அப்பா, அவசரம், ஆயிரம் ரூபாய் அனுப்பி வையுங்கள் என்று மகன் செய்தி அனுப்பினான்.இரண்டு வாரத்திற்கு முன் இரண்டாயிரம் ரூபாய் அனுப்பினேனே அதை என்ன செய்தாய்? அதற்குக் கணக்கு அனுப்பு. பார்த்துவிட்டுப் பணம் அனுப்புகிறேன் என்று பதிலனுப்பினார் தந்தை. மகன் எழுதினான் “ அப்பா! உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் கணக்குக்கு அவசியமில்லை. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் கணக்கை அனுப்புவதில் பிரயோசனமில்லை. ஏனெனில் என்னை நம்பாத நீங்கள் என் கணக்கை எப்படி நம்புவீர்கள்?”
தந்தை இப்படி பதிலனுப்பினார்: “நம்பிக்கை என்பது திணிக்கப்படுவதல்ல”
நம்பிக்கை என்பது அதிகாரத்தினால், கட்டாயத்தினால் திணிக்கப்படுவது அல்ல. அது உள்ளிருந்து மலர்வது. நம்முடைய சொல், நம்முடைய செயல், சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய முரண்பாடு இல்லாமல் இருப்பது இவைதான் நம்மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்பத்தில் மட்டுமல்ல, அலுவலகத்தில், நண்பர்களிடத்தில், வியாபாரத்தில், தொழிலில், ஏன் எல்லா இடங்களிலும்தான். .முக்கியமாகப் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற இது ஒன்றுதான் வழி.
ஆனால் அண்மையில், முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படிருப்பது அவர் மீதும் நீதி அமைப்பின் மீதும் ஏன் அரசின் மீதுமுள்ள நம்பிக்கையை அசைத்துப் பார்க்கிறது.
நீதித்துறையில் பெரும் பொறுப்பில் இருந்தவர்கள் பணி ஓய்வுக்குப் பின் பெரிய பதவிகளில் நியமிக்கப்படுவது புதிது அல்ல.
முகமது கரீம் சாக்ளா பம்பாய் உயர் நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. ஜின்னாவின் ஜூனியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அவரது பிரிவினை வாதத்தை ஏற்காததால் அவரிடமிருந்து விலகி முஸ்லீம் நேஷனலிஸ்ட் பார்ட்டி என்ற கட்சியை ஆரம்பித்தார். போணியாகவில்லை. என்பதால் அரசியலை விட்டு தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். விடுதலைக்குப் பின் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். பணிக்காலம் முடிந்ததும் அமெரிக்காவிற்கு தூதராக அனுப்பபட்டார். பின் இங்கிலாந்திற்கு தூதராகப் போனார். நேரு அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் பின் அயலுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
சாக்ளாவிற்கு 15 ஆண்டுகள் இளையவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். அவர் பெயரில் உள்ள வி குறிக்கும் வைத்தியநாதபுரம் பாலக்காட்டிற்கு அருகில் உள்ளது. பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின் கேரளத்தில் நம்பூதிரிபாத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்..1965ல் சட்டமன்றத்திற்கு சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோற்றுப் போனார். 1968ல் கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1973ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.1962 தேர்தலிலும் பின் 1971 தேர்தலிலும் திமுக வேட்பாளராக சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவின் மாவட்டச் செயலாளராகக் கட்சிப் பணி ஆற்றியவர். 1974ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். பின்னர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஆறாண்டுகள் அங்கு பணியாற்றினார்.
அரசியல்வாதிகளாகத் தொடங்கி நீதிபதிகளாக உயர்ந்தவர்களில் இவர்கள் சிலர். உயர்நீதிமன்ற அளவில் எடுத்துக் கொண்டால் இன்னும் நிறைய உதாரணங்கள் கிடைக்கும். தொடக்கத்தில் திமுக உறுப்பினராக இருந்த கோகுல கிருஷ்ணன் குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், அதிமுக உறுப்பினராக இருந்த கற்பக விநாயகம் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்ரு, ஹரிபரந்தாமன் போன்றோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கடசியின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்கள்தான். அரசியலில் இருந்து நீதித்துறைக்குப் போவது என்பது சர்வ சாதாரண நிகழ்வு
ஆனால் நீதித்துறையிலிருந்து அரசியலில் இறங்குவது அண்மைக்காலம் வரை அபூர்வமாகத்தானிருந்தது. அதிலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்கள் அப்படிக் களம் இறங்குவது மிகக் குறைவு. எல்லாத் திரிபுகளையும் ஆரம்பித்து வைத்த காங்கிரஸ்தான் இதையும் தொடங்கி வைத்தது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஹருல் இஸ்லாம் 1962, 1968 ஆகிய ஆண்டுகள், இருமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அவர் மாநிலங்கள் அவை உறுப்பினராக இருக்கும் போதே அவர் 1972ஆம் ஆண்டு கெளஹாத்தி உயர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின் 1980ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1983ல் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களவைக்குப் போட்டியிட்டார். அசாமில் அப்போது தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன. பின் 1984ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991ல் இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ரங்கநாத் மிஸ்ரா 1998ல் காங்கிரசில் சேர்ந்தார். மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் பணி ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குள்ளாகவே, நியமனமுறையில் ஒரு முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாநிலங்களவைக்குச் செல்வது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். ஒருவகையில் பார்க்கப் போனால் எம்.பி.பதவி என்பது அவருக்கு ‘பதவி இறக்கம்’தான். முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கவர்னராக நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக இல்லாமல், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக இருந்த பாத்திமா பீவி கூட கவர்னராக ஆனார். இன்னொரு அரசியல் சாசனப் பதவியான தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த எம்.எஸ்.கில் மத்தியில் அமைச்சராக ஆனார். அவற்றோடெல்லாம் ஒப்பிடும் போது, ஜனாதிபதிக்கே பதவிப் பிராமணம் செய்யும் பதிவியில் இருந்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக ஆவது என்பது உயர்வு அல்ல.
ரஞ்சன் கோகாயைப் பொருத்தவரை அவர் தனது பதவிக்காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டவர். உச்சநீதி மன்ற வரலாற்றில் இல்லாத வகையில் நான்கு நீதிபதிகள் , நீதிபதி செல்லமேஸ்வர் வீட்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தி அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல புகார்களைச் சொன்னார்கள். அவற்றில் சில ‘வேண்டப்பட்ட வழக்குகளை சில குறிப்பிட்ட நீதிபதிகளிடம் மட்டும் அனுப்புகிறார்’ ‘முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஜூனியர் நீதிபதிகளிடம் அனுப்புகிறார்’ என்பன. ‘புரட்சி’ செய்த அந்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர்.. ஆனால் அவர் தலைமை நீதிபதியானதும் முன்பிருந்த அதே நடைமுறையைத்தான் பின்பற்றினார். மோதி அரசின் மீது களங்கம் கற்பிப்பதற்கான கற்பனைகளை அந்தச் செய்தியாளர் சந்திப்பு அளித்தது என்பதைத் தவிரப் பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை.
உச்சநீதி மன்ற வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு தலைமை நீதிபதி பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானதும் இவர் காலத்தில்தான். அதை விட விசித்திரம் தன் மீது கூறப்பட்ட வழக்கைத் தானே விசாரிப்பேன் என்றது.
பதவி விலகும் முன் ரஞ்சன் கோகாய் அளித்த இரு தீர்ப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை .அவை அயோத்தி ராமர் கோயில் தீர்ர்பு; ராபேல் வழக்கின் தீர்ப்பு . இப்போது அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருப்பதையொட்டி எதிர்கட்சிகள் இந்தத் தீர்ப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். நீதித்துறை மீதான எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப்படும். மக்களிடம் அமைப்பின் மீது அவநம்பிக்கை விதைக்கப்படும். இதெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்
இந்தியாவின் தலைமை நீதிபதி என்பது மிக உயர்ந்த பதவி. அரசமைப்புச் சட்டத்தைக் காப்பது, உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்குமான நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றைத் தீர்மானிக்கும் கொலீஜியத்தை வழி நடத்துவது, நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே மாற்றும் விதத்தில் சட்டம் இயற்றினால் அவற்றைச் செல்லாதாக்குவது போன்ற பொறுபுக்கள் அவரிடம் உள்ளன. அந்தப் பதவி வகித்தவர்கள், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு அரசியலில் பங்கேற்கக்கூடாது என்றொரு நடைமுறை வகுக்கப்பட வேண்டும். மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ள அது போன்ற நடைமுறை மிக அவசியம்
.1.4.2020