என் அண்டைவீட்டுக்காரர் மரங்களின் காதலர்.எங்கள் குடியிருப்பு உருவான போது தெருக்கள் தோறும் மரங்கள் நட முயற்சி மேற்கொண்டவர்.நேற்றுப் பார்க்கிறேன், அவர் ஒரு அரிவாளை எடுத்து மரத்தின் சில கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். “என்ன சார் ஆச்சு உங்களுக்கு? மரம் வெட்ட ஆரம்பிச்சிட்டீங்க?” அதுவும் இந்தக் கோடைகாலத்தில்?” என்றேன்.
அவர் புன்னகைத்தார்.”இரண்டு காரணங்கள்” என்றார் புறங்கையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டு. “இதற்குப் பெயர் வெட்டறது இல்ல சார். தரிக்கிறது.விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவங்களைக் கேட்டால் சொல்வார்கள்.சில மரங்கள் தரித்தால்தான் தழைக்கும். அதுவும் தவிர வீட்டை இடிக்கிற அளவிற்கு மரம் வளர்ந்திருச்சினா, அதைத் தரிக்காமல் என்ன செய்வது,சொல்லுங்க” என்றார்.
என்ன சொல்வது? புன்னகைத்துக் கொண்டே திரும்பினேன். “பயப்படாதீங்க, வேர அறுத்திற மாட்டேன். எனக்கும் மரங்கள் பிடிக்கும்” என்று அவர் சொன்னது முதுகுக்குப் பின் கேட்டது.
உள்ளே வந்து செய்தித் தாளைப் புரட்டத் துவங்கினேன். திடீரென்று மனதில் மின்னல் வெட்டியது. தேர்தல் ஆணையம் செய்வதும் இந்தத் தரித்தல்தானோ? ஜனநாயகம் தழைப்பதற்கான தரித்தல்.
நாட்டை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் நாம் ஜனநாயகத்தை வரித்துக் கொண்டோம். விடுதலை அடைந்த விடியற்காலை வேளையில், வயது வந்த மக்கள் அனைவருக்கும் வாக்கு என நம் அரசியல் அமைப்புச் சட்டம் அறிவித்தபோது உலகம் திகைத்தது. ஏளனமாகச் சிரித்தவர்கள் கூட உண்டு. நம் நாட்டுப் பத்திரிகைகளே கூட முடிவு சரிதானா எனக் கேள்விகள் எழுப்பின. அந்த சந்தேகங்களுக்கும் கேலிக்கும் காரணங்கள் இருந்தன.
அன்று -1947ல்- நம் நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை வெறும் 12 சதவீதம். வறுமையில் வாழ்ந்தவர்கள் 77 சதவீதம். படிப்பும் இல்லாத பணமும் இல்லாத மக்கள் கையில் ஓட்டுச் சீட்டைக் கொடுத்தால் அதை அவர்கள் விற்றுவிட மாட்டார்களா? பணம் படைத்தவர்கள் அதைக் காசைக் கொட்டிக் கொள்முதல் செய்துவிட மாட்டார்களா எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அரசியல் சட்டத்தை யாத்த அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் அந்த வாதங்கள் அர்த்தமற்றவை என ஒதுக்கித் தள்ளினார்கள். ஏழைகள் கையில் அதிகாரத்தைக் கொடுப்பதுதான் அவர்களை முன்னேற்றுவதற்கான வழி என நம்பினார்கள்.அப்படிக் கொடுக்கப்படாவிட்டால் நாளடைவில் அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு நாடு நடைபோடும், அது அறமல்ல என அவர்கள் எண்ணினார்கள்.
படிப்பறிவற்ற அந்த ஏழைகள்-அவர்களும் நம் முன்னோர்கள்தான் – எங்களிடம் காசு இல்லாவிட்டால் என்ன நாணயம் இருக்கிறது என்பதை மெய்ப்பித்தார்கள். நீண்டகாலத்திற்கு இங்கே ஓட்டுக்கு நோட்டு என்ற பேச்சே இல்லை.
இன்று இது படித்தவர்களின் தேசம். 74 சதவீதம் பேர் படித்தவர்கள் (இளைஞர்களில் 82 சதவீதம்).கல்வி நமக்கு ஞானத்தைக் கொடுத்ததோ இல்லையோ, வறுமையை வெல்கிற வாய்ப்பைக் கொடுத்தது. 59 சதவீத மக்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.இன்று எந்த இளைஞனும் தன் தந்தையைவிடக் கல்வியிலும் பொருளாதாரத்தில் மேம்பட்டே இருக்கிறான்.
ஆனால் என்ன விசித்திரம்!நோட்டுக்கு ஓட்டு எனப் பேரங்கள் பகிரங்கமாக நடக்கின்றன. எந்தக் கட்சி எவ்வளவு தரும் என ஊகங்கள் உலவுகின்றன. இலவசங்கள் என்ற பெயரில் ஏழ்மையைக் குறி வைத்து ஏலங்கள் நடக்கின்றன. இரண்டு வரியில் சொல்வதானால் இந்திய ஜனநாயகத்தின் இத்தனை ஆண்டுகளில் நாடு நிமிர்ந்திருக்கிறது, சமூகம் வீழ்ந்து கிடக்கிறது.
திசைமாறிவிட்ட ஜனநாயகத்தைத் திருத்துவதற்கு நேரம் வந்திருக்கிறது. அரிவாள் எடுப்படுதற்குச் சரியான நேரம். தழைக்கச் செய்வதற்காக தரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
பணத்தின் ஆட்சியைக் கட்டுப்படுத்த வேன்டுமானால் பணத்தின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பாலபாடம். அதைத்தான் செய்கிறது தேர்தல் ஆணையம். பணத்தை யாரும் அவரவர் வீட்டில் அச்சடிக்க முடியாது. எதையோ விற்று, அல்லது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துத்தான் அது புழக்கத்திற்கு வருகிறது.நேர்மையான பணத்திற்கு பில்லோ, ரசீதோ, புரோநோட்டோ, வங்கிச் சீட்டோ ஏதோ ஒரு ஆதாரம் இருக்கும். எங்கிருந்து வந்தது என ஆதாரம் காட்டுங்கள், விட்டுவிடுகிறோம் எனச் சொல்கிறது ஆணையம். கணக்குக் காட்ட முடியாத கள்ளப் பணம் என்றால் அதற்கு வரிகட்டிவிட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறது. என்ன தவறு இதில்?
ஆனால் பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு போகிறவனிடம் கூட பறிமுதல் செய்து விடுகிறது ஆணையம் என ஒரு தலைவர் அகடவிகடம் பேசுகிறார். ஒரு லட்ச ரூபாய் வரை எடுத்துச் செல்லலாம் என அனுமதித்திருக்கிறது என்பதை வசதியாக மறைத்து வாய் ஜாலம் காட்டுகிறார்.
அரசியல்மயமாகிவிட்ட அதிகாரிகளை ஓரம் கட்டுகிறது. யார் வீட்டுப் பிள்ளையானாலும் நேர் வழியில் நடக்கவில்லை என்றால் நடவடிக்கை நிச்சயம் என்கிறது ஆணையம். நேர்மையான தேர்தலுக்கு இவை நிச்சயம் தேவை. ஆனால் ‘ஐயோ!எமெர்ஜென்சி’ எனக் கூச்சலிடுகிறார் முதல்வர். எமெர்ஜென்சியின் போது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன. இன்று கள்ளப்பணத்தைத் தவிர எதுவும் பறிக்கப்படவில்லை. ஒருவேளை ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், பெறுவதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று என அவர் கருதுகிறாரோ? எமெர்ஜென்சியின் போது கருத்துரிமை முடக்கப்பட்டது. இன்று காணும் இடமெல்லாம் காமெடியன்கள் கருத்துரிமைக்கு ஏதும் காயம் ஏற்பட்டுவிடவில்லை என மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். எமெர்ஜென்சியின் போது எதிர்கட்சித் தலைவர்கள் – அவர்கள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும்- சிறைக்குள் இருந்தார்கள். இன்று தெம்பிருக்கும் தலைவரெல்லாம் திசையெட்டும் சென்று வாகனக் கூரைகளிலிருந்து வாக்குக் கேட்கிறார்கள். எமெர்ஜென்சி அரசியல் சட்டத்தை முடமாக்கியது. இன்று அரசியல் சட்டம் அளித்திருக்கிற வாக்குரிமையை செயல்படுத்த இருக்கிறோம். இன்றைய நிலையை எமர்ஜென்சி எனச் சொல்பவர்கள் ஒன்று எமெர்ஜென்சி பற்றி ஏதும் அறியாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது நெஞ்சறிந்து பொய் சொல்லும் நேர்மையற்றவர்களாக இருக்க வேண்டும்.
பெரிய இடத்திலிருந்து வீசப்படும் அக்னிக் கணைகளுக்கு அஞ்சாமல், எந்த நிர்பந்தத்திற்கும் நெகிழ்ந்து கொடுக்காமல், இயங்கி வருகிறது ஆணையம்.
துணிச்சலாகத் தொடர்ந்து செல்லுங்கள். நாடு, நம்பிக்கையோடு உங்கள் பின்னால் நிற்கிறது.