத்திரமூட்டலாம். சில புதிய தரிசனங்களைத் தரலாம். சில விமர்சனங்களை எழுப்பலாம். சில உங்களை என் கருத்துக்களோடு உங்களை உடன்பட வைக்கலாம். சில முரண்படச் செய்யலாம். ஆனால் அவற்றின் நோக்கம் அதுவல்ல. உங்களை உங்களது மூளையைக் கொண்டே சிந்திக்க வைப்பதுதான் அவற்றின் நோக்கம். ஒரு படைப்பாளியின் மூளையை விட வாசகனின் முளை எந்த விதத்திலும் குறைவானதல்ல.
உரத்த சிந்தனை என்று நான் சொல்வது ஒரு தற்காப்புக்கு அல்ல. என்னுடைய கதைகளில் நுட்பத்தைவிட ‘சத்தம்’ அதிகம். அது வேண்டுமென்றே தேர்ந்து கொள்ளப் பட்டது. எனக்குப் பூடகமாகச் சொல்வதில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஊசிகள் செய்வதில் ஆர்வம் இல்லை. ஈட்டிகள் செய்யப் பிறந்தவன் நான்.
தமிழ்ச் சிறுகதை உலகில் என் கதைகள் ஒரு சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவை. வெகுஜன எழுத்து ; இலக்கியச் சிற்றேடு என்று எந்த மகாநதியின் கிளைநதியும் அல்ல அது என்பதை நானறிவேன். அது குறித்து எனக்கு கர்வமோ துக்கமோ இல்லை. அதில் வாழ்க்கை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் வரை, அருந்தவும் அழுக்குப் போக்கவும் பயன்படும்வரை அதை நதி என்றே கொள்ளலாம்.
என்னுடைய கதைகள் அவை வெளிவந்த காலத்தில் அவற்றின் வடிவச் சிறப்புக்காக சிலாகிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நான் சிறுகதையை ஒரு கலை வடிவமாக மட்டும் பார்ப்பதில்லை. அவற்றைச் சமூகத்துடன் பேசுவதற்கான ஓர் ஊடகமாக, ஓர் உபாயமாகக் காண்கிறேன். மகாகவியும் கதைகளை அப்படித்தான் பார்த்தான்; பயன்படுத்தினான்.
நான் எழுத வந்தபோது தமிழ்ச் சிறுகதையின் முன் ஒரு சவால் நின்று கொண்டிருந்தது. மிக நீண்ட வாய்மொழி மரபு கொண்டது தமிழ்ச் சமூகம். கதை சொல்லல், வாயமொழி இலக்கியத்தின் வகைகளில் ஒன்றாக இருந்த காலங்களில் கற்பனையும், சுவாரஸ்யமுமே அதன் நோக்கங்களாக இருந்தன. பாத்திரங்கள் சம்பவங்களை இணைக்கும் ஒரு சரடாகவே, கற்பனைகளை விரும்பிய இடத்துக்கு இட்டுச் செல்லும் வாகனமாக இருந்தன. தமிழ்க் கதை, எழுத்து வடிவம் பெற்ற பின்னரும் வெகுஜன இதழ்களில் வெகுகாலம் இந்த மரபு தொடர்ந்தது. ஐரோப்பிய மரபின்மீது காதல் கொண்ட மணிக்கொடிக்காரர்கள் சிறுகதையை ஒரு கலைவடிவமாகப் புதுப்பிக்க முயன்றபோது, பாத்திரங்களை உயிர்பிப்பதில் கவனம் செலுத்தினார்கள். கதையம்சத்தைப் புறந்தள்ளி வடிவத்தைச் செழுமைப்படுத்த முயன்றார்கள். மொழியின் அழகு, சமூக நோக்கு இவற்றைவிடச் செய்நேர்த்தி, தொழில்நுட்பம் முதன்மை பெறத் துவங்கின. நாளடைவில் நல்ல கதை என்பதே நுட்பமான கதை என்பதாக ஆகிவிட்டது.
வாழ்க்கையின் நுட்பங்களையும் சிறுகதையின் நுட்பங்களையும் சமன் செய்து, சிறுகதையை சமகால வாழ்வின் தரிசனமாகப் பதிவு செய்யும் சவால், சிறுகதை எழுதுபவனின் முன், நான் எழுத வந்த காலத்தில் நின்றது. இன்றைய காலக்கட்டத்தில் இந்தச் சவால் கடுமையானது. ஏனெனில் வாழ்க்கை, மொழி இரண்டுமே சிக்கலானதாக, ஒன்றுள் ஒன்று புதைந்த பல அடுக்குகள் கொண்டதாக ஆகிவிட்டன. என்னுடன் எழுத வந்த என் சமகாலத்தவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் நம்பிக்கை, அனுபவம் இவற்றின் அடிப்படையில் எதிர்கொள்ள முற்பட்டார்கள். பாலகுமாரன் கதையம்சத்தில் கவனம் செலுத்தி, வாழ்க்கையைவிடக் கதையை சுவாரஸ்யமாக்க முயன்றால். கதையை நேசிக்கச் செய்வதன் மூலம் வாசகனை வாழ்க்கையை நேசிக்கச் செய்ய முடியும் என்று அவர் நம்பியிருக்கக்கூடும். பாலாவின் பாத்திரங்களில் ரொமாண்டிக் ஹீரோக்கள் உண்டு. பிரபஞ்சனும் வண்ணதாசனும் சமூகத்தைச் சார்ந்து தங்கள் கதைகளை முன் வைப்பதைவிட மனிதர்களைச் சார்ந்து தங்கள் கதைகளைச் செய்தார்கள். வாழ்க்கையின் சிடுக்குகளை அவை பதிவு செய்தன. ஆனால் அவர்களது கதை மனிதர்கள், எளிமையானவர்கள், கபடமற்றவர்கள். அவர்கள்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கையைக் கேள்வி கேட்காமல் வாழ்ந்து தீர்க்கச் சம்மதித்தவர்கள். அவர்கள் கதைகளில் கலகக்காரர்களைச் சந்திப்பது அபூர்வம். ஆதவன், அமைப்பின்மீது விமர்சனங்களை வைத்தார். ஆனால் அவற்றில் எள்ளல் தொனிக்கும். அவருக்கு நகர்ப்புற நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள் மீது ஆசை.
நேரடியாகவே கேள்விகள் எழுப்புவதையே நோக்கமாகக் கொண்டவை என் கதைகள். என்னுடைய கதைகளில் நீங்கள் பாலாவின் ரொமாண்டிஸத்தையோ, வண்ணதாசனின் மினியேச்சர் சித்திரங்களையோ, ஆதவனின் எள்ளலையோ சந்திக்க முடியாது. (இதில் உள்ள ஒரு கதை ’வழியில் சில போதை மரங்கள்’, பாலகுமாரன் எழுதிய கதையின் பாத்திரங்களையும் சம்பவங்களையும் கொண்டே அவற்றின் மறு பக்கத்தைக் காட்டும் நோக்கத்தோடு எழுதப்பட்டது) என் கதைகளில் என் கோபத்தைச் சந்திக்கலாம். கோபத்தில் ஒலிக்கும் என் குரல் உயர்ந்தே ஒலிக்கிறது. என்னுடைய கோபம் குறித்து எனக்கு என்றைக்கும் நாணம் கிடையாது.
நாங்கள் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு விதங்களில் எழுதியிருந்தாலும், எங்களுடைய தலைமுறை குறித்து எனக்குப் பெருமிதம் உண்டு. மரபும் நவீனத்துவமும் ஒருங்கிணைந்த எழுத்து எங்கள் தலைமுறையுடையது. தமிழ்க் கதையின் மரபு என்ன, கதை சொல்லலின் நோக்கம் என்ன என்பனவற்றை நினைவூட்டும் அதே தருணம், கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியங்களையும் அது முன் வைத்தது. வாழ்க்கையைக் கதையாகப் பார்க்காமல், கதையை வெறும் கற்பனை நீட்சியாக ஆக்கிவிடாமல் கதைகள் மூலம் வாழ்க்கை பற்றிய ஒரு தரிசனத்தை அது முன் வைத்திருக்கிறது. பேச்சு வழக்கை கொச்சை என்று நிராகரித்துவிடும் பண்டித மனோபாவமோ, மொழியின் எழுத்து வடிவத்தை நுண்மையாக்க விரும்பிச் சிக்கலாக்கும் புதுமை மோகமோ இல்லாத சமன்நோக்கு எங்களுடையது.
நான் எங்கள் மொழியையும், இலக்கியத்தையும் என்னுடைய முன்னோர்களிட-மிருந்தே பெற்றேன். எனக்குப் பின் வருபவர்களுக்காகவே எழுதுகிறேன். இலக்கியம் என்பது ஏதோ பொழுது போக்குவதற்குப் படிப்பதும் அல்ல. அது சிந்தனை சார்ந்தது. மொழிக்கும் சிந்தனைக்கும் ஒரு பாரம்பரியத்தொடர்ச்சி உண்டு என்தாலேயே, இலக்கியத்தில் முன்னோடிகளும் வாரிசுகளும் உண்டு.
எனக்கு வாரசுகளே இல்லை என்பவர்கள், வரலாற்றை விளங்கிக் கொள்ளும் ஞானக்கண் அற்றவர்கள்.
என்னை எவரும் பின் தொடர இயலாது என்பவர்கள், எதிர்காலத்தைக் கண்டுணரும் தீர்க்கதரிசனம் அற்றவர்கள்.
முன்னோடிகளோடு முரண்படலாம். ஆனால் அவர்களை அலட்சியப்படுத்த முடியாது. வாரிசுகளை அங்கீகரிக்க மறுக்கலாம். ஆனால் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது.
நாம் எத்தனை முரண்பட்டாலும் நமக்கு முன்னே செல்பவர்களை நினைவு கொண்டு வணங்குவதும், நமக்குப் பின்னே வருபவர்களை அடையாளம் கண்டு நம்பிக்கை கொள்வதும், எந்த ஒரு எழுத்தாளனுக்கும் உரிய இலக்கியக் கடமை.
முன்னோடிகள் மீது மரியாதை கொள்வதும், பின்னால் வருபவர்கள் மீது நம்பிக்கை வைப்பதும் ஒரு நயத்தக்க நாகரிகம்.
நாம் எவ்வளவு உன்னதமானவர்களாக இருந்தபோதிலும், தன்னோடு இலக்கியம் முடிந்துடாது என்று மெய் உணர்ந்தவர்கள் எல்லாம் இதைக் கடைப்பிடிக்கவே செய்தனர்.
‘இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகின்ற வரகவிகளுக்கு’ என்று பாரதி தனது பாஞ்சாலி சபதத்தை அர்ப்பணித்தது இதனால்தான்.
எங்களிடம் கொடுக்கப்பட்டதைச் செழுமைப்படுத்தி அடுத்த தலைமுறையிடம் கொடுத்தோம் என்கிற மன நிறைவு உண்டு. புதிதாக எழுத வருபவனுக்கு வாழ்க்கையும் மொழியும் விதிக்கிற சிக்கல்களை எதிர்கொள்ள நாங்கள் கண்டெடுத்த திறவுகோல்களை, எங்கள் கதைகள் அவர்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கையோடும், மனநிறைவோடும் என்னுடைய சிறுகதைகளை இளைய தலைமுறையிடம் ஒப்படைக்கிறேன். தமிழையும், தமிழரது சிந்தனைகளையும் எழுத்தையும், செம்மையும் புதுமையும் செய்ய அவர்களுக்கு அவை ஒரு துரும்பளவேனும் இது பயன்தருமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.