தோழி-10

maalan_tamil_writer

“சித்ரா!”

வித்யாவின் கூச்சல் வீட்டின் விளிம்பில் புதிதாக உருவாகியிருந்த வேலைக்காரர் குடியிருப்பு வரை ஒலித்தது. பெரியநாயகிக்கும் கேட்கத்தான் செய்தது. ஆனால் சித்ரா என்ற புதுப் பெயர் அவளுக்கு இன்னும் பழக்கமாகியிருக்கவில்லை. இப்போதெல்லாம் வித்யா அவளை அடிக்கடி சித்ரா என கூப்பிடத் தொடங்கியிருந்தாள். முக்கியமாக மூன்றாவது மனிதர் முன்னிலையில். சில நாட்களாகக் கட்சிக் கூட்டங்களுக்குப் போகும் போது துணைக்குப் பெரியநாயகியும் போய் வந்து கொண்டிருந்தாள். அங்கு அவளைச் சித்ரா என்றழைக்க ஆரம்பித்த வழக்கம் வித்யாவிடம் தங்கிவிட்டது. ஆனால் பெரியநாயகிக்குத்தான் இன்னும் பழக்கமாகவில்லை.

அவுட் ஹவுஸ் அருகில் வேலைக்காரர்கள் இடையே ஏற்பட்டிருந்த பிணக்கைப் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டிருந்த அரைக்கணத்தில் பெரியநாயகி சுதாரித்துக் கொண்டாள். பஞ்சாயத்தை அப்படியே விட்டுவிட்டு பரபரவென்று மாடிக்கு ஓடினாள்.

“அம்மா கூப்பிட்டாங்க!” என்று எதிரில் சேதி கொண்டுவந்த சிறுமியைப் “போடி, அந்தப்பக்கம்!” என அதட்டிவிட்டு படியேறினாள்.

படியேறினால் ஒரு சிறு கூடம். அதில் ஒரு சாய்வு நாற்காலியும், சாய்ந்து கொள்ளும் போது காலை தூக்கி வைத்துக் கொள்ள குஷன் வைத்த சிறு ஸ்டூலும் கிடக்கும். வெகுநாட்களாக உபயோகப்படுத்தாத ஒரு சோபா சுவரோரம் கிடந்தது. அந்தக் கூடத்தைத் தாண்டினால் ஒரு நூலகம். தள்ளி நகர்த்தக் கூடிய கண்ணாடிக் கதவுகளுக்குப் பின் அலமாரித் தட்டுக்களில் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. சிகப்பு நிற வெல்வெட் அட்டைகளில் பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள் முக்கியமானவை என்பதைச் சில மாதங்களுக்குப் பின் சித்ரா உணர்ந்து கொண்டிருந்தாள்

“இது லைப்ரரியா, இல்லை கோடெளனா?” என்று சீறினாள் வித்யா.

என்ன பிரசினை எனப் புரியாமல் சித்ரா அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிரசினை  என்னவென்று தெரிந்தால் அல்லவோ பதில் சொல்ல முடியும்? ஆனால் தெரிந்தாலும் சித்ரா பதில் சொல்ல மாட்டாள். அதிலும் வித்யா கோபமாக இருக்கும் போது பேசமாட்டாள். வந்த சில நாள்களிலேயே வித்யாவை எப்படிக் கையாள்வது எனத் தெரிந்து கொண்டிருந்தாள் சித்ரா

“இது லைப்ரரியா இல்லை, புத்தகம் போட்டு வைக்கிற கிட்டங்கியா?” என்றாள் வித்யா மறுபடியும். “நமக்கு வேணும்கிற புத்தகத்தைச் சட்டென்று எடுக்க முடிகிறதா? ம்?” என்றாள் கோபமாக. “எடுத்தா எடுத்ததை எடுத்த இடத்தில் திருப்பி வைக்கணும்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!” என்றாள்

ஓ!இதுதான் பிரசினையா? இரண்டு நாள்களுக்கு முன் நூலக அடுக்கில் இருந்த புத்தகங்களைக் கீழிறக்கித் தூசி தட்டித் திரும்ப அடுக்கினார்கள். அடுக்கும் போது இஷ்டத்திற்கு மாற்றி அடுக்கிவிட்டார்கள் போலும். வித்யா விரும்பிய விதத்தில் அடுக்க வேண்டுமானால் அதற்கு வித்யாவின் உதவி வேண்டும். ஆனால் அவளைக் கேட்டால் சீறுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள் சித்ரா

பெருங்குரல் எடுத்து இரைந்ததாலோ என்னவோ வித்யாவிற்கு மூச்சிறைத்தது. முன் கூடத்தில் இருந்த சோபாவில் போய் விழுந்தாள். குஷன் வைத்த ஸ்டூலை இழுத்துப் போட்டுக் காலை நீட்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள். ஏன் இப்போதெல்லாம் எனக்கு இப்படித் தொட்டதற்கெல்லாம் கோபம் வருகிறது? வயதாகிறதா? ரத்த அழுத்தமா? கையாலாகத்தனமா? இல்லை நானும் அப்பாவை மாதிரி ஆகிக் கொண்டு வருகிறேனா? கேள்விகள் அவள் மனதைக் கொத்தின.

அப்பாவிற்கு விஸ்வாமித்ர கோத்திரம்; துர்வாசர் சகோதரர். அற்ப விஷயத்திற்கெல்லாம் கூரைக்கும் பூமிக்குமாக குதிப்பார். அவர் தனது கோபங்கள் நியாயமானவை என்று நம்பினார். அது உண்மையோ இல்லையோ, அவருக்கு கோபம் வருவதற்குக் காரணங்கள் இருந்தன.

வித்யாவின் அப்பா ராம்மோகன் வாழ்வின் எல்லா முனைகளிலும் தோல்வி கண்டவர். படிப்பு அதிகம் இல்லை. ஏறவில்லை என்று சொல்ல முடியாது. முனைப்பில்லை. பாட்டி செல்லம் கொடுத்து வளர்த்து அவரைக் குட்டிச் சுவராக்கியிருந்தார். காவிரிக் கரையில் நாற்பது ஏக்கர் நிலம், கல்லுப்போல் இரண்டு கட்டு வீடு, கட்டிப்போடாத எருமைக் கன்னுக்குட்டி போல் கறுப்பு நிற வாக்சால் கார், கனைத்தால் ஓடி வர வேலை ஆட்கள் என்றிருந்த வீட்டின் ஏக புத்திரன் படித்து என்ன கிழிக்கப் போகிறான் என்று பாட்டிக்கு ஓர் அலட்சியம். பதினைந்து வயதில் அது பையனையும் தொற்றிக் கொண்டது. அதட்டி வளர்க்க அவருக்கு அம்மா இல்லை.

அவர் எதையும் கிழிக்கவில்லை. ஆனால் வாழ்க்கை அவரைக் கிழித்துப் போட்டது. ஒருநாள் கடைத் தெருவில் யாரோ யாரிடமோ அவர் பெயரைச் சொல்லி விலாசம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். “ஓ! அந்தப் பழைய சோறு சாப்பிடுகிறவரா? அந்தத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார் பாருங்கள், அவர்தான்!” என்று அவரை நோக்கிக் கையைக் காட்டினார் விலாசம் சொன்னவர்.

அவர் சொன்னது இவர் காதிலும் விழுந்தது. ‘பழைய சோறா?’ சுருக்கென்றது இவருக்கு. ஒரு சாண் உயர வெள்ளித் தம்பளரில் காலைக் காபி, அதன் பின் அரைத்துத் துப்ப கவுளி கவுளியாய் வெற்றிலை, நெய்யில் வறுத்த சீவல், வெந்நீர் குளியல், துவட்டல், பிரட்டல்  என இரண்டு வகைக் கறி, ஒரு பொறிச்ச கூட்டு, பச்சடி, அப்பளம் அல்லது அரிசி வடாம், ஆவி பறக்க பச்சரிசிச் சாதம், எருமைத் தயிர், பண்டிகை நாளானால் கூடுதலாக பருப்புப் பாயசம், வடை என இரண்டு வேளை முழுச்சாப்பாடு, மாலையானால் கேசரி, பஜ்ஜி இல்லையென்றால் அதிரசம், முறுக்கு, தேன்குழல் என்று சாப்பிட்டு, சாப்பிட்டது செரிக்க ஒரு குட்டித் தூக்கமும் போடுகிற நான் பழைய சோறா?

புசு புசுவென்று பொங்கிற்று ராம்மோகனுக்கு. கையில் இருந்த சீட்டை அப்படியே போட்டார். திண்ணையை விட்டிறங்கினார். பழைய சோறு என்று விலாசம் சொன்னவர் மீது பாய்ந்தார். “ஆமாம். அப்படித்தான் சொன்னேன். நீ திங்கறதெல்லாம் உன் காசா? அப்பன் பாட்டன் சம்பாத்தியம்தானே?” என்று செவிட்டில் அறைந்தால் போல் சொன்னாராம் விலாசம் சொன்னவர்.   

ரோஷப்பட்டுக் கொண்டு நண்பர்களோடு சேர்ந்து கூட்டு வியாபாரம் ஆரம்பித்தார். தெரிந்த நண்பர்கள்தான். ஆனால் தெரியாத வியாபாரம்.ஓட்டை வாளியில் நீரைக் கோரின மாதிரி போட்டதெல்லாம் ஒழுகிக் கொண்டு ஓடியது. சுதாரித்த கூட்டாளிகள் விலகிக் கொண்டார்கள்.  மொத்த சுமையும் ஒத்தை ஆளாக இவர் மேல் விழுந்தது. ஜாமீனாகக் கொடுத்த வீட்டை ஜப்தி செய்ய வங்கிக்காரரகள் வந்து நின்றார்கள்.

வாய்தா வாங்கினார். இருப்பதையெல்லாம் விற்றார். முடையில் விற்கிற சொத்து எனப் புரிந்தவர்கள் மூர்க்கத்தனமாக அடி மாட்டு விலைக்குக் கேட்டார்கள். பழைய சோற்றுப் பானை பருக்கை மீதமில்லாமல் காலியாயிற்று.

கிராமத்தைக் காலி செய்து கொண்டு சென்னைக்கு வந்தார். சின்னச் சின்ன வேலைகளில் உட்கார்ந்தார். வணங்கி வேலை செய்ய ஈகோ ஒத்துழைக்கவில்லை. அவ்வப்போது அவற்றை உதறினார். கையில் எப்போதும் காசுக்குப் பற்றாக்குறை எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுந்தார்.

அவர் கோபத்தைக் கண்ட குழந்தைகள் மிரண்டன. அவரிடம் பேசவே அஞ்சி அம்மாவிடம் ஒண்டின. அம்மா ரங்கம்மா எப்போதோ கற்றுக் கொண்ட கர்நாடக சங்கீதத்தைச் சொல்லிக் கொடுத்து வீட்டுச் செலவை ஈடுகட்டிக் கொண்டிருந்தாள். நல்ல சாரீரம். சாரீரம்தான் சாப்பாடு என்பதைப் புரிந்து கொண்ட அவள் அதை சாதகத்தால் மெருகேற்றிக் கொண்டிருந்தாள். ராமநவமிக் கச்சேரிகள் வந்தன. வெற்றிலை பாக்கு, அரைத் தேங்காய் மூடி, பெருமாள் பிரசாதம் தவிர அதில் பெரிய வருமானம் இல்லை என்பதால் அவள் சினிமாப் பாடல் இசைக்கும் மெல்லிசை மேடைகளுக்கு மாறினாள். கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு மட்டுமல்ல சினிமாப் பாட்டுக்களைக் கொண்டும் கச்சேரி செய்யலாம், காசும் பார்க்கலாம் என்று திரை இசை வாணர் மெல்லிசைக் குழு மூலம் மெய்ப்பித்துக் கொண்டிருந்த ஆரம்பக் காலம் அது. அந்தக் குழுவில் அவளுக்கு இடம் கிடைத்தது.  கற்கவும் கேட்கவும் அம்மாவிடம் ஏதோ இருந்ததால் குழந்தைகள் இனிப்பைச் சுற்றும் எறும்பு போல் அவளைச் மொய்த்துக் கொண்டிருந்தன.

இதெல்லாம் ராம்மோகனிடம் இனம் தெரியாத காம்ப்ளெக்ஸை ஏற்படுத்தின. தணல் இருந்த அடுப்பின் தரைமீது அமர்ந்திருப்பவர் போல எப்போதும் சிடுசிடுவென்று இருந்தார். ரங்கம்மா கச்சேரிக்குப் புறப்படும் தருணங்கள் அதை விசிறிவிடும். கச்சேரிக்குப் போகும்போது கவனமாய்த்தான் ஒப்பனை செய்து கொள்வாள் ரங்கம்மா. அலங்காரம் அதிகமிருக்காது. சோப்புப் போட்டு முகம் கழுவி, கூந்தலை வழித்துக் கொண்டை போட்டுக் கொள்வாள். ஒரு கோட் பவுடர் பூசி அதில் பதக்கம் போல் குங்குமம் இடுவாள். கச்சேரிகளுக்கென்றே காசளவில் கல் பதித்த தோடு வைத்திருந்தாள். அது இல்லை என்றால் அபூர்வமாக ஜிமிக்கி. கழுத்தைச் சுற்றிப் போர்த்துக் கொண்டுதான் கச்சேரி மேடையில் நிற்பாள். அப்படியும் ஏதோ ஒருமுறை-அன்று ராம்மோகன் கச்சேரி கேட்க வந்திருந்தார்- காதல் ரசம் சொட்டும் டூயட் பாட்டு ஒன்றை ஆண் பாடகருடன் சேர்ந்து பாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. வீட்டுக்கு வந்ததும் பொரிந்து விட்டார் ராம்மோகன். 

வித்யாவிற்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பத்து வயது இருக்கும்.பள்ளிக் கூடத்தில் ஆண்டு விழா. ஏதோ டான்சில் சேர்த்திருந்தார்கள்.பள்ளியில் பட்டுப் பாவாடை தைக்கச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் நிலைக்கு அது அதீதம். அம்மா அவளுக்கு ஏதோ ஒரு விழாவில் போர்த்தப்பட்ட பொன்னாடையை பாவாடையாகத் தைத்திருந்தாள்.. ரத்தச் சிவப்பில் தகககவென்று பொன்னிறப் பூக்கள் பொலிகிற பாவாடையாக அது மாறியிருந்தது. விழா முடிந்து ஒப்பனையைக் கலைக்காமல் வீட்டிற்கு வந்தாள் வித்யா. கன்னத்தில் பூசியிருந்த ரூஜ், கண் மை, நெற்றியில் மினுங்கிய பொய் வைரச் சுட்டி, கோதை நாச்சியார் கொண்டை, அதில் சுற்றிய பூச்சரம், இழுத்து வாரிய தலையின் இருபுறமும் செருகிய ஜடைபில்லை என்ற அலங்காரம் அவளை ஆண்டாளாகவே செய்திருந்தது. போதும் போதாதற்கு அவள் கையில் ஓர் அட்டைக் கிளியை வேறு கொடுத்திருந்தார்கள். அம்மா சொன்னதால் அந்தக் கோலத்தை அப்படியே அப்பாவிடம் காட்ட ஒப்பனையைக் கலைக்காமல் வீட்டிற்கு வந்தாள் வித்யா.

தன்னைப் பட்டினி போட்டுவிட்டு பெண்டாட்டி பள்ளி விழாவிற்குப் போய் விட்டாள் என்ற பசிக் கோபமோ, இல்லைத் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்துப் போகவில்லை என்ற ஆத்திரமோ, துர்வாசர் அன்று கோபத்தில் கனன்று கொண்டிருந்தார். கோதை கோலத்தில் வந்து நின்ற வித்யாவைப் பார்த்தார்

“எப்படி இருக்கா பாருங்கோ! அப்படியே ஆண்டாள் மாதிரி!” என்றாள் அம்மா.

வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.அள்ளி அணைத்துக் கொள்வாரோ, அப்படியும் ஒரு அதிசயம் நடக்குமோ என நினைத்து வித்யா புன்னகை பூத்தாள்

வெறித்துப் பார்த்த ராம்மோகன் விருட்டென்று எழுந்தார். “இந்த வயசிலே என்ன தளுக்கும் மினுக்கும்!…. என்றவர் “அம்மா மாதிரி” என்று ரங்கம்மாவைப் பார்த்தார். வார்த்தையில் வன்மம் வழிய, எட்டிப் பட்டுப் பாவடையைப் பற்றி இழுத்தார். பழைய பொன்னாடை பரக் கென்று கிழிந்தது.

ரங்கநாயகி குழந்தையை அள்ளிக் கொண்டு உள்ளே ஓடினாள். அவள் கண்ணோரம் முத்துத் துளிர்த்திருந்தது. வெடிக்காத அழுகை விசும்பலாய் அவள் மார்பில் விம்மித் தணிந்ததை அணைப்பில் இருந்த வித்யாவின் உடல் உணர்ந்தது.

அது முதல் முறை. அதற்கப்புறம் அனேக முறை.அனைத்துப் பள்ளிகளுக்கான ஆங்கிலக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு வாங்கிய போது, “ உனக்கெல்லாம் பயந்துதான் வெள்ளைக்காரன் ஊரை விட்டு ஓடிட்டான்” என்றார். பெண்ணாகப் பூத்த போது, “ அவசரப்பட்டு உட்கார்ந்திட்டமே, அப்பன் கையில காசு பணம் இல்லியே, கல்யாணம் காட்சி நடக்குமானு கவலைப்படாதே. உங்கம்மா இருக்காளே மகாலட்சுமி அவை கடாட்சம் விழுந்தா போறுமே!” என்றார்.மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் முதலிடம் பெற்ற போது, “ஜில்லா கலக்டர் வந்துட்டார், சேர் எடுத்துப் போடுங்கடா!” என்றார். மேலே படிக்க மெரிட் ஸ்காலர்ஷிப் கிடைத்த போது “பிச்சை எடுத்துப் படிக்கிற வம்சத்தில உங்கப்பன் பிறக்கலை. போறும் படிச்சது” என்று படிப்பை நிறுத்திவிட்டார்.

அப்பா என்றாவது தன்னைப் புரிந்து கொள்வார், தன் திறமையைப் பாராட்டி நல்ல வார்த்தை சொல்வார் என்று ஒருநாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பதினெட்டு வருடம் காத்திருந்தாள் வித்யா. ஆனால் அப்படி ஒன்றை அவரது வாய் உதிர்க்காமலே அவளது பதினெட்டு வயதில் அவர் கண்ணை மூடிவிட்டார்.

*             

“முதன் முதலில் பெரியவரைப் பார்த்த போது அப்பாவைப் பார்த்தது போலிருந்தது எனக்கு.  அப்பாவிற்கு சற்று நீள்வட்ட முகம். பெரியவருக்கும். அப்பாவிற்கு மோவாய்க்குக் கீழ் ஒரு மடிப்பு உண்டு. பெரியவருக்கும். அப்பா தண்ணீரோ, காபியோ குடிக்கும் போது தொண்டையில் இருக்கும் பந்து ஏறி இறங்கும். அவருக்கும். வயது கூட ஏறக்குறைய ஒன்றுதான். அப்பாவை விட ஒரு வயது சிறியவர். அப்பாவிற்கும் பெரியவருக்கும் ஒரே வித்தியாசம் பெரியவர் முகத்தில் எப்போதும் புன்னகை படர்ந்திருக்கும். அவர் எவரிடம் இழிசொல்லாகச் சொல்லி நான் கேட்டதில்லை.”

தில்லியிலிருந்து வந்திருந்த நிருபர் டேப் ஓடுகிறதா என்று பார்த்துக் கொண்டு முக்கியமான வாக்கியங்களை நோட்டிலும் எழுதிக் கொண்டிருந்தார்.

“எல்லா ஆண்களுக்கும் ஒரே பார்வைதான். யாருக்கு எப்படியோ, என் விஷயத்தில் எல்லோரும் அப்படித்தான். கண்ணில் காமம் தெரியும். சிலர் நேரே எடுத்த எடுப்பில் கழுத்துக்குக் கீழேதான் பார்ப்பார்கள். எங்கள் ஜென்டில்மேன்கள் கூட கைகூப்ப மாட்டார்கள். உள்ளங்கையைப் பற்றி ஒரு விரலால் சுரண்டுவார்கள். வாய்ப்புக் கிடைத்தால் சாய்த்துப் பார்க்கத்தான் நினைப்பார்கள்”.

உண்மை என்பது போல் அந்தப் பெண் நிருபர் புன்னகைத்தார்

“பெரியவரும் ஆரம்பத்தில் அப்படித்தான் பார்த்தார். ஒரு முறை சந்தர்ப்பம் கிடைத்த போது சொல்லியே விட்டேன், “நீங்கள் அப்பா மாதிரி” என்று. திகைத்தார். பின் சிரித்தார். “வயசா?” என்றார். ”அது மட்டும் இல்லை” என்று ஒருமுறை புகைப்படத்தைக் காட்டினேன். கையில் வாங்கிக் கண்கொட்டாமல் பார்த்தார். பதிலொன்றும் சொல்லாமல் படத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

அதற்கப்புறம் அவர் பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. அவர் எதற்கும் வற்புறுத்தவில்லை. அப்பா காட்டாத கரிசனத்தைப் பெரியவர் காட்டினார். அது எனக்கு இரண்டாவது படம். ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு. எல்லோருக்கும் சாப்பாடு வந்தது. அசைவச் சாப்பாடு. நான் சைவம்.  அதைத் தொடவில்லை. பிரியாணியை அந்தப் பக்கமாக எடுத்துப் போய் கறித்துண்டுகளை எடுத்துப் போட்டுவிட்டு அதை என்னிடம் கொண்டு வந்து நீட்டினார்கள். அவர்கள் எடுத்துப் போடுவதை இவர் பார்த்து விட்டார். சீறினார். யூனிட்டே அதிர்ந்தது. அவரும் சாப்பாட்டைத் தொடவில்லை. காரை எடுத்துக் கொண்டு அறுபது எழுபது கிலோ மீட்டர் போய் அவசர அவசரமாக சைவச் சாப்பாடு வாங்கி வந்தார்கள். அதன் பின்னர்தான் அவர் சாப்பிட்டார்.

அப்பா சொல்லாத பாராட்டை எத்தனையோ முறை அவர் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஷாட்டிற்கு நடுவில் இடைவேளை விட்டார்கள். ஏதோ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று கவிதை மாதிரி நாலு வரி தோன்றியது. கடைசிப் பக்கத்தில் காலியாய் இருந்த இடத்தில் எழுதிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். பேனா இல்லை. டச் அப் பெண்ணிடம் ஒர் பேனா கொண்டா என்றேன். பெரியவர் எதிரே உட்கார்ந்து யாரோடோ அரசியல் பேசிக் கொண்டிருந்தார். ‘பரட்’டென்று தன் சட்டைப் பையிலிருந்து பேனாவை உருவி நீட்டினார். தங்கப் பேனா.  கண் எதிரே இருப்பவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வாய் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் காது என் பக்கம் இருந்திருக்கிறது.  எழுதிக் கொண்டிருக்கும் போது தோளுக்குப் பின்னிருந்து அதைப் படிக்க முயன்றார். “என்ன கவிதை?” என்றார். வாசித்தேன். “தமிழில் சொல்லு” என்றார். ரோஜப்பூ பேசுவது போன்ற கவிதை அது: ‘முள்ளும் மென்மையும் என் இரு இயல்புகள். ஒரு நாள் நான் உதிர்ந்து போவேன். எனினும் என் வாசம் உன் உயிரில் என்றும், என்றென்றும்”

“அபாரம். பேசுவது ரோஜாவா? வித்யாவா?” என்றார் கேலி மாறாச் சிரிப்புடன்.

பேனாவைத் திருப்பிக் கொடுத்தேன்.” ஐய்யய்யோ, நான் வாங்க மாட்டேன். நான் செக்கில் கையெழுத்துப் போடுகிற பேனா. இன்னிக்கு உன் கையில் அது கவிதை எழுதிவிட்டது. என் கைக்கு வந்தா என்னென்ன எழுதுமோ? நான் வாங்க மாட்டேன். எனக்கு இனி அது உதவாது. நீயே வைச்சுக்கோ” என்றார் கிண்டலாக. மறுநாள் ஒரு வளையல் கொண்டு வந்தார். “கவிதை எழுதுவது கவிஞர்கள் வேலை. பரிசு கொடுப்பது அரசர்கள் கடமை” என்றார்.

எங்கள் உறவை எல்லோரும் அறிந்த வரையரைக்குள் கொண்டு வருவது கடினம். அவர் என் நண்பர், சகா, வழிகாட்டி, பிரியமான விரோதி, அப்பா எல்லாம்தான்”.

“காதலர்?”

“அவரைக் காதலிக்காதவர்கள் யார்?”

“எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ்?” என்றார் ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர்

“அவரிடத்தில் நான் அப்பாவைப் பார்ப்பதால் எனக்கு எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ், அவர் என்னிடத்தில் அம்மாவைப் பார்ப்பதால் அவருக்கு ஈடிப்பஸ் காம்ப்ளெக்ஸ் என்று உங்கள் கற்பனைக்கு ஏற்ப என்ன வேண்டுமாலும் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் மறுபடி சொல்கிறேன். எங்கள் உறவை உங்கள் வரையறைகளால் புரிந்து கொள்ள முடியாது!”

நிருபர் அடுத்த கேள்வியை வீசும் முன் வித்யா எழுந்து நின்றாள். சற்று தூரத்தில் பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் சாமிநாதன்        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.