தோழி -19

maalan_tamil_writer

கையால் அச்சிடப்பட்ட கறுப்பு மலர்களை அள்ளித் தெளித்தது போன்ற உடலும், கோபுர பார்டரும் கொண்ட கதர்ப் புடவை அணிந்து விழாவிற்கு வந்திருந்தார் பிரதமர். சேலையில் ஒரு ஜரிகை இழை கிடையாது. கழுத்தில் ருத்திராட்சம் போன்ற கருப்பு மணிகள் கொண்டதொரு சிறிய மாலை. கையிலோ, காதிலோ, கழுத்திலோ பொட்டுத் தங்கம் இல்லை. ஆனாலும் உயர்த்தி வாரிய கருங்கூந்தலுக்கு இடையே நதி போல் நெளிந்தோடிய நரையும், கூர்த்த மூக்கும், ஈரம் பொலியும் கண்களுமாக வசீகரமாகத்தான் இருந்தார்.

முதல்வரை கரம் கூப்பி வணங்கினார். வித்யாவின் கையைப் பற்றிக் கொண்டு புன்னகைத்தார். மைதானத்தில்  குழுமியிருந்த பெருங்கூட்டம் அதைக் கண்டு ஆராவரம் செய்தது. கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார். ஆனால் அவர் பேச்சு கூட்டத்திடம் அவ்வளவாக எடுபடவில்லை. அதிகாரிகள் யாரோ உரையைத் தயாரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அன்னம் பஹூ குர்வீத என்ற தைத்ரிய உபநிஷத்தின் மேற்கோளில் தொடங்கி மணிமேகலையைத் தொட்டு பாரதியின் தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் வரை சொல்லி அன்னதானம் நம் கலாசாரத்தில் எத்தனை உன்னதமாகக் கருதப்படுகிறது என்று விவரித்தார். அறிவார்ந்த பேச்சுத்தான். ஆனால் எடுபடவில்லை.

வித்யா சொன்ன கருத்தும் பெரிதாக மக்களை ஈர்த்ததாகத் தெரியவில்லை. ஆனால் அது பிரதமரைக் கவர்ந்தது.. “நிஜமான விடுதலை என்பது வறுமையிலிருந்து விடுபடுவதுதான். நிஜமான விடுதலைக்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று தன்னம்பிக்கை மற்றொன்று கல்வி. இரண்டையும் ஒரு சேர மக்களுக்குத் தருவதுதான் இந்தத் திட்டம். நாளைக்கு உணவு இருக்கிறது என்றால் தன்னம்பிக்கை தானே வரும். உணவுப் பாதுகாப்பு என்பது மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் செயல். நாங்கள் மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கவில்லை. அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம்” என்று எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முழங்கிய வித்யா, பிரதமர் பக்கம் திரும்பி,  “We are empowering people by ensuring their food security” என்று முறுவலித்தார். வித்யாவின் பேச்சைக் கேட்ட பிரதமரின் புருவங்கள் உயர்ந்தன. பிரதமருக்குப் பின் அமர்ந்து வித்யாவின் பேச்சை மொழிபெயர்த்து அவர் காதருகில் மெல்லிய குரலில் சொல்லி வந்த ஸ்ரீரஞ்சனியைப் பார்ர்த்துப் புன்னகைத்தார்.

அறிவார்ந்த பேச்சுக்கள் ஏற்படுத்தாத தாக்கத்தைப் பெரியவரின் பேச்சு ஏற்படுத்தியது. அவர் பேச்சைக் கேட்டுப் பெண்கள் சிலர் வாய்விட்டு விசும்பினர்கள். சிலர் மெளனமாகக் கண்ணீர் விட்டனர்.

“அப்போது எனக்குப் 12, 13 வயது இருக்கும்.நாடகக் கம்பெனில நடிச்சிட்டிருந்தேன். அப்பல்லாம் நாடகத்தில பாட்டும் உண்டு. நடிக்கறவங்கதான் பாடவும் செய்யணும். எனக்குக் குரல் உடையற வயசு. மகரக் கட்டுனு சொல்வாங்க. அதனால வேஷம் கொடுக்கல. எங்களுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்க வாத்தியார்கள் உண்டு. அவங்களுக்குள்ள ரெண்டு கோஷ்டி. ஒருத்தருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே இன்னொருத்தருக்கு என்னைப் பிடிக்காது.

ஒரு நா மதியச் சாப்பாட்டிற்குப் பந்தி போட்டாங்க. எனக்கு. வளர்ற வயசா, நல்ல பசி. முதல்ல போய் உட்கார்ந்திட்டேன். இலையப் போட்டாங்க. இலைனா வாழை இலை இல்ல. தையல் இலை. காய்ஞ்ச மந்தார இலையை தென்னங்குச்சி வைச்சு தெச்சிருப்பாங்க..பொரியல் வைச்சாங்க. சூடா இலையில சோறு விழுந்துச்சு. பின்னாலேயே பித்தளை வாளிலே சாம்பார் எடுத்துக்கிட்டு வர்றாங்க. சோத்தில கை வைக்கப் போறேன். என்னைப் பிடிக்காத வாத்தியார் என்னைப் பார்த்துட்டார். விறு விறுனு வந்தார். “எந்திர்றா!” என்றார். நான் திகைச்சுப் போய் பார்க்கறேன். “எந்திர்றாங்கிறேன்” அவர் குரல் உசந்தது.. சொல்லிக்கிட்டே அவர் படக்னு என் கையைப் பிடிச்சு இழுக்கிறார்.” வேஷம் கட்டாதவனுக்குச் சோறு கேட்குதோ?” என்று கத்துகிறார். அத்தனை பேரும் சாப்பிடறதை நிறுத்தி என்னையே பார்க்கிறாங்க.

அவர் அதிகாரத்திற்கு முன்னால ஏழை நான் என்ன செய்ய முடியும்?  எழுந்துட்டேன். என்னையறியாமல் கண்ணீர் பெருகிறது. நான் ஏன் அழுதேன், தெரியுமா? சொல்லுங்க!” ஒரு இடைவெளி கொடுத்து நிறுத்தினார் தலைவர். கூட்டத்தில் கனத்த அமைதி. மொத்தக் கூட்டமும் அவர் முகம் பார்க்கிறது.

“பசிக்குதுனா அழுதேன்? இல்லை. அத்தனை பேர் முன்னால அவமானப் படுத்தப்பட்டேன்ல, அதை நினைச்சு அழுதேன். ஏழையா பொறந்ததை நினைச்சு அழுதேன். நான் ஏன் பிறந்தேனு நினைச்சேன். ஏழைனா பசிக்காதா? ஏழையின் பசிக்குப் பரிசு அவமானம்தானா?. எனக்கு அம்மா இருந்தா சோறு போட்டிருப்பாங்கள்ல? சொல்லுங்கம்மா, போட்டிருப்பாங்கள்ல? நீங்க அம்மாவா இருந்தா வீட்டில வளர்ற பிள்ளைக்கு பசிக்குச் சோறு போட்டிருப்பீங்கள்ல? சொல்லுங்க”

கூட்டத்தில் சில பெண்கள் கண்ணீர் பெருக விசும்புகிறார்கள். முந்தானையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டு விம்முகிறார்கள்.

“அன்னிக்கு நினைச்சேன். நான் என்னிக்கும் யார் சோத்தையும் பறிக்க மாட்டேன். ஏழைங்கிறதுக்காக அவமானப்படுத்த மாட்டேன். என்னிக்காவது  எனக்கு அதிகாரம் வந்தா நான் சோறு போடுவேன். ஏழைகளுக்குச் சோறு போடுவேன். ஏன்னா, எனக்கு ஏழைகளின் பசி தெரியும். அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு நடக்குது.!’

கூட்டத்தில் ஒருவர் எழுந்து கைகளைத் தலைக்கு மேல் தூக்கி பெரிய கும்பிடாகப் போட்டு, தலைவா! என்று உணர்ர்சி மேலிடக் கூவினார். ஓர் உணர்ச்சி அலை கூட்டத்தைக் கடந்து போயிற்று.

*

“ஏய்! நீ இங்க எங்க, எப்படி?”

வித்யாவின் வீட்டிற்கு விருந்து சாப்பிட வந்திருந்த ஸ்ரீரஞ்சனி, சாப்பாட்டு மேசையில் அவியல் பாத்திரத்தைக் கொண்டு வந்து வைத்த சித்ராவைப் பார்த்து ஆச்சரியத்தில் கூவினாள். சித்ராவின் முகம் இறுகியது. “வீடியோவை விட்டுட்டியா? இப்ப சமையல்ல இறங்கிட்டியா?’” என்று கேள்விகளை அடுக்கினாள் ரஞ்சனி. பதிலே சொல்லாமல் அவசரமாக அடுக்களைக்குத் திரும்பினாள். அவள் கண்கள் சாமிநாதன் அருகில் இருக்கிறானா எனத் தேடின.

கேள்விகளையும் மெளனத்தையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

“அவளை உனக்குத் தெரியுமா?”

“தெரியுமாவா?’” கடகடவென்று சிரித்தாள் ரஞ்சனி. “அவளையே கேளு!”

“சொல்லு!”

திருநெல்வேலியில் கலக்டராக இருந்த போது தான் அவளுக்குக் கொடுத்த அசைண்ட்மெண்ட் கொடுத்தது குறித்துச் சொன்னாள்

“நீ யாரையோ போட்டுக் குழப்பிக்கிட்டு இருக்க. அவளுக்குத் தஞ்சாவூர். திருநெல்வேலி இல்லை”

“அப்படியா, அவளையே கூப்பிட்டுக் கேளேன்!”

“சித்ரா!” வித்யா அடுக்களையைப் பார்த்து அழைத்தாள்

“சித்ராவா? அவள் பேர் பெரியநாயகி இல்லை?”

“அது எப்படி உனக்குத் தெரியும்1”

“அவளைக் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என்னைக் கேட்டிட்டு இருக்க?”

“சித்ரா!” என்றாள் வித்யா மறுபடி

” இரு இரு. சாப்பிட்டுக்கிறேன். முதல்ல ஊணு. அப்புறம் அரட்டை.” என்று சிரித்தவள்,  “பசிக்குது வித்யா!. மலையாளச் சாப்பாடுனு சொன்னியா, நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்திருக்கேன்” என்றாள் பப்படத்தை நொறுக்கிக் கொண்டு.

சொன்னாளே தவிர சாப்பாடோடு வம்பையும் அசை போட்டுக் கொண்டேதான் சாப்பிட்டாள்

“ நீ நல்லாத்தான் பேசின. ஆனால் பெரியவர் அசத்திட்டார். ஹி ஸ்டோல் தி ஷோ!”

“எனக்கும் தெரியும். அதனால் என்ன? எனக்கும் அவருக்கும் போட்டியா?”

“அப்டீனு நீ நினைக்கிற. ஆனால் அவரும் அப்படி நினைக்கணுமே!”

“அப்டீனா?”

“ம். அப்படித்தான்” என்றாள் ஸ்ரீரஞ்சனி அழுத்தமாக.

குழப்பத்தோடு அவளையே உறுத்துப் பார்த்தாள் வித்யா. ரஞ்சனி கடகடவென்று எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள். திருநெல்வேலி மாநாட்டிற்கு வித்யா பேச வரும் முன் பெரியவர் போனில் அழைத்து வீடியோ எடுக்கச் சொன்னது, அது யாருக்கும் -குறிப்பாக வித்யாவிற்கு- தெரிய வேண்டாம் என்று வற்புறுத்தியது, அவள் பெரியநாயகியை அந்தப் பணியில் அமர்த்தியது எல்லாம் சொல்லி முடித்தாள்.

அன்று வந்த முக்கிய கடிதங்களை எடுத்துக் கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான் சாமிநாதன். ஸ்ரீரஞ்சனியைப் பார்த்ததும் திடுக்கிட்டான். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

“நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் இவரைக் கேள்” என்றாள் வித்யா

“இவரையும் உனக்குத் தெரியுமா?”

ரஞ்சனி நேரிடையாக பதில் சொல்லவில்லை.ஆனால் “ என்ன மிஸ்டர் சாமி, எப்படி இருக்கீங்க? இப்போ வித்யா கிட்டேயா இருக்கீங்க?” என்றாள்.

“நல்லா இருக்கேன் மேடம். நீங்க எப்படி இருக்கிங்க? இப்போ தில்லியிலா இருக்கீங்க?”

“ம்.பி.எம்.ஓ”

“இவங்க எங்க கலக்டர்” என்றான் சாமிநாதன் வித்யாவிடம்

“சாமி, உங்களை ஒண்ணு கேட்கலாமா? அரசாங்க வேலையை விட்டு ஏன் இவங்க கிட்ட வந்தீங்க?”

சாமிநாதன் மழுப்பலாக சிரித்தான்

“ம். புரியுது. அரசாங்கத்தில் ஆயிரம் பாஸ்கள். எல்லோருக்கும் பதில் சொல்லி முடிப்பதிலேயே பாதி ஜீவன் போயிடும். இல்ல?. இங்கே என்றால் இரண்டே பாஸ்தான். செளகர்யம்தான் இல்லை?” ரஞ்சனி தன்னுடைய ஜோக்கிற்குத் தானே சிரித்தாள்

“இரண்டு பாஸா?” வித்யாவின் குரலில் குழப்பம் எட்டிப் பார்த்தது

ரஞ்சனி தொடர்ந்து பேசிக் கொண்டு போனாள்.”சாமி, வித்யா எப்படிப்பட்ட பாஸ்? ரொம்ப டஃப்பா? ஏராளமாக சுதந்திரம் கொடுக்கிறாள் என்று தெரிகிறது. இல்லை என்றால் அயலாள் வந்து பேசிக் கொண்டிருக்கும் போது இவ்வளவு ஸ்வாதீனமாக நீங்கள் அறைக்குள் நுழைவீர்களா?.நான் கூட வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து சேர்ந்து விடலாமா என்று நினைக்கிறேன். ஹா! ஹா! என்ன, அவள் என்னை லேசில் நம்ப மாட்டாள். திருநெல்வேலிக் கூட்டத்தில் உங்கள் மனைவி பெரியநாயகியை வீடியோ எடுக்க நான்தான் அமர்த்திக் கொடுத்தேன் என்கிறேன். அவள் நம்ப மாட்டேன் என்கிறாள்.”

மனைவியா? பெரியநாயகி சாமிநாதன் மனைவியா?

திகைப்பும் குழப்பமும் வித்யாவை ஆட்கொண்டன. ரஞ்சனியிடம் தன் சந்தேகத்தை வாய் விட்டே கேட்டுவிட்டாள்.

“போச்சுடா! இது கூடத் தெரியாதா உனக்கு!” என்றாள் ரஞ்சனி

இருவரையும் ஒரு சேர அழைத்து விசாரிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன் ரஞ்சனியை இங்கிருந்து கிளப்ப வேண்டும்

ரஞ்சனி புறப்படும் முன் வித்யாவைத் தனியே அழைத்துச் சொன்னாள்” “எனக்கு இப்போது நிச்சயமாகத் தெரிகிறது வித்யா. பெரியவர் உன்னைப் போட்டியாகத்தான் நினைக்கிறார். அல்லது உன்னைப் பார்த்து பயப்ப்டுகிறார். அது அவர் சுபாவம். வாழ்க்கை அவருக்குச் சொல்லி வைத்திருக்கும் பாடம். அருட்செல்வனுடன் அவருக்கு எவ்வளவு கால நட்பு!. நாற்பது வருஷம் என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரே தட்டிலிருந்து எடுத்து சாப்பிட்டார்கள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நட்பு ஒரே நாளில் விஷமானது. அவர் ஒரே நாளில் எதிரியானார். அதிலிருந்து பெரியவர் யாரையும் நம்புவதில்லை.தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் கண்காணிக்க ஒரு ஆள். அந்த ஆளைக் கண்காணிக்க இன்னொருவர். ஆனால் ஒருவருக்கும் தான் கண்காணிக்கப்படுகிறோம் என்று தெரியாது. அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுவார். நம்பிக்கையை உருவாக்கிவிடுவார். நடிகர்ல? அவர் அனுப்பித்தான் இரண்டு பேரும் இங்கு வந்தார்கள் என்று சொல்கிறாய். ஆனால் அவர்களைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. அவர்களாகவும் சொல்லவில்லை என்கிறாய். ஏன் சொல்லவில்லை? அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்ல முடியும். உன்னுடைய ஒவ்வொரு அசைவும் பெரியவருக்குத் தெரிந்திருக்கும், இவர்கள் மூலம்”

தொலைவில் நின்று கொண்டிருந்த சாமிநாதனுக்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை. ஆனால் தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதை ரஞ்சனி தன்னை நோக்கிக் கையைக் காட்டுவதிலிருந்து ஊகிக்க முடிந்தது.

படியிறங்கிக் காரில் ஏறும் போது ரஞ்சனி போய் வருகிறேன் என்று சொல்லவில்லை. மீண்டும் சந்திப்போம் என்று சொல்லவில்லை. தொடர்பில் இரு என்று சொல்லவில்லை. அவள் சொன்னாள்:”

“ஜாக்கிரதையாக இருந்துக்கோ!”

அந்த வார்த்தைகள் வித்யாவின் பின் நின்ற சாமிநாதனுக்கும் கேட்டது. வராந்தா மறைவில் நின்று கொண்டிருந்த சித்ரா காதிலும் விழுந்தது.

கதவை சாத்திவிட்டு வந்து விசாரணையை ஆரம்பித்தாள் வித்யா

“நீ என்னைத் திருநெல்வேலியில் படம் எடுத்தியா?”

மெளனமாக நின்றாள் சித்ரா

“சொல்லு!” அதட்டினாள் வித்யா.

“அவங்கதான் எடுக்கச் சொன்னாங்க”

“எவங்க?”

“கலக்டரம்மா”

“எதற்கு எடுக்கச் சொன்னாங்க?”

“அது தெரியாது”

“வீடியோ வேலையை விட்டு நீ ஏன் இங்கே வேலைக்கு வந்தே?”

“இங்க வர்றதுக்கு முன்னாடியே அதை விட்டுட்டேன். இங்க வரும் போது  சும்மாதான் இருந்தேன். உங்க உதவிக்கு ஆள் வேணும், நீ போனு சொன்னாரு. வந்தேன்”

“யார் சொன்னா?”

“பெரியவர்தான்”

“அவரை உனக்கு எப்படித் தெரியும்?”

“ எனக்கு நேரடியா தெரியாது. என் கணவருக்குத் தெரியும்”

“யாரு சாமிநாதனா?”

ஆம் என்று சித்ரா மேலும் கீழுமாகத் தலை அசைத்தாள்

“ஏன் ஏங்கிட்ட சொல்லலை?”

சித்ரா அமைதியாக இருந்தாள்

“சொல்லு, ஏன் சொல்லலை?”

“அவர்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னார்”

“யாரு, பெரியவரா?”

“இல்லை, அவர்தான்”

“சாமிநாதனா?”

“ம்”

சாமிநாதன் குறுக்கிட்டுப் பேச ஆரம்பித்தான். “மேடம் நாங்க உங்களை ஏமாத்தணும்னு நினைக்கலை. சொல்ல சந்தர்ப்பம் வரலை. பின்னால சரியான சந்தர்ப்பத்தில சொல்லிக்கலாம்னு நினைச்சோம். நாங்க உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் செய்யலாம்னு காத்திட்டிருக்கோம். எங்களை நம்புங்க.”

“மிஸ்டர் சாமிநாதன் நீங்க ஏன் அரசாங்க வேலையை விட்டு என் கிட்ட வேலைக்கு வந்தீங்க?’

“அருட்செலவன் ஆளுங்க என் மேல ஒரு புகார் கொடுத்திருந்தாங்க. என்னை சஸ்பெண்ட் பண்ணி விசாரணைனு இழுத்தடிச்சிட்டு இருந்தாங்க. அவங்க நோக்கம் என்னை விசாரிக்கிறதில்ல, என்னை அலையவிடறதுங்கிறது எனக்குப் புரிஞ்சு போச்சு. அவங்க ஆட்சி அமைய நானும் உழைச்சிருக்கேன். இன்னிக்கு என்னையே போட்டுப் பார்க்கிறாங்க. வெறுத்துப் போய் வேலையை ராஜினாமா செய்தேன். பெரியவரைப் போய்ப் பார்த்தேன். அவர் இங்க அனுப்பிச்சு வைச்சார்”

“அவருக்காக உளவு பார்க்கச் சொன்னாரா?”

“என்ன சொல்றீங்க மேடம்?”

“அவர் என்னை வேவு பார்க்க அனுப்பிச்சாரா?”

“ஐயோ அப்படியெல்லாம் இல்லை. உங்க அனுமதி இல்லாமல் நான் அவரைப் பார்க்கறதோ பேசறதோ இல்லை”

“நம்ப முயற்சிக்கிறேன்”

இரவெல்லாம் வித்யாவை கேள்விகள் தின்று கொண்டிருந்தன. ரஞ்சனி சொல்வதெல்லாம் நிஜமா? இல்லை மிகையா? அவள் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அதற்கு என்ன அவசியம்? பெரியவர் என்னை வேவு பார்க்கிறாரா? நம்பிக்கை வைத்திருப்பது போலத்தானே நடந்து கொள்கிறார்? அவர்தானே என்னைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்? எடுத்த எடுப்பிலேயே அவ்வளவு பெரிய பதவியைக் கொடுத்தார்? நான் சொன்ன ஆளைத் தேர்தலில் நிறுத்தினாரே? அது என்னுடைய ஆளா? சாமிநாதனுடைய ஆள். சாமிநாதனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போலத்தானே நடந்து கொண்டார்? அவனுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்? ஏன் சாமிநாதனும் சித்ராவும் உண்மையைத் தன்னிடம் மறைத்தார்கள்? அவர்கள் யார் என்று தெரியாமல் எத்தனை விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்! பெரியவரைப் பற்றிக் கூட கமெண்ட் அடித்திருக்கிறேன்! அவர் நடிப்பைக் கிண்டல் செய்திருக்கிறேன். வயதைக் கேலி பேசிச் சிரித்திருக்கிறேன். அதையெல்லாம் கூட அவரிடம் சொல்லியிருப்பார்களா? கேள்விகள் குடைந்து கொண்டே இருந்தன

கண்ணாடிச் சுவர்கள் கொண்ட வீட்டினுள் நின்று ஆடை மாற்றுவது போலிருந்தது வித்யாவிற்கு

மறுநாள் காலை எழுந்ததும் அவள் சாமிநாதனையும், சித்ராவையும் அழைத்தாள்: “இரண்டு மணி நேரம் உங்களுக்கு அவகாசம் தருகிறேன். அதற்குள் உங்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியே போய்விடுங்கள்!”

“அக்கா!.”

“ம்” வித்யா உறுமினாள்.

அவள் காலில் விழப்போனாள் சித்ரா

சாமிநாதன் கை காட்டி சித்ராவைத் தடுத்தான். அவனும்  ஏதும் பேசவில்லை. முகம் இறுகிக் கிடந்தது. அதில் தெரிவது அவமானமா? கோபமா? ஏமாற்றமா? எதையும் வெளிக்காட்டாமல் கல் போல் இறுகிக் கிடந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் கலாநிலையத்திலிருந்து வெளியேறினார்கள்

அவர்கள் நகர்ந்ததும் கதவை அறைந்து சாத்திவிட்டு சோபாவில் வந்து விழுந்தாள் . விவரிக்க முடியாத ஆற்றாமை அவளைச் சூழ்ந்து கொண்டது. எல்லோரும் அவளை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் எனத் தோன்றியது. அம்மா, அப்பாவைப் பழிவாங்க அவள் தன்னைப் பயன்படுத்திக் கொண்டாள். அவருக்கு முன் தன்னை நிரூபிக்க, படிக்கிறேன் என்று சொன்னவளை வலியக் கொண்டு போய் சினிமாவில் திணித்தாள். சினிமா அவள் உடலைப் பயன்படுத்திக் கொண்டது. மேனி அழகைக் கவர்ச்சியாக மாற்றிக் காசு பார்க்கப் பயன்படுத்திக் கொண்டது. பெரியவர் என் புகழைத் தன் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். சித்ராவும் சாமிநாதனும் என் தனிமையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். நான் கறிவேப்பிலை. கடிதம் சுமந்து வரும் காகித உறை. பயன்படுத்திவிட்டுக் காரியம் ஆனதும் வெளியே வீசிவிடுவார்கள்.

வித்யா அழுதாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். அருகிலிருந்து தேற்ற யாரும் இல்லாமல் அழுதாள்.

*

 அன்று மாலை அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வந்தது. அண்ணாநகரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்த ரஞசனி மீது யாரோ விஷமிகள் ஆசிட் வீசியிருந்தார்கள். நூலிழையில் ரஞ்சனி தப்பித்திருந்தாள்.

ஏனோ வித்யாவிற்கு அது தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை போலத் தோன்றியது. அவளையறியாமல் அவள் உடல் நடுங்கியது.  

.

.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.