எத்தனை பேர் கூடியிருந்தாலும் அங்குள்ள திருநெல்வேலிக்காரர்களை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். தேசபக்தி, தமிழ் மீது காதல், வரலாற்றின் மீது ஆர்வம், பிறந்த மண் மீது பெருமிதம் இவை அவர்களிடம் ததும்பி நிற்கும். அது அவர்களுடைய பூர்வீகச் சொத்து. சொந்த ஊரை விட்டு எந்த ஊர் போனாலும், எத்தனை தூரம் போனாலும் அது அவர்கள் கூடவே வரும்.
அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. தமிழர்களின் நாகரீகம் இங்குதான் ஆரம்பமானதற்கு அடையாளாமாக ஆதிச்சநல்லூர் இருக்கிறது. பொதிகையில்தான் தமிழ் பிறந்தது எனச் சொல்கிற புராணங்களைப் பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த மலையில் வசித்த அகத்தியன் ’நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்’ என்ற பாரதியின் சாட்சியத்தைப் பழங்கதை எனப் புறந்தள்ளிவிட்டாலும், “தண்ணார்தமிழளிக்கும்தண்பாண்டிநாட்டான்“எனத் திருவாசகம் செய்த மணிவாசகரை மறந்து விட்டாலும், பாரதியையும் புதுமைப்பித்தனையுமா மறுத்து விட முடியும்?
கல்லிடைக்குறிச்சி நீலகண்டனும் (சாஸ்திரியை விட்டு விடலாமே) கால்டுவெல்லும் தந்ததுதானே தமிழனின் சரித்திரம்? ஆனால் வரலாற்றை வார்த்தைகளில் பதிந்த சாதாரணத் திருநெல்வேலித் தமிழர்கள் பலர். ’ஆராய்ச்சி’ வானமாமலை தேடித் திரட்டித் தந்த நட்டார் பாடல்களில் வாய்மொழியாக வழங்கிய கட்டபொம்மன், பூலித்தேவர், கான்சாகிப் (மருதநாயகம்) சரித்திரங்கள் இதற்கு சாட்சி. மலையேறு சின்னுநாயக்கர் என்பவர் பாடிய “கட்டபொம்மு சண்டைக்கும்மி” இன்னொரு சான்று.
ஆனால் நாட்டார் பாடல்கள் சொல்லும் வரலாற்றை அறிஞர் பெருமக்கள் ‘ஆவணத் தகுதி இல்லாத’ வீரக் கதை, legend என ஒதுக்கிவிடுவார்கள். இலக்கியவாதிகளோ அதைச் சிற்றிலக்கிய வகையில் சேர்த்து விடுவார்கள்.
கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனாரின் பாஞ்சாலங்குறிச்சிச் சரித்திரம் நாம் சந்தித்து வந்திருக்கிற சரித்திரங்களிலேயே வித்தியாசமானது. மோனை ததும்பும் கவிதை நடையில், அதே நேரம், நாள், கிழமை, நேரம், இடம் ஆகிய ஆவண விவரங்களோடு சரித்திரத்தை எழுதிச் செல்லும் தனித்துவமான நூலாசிரியர் அவர். ஓர் உதாரணம்.
”முன்னும் பின்னும் படைகள் தொடர்ந்து அடலுடன் செல்லப், பல்லியம் முழங்க,கானம் ஊத, வழியிடை நீளக் கண்டவர் எவரும் கை குவித்து நின்று மண்டலாபதியே என வணங்கி வாழ்த்தத் தண்டிகை நடந்தது. அங்கனம் சென்ற காலம், கொல்லம் ஆண்டு 974 காலசுத்தி வருடம், ஆவணி மாதம் ஒன்பதாம் தெய்தி வியாழக்கிழமை, தசமி திதி என்க. இது கி.பி. (24-8-1798) ஆகும்.”
கட்டபொம்மன் என்ற போராளியைப் பற்றிப் பரவலாக அறிந்து கொள்ளக் காரணமாக இருந்தது, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களைப் பேசி, சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டியக் கட்ட பொம்மன் என்ற 1959ல் வெளிவந்த திரைப்படம். வசனங்களுக்குப் பெயர் பெற்ற அந்தப் படத்தின் வரிகள் பலவற்றுக்கு மூலம் ஜெகவீரபாண்டியனாரின் பாடல்கள். ”வானம் பொழியுது பூமி விளையுது, உனக்கேன் கொடுப்பது வரி?” என்ற பிரபலமான வசனத்தின் ஊற்றுக் கண்
வானம்மாமழைபொழிதரமாநிலம்விளைய
ஆனபேரரசுயான்புரந்தருளுவன்இடையே
ஊனமாகவந்தொருவரிதருகவென்றுரைத்தாய்
தானம்என்னிலோதருகுவன்வரிஎனில்தாரேன்
என்ற பாடல் என ம.பொ.சி விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு என்ற நூலில் சுட்டிக் காட்டுகிறார்
கட்டபொம்மன் என்றே நாட்டுப்பாடல்களிலும் தெருக்கூத்திலும், நாடகங்களிலும், கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்களிலும் (Cataboma Naig) குறிப்பிடப்பட்டு வந்தவரது உண்மையான பெயர் (அரியணை ஏறிய போது சூட்டப்பட்ட பெயர்) வீரபாண்டியன்என்பதைக் குறிப்பிட்டவர் ஜெகவீரபாண்டியனார்தான்.அது மட்டுமன்றி அவருக்கு முன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட அவரது 46 முன்னோர்களையும் அவர்கள் ஆட்சிக்காலத்தையும், அவர்களது பணிகளையும் பட்டியலிட்டுத் தொகுத்தவர் அவர்.
ஆனால் திரைப்படக் குழுவினர் வீரபாண்டியன் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவரது பெயரை இருட்டடிப்புச் செய்து விட்டனர். “வீரபாண்டியன் என்ற பெயரே யாருக்கும் தெரியாது. பெயர் முதலிய இயல்களைக் கரவாய்க் கவர்ந்து உரிமையைக் கடந்து சிறுமை புரிந்திருப்பது நன்றி கொன்ற செயலே” என மனம் வெதும்பி எழுதுகிறார் ஜெகவீரபாண்டியனார் (இரண்டாம் பதிப்பின் குறிப்பு)
திரைப்படத்தின் காரணமாக கட்டபொம்மன் வரலாற்றை நாடறியும். ஆனால் 1799ம் ஆண்டு கயத்தாற்றில் அவர் தூக்கிலிடப்பட்டபின் என்ன நடந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஊமைத்துரை என்று அறியப்படும் (உண்மையில் அவர் ஊமை அல்ல) அவரது தம்பி தளவாய் குமாரசாமி பாளையங்கோட்டையில் சிறை வைக்கப்பட்டதும் அந்தச் சிறையை உடைத்து அவர் வெளி வந்ததும், ஐந்து நாட்களில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை மீண்டும் எழுப்பியதும் திரைப்படங்களை விட சுவாரஸ்யமான வரலாறு
ஆங்கிலேயர்களின் ஆவணங்களை மேற்கோள் காட்டி அந்த வரலாறு இந் நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது போன்ற காரணங்களால் இது தமிழின் குறிப்பிடத் தக்க வரலாற்று நூல். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் (1950களுக்கு முன்,1947 வாக்கில்) வெளிவந்த இந்த நூலை இந்தத் தலைமுறையினரும் வாசிக்க ஏதுவாக மீள் பிரசுரம் செய்ய முனைந்திருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு தலைமுறையே நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அவரது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் உயிர்மைப் பதிப்பகத்திற்கும் நன்றி.
கே.எஸ்.ஆர் சமூகத்திற்குப் பயனுள்ள நூல்களைத் தொடர்ந்து தனது பொதிகை-பொருநை-கரிசல் அமைப்பு மூலம் தந்து கொண்டிருக்கிறார் . அவர் தந்துள்ள நூல்களில் இது ஓரு அரிய பொக்கிஷம்
’பாரதி’
சென்னை 41 மாலன்
7.12.2011
பாஞ்சலங்குறிச்சி சரித்திரம் நூலுக்கான முன்னுரை