மறுபக்கம்
நூறாண்டுகளுக்கு முன், அழகுணர்ச்சியின் (aesthetic sense) காரணமாகவோ, படைப்பூக்கத்தின் (creativity) காரணமாகவோ துவங்கியதல்ல இந்திய சினிமா. ஆர்வக் குறுகுறுப்பின் (curiosity)காரணமாகத்தான் அது தோன்றியது. சர்ச்சை செய்வதில் ஆர்வமுடைய இந்திய மனத்திற்குச் சாட்சி இந்திய அரசியல். வேடிக்கை பார்ப்பதில் (amusement) ஆர்வமுடைய இந்திய மனத்தின் அடையாளம் சினிமா
இன்றுவரை இந்த ஆர்வக் குறுகுறுப்பும், வேடிக்கை பார்த்தலும் (காட்டலும்)தான் இந்திய வெகுஜன கலாச்சாரத்தின் உள்ளீடுகளாக இருந்து வருகின்றன. படைப்பூக்கம் என்பதையே மைய அச்சாகக் கொண்டு இயங்கி வந்த இந்தியக் கலைகள் வணிகமயமாவது இந்திய சினிமாவின் வருகையிலிருந்து துவங்குகிறது.
இந்த நூறாண்டுகளில் இந்தியச் சமூகத்திற்கு சினிமாவின் பங்களிப்பு என்ன?
சமூகத்தின் பிரச்சினைகளை மிகைபடச் சித்தரித்து மக்களை அந்தப் பிரச்சினைகள் குறித்த யதார்த்தங்களிலிருந்து அன்னியப்படுத்தியது, அந்த பிரச்சினைகள் குறிந்து இருந்திருக்க வேண்டிய நியாயமான கோபங்களை மழுக்கி மலடாக்கியது, தகுதியற்றோர் குறித்த தனிமனித வழிபாடுகளுக்கு அடிகோலியது, அந்த வழிபாடுகளை அரசியலுக்கு மடைமாற்றி அரசியலை அறிவார்ந்த தளத்திலிருந்து துதிபாடலுக்கான களமாக மாற்றியது, குறுகிய காலத்தில் நிறையக் காசு பார்த்துவிடலாம் என்ற பேராசையை விதைத்து உழைப்பின் மீது சமூகத்திற்கு இருந்திருக்க வேண்டிய நம்பிக்கையைச் சிதைத்தது, கறுப்புப் பணத்தின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்து இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமடையச் செய்தது இவைதான்.
அதிகம் பேரைச் சென்றடைந்தது என்ற கணக்கு தலைகளை மட்டும் எண்ணும் ஜனநாயகத்திற்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் தலைக்குள் இருப்பதை எண்ணும் படைப்புலகில் அந்த விதி செல்லாக் காசு. குறைந்த பேரைச் சென்றடையும் பத்திரிகைகளோ புத்தகங்களோ சாதித்ததைவிட சினிமாக்கள் அதிகமாக எதையும் சாதித்திடவில்லை.
சமூகத்தின் உண்மையான மேம்பாட்டிற்கு உழைத்தவர்கள் யாரும் சினிமாவைக் கொண்டாடியதில்லை. அது ஒரு பாவகரமான தொழில்நுட்பம் (“Cinema is a sinful technology”) என்றெழுதினார் காந்தி. ஐந்து தீமைகளில் ஒன்று என்றார் பெரியார். அவர்கள் சினிமாக்காரர்களாக இருந்ததில்லை. ஆனால் பத்திரிகையாளார்களாகப் பங்களித்தார்கள்.
மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் சொன்னது சினிமாவிற்கும் பொருந்தும். அபின் வலியை மறக்கச் செய்யும் மருந்து மட்டுமல்ல, அடிமையாக்கும் போதைப் பொருளும் கூட.
சினிமாவைக் கலை என்று அறிவு ஜீவிகள் கூட நம்புகிறார்கள் என்பதுதான் விபரீதமான வேடிக்கை.. கலை என்பது பெரும்பாலும் ஒரு தனி மனதின் வெளிப்பாடு. கலை எந்தச் சூழலிலும் தனித்தியங்கும் சுதந்திர இயல்பு கொண்டது.. கணினி இல்லாமல் கதை எழுதிவிடலாம்.காகிதம் கூட இல்லாமல் கவிதை சொல்லலாம். ஒலி பெருக்கி இல்லாமல் கூட நாடகம் அரங்கேறும் அல்லது வீதிக்கு வரும். ஆர்மோனியப் பெட்டி கூட இல்லாமல் பாட முடியும். விளக்கின்றி சூரிய ஒளியில் கூட ஓவியமும் சிற்பமும் உருவாகும். ஆனால் தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு செ.மீ கூட திரைப்படம் தயாராகாது.
சினிமா ஒரு அறிவியலும் அல்ல. அறிவியலில் கற்பனைக்கு இடமில்லை. சினிமா அரசியலும் அல்ல. அது அதிகாரத்தின் குரலாகவோ, அடிமைகளின் விடுதலைக் களனாகவோ செயல்படுவதில்லை. அது ஆன்மீகமும் அல்ல. அது ஓர் உள்ளொளிப் பயணத்திற்கு உங்களை இட்டுச் செல்வது இல்லை. அது ஆன்மாவோடு உரையாடல்கள் நிகழ்த்துவதில்லை. அது புலன்களைச் சீண்டிப் பார்க்கிற பொழுது போக்கு.
கூடிக் கழித்துப் பார்த்தால் சினிமா என்பது விற்பதற்கும் வாங்குவதற்குமான ஒரு வணிகப் பண்டம். அதன் மேல் மோகம் கொள்வதைப் போன்ற அபத்தம் வேறு ஏதுமில்லை.
– 2012ம் ஆண்டு ஜூன் மாதம் சினிமா நூற்றாண்டையொட்டி புதிய தலைமுறையில் நான் எழுதியது
2 thoughts on “சினிமா மோகம் என்னும் அபத்தம்”
Vanigp pandathin meethu moham varamal veru ethan meethu moham vara vendum?
Entha oru kalaiyilum technology illamal mudiyathu
Thani manithan mattumalla koottagavum kalai irukkirathae! (cinimavaith thavirthum).
வணிகப் பண்டத்தின் மீது கொள்ளும் மோகம் கொள்ளாமல் வேறு எதன் மீது மோகம் கொள்ள வேண்டும் என்ற கேள்வி வியப்பளிக்கிறது. ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது ஏன் விஷத்தை உண்ணக் கூடாது என்றும் கேட்பீர்கள் போலிருக்கிறதே!
”எந்த ஒரு கலையும் தொழில் நுட்பம் இல்லாமல் முடியாது?” பொத்தாம் பொதுவாக பேசாமல் உதாரணம் கொடுங்கள். என் வாதத்தில் அதை நான் தெளிவாக உதாரணம் கொடுத்துப் பட்டியலிட்டிருக்கிறேன் ”(சினிமாவைத் தவிர) தனிமனிதன் மட்டுமல்ல கூட்டாகவும் கலை இருக்கிறதே!” விளக்குங்கள் அறிந்து கொள்ள ஆவல்
அன்புடன்
மாலன்