நாடாளுமன்றம் கூடட்டும்
யுக யுகமாய் உறங்கிக் கிடந்த எரிமலை ஒன்று சினந்து சீறுகிறது இன்று. தண்ணீர் பீரங்கிகளும், தடியடிகளும் அக்னிக் குஞ்சுகளை அவித்துவிடத் தவிக்கின்றன. என்றாலும்,ஏழு முறை தடியடியை எதிர்கொண்டும் எழுந்து ஓட மறுக்கிறது கூட்டம். ஆகா! ஒரு தலைமுறை ரெளத்திரம் பழகுகிறது! என்றென்றும் இருக்கட்டும் இந்த அறச் சீற்றம்.
தில்லியிலும் சென்னையிலும், நாட்டின் முக்கிய நகரங்கள் தோறும் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தும் சினம் கொண்டு பெண்கள், -அவர்களில் பெரும்பாலோர் இளம் தலைமுறையினர்- வீதிகளில் இறங்கி உறங்கிக் கிடக்கும் அரசாங்கத்தை உலுப்பி எழுப்புகிறார்கள். உள்ளே ஆத்திரம் உறுமிக் கொண்டிருக்கும் தருணத்திலும் அவர்கள் அமைதி இழந்து வன்முறையைக் கையில் எடுத்துவிடவில்லை. அவர்கள் செயல்களில் நிதானம் இருக்கிறது. அவர்கள் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை தாருங்கள், அந்த வழக்குகளை ஆறப் போட்டு விசாரித்து இறுதியில் அல்ப தண்டனை கொடுத்து மூடிவிடாதீர்கள் என்பதுதான் அவர்களின் வேண்டுகோள் சுருக்கமாகச் சொன்னால் காமத்தைத் தணித்துக் கொள்ளும் கருவிகளாக எங்களைப் பார்க்காமல், மானமும் ரோஷமும் கொண்ட மனுஷிகளாகப் பாருங்கள் என்பதுதான் அந்தப் பெண்களின் கோரிக்கை.
இந்த ஓர் எளிய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள ஏன் தேசம் தயங்க வேண்டும்? நாடாளுமன்றம் உடனடியாகக் கூடி பெண்களுக்குப் “பாடம் கற்பிக்க” பாலியல் வன்முறைகளில் இறங்கும் விலங்குகளுக்குத் மரண தண்டனை எனச் சட்டம் இயற்றட்டும். மன்றாடிக் கேட்கிறோம், இந்த மரண தண்டனையை மனித உரிமை ஆர்வலர்கள் மறித்து நிற்க வேண்டாம். மனித உரிமை நியாயங்கள் மனிதருக்குத்தான் பொருந்தும். இவர்கள் சதையைக் குறி வைக்கும் வெறி கொண்ட மிருகங்கள். மதம் கொண்ட யானைக்கு முன் மந்திரம் ஓதிக் கொண்டிருப்பது மதி கொண்ட மனிதர் செய்யும் செயலல்ல.வெறி கொண்ட நாய்களைச் சுட்டுக் கொல்வது தவறல்ல, அது தற்காப்பு
வெறும் சட்டம் மாத்திரமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட முடியாது. அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்புக் கொண்டவர்கள், தங்கள் வீட்டுப் பெண்களுக்கு இப்படி ஒரு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் எப்படித் துடிப்புடன் செயல்படுவார்களோ அந்த உணர்வோடு இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். நம்முடைய திரைப்படங்கள் பெண்களை ஓர் போகப் பொருளாகவும், தொலைக்காட்சித் தொடர்கள், அடி வாங்கவே பிறந்த அற்பஜீவிகளாகவுமே காலங்காலமாகச் சித்தரித்து வருகின்றன. டி.ஆர்.மகாலிங்கத்தில் துவங்கி ஆர்யா ஜீவா வரை சினிமாவில் பெண்களை கேலி பேசிச் சீண்டிப் பாடத ஹீரோக்களே கிடையாது. இந்த வக்கிரங்களை இல்லத்தில் எல்லோரோடும் சேர்ந்து உட்கார்ந்து பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறோம். முழுக்க முழுக்கப் பாலுணர்வு கொண்ட குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆட நம் குழந்தைகளைப் பயிற்றுவித்து அதை அரங்கமேற்றிப் பெருமையும் பேசுகிறோம். வக்ரங்களோடு வளரும் குழந்தைகள் வாலிப வயதில் எப்படி அத்து மீறாமல் நடந்து கொள்ளும்? வீட்டுக்குள் விபரீதங்களை விதைபோட்டு வளர்த்து விட்டு வீதியில் எப்படிப் பெண்களை பாதுகாக்க முடியும்?
இந்தப் புத்தாண்டிலாவது அந்த விஷக் கனிகளுக்கு விடை கொடுப்போம்