மூச்சுத் திணற, முழி பிதுங்க பொத்தென்று சோபாவில் வந்தமர்ந்தான் சித்து. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார் அவனது அம்மா. பரபரவென்று அவனது சட்டைப் பித்தான்களைக் கழற்றி சட்டையைத் தளர்த்தினாள்.அவன் ஆசுவாசமாக மூச்சுவிட்டான்.
அப்போதுதான் அவர் அவனது சட்டையை கவனித்தார்.உடலை இறுக்கக் கவ்விப் பிடித்து நெருக்கிக் கொண்டிருந்தது சட்டை.” அறிவிருக்கா உனக்கு? இது உனக்கு ஏழு வயசா இருக்கும் போது தைச்ச சட்டை. இப்போ உனக்கு வயது பத்தாச்சு. வளர்ற பையன். இது இப்போ உனக்கு எப்படிச் சேரும்? உடம்பு வளர்ந்திருக்கே தவிர புத்தி வளர்ந்திருக்கா உனக்கு? உடனே இதைக் கழற்றிப் போடு புதுசா ஒண்ணு தைச்சிடலாம்!” என்றார்
“நீ அறிவிருக்கானு கேட்டியே? அது நம் அரசியல்வாதிகளைக் கேட்க வேண்டிய கேள்வி” என்றார் அப்பா
“புதிர் போடாம, புரிய மாதிரிச் சொல்லுங்கோ. இல்லை சாவகசமாப் பேசணும்னா சாயங்காலம் பேசலாம். எனக்கு உள்ள ஏகப்பட்ட வேலை கிடக்கு”
அப்பா ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டார். அவர் மனம் கேட்டது புதிதாகத் தைக்க வேண்டியது சட்டை மட்டும்தானா?
அண்மையில் நாடு அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட எழுபதாம் ஆண்டு தினத்தை கொண்டாடியது. அது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம் நமது அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டியவை என்பது என் எண்ணம். இன்னும் சொல்லப்போனால் பழைய நகையை அழித்து அந்தத் தங்கத்தைக் கொண்டுப் புது நகை செய்வதைப் போல பழைய சட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு அதில் உள்ள நல்ல அம்சங்களைக் கொண்டு புதிய சட்டமே கூடச் செய்யலாம்.
நம் நாட்டில் இன்று நிலவும் பல பிரசினைகளுக்கு வித்திட்டது நம்முடைய அரசமைப்புச் சட்டம்தான். கஷ்மீர் பிரச்னை ஒர் உதாரணம்.. அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவைக் கைவிட்டதால் இன்று பெருமளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஆனால் இதைப் போல இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கவர்னர்களின் அதிகாரம், நீதிமன்றங்களின் அதிகாரம், சட்டமன்றங்களின் அதிகாரம், சபாநாயகர்களின் அதிகாரம்,மாநில அரசுகளின் அதிகாரம், பஞ்சாயத்து அமைப்புக்களின் அதிகாரம், மக்கள் பிரதிநிதிகளுக்கான தகுதிகள், தேர்தல் சீர்திருத்தங்கள், நீதிபதிகள் நியமனம், இட ஒதுக்கீட்டில் உள்ள முரண்பாடுகள், நதி நீர்ப் பிரசினைகள், ஆட்சி மொழி, இந்தியக் குடிமகன்கள் அனைவருக்குமான சிவில் சட்டம், மதுவிலக்கு போன்ற பல விஷயங்களில் மறுபரிசீலனை தேவைப்படுகிறது
அரசமைப்புச் சட்டம் இதுவரை 124முறை திருத்தப்பட்டிருக்கிறது ஆனாலும் பல பிரச்சினைகள் தொடர்கின்றன. தொடர்வது மட்டுமல்ல, மேலும் சிக்கலாகியிருக்கின்றன.
நீதிமன்றத்தின் அதிகாரங்கள் ஓர் உதாரணம். நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்ட நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரம் உச்சநீதி மன்றம் மகராஷ்டிரா பற்றி சில ஆணைகளை அறிவித்தது. சட்டமன்றத்தில் யாருக்குப் பெரும்பானமை இருக்கிறது என்பது சட்டமன்றத்தினுள்தான் நிரூபிக்கப்பட வேண்டும், ஆளுநர் மாளிகையிலோ, ஐந்து நடசத்திர விடுதியிலோ, ஊடகங்கள் முன்போ , நீதிமன்றத்திலோ அல்ல என்பதைப் பலமுறை நான் சொல்லி வந்திருகிறேன். உச்ச நீதி மன்றமும் அதைத்தான் சொல்லியிருக்கிறது. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் –
அந்த வாக்கெடுப்பு எப்படி நடத்தப்பட வேண்டும் ரகசிய ஓட்டா, பகிரங்க ஓட்டா, குரல் வாக்கா, டிவிஷனா, காம்போசிட் ஓட்டா, எத்தனை மணிக்கு தொடங்க வேண்டும், எத்தனை மணிக்கு முடிய வேண்டும், அதைப் படமெடுக்க வேண்டுமா, நேரலையில் ஒளிபரப்ப வேண்டுமா என்ற நடைமுறைகளையெல்லாம் சட்டமன்ற சபாநாயகர்தான் தீர்மானிக்க வேண்டும். அது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது. அதை நீதிமன்றம் தன்கையில் எடுத்துக் கொள்வது என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்
நமது அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக மூன்று அதிகார அமைப்புக்களை வகுத்துள்ளது. ( சட்டமியற்றும் மன்றங்கள், (நாடாளுமன்றம், சட்டமன்றங்கள்) நீதிமன்றங்கள், நிர்வாகம்) அவற்றின் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. மற்ற அமைப்புக்களை விட நீதிமன்றம் அதிக அதிகாரம் கொண்டது என்று அரசமைப்புச் சட்டத்தின் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.பல்வேறு தீர்ப்புகளின் மூலமாக அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்குப் புதிது புதிதாக விளக்கங்களைக் கூறி நீதித்துறை மெல்ல, மெல்ல தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயல்கிறது. இதற்கு இன்னொரு உதாரணம் சில ஆண்டுகளுக்கு முன் கொலீஜியம் முறையை மாற்றி நீதிபதிகள் ஒரு தேசிய நீதி ஆணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எல்லாக் கட்சிக்ளும் சேர்ந்து ஏகமனதாக எடுத்த முடிவை நீதிமன்றம் ஏற்க மறுத்தது இது ஆபத்தான போக்கு
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த அம்பேத்கர் மொழிவாரியாக மாநிலங்களை அமைப்பது குறித்துத் தான் கொண்டிருந்த அச்சங்களை மொழிவாரி மாநிலங்கள் குறித்த எண்ணங்கள் (Thoughts on Linguistic States) என்ற நூலில் வெளியிட்டிருக்கிறார். அது அவர் தனது இறுதிக் காலத்தில் எழுதிய நூல்களில் ஒன்று. அவரது அச்சம்தான் என்ன?
“தனது பிராந்திய மொழியை அலுவல் மொழியாகக் கொண்ட மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலம், எளிதாகத் தனிப்பட்ட தேசியமாக ஆகிவிடும். தனி தேசியம் என்பதற்கும், தனி தேசம் என்பதற்கும் இடையிலான பாதை என்பது மிகக் குறுகியது. அது நடந்து விட்டால் இப்போதுள்ள நவீன இந்தியா என்பது இல்லாமல் போய்விடும். இடைக்காலத்தில் இருந்தது போன்ற ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு போர் நடத்திய பல்வேறு சிற்றரசுகளாக்ப் பிரிந்து விடும்”
சரி இதற்கு ஏதும் தீர்வை அம்பேத்கர் முன்வைக்கிறாரா? அவர் வைக்கும் தீர்வு இதுதான். “இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கான ஒரே வழி அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக அந்த வட்டார மொழி இருக்காது என அரசமைப்புச் சட்டத்தில் விதி ஒன்றை ஏற்படுத்துவதுதான். அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக இந்தி இருக்கும். அதற்குத் தயாராகும் வரை ஆங்கிலம் அந்தத் தேவையை நிறைவு செய்யும்” (“ The only way I can think of meeting the danger is to provide in the Constitution that the regional language shall not be the official language of the State. The official language of the State shall be Hindi and until India becomes fit for this purpose English”) இதை இந்தியர்கள் ஏற்பார்களா? ஏற்காவிட்டால் மாநிலங்கள் என்பது பேராபத்தாகிவிடும் என்று அம்பேத்கர் எச்சரிக்கிறார்.(“Will Indians accept this? If they do not, linguistic States may easily become a peril”)
எமெர்ஜென்சி காலத்தில் ஒரு சட்டத்திருத்ததின் மூலம் (42வது திருத்தம்) அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை மட்டுமல்ல, பிரிவுகள் (articles) 31, 31C, 39, 55, 74, 77, 81, 82, 83, 100, 102, 103, 105, 118, 145, 150, 166, 170, 172, 189, 191, 192, 194, 208, 217, 225, 226, 227, 228, 311, 312, 330, 352, 353, 356, 357, 358, 359, 366, 368 371F ஆகியவையும் ஏழாவது அட்டவணையையும் மாற்றப்பட்டது. அப்போதுதான் முகவுரையில் சோஷலிஸ்ட், செக்க்யூலர் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
இந்த வார்த்தைகளை அரசமைபுச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து அரசமைபுச் சட்டம் உருவாக்கப்பட்ட போதே முன் வைக்கப்பட்டது. சோஷலிஸ்ட், செக்யூலர், ஃபெடரெல் என்ற வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று கே.டி.ஷா என்ற உறுப்பினர் தீர்மானம் கொண்fடு வந்த போது அதை அம்பேத்கர் நிராகரித்தார்.”எந்த மாதிரியான சமுக அமைப்பில் வாழ வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளும் மக்களின் சுதந்திரத்தை அது பறித்துவிடும் என்று அவர் சொன்னார் (Constituent Assembly of India Vol VII 15th Nov 1948)
அரசமைப்புச் சட்டத்தைக் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்ற யோசனைகள் வாஜ்பாய் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கிடாசலய்யா தலைமையில், சோலி சொராப்ஜி, பராசரன் ஆகியோர் கொண்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை
இவை எல்லாம் அரசமைப்புச் சட்டம் நாட்டின் தேவைகளை மக்களின் விருப்பங்களை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை என்பதையே காட்டுகின்றன. அதில் மேலும் மேலும் திருத்தங்கள் செய்து கொண்டிராமல், பழைய கிழிந்த சட்டையில் மேலும் மேலும் ஒட்டுப் போட்டுக் கொண்டிருக்காமல், புதிதாக ஓர் அரசமைப்புச் சட்டம் இயற்ற வேண்டும். குறைந்தபட்சம் அதற்கான விவாதங்களையாவது தொடங்க வேண்டும்.
அப்பன் தோண்டிய கிணறு என்பதற்காக எத்தனை காலம் உப்புத் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?.
11.12.2020
One thought on “தைக்க வேண்டும் புதிய சட்டை”
Wonderful sir.