எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல, உழைப்பாலும் ஆனது
எந்த இடத்தையும் அடைவதற்கல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாம் என்ற பிரகடனத்துடன் 70 களில் வாசகன் என்ற எனது சிற்றிதழ் வெளியானது. வணிக நோக்கம் கொண்ட வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக உருவானவை இலக்கியச் சிற்றேடுகள். 70கள், 80களில் அவை தமிழ் எழுத்துலகிற்கு அளித்துள்ள கொடைகள் அநேகம். (அன்று அந்த இலக்கியச் சிற்றேடுகள் உருவாக்கிய இலக்கிய வளத்தைப் பின்னர் வந்த இலக்கிய ஏடுகளும் பதிப்பகங்களும் வணிகமாக மாற்றி காசு பார்த்தன என்பது தனியாக விவாதிக்க வேண்டிய வரலாற்றுப் பிறழ்வு)
வணிக ஏடுகளுக்கு மாற்றாகத் தோன்றிய வாசகன், ஓரு நாளும் வணிகமாகிவிடக் கூடாதென்பதற்காக தனக்கென சில நெறிகளை வகுத்துக் கொண்டது. அந்த நெறிகளும் சிறுபத்திரிகை இயக்கங்களிலிருந்து கற்றுக் கொண்டவைதான். அவற்றில் முக்கியமானவை 1.இதழ் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், குறிப்பிட்ட பக்க எண்ணிக்கையில் வெளியாகாது.2.சந்தா கிடையாது. கடைகளில் கிடைக்காது. பதிந்து கொண்ட நண்பர்களுக்குத் தபாலில் மட்டுமே அனுப்பப்படும்3. குழு அரசியலில் வாசகன் ஈடுபடாது. இந்த சத்தியங்களை இறுதிவரை காத்து வந்தேன்.
ஆறு இதழ்கள் வரை சிறு சிறு பிரசுரங்களாக வந்து கொண்டிருந்த வாசகன் ஏழாவது இதழை ஒரு நூலாகக் கொண்டு வந்தது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. இலக்கியத் தரமான எழுத்துக்களுக்கு வாசகர் ஆதரவு இல்லை என வெகுஜனப் பத்திரிகைகள் மறைமுகமாகவும் நேரிடையாகவும் சொல்லிக் கொண்டிருந்தன. அதைச் சாக்கிட்டு பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதும் காமக் கதைகள் பாரம்பரியம் மிக்க தமிழ் இதழ்களில் தலையெடுத்து வந்தன. வாகர்களுக்கு இலக்கியத் தரமான எழுத்துக்கள் கிடைக்காததால்தான் அவர்கள் அதை வாசிப்பதில்லை என்பது என் நிலைப்பாடு. ஜெயகாந்தன் ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி எல்லோரும் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதிய போது வாசகர்கள் படிக்காமல் மூடி வைத்து விட்டார்களா என்பதுதான் என் கேள்வி. முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா முதலில் எது என்ற கேள்விக்கு விடை கண்டுவிடுவது எனத் தீர்மானித்தேன்.
இலக்கியச் சிற்றேடுகளில் தரமான சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த 11 இளைஞர்களின் கதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வருவது, அதை வெகுஜன வாசகர்களிடம் பிரபலமானவர்களைக் கொண்டு வெளியிடுவது. வரவேற்பு எப்படி எனப் பார்த்துவிடலாம் என நினைத்தேன்.
ஆதவன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, ஜெயபாரதி, வண்ணதாசன், இந்துமதி, மாலன் எம். சுப்ரமணியன், சிந்துஜா கபந்தன், கலாஶ்ரீ என 11 எழுத்தாளர்களின் ‘ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள்’ என்ற தொகுப்பு வாசகன் 7 ஆக வெளிவந்தது. சென்னை மைய நூலக அரங்கில் வெளியீடு. இயக்குநர் கே.பாலச்சந்தர் தலைமையில், சுஜாதா வெளியிட கரிச்சான் குஞ்சு பெற்றுக் கொண்டார். வாழ்த்துரை இசையமைப்பாளர் எம்.பி. ஶ்ரீநிவாசன். இந்திய சினிமாவில் இளைஞன் என்ற தலைப்பில் கமலஹாசன் சிறப்புரை.
அரங்கில் கூட்டம் அலைமோதியது 500 பிரதிகள் அச்சிட்டோம் 300 பிரதிகள் அன்றே விற்றுத் தீர்ந்தன. ஆனந்த விகடன் நிகழ்ச்சியைப் பற்றி எழுதியது,கல்கி நூலுக்கு விமர்சனம் எழுதியது. அவற்றையெல்லாம் விட முக்கியம் என் கேள்விக்கு விடை தெரிந்தது. செல்ல வேண்டிய திசை தெரிந்தது. தரமான எழுத்துக்களையும் வெகுஜன இதழ்களையும் இணைக்கும் பணியில் பின் வந்த காலங்களில் என்னைப் பிணைத்துக் கொண்டேன்.
வாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை. கறுப்பு மஞ்சள் வாடகைக்காரைக் கூட அமர்த்திக் கொள்ளவில்லை.அவர் தங்க விடுதி ஏதும் ஏற்பாடு செய்திருக்கவில்லை.பேசிக் கொண்டே சாலையைக் கடந்து பொது மருத்துவமனை வாயிலில் அமைந்திருந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து 21சி பேருந்தில் இருவரும் ஏறிக் கொண்டோம். காய்கறிக் கூடைகளும், பூக்கூடைகளும், பஸ்ஸில், ரயிலில் வந்தவர்களது பயண மூட்டைகளும் இடறிக் கொள்ளுமளவு ஏராளமாக இறைந்து கிடந்தன. எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டே வந்தோம். நெடிய உயரம் கொண்ட சுஜாதா கூரையில் தலை தட்டாமல் இருக்கச் சற்றே குனிந்து கொண்டே வந்தார். ஆனால் சற்றும் சலிக்காமல், சற்றும் சளைக்காமல் பேசிக் கொண்டே வந்தார். பேசிக் கொண்டே வந்தோம். பேசிக் கொண்டே மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகே இறங்கி பேசிக் கொண்டே அவரது மாமனார் வீட்டுக்குப் போய் விட்டு வந்தேன்.
மறுநாள் காலை அவரை பிருந்தாவன் எக்ஸ்பிரசில் (இரண்டாம் வகுப்பு சேர் கார்) ஏற்றிவிட்டபோது ஏகக் கூட்டம். திங்கள் கிழமை. பணிக்குத் திரும்பும் இளைஞர்களாலும் யுவதிகளாலும் பெட்டி நிறைந்திருந்தது. ஆட்டோகிராஃப் வாங்க ஓரு கூட்டம் அவரைச் சூழ்ந்து நின்றது. ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த என்னைக் காட்டி “தெரியுமா?” என்றார். விடை தெரியாமல் விழித்தவர்களைப் பார்த்து “ மாலன்!” என்றவர் “கணையாழி படியுங்க!” என்றார்.
எந்த வித பந்தாவும் இல்லாமல், “ஒரு டாக்சி கூடவா கொண்டு வரவில்லை?” என்று கேள்வி எழுப்பாமல், எங்களோடு இசைந்து பழகிய சுஜாதாவிற்குள் இருந்த மனிதனை எனக்குப் பிடித்துப் போனது
சா |
வி பத்திரிகையின் ஒரு இதழை சுஜாதா தயாரிப்பார் என வெகுவாக விளம்பரப்படுத்தியிருந்தார் சாவி. அப்போது சுஜாதா பணியாற்றிய மத்திய அரசு நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததால் உயர் அதிகாரிகள் ஊரிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால் இதழுக்கான கெடுநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு குழு பெங்களூர் போய் அவரது இல்லத்திலேயே அமர்ந்து இதழின் உள்ளடக்கத்தை தயார் செய்யலாம் என்று நான் யோசனை சொன்னேன். ஆனால் சாவிக்கு அதில் சம்மதம் இல்லை. அவர் இங்கு ஒரு நடை வந்து போனால் நல்லது என்று நினைத்தார். காரணம் சுஜாதா ஓரளவிற்கு ஓவியம் வரைவார். அவர் அருகில் இருந்தால் லே அவுட்டிற்கு ஏதேனும் யோசனை சொல்வார் என்பது அவரது நம்பிக்கை.
சுஜாதா வர சம்மதித்தார். ஒரு நிபந்தனையுடன். அதாவது ஓரிரவு மாத்திரமே சென்னையில் இருப்பேன் என்பதுதான் அந்த நிபந்தனை
இரவு ஏழரை மணி வாக்கில் நான் அவரை விமானநிலையத்தில் சந்தித்து அழைத்து வந்தேன் (இம்முறை காரில்தான்!) வரும் போதே அவர் சில யோசனைகளோடு வந்திருந்தார். காரில் போகும் போது இருவரும் இதழுக்கான திட்டத்தைப் பேசி இறுதி செய்து கொண்டோம். அலுவலகத்தில் இறங்கிய இரண்டாம் நிமிடம் வேலையை ஆரம்பித்து விட்டார். பாலகுமாரன், சுப்ரமண்யராஜு, பாரி வள்ளல், ராணி மைந்தன், மற்றும் எனக்குப் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆளுக்கொரு பக்கமாகப் போய் எழுத ஆரம்பித்தோம். அவர் சாவி சார் அறையில், ஆசிரியர் அமரும் நாற்காலியைத் தவிர்த்து விட்டு, விருந்தினர் இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு எழுத ஆரம்பித்தார். எல்லோரும் எழுதிய கட்டுரைகள் எழுதிய உடனே அவரிடம் போகும். அவர் எழுதியவரையே படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே தனது கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார். வாக்கிய அமைப்பு சரியாக இல்லை என்றால் இப்படி மாத்தலாமா என்று யோசனை சொல்வார். ஆனால் பார்வை அவர் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையில் இருக்கும். கட்டுரை வள வளவென்று இருப்பதைப் போல இருந்தால் “அதைத் தூக்கிடு!” என்பார். வாசகன் நெருடல் இல்லாமல் கட்டுரையை வாசித்துக் கொண்டு போக வேண்டுமானால் அதை உரக்கப்படித்து எடிட் செய்ய வேண்டும் என்பது அவர் கடைப்பிடித்த உபாயங்களில் ஒன்று.
இரவு 2 மணி வரை இடைவிடாமல் வேலை செய்தோம். எழுத்து என்பது சொல்லால் ஆனது அல்ல. உழைப்பால் ஆனது. பின் அவர் அங்கிருந்த சோபாவிலேயே படுத்துத் தூங்கினார். நெடிய அந்த உருவத்தின் நீளத்தை அந்த சோபாவால் அடக்கிக் கொள்ளத்தான் முடியவில்லை
சி |
ங்கப்பூரில் முதல் தமிழ் இணைய மாநாடு. அமெரிக்காவிலிருந்து பிலடெல்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெரால்ட் ஷிஃப்மென், சுவிட்சர்லாந்திலிருந்து கல்யாண சுந்தரம், மலேசியாவிலிருந்து முத்து நெடுமாறன், தமிழ் நாட்டிலிருந்து சுஜாதாவும் நானும் அழைக்கப்பட்டிருந்தோம். மாநாடு முடிந்த இறுதிநாள். எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனதைக் கவனிக்கவில்லை. யாரோ நினைவூட்ட கை கடிகாரத்தைப் பார்த்தோம். விமானம் புறப்பட ஒரு மணி நேரமே இருந்தது. அறைக்குத் திரும்பி எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிப் பெட்டியில் திணித்துக் கொண்டு, வரவேற்பாளரிடம் சாவியை வீசி விட்டுப் புறப்பட்டோம். பாதி தொலைவு போனதுமே விமானத்தைப் பிடிக்க முடியாது என்று புரிந்துவிட்டது. கார் ஜன்னல் வழியே வானத்தில் ஒரு விமானத்தைப் பார்த்தோம். ‘மாலன், அதோ பார் நாம் போகிற விமானம்!’ என்றார் சுஜாதா ரொம்ப கூலாக
ஆனால் வீடு திரும்ப அடுத்த நாள் காலை வரை வேறு விமானம் இல்லை என்று அறிந்ததும் சோர்வாகிவிட்டார். மீண்டும் ஊருக்குள் திரும்ப வெட்கப்பட்டுக் கொண்டு விமான நிலையத்திற்கு அருகிலேயே விடுதி ஒன்றில் அறையெடுத்துத் தங்கினோம். அன்று சீனப் புத்தாண்டு என்பதால் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அவசரத்தில் மதிய உணவை அரைகுறையாய் முடித்திருந்தோம். அன்று இரவுச் சாப்பாடு பிரச்சினையாகிவிட்டது. நான் அவரை அறையில் விட்டுவிட்டு, அருகில் அலைந்து திரிந்து தேங்காய் பன்னும் அட்டை டப்பியில் நிரப்பிய சோயா பாலும் வாங்கி வந்தேன். அவருக்கு பன் பிடிக்கவில்லை. பாதி தின்று விட்டு வைத்து விட்டார். ‘பழம் ஏதும் கிடைக்கலையா’ என்று கேட்டுக் கொண்டே வேண்டா வெறுப்பாக பாலை மட்டும் குடித்து விட்டுப் படுத்துக் கொண்டார்.
அடுத்த நாள் அதிகாலையில் புறப்பட்டோம். சென்னைக்கு விமானம் கிடைக்கவில்லை. பெங்களூர் வந்து சென்னை வந்து விடலாம் என கிடைத்த விமானத்தில் ஏறிக் கொண்டோம். பாதிப் பயணத்தில் சுஜாதாவின் கை நடுங்க ஆரம்பித்தது. பதற்றத்தில் என் கையைப் பற்றிக் கொண்டார். எப்படியாவது பத்திரமா கொண்டு சேர்த்திடு மாலன் என்றார், ஏதோ நான்தான் விமானம் ஓட்டுவது போல.
அவர் சர்க்கரை வியாதிக்காரர். மதியமும் சாப்பிடாமல், இரவும் சரியான சாப்பாடு இல்லாததால், உடம்பு வெல வெலவென்று ஆகிவிட்டது. அந்தப் பதற்றத்திலும் என் மூளை எப்படி வேலை செய்தது என்பது எனக்கே இப்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது அவசர அவசரமாக விமானப் பணிப் பெண்ணிடம் சாக்லேட்கள் கொண்டு வரச் சொன்னேன் அவற்றில் சிலவற்றை உணவு போல விழுங்கினார் அவர்.
அதிகாலை ஐந்தரைமணி வாக்கில் வந்து பெங்களூரில் இறங்கினோம். அடுத்த சோதனை ஆரம்பித்தது. பகல் 12 மணி வரை சென்னைக்கு விமானத்தில் இடம் இல்லை. உடனடியாக நாங்கள் எடுத்த முடிவு ஊருக்குள் மெஜஸ்டிக் சர்க்கிள் வரை போய் ஹோட்டல் பிருந்தாவனில் சூடாக இட்லி சாப்பிடுவது!
இடலி இரண்டு துண்டு உள்ளே இறங்கியதும் “உயிரைப் பணயம் வைத்து கணினியில் தமிழ் வளர்த்திருக்கிறோம்” என்றார் இயல்பான நகைச்சுவையுடன்.
‘உண்டு, இல்லை என்ற இருமை (Binary) நிலைதான் கணினியில். இருந்தும் இல்லை என்ற திரிசங்கு நிலைதான் நம் யதார்த்தம். இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊற்றிக் கொள்கிறீர்களா?” என்றேன் நான்