விரலை மடக்கிக் கொண்டு வீறுடன் குரலெழுப்பும் ஓர் வீரனின் சிலையின் நிழல் போல வீட்டுக்கு வெளியே விழுந்து கிடந்தது மரத்தின் நிழல்.இடம் மாறும் சூரியனைப் பொறுத்து அதன் நிழல் மாறும். இறக்கை இரண்டையும் விரித்தெழும் ஒரு ராட்சப் பறவையைப் போலச் சில நேரம். கோல் ஊன்றி நிற்கும் கூனல் விழுந்த கிழவி போல் சில நேரம். முடுக்கிவிடப்பட்ட குதிரையின்று முன் காலைத் தூக்கி முரண்டு பிடிப்பது போலச் சில நேரம். என்றும் மாறாக் கோலத்தில் இருக்க மரங்கள் சிலைகள் அல்லவே?
எல்லாக் காலங்களிலும் எல்லாக் கண்டங்களிலும் கலையை நிலைப்படுத்துவதாகக் கூறிச் சிலைகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. முகவாயில் கை வைத்து, ஒரு காலை ஒயிலாய் சாய்த்து இலண்டனில் நிற்கிறார் ஷேக்ஸ்பியர். அந்தப் பெரு நகரின் இன்னொரு மூலையில் பேருந்துக்குக் காத்திருப்பவரைப் போல கழுத்தை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் கீட்ஸ். பாரிசில் அரியணை போன்றொரு ஆசனத்தில் அமர்த்தலாய் உட்கார்திருக்கிறார் சரித்திரக் கதாசிரியர் அலக்சாண்டர் டூமா. மாஸ்கோவில் மாயகோவஸ்கியும் புஷ்கினும் நிற்கிறார்கள். வியன்னாவில் விண்ணை வியந்து பார்த்து நிற்கிறார் இசைக்கலைஞர் மொசார்ட். ஊழலுக்கு எதிராக உரத்துக் குரலெழுப்பிய பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் சீரியஸாக செய்தித்தாள் படித்துக் கொண்டு நிற்கிறார் நியூயார்க்கில்
எழுத்தாளருக்கும் பத்திரிகையாளருக்கும் இங்கேயும் சிலை உண்டுதான். கம்பனும் இளங்கோவும், விறைப்பாகக் கைநீட்டும் பாரதியும், வீரமாமுனிவரும், போப்பும், ஓளவையும், பாரதிதாசனும் காற்று வாங்கிக் கொண்டு கடற்கரையில் நிற்கிறார்கள். அங்கேயே சமுத்திரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் சாமிநாதய்யர். போக்குவரத்து சிக்னலில் நிற்பவரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் கண்ணதாசன் தியாகராய நகரில்.சுரதாவிற்கும் சிலையொன்றுண்டு. எல்லோரையும் விட நெடிதுயர்ந்த வள்ளுவர் நீலக்கடல் நடுவே நின்றருளுகிறார் குமரியில்.
எனினும் நம் கலாசாரத்தில் ஆண்டவர்களும் அரசியல்வாதிகளுமே சிலைகள் விஷயத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உண்மைகளை உரைப்பான வார்த்தைகளில் சொல்லும் கண்ணதாசன், ““மூலையில் நேரு நிற்பார், முடுக்கினில் காந்தி நிற்பார், சாலையில் யாரோ நிற்பார், சரித்திரம் எழுதப் பார்ப்பார்…. மண்ணகம் முழுதும் இன்று மனிதர்கள் சிலை ஆயிற்று” என்று நம்மூர் சிலைகள் பற்றிச் சொற்களில் சினத்தைச் செதுக்கினார்.
அவருக்கும் நாம் ஒரு சிலை எழுப்பிவிட்டோம்.புத்தர் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை என்றொரு கருத்துண்டு. ஆனால் உலகிலேயே அதிகமான சிலைகள் புத்தருக்குத்தான் இருக்கிறது. உலகின் பெரிய சிலைகளில் (233 அடிஉயரம், 92 அகலம்) ஒன்றான புத்தர் சிலை கம்யூனிச நாடான சீனத்தில்தான் இருக்கிறது. விநாயகர் சிலையை வீதியில் போட்டுடைத்த பெரியாருக்குத்தான் தமிழ்நாட்டில் சிலைகள் அதிகம். (காஞ்சிபுரத்தில் ஒருமுறை அந்தச் சிலைக்குக் கற்பூரம் ஏற்றி மணியடித்து வழிபாடும் நடந்தது)
திராவிடக் கழகத்தினர் பெரியாருக்கு சிலை எழுப்பும் முன்னரே அவருக்கு சிலையமைத்தவர் கருணாநிதி. பெரியார் உயிருடன் இருக்கும் போதே, அவர் வாழந்த சிந்தாதரிப்பேட்டை அண்ணாசாலையில் இணையும் சந்திப்பில் சிம்சன் அருகே பெரியாருக்கு சிலை எடுத்தார் கருணாநிதி. உயிருடன் இருக்கும் ஒருவருக்குச் சிலை அமைக்கலாமா என்று எழுந்த சலசலப்பை இருவருமே ஒதுக்கித் தள்ளினர்.
காமராஜர் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே அவருக்கும் சிலை எழுப்பப்பட்டது.அதைத் திறந்து வைக்க நேரு அழைக்கப்பட்டார்.உயிரோடு இருப்பவருக்குச் சிலை வைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அவர் தயங்கினார். பின் இணங்கினார். “உயிரோடு உள்ள ஒரு தலைவரின் சிலையைத் திறப்பது குறித்து எனக்குள் ஒரு பெரும் மனப்போராட்டமே நடந்தது” என்று அந்த விழாவில் அவர் பேசினார்.
அண்ணாவிற்கும் அவர் வாழ்நாளிலேயே சிலை நிறுவப்பட்டது. அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை 1968 ஜனவரியில் நிறுவப்பட்டது.ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் 1969 பிப்ரவரியில் அமரர் ஆனார்
கருணாநிதிக்கும் அவர் வாழ்நாளிலேயே சிலை எழுப்பப்பட்டது. பெரியாருக்குக் கருணாநிதி சிலை எழுப்பியதைப் போலவே கருணாநிதிக்கு திராவிடர் கழகம், ஜெனரல் பாட்டர்ஸ் ரோடு அண்ணா சாலை சந்திப்பில் ஒரு சிலை எழுப்பியது. ஆனால் அது அவர் வாழ்ந்த காலத்திலேயே உடைக்கவும்பட்டது. எம்ஜிஆர் மறைவின் போது, 1987ஆம் ஆண்டு, ஒருவர் கையில் கடப்பாரை ஏந்திச் சிதைக்கும் படம் பத்திரிகைகளில் வெளியானது.”பரவாயில்லை, அந்த நபர் என் நெஞ்சில்தானே குத்தினார், நண்பர்களைப் போல என் முதுகில் குத்தவில்லையே என்று முரசொலியில் கருணாநிதி எழுத அது ஒரு சர்ச்சையாயிற்று.
திரும்பவும் சிலை எழுப்ப திராவிடர் கழகம் முன் வந்த போது, கருணாநிதி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு 2017ல் முரசொலி பவள விழா நடைபெற்ற போது, அவர் வாழ்ந்த காலத்திலேயே முரசொலி அலுவலகத்தில் அவர் அமர்ந்திருப்பதைப் போன்ற மெழுகுச் சிலை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டது. அவர் மறைவுக்குப் பின் அறிவாலயத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது.
சிலை வைக்கப்படாமலேயே சர்ச்சைக்குள்ளானது இந்திரா காந்தியின் சிலைதான். அண்ணா சாலையில் ஸ்பென்சர் அருகே அவருக்கு சிலை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு 1989ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான பீடமும் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த இடத்தில் சிலை நிறுவப்படவில்லை. சிலை வைக்க அனுமதி பெற்ற ஏசய்யா, சிலைக்கு ஆர்டர் கொடுத்த மூப்பனார், அவரைத் தொடர்ந்து முயற்சி செய்த வாழப்பாடி ராமமூர்த்தி யாரும் இன்று உயிருடன் இல்லை.
சிலையும் அரசியலும் சேர்ந்தே இருக்கும் மண் தமிழகம். அரசியல்வாதிகளின் சிலை மட்டுமல்ல, சிலைகளுக்குப் பின்னிருக்கும் அரசியலும்தான். அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையை நிறுவப் பொருளுதவி அளித்தவர் எம்.ஜி.ஆர். அவர் ஆட்சியில் இருக்கும் போது அங்கு மாலை அளிக்கச் சென்றார் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி. அவர் வருவது அறிந்தோ என்னவோ, அந்தச் சிலை அருகில் இருந்த படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. அருமைத் தலைவருக்கு ஆரம் சூட்ட இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் எதிர்க்ட்சித் தலைவர் கருணாநிதி.
அதன் பின் அவர் அண்ணாவிற்குச் சிலை நிறுவ அரசிடம் கேட்டு விண்ணப்பித்தார். வள்ளுவர் கோட்டத்தின் முன் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பைச் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார் கருணாநிதி. அந்த வள்ளுவர் கோட்டம் அவர் அமைத்ததுதான். ஆனால் அதன் திறப்பு விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு அவர் அடிக்கல் நாட்டியது பற்றிய கல்வெட்டு அகற்றப்பட்டது. திறப்பு விழாவிற்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது, ஆனால் பத்தாம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. கருணாநிதி விழாவில் கலந்து கொள்ளவில்லை. வள்ளுவர் கோட்ட வாசலில் அண்ணா சிலை வைக்க அனுமதி கிடைத்ததும் அங்கு சிலை அமைத்து அதன் கீழ் கருணாநிதி கல்வெட்டு ஒன்றைத் திறந்தார். அது: சிலை திறப்பு : வள்ளுவர் கோட்டம் கண்ட கருணாநிதி
அதன் பின் அவர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்க அண்ணா சாலைக்குச் செல்வதில்லை.வள்ளுவர் கோட்டத்திற்குத்தான் சென்று வந்தார். அதே போல கருணாநிதி அமைத்த பெரியார் சிலைக்கு அதிமுகவினர் சென்று மாலை அணிவிப்பதில்லை. எம்.ஜி.ஆர் ஜெமினி மேம்பாலம் அருகில் அமைத்த சிலைதான் அவர்களுக்குப் பெரியார் சிலை.
அரசியல் அடையாளங்களுக்கு அப்பால் இன்று சிலைகள் மீது சாதிச் சாயங்கள் ஏறிவிட்டன. அரும் பெரும் தலைவர்களைக் கூட அவர்களது ஜாதிக் கோணத்தில் பார்க்கிற அவலம் நேர்ந்து விட்டது. எந்த அளவிற்கு இந்தப் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்றால் பெரிய தலைவர்களுக்குச் சிலை அமைப்பதோடு மட்டுமன்றி அவர்களைச் சுற்றி சிறையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.
2013 என்று ஞாபகம். உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஆர் எம் லோதா, ஏ.கே. முகோபாத்தியா அளித்த ஓர் தீர்ப்பில் “சாலைகள் எந்த ஒரு நபரின் சொத்துமல்ல, சாலைகளில் இடையூறு இல்லாமல் சுதந்தரமாகச் செல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளது. அதனால் சாலைகளில் சிலைகள், கோயில்கள், மசூதி கள் மற்றும் தேவாலயங்கள் அமைத்துக் குடிமக்களின் உரிமையைப் பறிக்கக்கூடாது. இதுபோன்ற நடை முறைகள் ஓரங்கட்டப்பட வேண்டும். சிலரைப் பெருமைப் படுத்துவதற்காக நிதியைச் செலவிடுவதற்குப் பதிலாக, அந்த நிதியை ஏழைகளின் மேம்பாட்டுக்காக அரசுகள் செலவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
ஏறத்தாழ இதே குரலில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 7ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் மூன்று மாதங்களுக்குள் அனுமதி பெறாத சிலைகளை அகற்றி அவற்றைப் பொதுப் பூங்காக்களில் வைக்க வேண்டும் என் ஆணையிட்டார். அவர் விதித்த கெடு முடிந்துவிட்டது. ஆனால் அப்படி அகற்றப்பட்ட சிலைகள் எவை எனத்தான் தெரியவில்லை.
முக்கியமான பின் குறிப்பு: சிங்கப்பூரை நவீன வலிமை வாய்ந்த நாடாக மாற்றிய லீ குவான் யூக்கு அங்கு எந்தப் பொது இடத்திலும் சிலை இல்லை.
குமுதம் 2.2.2022