வினோத விலங்கு ஒன்றின் பிளிறலைப் போல இரைந்து கொண்டு, என் ஜன்னலுக்கு வெளியே ஒரு ஆம்புலன்ஸ் விரைந்தது. அது போன்ற ஆம்புலன்ஸ் ஒலிகளைக் கேட்க நேரும் போதெல்லாம் நான் ‘இறைவா அந்த உயிரைக் காப்பாற்று’ என்று எனக்குள் மெளனமாகச் சில நொடிகள் பிரார்த்திப்பது உண்டு. அது நான் புதிய தலைமுறை வாசகர் ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்ட வழக்கம். முன்பு ஒரு முறை வாசகர் ஒருவர் தான் இதைப் போலச் செய்து வருவதாக எழுதிய கடிதத்தைப் படித்த நாளிலிருந்து இதை நான் பின்பற்றி வருகிறேன். பிரார்த்தனைகளை விடப் பெரிய மருத்துவம் எதுவுமில்லை
யோசித்துப் பார்த்தால் மரணம் என்பது குறித்து நாம் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அநேகமாக நாம் எவரும் மரிப்பதில்லை. நம் உடல் உயிரைப் பிரிந்த பின்னரும் நாம் எங்கேயோ, எவருடைய நினைவிலேயோ எண்ணங்களாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.அப்படி யாருடைய நினைவிலும் தங்க முடியாது போகுமானால் அதுதான் மரணம். தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் என் வள்ளுவன் சொன்னதற்கு இதுதான் அர்த்தமாக இருக்க முடியும். எச்சம் என அவர் சொல்வது நாம் எதை விட்டுச் செல்கிறோம் என்பதைத்தான்.அது வாரிசுகளாகவோ, செல்வமாகவோ, படைப்புகளாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது நாம் விட்டுச் செல்லும் எண்ணங்களாகக் கூட இருக்கலாம்.
அதிலும் நம்மை முன் பின் அறியாதவர்களிடத்தில் நம்மைப் பற்றிய எண்ணத்தை விட்டுச் செல்வோமானால் அது எவ்வளவு கம்பீரமான வாழ்க்கை!. முன் பின் தெரியாதவர்களிடத்தில் எப்படி நம்மை பற்றிய எண்ணங்களை விட்டுச் செல்ல முடியும்? முடியும், நண்பர்களே முடியும். தங்கள் மரணத்திற்குப் பின் தங்கள் உறுப்புக்களை மற்றவர்களுக்குத் தானம் செய்யும் மனிதர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உயிர் பிரிந்து விட்டது. ஆனால் அவர்களது உடலின் ஒரு பகுதி, ஏதோ ஒரு உறுப்பு வாழ்கிறது, இன்னொருவரிடத்தில். அவர்களும் வாழ்கிறார்கள், அந்த உறுப்பைத் தானமாகப் பெற்றவரின் நினைவில்.
கிருஷ்ண கோபால் என்கிற மருத்துவரின் இதயம் அவர் மறைவுக்குப் பின்னும் யாரோ ஒருவருக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது. அதே போல 11 வயது பள்ளி மாணவன் செளடேஷின் சிறுநீரகங்கள் இப்போது வேற்ய் இருவருக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.துரதிருஷ்டவசமாகக் கொலையுண்ட ராதாகிருஷ்ணனின் கல்லீரல் இன்னொருவரின் உடலில் இயங்கிக் கொண்டிருக்கிறது எனப் பட்டியலிடுகிறது இன்றைய நாளிதழ்.
மனிதர்கள் செய்கிற கொடைகளிலேயே மிகச் சிறந்த கொடை கல்வி. அதற்கு அடுத்த கொடை தன்னையே தருவது.
இந்தியாவிலேயே தமிழகம் இதில் மற்றெவரையும் விட விஞ்சி நிற்கிறது. உறுப்பு தானத்தில் தேசிய சராசரியை விடப் 15 மடங்கு மேலாக இருக்கிறது தமிழகம். உறுப்பு தானம் செய்வதற்கான பதிவகம் மூன்றாண்டுகளுக்கு முன் 2008ல் துவக்கப்பட்டது. இந்த மார்ச் 31ம் தேதி வரை ஆயிரம் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
இந்த தானத்திற்கு ஆதரமாக இருந்தவர்கள் உயிரை இழந்தவர்களின் நெருங்கிய உறவுகள். பெரும் சோகம் அவர்களைப் பிழிந்து கொண்டு இருந்த நேரத்திலும் தரும் மனம் வாய்த்த அவர்கள் வணங்கத்தக்கவர்கள். சம்மதம் என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் இன்னொருவரின் வாழக்கையையே மாற்றி அமைத்தவர்கள்.
உயிர் தானே போயிற்று, உடலைத் தாருங்கள் என உறவுகளிடம் எடுத்துச் சொல்லி அவர்களைச் சம்மதிக்கச் செய்யும் பணியாளர்களை துயரத்தை ஆற்றுபவர்கள் (grief counselors) என அழைக்கிறார்கள். உறுப்பு கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே எனச் சொல்லும் இவர்களை நாம் நவீன மணிமேகலைகள் என அழைப்போம். இன்று தானத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க இவர்களும் காரணம்.
நாட்டிலேயே நாம் முதலிடத்தில் இருக்கிறோம் .மகிழ்ச்சி. ஆனால் நாம் இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம், இந்தக் கொடையை இன்னும் அதிகமாக்க முடியும் என வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
சென்னை போன்ற நகரங்களிலேயே கூட, 80 சதவீதம் பேரின் இதயங்கள் பயன்படுத்தப்படாமல் போகின்றன. காரணம், போதுமான அளவு வல்லுநர்கள் இல்லை. சிறு நகரங்களில் கல்லீரல்கள் பயனற்றுப் போகின்றன. காரணம், உறுப்பு மாற்று சிகிச்சைகான வசதிகள் இல்லை.
இவையெல்லாம் சரி செய்ய முடியாத சிக்கல்கள் அல்ல. உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதற்குப் போதிய அளவு நவீன மணிமேகலைகளைப் பயிற்சி அளித்துத் தயார் செய்வது, உரிய எண்ணிக்கையில் வல்லுநர்களையும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்துவது இவற்றையெல்லாம் செய்ய ஒரு ‘மாஸ்டர் பிளானை’ தீட்டுவது என அரசு முயன்றால் நாம் பல உயிர்களைக் காக்கலாம்.
அப்போது இந்த ஆயிரம், பல மடங்காகும். எண்ணிக்கையை விடுங்கள். இந்தத் தமிழ் மண் எத்தனையோ பேருக்குப் புதிதாய் உயிர் கொடுத்தது எனப் பல இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளிபடருமே அதற்கு வேறு ஈடு உண்டா?