திராவிடத்தின் எதிர்காலம்:
திராவிடம் என்பது இன்று மொழிகளை, இனத்தை, கட்சிகளைக் குறிக்கும் ஓர் பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது. ஆனால் அதை ஓர் பண்புத் தொகையாகவே நான் பார்க்கிறேன். இந்திய அரசியலில் அது சில பண்புகளை, இலட்சியங்களைக் குறித்த சொல்.
மையப்படுததப்பட்ட அரசியல் அதிகாரம், சுய அடையாளங்களைத் துறந்து ஓர் பொது அடையாளத்தை மேற்கொள்ள வற்புறுத்தும் கலாசார ஆதிக்கம் (hegemony), பிறப்பின் அடிப்படையில் ஒருவருக்கு சிறப்புகள் ஏற்படுகிறது, அதனால் அவர் அரசு, கல்வி, வழிபாடு ஆகியவற்றில் முன்னுரிமை பெற்றவராகிறார் என்ற கருத்தாக்கம் ஆகியவற்றை நிராகரித்து, அனைவருக்கும் சம உரிமை, சமநீதி கோரும் சமத்துவம் ஆகிய சிந்தனைகளின் அடையாளமாக உருவானது திராவிடம் என்ற கருத்தியல். சுருக்கமாச் சொன்னால் அது மேட்டுக்குடி மனோபாவத்திற்கு எதிரான, நிறுவனமயமான அதிகாரத்திற்கு எதிரான, சமூகத்தில் நிலவிவரும் மரபுகளுக்கெதிரான (anti-elite, anti establishment, anti status quo) ஓர் முற்போக்குச் சிந்தனை
தமிழர்களுக்கான தனி அடையாளம், அந்த அடையாளத்தின் பேரில் மரியாதை ஆகியவற்றிற்கான விழைவு, இவற்றால் உருவான சித்தாந்தம் அது
தமிழ், தமிழ்ச் சமூகம் என்பதைக் குறிக்க அரசியல் இயக்கங்களால் திராவிடம் என்ற சொல் நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், அது தமிழ்ச் சொல் அல்ல. ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத நூலில் (தந்திரவார்த்திகா) தமிழைக் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொல்லை பயனுக்குக் கொண்டு வந்தவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியார். திருநெல்வேலி பிஷப்பாகப் பணியாற்றியவர். திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் என கமில் ஸ்வலபில் போனறவர்கள் கருதுகிறார்கள் என்றாலும், கால்டுவெல் தனது ஆராய்ச்சியின் மூலம் ஆணித்தரமாக நிறுவிய ஒரு கருத்துத் ( தமிழ் என்ற திராவிடமொழி, பல இந்திய மொழிகளைப் போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது அல்ல, சம்ஸ்கிருதத்தைச் சார்ந்திராமல் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டது, மிகத் தொன்மையானது என்ற கருத்துத்தான் திராவிடம் என்ற அரசியல் கருத்தாக்கத்திற்கு ஆணிவேராகத் திகழ்ந்து வருகிறது.
வட இந்திய மொழிகள் சம்ஸ்கிருத்தின் வேரொட்டிக் கிளைத்தவை என்பதால் அந்த மொழி பேசும் வட இந்தியர்களின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்ப்பது, இந்திய தேசியம் என்ற கருத்தியல் சுய அடையாளங்களுக்கு மாற்றாக ஓர் பொது அடையாளத்தை வற்புறுத்துவதால் அந்தக் கருத்தியலை எதிர்ப்பது, வேதங்கள் சமஸ்கிருதத்தைக் கொண்டு எழுதப்பட்டிருப்பதால் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதிக மரபை எதிர்ப்பது, வேதத்தையும் சமஸ்கிருத்தையும் ஆராதிக்கும் பிராமணர்களை எதிர்ப்பது, வேதத்தின் ஒரு அங்கமான புருஷ சுக்தம் (ரிக் வேதத்தின் 10 மண்டலத்தில் 90வது சுக்தம்) பிறப்பின் அடிப்படையில் ஜாதி பேதங்களை நியாயப்படுத்துவதால் வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பது என்பவை திராவிடம் என்ற கருத்தியலின் அடிப்படைகளாக இருந்தன. இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு ஆகியவை அதன் சாரம்.
காங்கிரஸ் கட்சி வட இந்தியத் தலைவர்களின் செல்வாக்கிலும், தமிழ்நாட்டில் அது ராஜாஜி என்ற பிராமணரின் பிடியிலும் சிக்குண்ட காலத்தில், காங்கிரசிலிருந்து வெளியேறி அதை எதிர்க்க முற்பட்ட பெரியாருக்கு இந்தக் கருத்தியல் ஏதுவாக இருந்தது. ஆனால் வாக்குகளைச் சார்ந்தியங்கும் அரசியலில் இந்தக் கருத்தியலைக் கொண்டு அவரால் பெரும் தாக்கததை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் இதைக் கொண்டு சமூகத்தில் அவர் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் கணிசமானவையும், முக்கியமானவையும் மட்டுமல்ல, நிலைத்த தன்மையைக் கொண்டவையும் கூட. அவை தமிழர்களின் அடையாளத்தையும் (identity) சுயமரியாதையையும் நிறுவின.
ஆனால் வாக்குகளைக் கோரி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பெறும் நாடாளுமன்ற அரசியல் முறையை ஏற்று, சமூக இயக்கம் என்ற நிலையிலிருந்து மாறி அரசியல் கட்சிகளாகத் திராவிட இயக்கங்கள் செயல்படத் துவங்கியபோது, திராவிடம் என்ற சித்தாந்தம் நலிவடையத் தொடங்கியது..
மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் என்பதற்கு மாற்றாகத் தோன்றிய தனிநாடுக் கொள்கை கைவிடப்பட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதாக மாறி இன்று மத்தியில் கூட்டணி அரசில் பங்கேற்பது என்றாகிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்த போது இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்களில் சில (உதாரணம் கல்வி) மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசும் பங்கேற்கும் வகையில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது திராவிட அரசியல் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதுதான் நிகழ்ந்தது. இது வரை மாநிலங்களின் கையில் இருந்த விற்பனை வரி மதிப்புக் கூட்டப்பட்ட வரியாக(VAT) மாறியதும் திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில்தான். குறைந்தபட்சம் கட்சிக்குள் கூட அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லை என்பதை திமுக அதிமுக ஆகிய கட்சிகளில் பார்க்கலாம். வடவர் எதிர்ப்பு என்பது நேருவின் மகளே வா, நிலையான ஆட்சி தா என்ற அரசியல் முழக்கத்தின் மூலம் சமரசத்திற்குள்ளானது. டால்மியா புரம் என ஒரு வட இந்தியரின் பெயரை தமிழ்நாட்டிலுள்ள கிராமம் ஒன்றிற்குச் சூட்டுவதை எதிர்த்துத் தண்டவாளத்தில் தலைவைக்கத் துணிந்த காலங்கள் பழங்கதையாகி, இன்று மகேந்திராசிட்டிகள் உருவாகிவிட்டன. நெய்வேலியில், தமிழ் மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்படும் நிலக்கரிக்கு மத்திய அரசு ராயல்டி வழங்க வேண்டும் எனப் போராடிப் பெற்றது ஒரு காலம். டாடாக்கள் டைடானியம் ஆக்சைட் ஆலை நிறுவ அரசே முன்னின்று நிலம் கையகப்படுத்திக் கொடுப்பதுதான் இன்றைய நிஜம்.இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக ஆங்கில மோகத்திற்கு இட்டுச் சென்றுவிட்டதையும் பார்க்கிறோம். பம்பாயும், கல்கத்தாவும், டிரிவாண்ட்ரமும், பெங்களூரும் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பே மதறாஸ் சென்னை ஆகிவிட்டது.ஆனால் திமுக தலைவரின் குடும்பத்தினர் அவரையும் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கியபோது அது சன் டிவியாகத்தான் மலர்ந்தது.பிராமணப் பெண்ணாகப் பிறந்த ஒருவரை, நான் பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்த ஒருவரைத் தலைவியாக ஏற்றுக் கொண்டுவிட்டது ஒரு திராவிடக் கட்சி. இன்னொரு புறம், பிறப்பினால் ஒருவருக்குச் சிறப்புக்கள் சேர்வதில்லை என்று வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள், அரசியல் அனுபவம் இல்லாத போதும் தங்கள் மகளையும், பேரனையும், மகனையும் கொல்லைப்புற வழியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிடம் என்ற சித்தாந்தம் அது தோன்றிய போதிருந்த வீரியத்தை காலப்போக்கில் வாக்கு வாங்கும் அரசியலின் நிர்பந்தங்களுக்குப் பணிந்து நீர்த்துவிட்டது.காந்தியம், மார்க்சியம் போன்ற சித்தாந்தங்கள் அரசு செய்ய அதிகாரம் பெற்ற போது சந்தித்த திரிபுகளையும், சமரசங்களையும் திராவிடமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில், திராவிடத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?உலகமயமாக்கல் என்பது நம் தோள்களில் ஏறிக் குந்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் முன்னெப்போதையும் விட அதிகாரப் பரவாலாக்கல், சுய அடையாளங்களைப் பேணுதல், புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் உரிமைகளை மீட்டுத் தருதல் ஆகியவற்றிற்குத் தேவை இருக்கிறது அதாவது திராவிடம் தன் வேர்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் திராவிடத்தின் எதிர்காலம் அது தன் கடந்த காலத்திற்குத் திரும்புவதைப் பொறுத்திருக்கிறது.
ஆனால் ஆட்சி அதிகாரத்தை குடும்பத்தார் வசம் ஒப்படைப்பதன் பொருட்டு, ‘எப்படியாவது’ தக்கவைத்துக் கொள்வது என்ற ஆசைகள் அதனை ஓர் வீர்யமிக்க சமுக இயக்கமாகச் செயல்பட அனுமதிக்குமா என்பது பெரிய கேள்விக் குறி. இதற்கு விடைகாண்பதிலேயே அதன் எதிர்காலம் ம்றைந்திருக்கிறது.
3 thoughts on “திராவிடத்தின் எதிர்காலம்”
அருமை. செழுமையான கட்டுரை
Super exicted to see more of this kind of stuff online.
திராவிட கருத்தியல் தேவையின் கருதி தேர்த்லில் பங்கேர்க்காத மக்கள் இயக்கங்களாக ஒன்று உருவாக வேண்டும் அது திராவிட கட்சிகளை எதிர்ப்பதாவும் இருக்க வேண்டும்