சிரிப்பு வருது! சிரிப்பு வருது!
மகாத்மா காந்தியும் சல்மான் ருஷ்டியும் சந்தித்துக் கொண்டால் அவர்களிடையே நடக்கும் உரையாடல் எத்தகையதாக இருக்கும்? சில நேரங்களில் இது போன்ற சில விபரீதக் கற்பனைகள் என்னை ஆக்ரமித்துக் கொள்வதுண்டு.பத்திரிகையாளனின் பணி சார்ந்த பிணிகளில் (occupational hazard) இதுவும் ஒன்று
ஆனால் இந்தக் கற்பனை எழுந்ததற்கு முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம் அல்ல. இந்திய நாடாளுமன்றமும் ஒரு வகையில் இதற்க்குப் பொறுப்பு.
தவறு செய்வதற்கு இடமளிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல என்று காந்தி ஓரிடத்தில் எழுதுகிறார். தாக்குவதற்கு சுதந்திரமளிக்காவிட்டால் அது கருத்து சுதந்திரமே அல்ல என சல்மான் ருஷ்டி எழுதுகிறார்..
தாக்குவதற்கும் தவறு செய்வதற்கும் இடையில் ஒரு நிழலில் கருத்து சுதந்திரம் ஒளிந்து கொண்டிருக்கிறது. குறைந்த பட்சம் இந்தியாவில்
கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றம் (வழக்கம் போல) அமளி துமளிப் பட்டது. காரணம் ஒரு கார்ட்டூன். இப்போது உயிரோடு இருக்கும் தலைவர்கள் எவரும் அந்தக் கார்ட்டூனில் இடம் பெறவில்லை. அந்தக் கார்ட்டூனை வரைந்தவரும் கூட உயிரோடு இல்லை. அது சமீபத்தில் போடப்பட்ட கார்ட்டூனும் அல்ல, ஆனாலும் அமளிக்குக் குறைவில்லை.
அறுபதாண்டுகளுக்கு முன் 1949ல் வெளியான அந்தக் கார்ட்டூனில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதைக் குறித்து மக்கள் கூச்சலிடுகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பில் இருந்த அம்பேத்கரை நேரு முடுக்குகிறார்.
கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் தயாரித்துள்ள பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தக் கார்ட்டூன் அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகக் கூறி எங்களுடைய மாட்சிமை தாங்கிய நாடளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வித்தியாசமில்லாமல் கூச்சலிட்டார்கள். பாடப்புத்தகங்களை விலக்கிக் கொள்வதாக அரசு அறிவித்திருக்கிறது.
இந்தக் கார்ட்டூன் வெளியான போது அம்பேத்கர், நேரு இருவருமே உயிரோடு இருந்தார்கள். அவர்கள் இந்தக் கார்ட்டூன் தங்களை இழிவுபடுத்துவதாகக் கருதவில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்தக் கார்ட்டூன் சொல்கிற உண்மையை இன்றுவரை எவரும் மறுக்கவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக இரண்டாண்டுகள் 11 மாதங்கள், 17 நாட்கள் ஆயின (சுமார் 3 ஆண்டுகள்). உலகிலேயே நீளமான அரசமைப்புச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம்..
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம். 2006ம் ஆண்டிலிருந்தே அந்தக் கார்ட்டூன் பாடப்புத்தகத்தில் இருந்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்குப்பின் இப்போது ஏன் கூச்சல்?
காரணம் வாக்கு வங்கி அரசியல்.
சிரிப்பதற்காகப் போடப்படுகிற கார்ட்டூன்கள் சிலநேரங்களில் முகம் சிவப்பதற்காகவும், சினந்து கொள்வதற்காகவும் காரணமாகிவிடுவது இது முதல் முறையல்ல. டேனிஷ் பத்திரிகையில் வெளியான முகமது நபி கார்ட்டூனைப் பற்றி நான் பேசப்போவதில்லை.
ஆனால் அமெரிக்காவில் –ஆம் கருத்து சுதந்திரத்தை அரசமைப்புச் சட்டத்தின் ஒரு உறுப்பாக உறுதி செய்திருக்கிற அமெரிக்காவில்- மாணவர்களது பத்திரிகை ஒன்றில் வெளியான ஒரு கார்ட்டூன் ” எல்லா மாணவப் பத்திரிகைகளும் அவற்றின் உள்ளடக்கத்தைப் பரிசீலிக்கிற அதிகாரத்தை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும்” என்று அதிகாரிகள் குரலெழுப்பக் காரணமாக அமைந்தது .காரணம் அந்தக் கார்ட்டூனில் இடம் பெற்றிருந்தவர் ஜனாதிபதி ஒபாமா.
பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் எதிர்பார்ப்புகள் என்ற குன்றின் எதிரே திகைத்துப் போய் நிற்கிறார் மலையேற வந்திருக்கும் ஒபாமா. இதில் என்ன தவறு? ஒபாமாவின் முக ஜாடை மனிதக் குரங்கினுடையதைப் போல் வரையப்பட்டிருப்பதாகக் ’கண்டுபிடித்திருக்கிறார்கள்’ கல்வியாளர்கள்! கருத்துரிமையில் கை வைக்க ஏதோ ஒரு சாக்கு!
விமர்சனக்களை ஒளித்து வைப்பதற்குப் பின்னுள்ள உளவியல் இதுதான்: ஒன்று குற்ற உணட்வு. மற்றது கண்மூடித்தனமான விசுவாசம்.
”பக்தி என்பது ஆன்மீகத்தில் வேண்டுமானால் ஆன்ம விடுதலைக்கான வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தனிமனித வழிபாடு என்பது வீழ்ச்சிக்கான பாதை. அது சர்வாதிகாரத்தில் கொண்டு சேர்க்கும்.” இவை 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி இந்த அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட போது சொல்லப்பட்ட வார்த்தைகள் சொன்னவர், வேறு யாருமில்லை, இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை மதிப்பிற்குரிய டாக்டர் பீம்ராவ் ராம்ஜி.அம்பேத்கர்.!
One thought on “சிரிப்பு வருது! சிரிப்பு வருது!”
அரசியலில் தனி மனித வழிபாடு என்பது வீழ்ச்சிக்கான பாதை – I think this will also suit for BJP projecting that Modi alone can save India