பாரதி நினைவு நூற்றாண்டு
ஆணும் பெண்ணுமாக ஒர் இளம் ஜோடி என் ஜன்னலுக்கு வெளியே நடந்து கடக்கிறது.காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகிறவர்களாக இருக்கலாம். விரல்களைக் கோர்த்துக் கொள்ளுவதும், விழிகளால் சிரித்துக் கொள்வதும், முழங்கையைப் பற்றி முகத்தைத் தோளில் சாய்த்துக் கொள்வதும், சரிந்த தலையின் கேசத்தின் வாசத்தை முகர்வது போல் மூக்கை முகத்தருகே கொண்டு போவதும் அவர்கள் காதலர்கள் என்பதை ஓசையின்றி உணர்த்துகிறது.
பாரதி வாழ்ந்த காலத்தில் காதலர்கள் அல்ல, கணவன் மனைவி கூட இது போலக் கரம் கோர்த்துப் பொதுவெளியில் உலவ முடியாது. பொது வெளியில் மட்டுமல்ல, தனியார் தோட்டங்களில் கூட. செல்லம்மாள் எழுதுகிறார்:
“எட்டையபுரத்தில் அவ்வூர் மகாராஜா ஒரு மாந்தோட்டம் வைத்திருக்கின்றார். அங்கு உயர்ந்த ஜாதி ஒட்டு மரங்களும், உயர்ந்த பழ விருட்சங்களும் எல்லாத் தேசங்களிலிருந்தும் வரவழைத்துப் பயிரிட்டு வருகிறார்கள்.புஷ்பச் செடிகளும் ஏராளமாக உண்டு.
ராஜாத் தோட்டத்தில் உலாவுவதற்குப் பாரதியார் என்னையும் அழைத்தார். ஊராரின் கேலிக்குப் பயந்து நான். ‘ஊருக்குத் தகுந்தபடி அல்லவா இருக்க வேண்டும்? நமது ஊராருக்கு ஸ்திரீகள் வம்பளப்பதற்கு வெளியே செல்லலாமே தவிர கொண்ட கணவனுடன் வெளியே சாயங்காலம் உலாவச் செல்லக் கூடாதே?” என்றேன்.
“நம்முடைய மனிதர் தூஷிப்பதும் நமக்கு ஆனந்தமல்லவா? புறப்படு!” என்றார் பாரதியார்.
பாரதியார் எந்தக் காரியத்தைச் செய்யச் சொல்லி ஆக்ஞையிடுவாரோ அதன்படி தவறாது செய்ய வேண்டுமென்பது என் நோக்கம் –உறுதி… அவர் பேச்சுக்கு மறு பேச்சின்றி நானும் தோட்டம் பார்க்கப் புறப்பட்டேன்.வழக்கம் போல் இருவரும் கை கோர்த்துக் கொண்டு தெருக்களின் வழியே நடந்தோம்.சிலர். “ ஓகோ பைத்தியங்கள் எங்கோ உலாவப் போகிறதுகள் டோய்!” என்று கை தட்டிச் சிரிப்பார்கள்” (பாரதியார் சரித்திரம் –செல்லம்மாள் பாரதி)
வாழ்க்கை முழுதும் செல்லமாவிற்கு இருந்த பிரசினை இதுதான். அவருக்கு பாரதியார் மீது அளவற்ற காதல். ஆனால் அதை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியாத சூழல். ஊராரின் கேலிகளுக்கும் சமூகத்திற்கெதிரன ஒரு புரடசிக்காரனின் கலகத்திற்குமிடையில் மாட்டிக் கொண்ட ஓர் எளிய பெண் அவர்.
பாரதி கவிதை, இலக்கியம், மொழி, பத்திரிகை, அரசியல், சமூகம், மதம் எல்லாவற்றிலும் மாற்றத்தை விரும்பியவர். அதை வெளிப்படையாகப் பேசவும் வாய்ப்புக் கிடைத்த போது செயல்படுத்தவும் செய்தவர். செல்லம்மாள் சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றும்படி கட்டுப்படுத்தி வளர்க்கப்பட்ட பிராமணப் பெண். பாரதிக்கு உலகில் பல இடங்களிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த பத்திரிகைகளைப் படிக்கும் வழக்கமிருந்ததால் உலக நடப்பு, வரலாற்று அறிவு, இலக்கிய வாசிப்பு வழியாகக் கிடைத்த மனித மனங்கள் குறித்த ஞானம், பலருடன் பழகியதில் வாய்த்த அனுபவ அறிவு இவையெல்லாம் கிட்டியிருந்தன. திருமணத்தின் போது செல்லம்மாளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கிராமத்தில் வளர்ந்தவர். அவரது உலகம் அவருடன் வாழ்ந்த சொந்தக்காரர்கள்தான். இந்த இரு வேறு துருவங்களுக்கிடையே ஈர்ப்பும் காதலும் இருந்தது.
திருமணம் நடந்த போது பாரதிக்கு வயது 14. செல்லம்மாளுக்கு ஏழு.”பாரதியாருக்குப் பால்ய விவாகத்தில் அவ்வளவாகப் ப்ரியமில்லாவிடினும் ரசிக்கத் தக்க கேளிக்கைகள் மிகுதியாய் இருந்தமையால் விவாகத்தில் உற்சாகமாகவே காணப்பட்டார்” என்று எழுதுகிறார் செல்லம்மாள்.” ஆனால் பாரதிக்கு அந்த ‘இரண்டும் கெட்டான்’ வயதில் காம உண்ர்வுகள் கிளர்ந்திருந்தன.
“எந்தன் சித்தமே, மயக்கம் செய்யுதே காமப் பித்தமே,
உடல் கனலேறிய மெழுகாயின இனியாகிலும் அடி பாதகி
கட்டியணைத்து ஒரு முத்தமே தந்தால்
கை தொழுவேன் உன்னை நித்தமே”
என்று கல்யாணம் ஆன புதிதில் எல்லோர் முன்னிலையிலும் செல்லம்மாவைப் பார்த்துப் பாடுவார். செல்லம்மாள் நாணத்தால் உடல் குன்றிப் போவார் “எல்லோரையும் போல சாதாரணமான ஒரு கணவன் கிடைக்காமல் நமக்கென்று இப்படி ஒரு அபூர்வமான கணவன் வந்து வாய்க்க வேண்டுமா என்று துன்புறுவேன்” என்று எழுதுகிறார் செல்லமா
அவரது கணவ்ர் அசாதாரணமானவர் என்பதை அவருக்கு அச்சமூட்டும் விதத்தில் இளம் வயதிலேயே சொல்லி வைத்து விட்டார்கள். திருமணமான சில மாதங்களில் பாரதி படிக்க காசிக்குச் சென்று விட்டார்.. செல்லம்மாள் பிறந்த வீட்டில் இருந்தார். அப்போது அவரது தமக்கை கணவர் பாரதி எந்நேரமும் கைது செய்யப்படுவார் என்பது போல அவரிடம் சொல்கிறார். பதறிப் போய் செல்லமாள் காசியிலிருந்த பாரதிக்குத் தன் அண்ணன் உதவியுடன் கடிதம் எழுதுகிறார். அதற்கு பதில் எழுதும் பாரதி “எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு” என்றுதான் கடிதத்தைத் தொடங்குகிறார். கவனிக்க: மனைவிக்கு அல்ல. காதலிக்கு
பாரதி அந்தக் கால அந்தணர்கள் போல குடுமி வைத்துக் கொள்ளவில்லை. மாறாக மீசை வைத்துக் கொண்டார். பூணூல் அணியவிலை. தர்ப்பணம் முதலிய சடங்குகளைச் செய்வதில்லை.சகல ஜாதியாருடனும் சேர்ந்து உண்ணுவதுண்டு.இளம் பருவத்தில் அவர் நாத்திகராகவும் சில காலம் இருந்ததுண்டு
ஆனால் செல்லம்மாள் மடி, ஆசாரம் பார்ப்பவர். ஒரு முறை வீட்டில் எண்ணெய் காலியாகி விட்டபோது வேலைக்காரச் சிறுமியைக் கடைக்கு ஏவுகிறாள்.மழை பெய்து கொண்டிருக்கிறது என்ன கெட்டுப் போயிற்று, .மெழுகுவர்த்திகளை ஏற்றி வை என்கிறார் பாரதி. “எல்லோரும் எண்ணெய் விட்டு அகல் ஏற்றினால் நாம் மெழுகுவர்த்தி ஏற்றுவது! எல்லாம் கோணல். மீன் கொழுப்பு, தீட்டு!” லட்சுமி வருவாளா?” எனச் செல்லம்மாள் சண்டை போடுகிறார். பீங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் பாரதி. அவற்றைப் பயன்படுத்தினால் காசநோய் வரும் என்கிறார் செல்லம்மா.
இத்தனை முரண்பாடுகளுக்கு நடுவில் அவர்கள் வேதம் பற்றிப் பேசுகிறார்கள். குர்.ஆன் பற்றிப் பேசுகிறார்கள். சிறுகதையின் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். தாகூர் பற்றிப் பேசுகிறார்கள். மார்டன் ரிவ்யூவில் வந்த கதை பற்றி பாரதி சொல்கிறார். சமஸ்கிருதம் தெரியாமல் தப்பும் தவறுமாக சியாமளா தண்டகத்தை செல்லம்மாள் உருப்போடும் போது கடவுளை எந்த மொழியிலும் வணங்கலாம் என்று சொல்லி கற்பிக்கிறார் பாரதி
குழந்தைகள் மீது இருவரும் உயிரையே வைத்திருந்தார்கள். வெயில் படாத பாரதி வீட்டுக் கிணற்றின் தண்ணீர் காரணமாக குழந்தைக்கு ஜுரம் வந்த போது பராசக்தியிடம் சண்டைக்குப் போகிறார் பாரதி. குழந்தையின் உடல்நிலை கண்டு செல்லம்மாள் புழுப்போல் துடித்துப் போனதாக எழுதுகிறார் பாரதி. ஆனால் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன
பாரதிக்கு ஒரு முறை ஐரோப்பா பயணம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. ஆனால் செல்லம்மாள் பூரண கர்ப்பிணியாக இருக்கும் சமயத்தில் போக வேண்டாம் என்று முடிவு எடுத்துவிடுகிறார். அந்த அளவு அவருக்கு செல்லம்மாள் மீது ப்ரியம். செல்லம்மாவின் ப்ரியமும் அப்படிப்பட்டதுதான். பாரதி மறைவுக்குப் பின் தனது கஷ்டமான ஜீவனத்திற்கு நடுவில் பாரதியின் நூல்களை வெளியிட்டவர் செல்லம்மா. ‘தீப்பெட்டியினும் சாதாரணமாகத் தனது நூல்கள் கிடைக்க வேண்டும்’ என்பது பாரதியின் கனவு.
அவர்களுக்கிடையே சண்டையே வந்ததில்லையா? பல முறை வந்ததுண்டு. நிச்சயமற்ற வாழ்க்கையில் பணம்,நகைகள், சேமிப்பு இவைதான் பாதுகாப்பு என்று செல்லம்மாள் கருதினார். அழியும் பணத்தை விட அழியாத அழிவற்ற அறிவு மேல் என்று கருதிய பாரதி அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். பாரதியின் ‘ஆசாரமற்ற’ போக்கு செல்லம்மாளுக்குப் பிடிக்கவில்லை. செல்லம்மாளின் கட்டுப்பெட்டித்தனத்தின் மீது பாரதிக்குக் கோபம்.
இதனால் பிணக்குகள் ஏற்பட்டதுண்டு. உலகில் பிணக்குகள் இல்லாத தம்பதிகள் யார்? கரிக்கு நடுவே இருக்கும் கனல் போல் அந்தப் பிணக்குகளுக்கு நடுவே அவர்கள் காதல் ஒளிர்ந்தது.. “கணவன் மேல் அவதூறு சொல்பவர்களைக் கண்டால் எனக்குக் கோபம் வரும்.பிடிக்கவே பிடிக்காது. ஆனால் பொறுக்கமுடியாமல் போனால் கதவுடனாவது சொல்லிக் கொள்ளலாம் போலாகிறது” என்கிறார் செல்லம்மா
ஒரு முறை கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. “புத்தகம் போட வேண்டும் என்று சொன்னீர்களே, கையில் பணம் இருக்கும் போதே போட்டுவிட்டால் நல்லது” என்கிறார் செல்லம்மா. பாரதி அப்போது The fox and the golden tail என்று ஆங்கிலத்தில் கதை எழுத உட்கார்ந்திருக்கிறார். “தொந்தரவு செய்யாதே செய்தால் தலைமேல் துணியைப் போட்டுக் கொண்டு போய்விடுவேன்’ (சன்யாசி ஆகிவிடுவேன்) என்கிறார் பாரதி. “நீங்கள் இந்தப் பக்கம் போனால் நானும் அந்தப் பக்கம் போய்விடுகிறேன். இத்தனை கஷடம் எதற்கு? குழந்தைகளை யாராவது கவனித்துக் கொள்ளட்டும்” என்கிறார் செல்லம்மா வெடுக்கென்று. சண்டை வந்து விடுகிறது.
ஆனால் அன்று மாலையே புத்தகத்தை அச்சிற்குக் கொடுத்து விடுகிறார் பாரதி.. பின் சொல்கிறார்: “ பணம் இருந்துவிட்டால் செல்லம்மா உலகையே ஆண்டுவிடுவாள்.அது இல்லாததால் என்னைக் கட்டுப்படுத்துகிறாள்.. என் செல்லம்மாள் என் பிராணன்.என் செல்வம்.எல்லாம் அவள்தான். அவள் பாக்கியலஷ்மி!”
இதுதான் உயிர்த் தீயினில் வளர் ஜோதி!
One thought on “செல்லம்மாள் – பாரதி: சொல்லப்படாத ஒரு காதல் கதை”
மிக துல்லியம். விறுவிறுப்பான ஓட்டம்.விரிவோ திரிபோ இல்லாத பதிவு. மேலும் தாருங்கள்