“ பி.எம். டபிள்யூ வாங்க வேண்டுமானால் உங்களுக்கு எவ்வளவு காலம் ஆகும்?” பி.எம். டபிள்யூ உலகின் விலை உயர்ந்த கார்களில் ஒன்று. அந்தஸ்தின் அடையாளம். காரின் .விற்பனைக்கான சாத்தியங்கள் குறித்து சர்வே எடுப்பவர், சினிமா நடிகர் ஒருவரிடம் இந்தக் கேள்வியை முன் வைத்தார். சற்றும் யோசிக்காமல் நடிகர் “ நான் நினைத்தால் நாளையே கூட வாங்கிவிடுவேன்” என்றார். இந்தக் கேள்வியை ஒரு மருத்துவரிடம் கேட்ட போது “எட்டு அல்லது அதிகம் போனால் பத்து மாதங்கள் ஆகலாம்”.என்றார். கை நிறையச் சம்பாதிக்கும் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் ஒரு வருடம் அவகாசம் தேவை என்றார்.
டாடா, அம்பானி, அதானி போன்ற கோடீஸ்வரத் தொழிலதிபர் ஒருவரிடம் கேட்ட போது சிறிது யோசித்தார். “அப்படி ஏதும் யோசனை இல்லை என்றார். சர்வேயர் விடாமால், “ஒரு வேளை வாங்குவதானால்?” என்றார். அந்தக் கோடீஸ்வரத் தொழிலதிபர், மோவாயைத் தடவியபடி, “ஐந்து வருடம், ஏன் அதற்கும் மேல் ஆகலாம்” என்றார்.
சர்வேயருக்கு திகைப்பு. எவ்வளவு பெரிய கோடீஸ்வரர், உலகில் உள்ள முதல் 50 பெரும் செல்வந்தர்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடியவர், அவருக்கு ஒரு கார் வாங்க ஐந்து வருடமாகுமா என ஆச்சரியம். பின் மெதுவாகக் கேட்டார்: “ஏன் அவ்வளவு காலம் தேவை?” செல்வந்தர் சொன்னார். “பி.எம். டபிள்யூ எவ்வளவு பெரிய கம்பெனி. அதை வாங்குவதற்ன்றால் எளிதா?”
இது வாடஸப்பில் வந்த ஜோக்.
பார்வைகள்தான் ஆளுமைகளை வித்தியாசப்படுத்துகின்றன. ஆனால் சில ஆளுமைகளின் பார்வைகளைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. ப. சிதம்பரம், அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலைக் காண நேர்ந்தது. அதில் அவர் ஒரு வெடி குண்டை வீசுகிறார்: “ தமிழ்நாட்டைச் சேர்ந்ததல்ல கச்சத்தீவு!”
முன்னும் பின்னும் சொல்லப்பட்டது என்ன என்பதைச் சொல்லாமல் இந்த ஒற்றை வாக்கியத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு பரபரப்பூட்டுவதல்ல என் நோக்கம். எனவே அது சொல்லப்பட்ட சூழலையும் விளக்கிவிடுகிறேன்.
கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய விவகாரம் குறித்து, திரு. ப.சிதம்பரத்தைப் பேட்டி காணும் செய்தியாளர் திருமதி. அசோகவர்ஷிணி, சட்டப்பிரிவு 370ஐ அகற்றவே கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடா என்று கேட்கிறார். “370ஐ திருத்தணும் அகற்ற வேண்டும், என்றால் அந்த மக்களைக் கலந்துதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என்கிறார் திரு.சிதம்பரம். அசோக வர்ஷிணி, “தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மக்களையும் கேட்டா, மீனவ மக்களையும் கேட்டா, கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்புகிறார். அப்போதுதான் திரு. ப.சிதம்பரம் சொல்கிறார்: “கச்சத்தீவு என்பது தனித் தீவு” என்று சொல்வதோடு அது தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது அல்ல என்று இரு முறை சொல்கிறார். அது ராமநாதபுரம் சமஸ்தானத்தின் அங்கமாக இருந்த இடம் என்பதைச் செய்தியாளர் நினைவூட்டியும் அதைப் பொருட்படுத்தா,மல் தொடர்ந்து பேசிச் செல்லும் திரு.சிதம்பரம் “அது இந்திய நாடாளுமன்றம் எடுக்க வேண்டிய முடிவு, இந்தியா முழுதும் கலந்தாலோசிக்கணும்னு சொல்லுங்க” என்று கூறுகிறார்.
சிதம்பரத்தின் பதில் சில கேள்விகளை எழுப்புகிறது.
1605ல் நாயக்க மன்னர்களால் சேதுபதி அரசருக்கு அளிக்கப்பட்ட 69 கடலோரக் கிராமங்கள், ஏழு தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று. கிழக்கிந்தியக் கம்பெனி ராணி மங்களேஸ்வரி நாச்சியாரை ஜமீந்தாரிணியாக நியமித்த போது அளித்த பட்டயம், ஆங்கிலேயர் காலத்து பத்திரப் பதிவு ஆவணங்கள் (23.6.1880 தேதியிட்ட Registration No. 510/1880, Book 1, Volume 16) இலங்கை 1936-40 காலகட்டத்தில் மேற்கொண்ட நில அளவைப்ப் பதிவேடுகள், ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட கெசட் அறிவிப்பு 1947ல் முகமது மரைக்காயரோடு செய்து கொண்ட குத்தகை ஒப்பந்தம் ஆகியவை கச்சத்தீவு இந்தியாவிற்குரியது என்று உறுதிப்படுத்துகின்றன .
கச்சத்தீவு யாழ்ப்பாண அரசரின் கீழ் இருந்ததாகவும், 1622ல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றிய போது அது அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டதாகவும், அது யாழ்ப்பாண நகரின் ஒருபகுதி என போத்துக்கீசியர்களின் வரைபடங்கள் காட்டுகின்றன என்றும் சொல்லி இலங்கையர்கள் அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்ததல்ல கச்சத்தீவு என்று சொல்லும் திரு.சிதம்பரம் யார் பக்கம்? தமிழர்கள் பக்கமா? இலங்கையின் பக்கமா?
கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது அல்ல, எனத் திரு.சிதம்பரம் ராமேஸ்வரத்தில் வந்து சொல்லத் தயரா?
இன்னொரு கேள்வியும் எழுகிறது. கச்சத்தீவு குறித்து “அது இந்திய நாடாளுமன்றம் எடுக்க வேண்டிய முடிவு” என்கிறார் திரு.சிதம்பரம். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கும் 19174, மற்றும் 1976 ஒப்பந்தங்கள், நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் போடப்பட்டனவா?
கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதற்கு எதிராக 2008 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்ட ஜெயலலிதா ( வழக்குப் போடலாம் என்ற யோசனையை முதலில் சொன்னவர் வாஜ்பாய். 1974 அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் அந்த யோசனையை வெளியிட்டார்.) இந்த ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். 2008ல் போட்ட வழக்கு இன்றுவரை நிலுவையில் இருப்பதையும், 2011ல் கருணாநிதியும் இதே போல் ஒரு வழக்குப் போட்டிருப்பதையும் அரசியல்வாதி சிதம்பரம் அறியாமல் போனாலும் வழக்கறிஞர் சிதம்பரம் அறிந்திருப்பார்.
வழக்கறிஞர் சிதம்பரம் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட வரலாற்றையும் அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன். இந்தத் தொலைக்காட்சிப் பேட்டியில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370ன் அடிப்படையில்தான் கஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்கிறார் சிதம்பரம். ஆனால் கஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி கையெழுத்திட்டார் (காண்க: நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் எழுதியுள்ள Constitution of Jammu and Kashmir பக் 67) .இன்றும் ஆண்டுதோறும் அக்டோபர் 26ஆம் தேதி “இணைப்பு நாளாக”க் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் 1947 அக்டோபரில் நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 15, 1947க்குப் பிறகு அரசியல் நிர்ணய சபை கூடியது 1947ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிதான். நம் அரசமைப்புச் சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதிதான் நிறைவேற்றப்பட்டது
இங்கு பேசப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாம் திரு. சிதம்பரம் அறியாதவை அல்ல. அவர் அறிவாற்றல் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும், ஆளுமை மீது மரியாதையும் உண்டு. அவர் இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் ஒரு தலைவரைப் (Statesman) போல் பேசாமல் ஓர் அரசியல்வாதியை (Politiciaan) போல் பேசுகிறார் என்பதுதான் பரிதாபத்திற்குரியது. கட்சியைக் காப்பாற்றும் கட்டாயத்தில் பேசிகிறவர்கள் அரசியல்வாதிகள். நாட்டின் எதிர்காலத்தை எண்ணிப் பேசுகிறவர்கள் தலைவர்கள்.
யோசித்துப் பார்த்தால் இந்தச் சறுக்கல் திரு.சிதம்பரத்திற்கு மாத்திரம் நேர்ந்திருப்பதல்ல. நாட்டிலுள்ள பல அறிவுஜீவிகள் இப்படித்தான் இருக்கிறார்கள். காரணம் வெறுப்பு. மோதி என்ற தனி மனிதர் மீதுள்ள வெறுப்பு. காகிதத்தைக் கண்ணுக்கருகே பிடித்துக் கொண்டால் கதிரவன் கூடக் கறுப்பாய்த் தெரியும் . வெறுப்பு அறிவை மறைக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது
இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன. “தமிழ்நாட்டைச் சேர்ந்ததல்ல கச்சத்தீவு” என்ற சிதம்பரத்தின் கூற்றைக் குறித்து தமிழகக் கட்சிகளின் நிலை என்ன? அவை அவற்றை ஏற்கிறதா? அல்லது மறுக்கின்றனவா? மறுக்கின்றன என்றால் இதுவரை ஏன் மறுப்பு அறிக்கை ஏதும் வெளிவரவில்லை? திமுக ஏன் மெளனம் சாதிக்கிறது? சின்னவிஷயங்களுக்கெல்லாம் சினந்து சீறுகிற வைகோ வாய்மூடி இருப்பது ஏன்?
கூட்டணி நிர்பந்தங்களைக் கருதி அரசியல் கட்சிகள் அமைதி காக்கலாம். ஆனால் ஊடகங்கள்? அற்ப விஷயங்களைக் கூட ஐந்து பேரை அழைத்து வைத்து இராக்கச்சேரி நடத்துகிற தொலைக்காட்சிகள் சிதம்பரத்தின் கூற்றை ஏன் விவாதிக்க மறுக்கின்றன?
அறிவாற்றல் மிகுந்த, நாட்டு நடப்புக்களை நன்கறிந்த திரு.சிதம்பரம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதைப் புரிந்த்து கொள்ள முடிகிறது.மெளனமே சம்மதம் என்று கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி அவரது கூற்றை அங்கீகரிப்பதையும் கூட அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் , ஊடகங்கள் இதைக் கண்டும் காணாமல் கடந்து போவதற்கும் காரணம் என்ன?
5.8.2019