பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டை.சண்டை என்றால் சண்டை இல்லை மனஸ்தாபம். பேச்சை முறித்துக் கொண்டு விடவில்லை. பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவ்வப்போது சிறு சிறு தொல்லை இருந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாள்களுக்கு முன் லேசான கை கலப்பு வரை போய்விட்டது.
அவர் தன் வீட்டில் உரக் குழி ஒன்று போட்டார். அவருடைய எல்லைக்கு உட்பட்டுத்தான். ஆனாலும் அதில் சேருகிற குப்பை, அதன் நாற்றம், அதில் உற்பத்தியாகிற கொசுக்கள் எங்கள் வீட்டுக்குத்தான் வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம் வேறு வழியில்லை அவர் வீட்டுப் பக்கம் இருக்கிற ஜன்னல் கதவுகளை அடைத்து விட்டோம்.
இதனால் எல்லாம் பிரசினை தீர்ந்து விடுமா என்று நண்பர் கேட்டார். பிரசினையைத் தீர்க்க இது போதாது. ஆனால் எங்கள் கோபத்தைக் காட்ட இது ஒரு வழி என்று சொன்னேன்.
அண்மையில் 59 சீனச் செயலிகளுக்கு (ஆப்-Applications) விதிக்கப்பட்டிருக்கிற தடையை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 59 செயலிகளைத் தடை செய்திருப்பதால் சீனப் பொருளாதாரமே நொடித்து விடும், அதனால் சீனா நம்மிடம் மண்டியிட்டுவிடும் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இந்த நடவடிக்கை சீனாவிற்குப் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. ஆனால் இது சீனாவிற்கு வேறு ஒரு வகையான அழுத்தத்தைக் கொடுக்கும். அது என்ன?
சீன ஆப்களில் மிகவும் பிரபலமானது டிக்-டாக். வீடியோக்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ளும் செயலி. இதைச் சீனாவின் பைட்டான்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியது. இதை உலகில் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தியாவில் மிக அதிகம். 61 கோடிப் பேர் பயன்படுத்துகிறார்கள். உலகெங்குமுள்ள டிக்-டாக் பயன்படுத்துபவர்களில் இது 30 சதவீதம் இப்போது இந்தத் தடையினால் டிக்-டாக் 30 சதவீதப் பயனர்களை இழக்கும். இது இந்தக் கம்பெனியின் மதிப்பைக் குறைக்கும். இந்தக் கம்பெனியின் மதிப்பு 110 பில்லியன் அமெரிக்க டாலர் எனச் சந்ததை மதிப்பிட்டிருந்தது. அது வீழ்ச்சி காணும்.
இந்தியாவைப் பின்பற்றி பல நாடுகள் சீனச் செயலிகளைத் தடை செய்ய அல்லது புறக்கணிக்க முன்வரலாம். ஏற்கனவே அமெரிக்கா இது போன்ற நடவடிக்கையை யோசித்து வருகிறது. அவர்கள் நாட்டில் உள்ள நுகர்வோர் பற்றிய தகவல்களைச் சீன ஆப்கள் ‘திருடு’கின்றன என்று அமெரிக்க அரசியல்வாதிகள் புகார் கூறி வருகிறார்கள்.
நம் நாட்டில் தொலைத் தொடர்புத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கு டிராய் என்ற அமைப்பு இருப்பது போல அமெரிக்காவில் தொலைத்தொடர்புத் துறையை நெறிப்படுத்த USFCC (US Federal Communications Commission) என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அது சென்ற வாரம் (ஜூன் 30ஆம் தேதி) ஹுவாயி டெக்னாலஜீஸ், ZTE என்ற இரு சீன நிறுவனங்களை அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆபத்தானவை என்று அறிவித்திருக்கிறது. இரு அமைப்புக்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியோடும், சீன ராணுவத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவை என அது கூறுகிறது. சீன நாட்டின் சட்டங்களின்படி அவை சீன அரசின் உளவுத் துறையோடு இணக்கமாக நடந்து கொள்ளக் கடமைப் பட்டவை என்று அது கூறுகிறது. “எங்களது நெட்வொர்க்கில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், எங்களது முக்கியமான தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பில் சமரசம் செய்து கொள்ளவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை அனுமதிக்க மாட்டோம்” என்கிறது அந்த அறிவிப்பு.
இதன் விளைவாக அமெரிக்க அரசு சார்ந்த அமைப்புக்கள் இந்த நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடியாது. அதன் காரணமாக. இந்தப் பொருட்களை வாங்க அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ள 8.3 பில்லியனில் ஒரு சல்லிக் காசு கூட இந்த நிறுவனங்களுக்குக் கிடைக்காது. இந்த நிறுவனங்கள் 5ஜி தொழில்நுடபத்தைப் பயன்படுத்த முடியாது.
ஐக்கிய ராஜ்யத்தின் (UK) 5ஜி சேவைக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் ஹுவாயி கணிசமான பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் தடையை அடுத்து அங்கும் ஹுவாயியைத் தடை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஹாங்காங் பிரசினை காரணமாக அங்கு இப்போது சீனாவிற்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன. அங்கும் ‘உரிய நடவடிக்கை’ எடுப்பது பற்றி யோசித்து வருவதாக பிரிட்டீஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் (ஜூன் 30) தெரிவித்திருக்கிறார்.
இவையெல்லாம் தொழில்நுட்ப உலகில் சீனா செலுத்தி வரும் ஆதிக்கத்தைக் குறைக்கும்.
இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை அல்ல, என்ற போதிலும் எடுக்க்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் கவனமாக எடுக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக பணப்பரிமாற்றத்திற்கு உதவும் pay tm செயலி, கல்விக்குப் பயன்பட்டு வரும் Byju’s போன்றவற்றில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அந்தச் செயலிகளுக்குத் தடை இல்லை. இப்போது பெரும்பாலும் பொழுது போக்கு, தகவல் பரிமாற்றச் செயலிகள்தான் தடை செய்யப்பட்டுள்ளன
செயலிகள் இல்லாமல் சீனவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது. அவை கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றன. இதனால் சில தொழில்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. பட்டன்கள் வந்து சேராததால் திருப்பூரில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்ய இயலாமல் தேங்கியிருக்கின்றன. ஊரடங்கிலிருந்து மீண்டு, தொழிலைத் தொடங்கினோம், இன்னும் இங்கிருந்து போன அயல் மாநிலத் தொழிலாளிகள் திரும்பவில்லை. அதற்குள் இப்படி ஒரு சங்கடம் என அவர்கள் வருந்துகிறார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள இன்னொரு துறை ஆட்டோமோபைல் துறை. அவர்களுக்கான உதிரி பாகங்கள் அங்கிருந்து வருகின்றன. குறிப்பாக மின்சார வாகனங்களுக்கு.
இவற்றை வேறு எங்கும் வாங்க முடியாதா என்று கேட்டால், ஐரோப்பாவில் கிடைக்கும். ஆனால் விலை அதிகம், நமக்கு அதிக அளவில் தேவைப்படும், அந்த அளவு அங்கு கிடைக்காது என்கிறார்கள். இங்கேயே உருவாக்க முடியாதா என்றால், முடியும் ஆனால் சீனப் பொருளை விட விலை கூடுதலாக இருக்கும் என்கிறார்கள்.
இந்தத் தருணம் சில உண்மைகளை நமக்கு உரத்துச் சொல்கின்றன. அவை: 1.நம் நாட்டின் பெரும்பான்மையான மக்களை சீனத்தின் கரங்கள் ஏதோ ஒரு விதத்தில் தொட்டிருக்கின்றன. அவை சீனாவில் தயாரிக்கப்பட்ட கை பேசிகளாக இருக்கலாம். அல்லது அவற்றில் பயன்படுத்தப்படும் செயலிகளாக இருக்கலாம். அல்லது நாம் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலப் பொருளாகவோ, உதிரி பாகமாகவோ இருக்கலாம். நாம் ஏதோ ஒரு வகையில் சீனாவைச் சார்ந்திருக்கிறோம் 2. அவற்றுக்கான மாற்றைக் கட்டுப்படியாகும் விலையில் உருவாக்க நமக்குத் திறமை இல்லை அல்லது முனைப்பு இல்லை. குதிரைக்கு லாடம் அடிக்கவில்லை என்பதால் அரசன் போரில் தோற்றான் என்பதைப் போல பித்தான்கள் இல்லை என்பதால் ஏற்றுமதி தேங்கியது என்பது இதைத்தான் காட்டுகிறது. பித்தான்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பமோ, முனைப்போ கூடவா நம்மிடம் இல்லாமல் போய்விட்டது?
கடந்த சில ஆண்டுகளாகப் பலர் பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அது நாம் உருவாக்கியது இல்லை. பேஸ்புக்கம் பக்கம் வராதவர்கள் கூட வாட்ஸப் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் நம் தயாரிப்பு அல்ல. இதைப் போல டிவிட்டர், லிங்கிடின், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த சமூக ஊடகமும் நம்முடையது அல்ல. அண்மைக்காலமாக, குறிப்பாக கொரானா பெருந்தொற்றுக்குப் பிறகு, பலரும் ஜூம் என்ற செயலியைப் பயன்படுத்திக் கூட்டங்கள், உரை நிகழ்வுகள் நடத்திவருகிறார்கள். அனேகமாக தினமும் இவை நடக்கின்றன. அதுவும் நம் தயாரிப்பல்ல. ஆனால் உலகின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர்கள் நாம் என்று மார் தட்டிக் கொள்கிறோம். என்ன முரண்!
சீனாவில் நீங்கள் பயணம் செய்தால் ஜி-மெயில் பார்க்க முடியாது. பேஸ்புக் பக்கம் நெருங்க முடியாது. வாட்ஸப் கிடையாது. அவர்கள் அவை எல்லாவற்றுக்கும் அவர்கள் நாட்டிலேயே மாற்றுக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.உதாரணமாக வாட்ஸப்பிற்கு பதில் அவர்கள் நாட்டுத் தயாரிப்பான வீசாட் என்ற செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.
இத்தனை கோடி மக்கள் இருக்கிறோம். நாம் ஏன் நமக்கான செயலிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது?
15.7.20