வெற்றி. இந்தச் சொல்லைப் போல எழுட்சி தரும் இன்னொன்று உண்டா? அதுவும் வலிமையானர் என்று கருதப்படுபவரை வீழ்த்திப் பெறும் வெற்றி தரும் மகிழ்ச்சியும் மன எழுட்சியையும் விவரிப்பது எளிதானதல்ல. அங்கு சொற்கள் அர்த்தம் இழந்து வெளிறிப் போகும். அது உணர்வுகளின் கொண்டாட்டம். அறிவு சற்றே அயர்ந்து நின்று உள்ளிருந்து பொங்கும் உற்சாகத்தை வேடிக்கை பார்க்கும்.
அப்படி ஒரு மன எழுட்சி எனக்கு அண்மையில் ஏற்பட்டது. அல்ல, அல்ல நான் நகர்ப்புறத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசப் போவதில்லை. அதிலும் அப்படிச் சில வெற்றிகள் ஈட்டப்பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. ஆனால் அவற்றைப் பற்றி நான் இங்கு பேசப்போவதில்லை.
அரசியல் சதுரங்கத்தை அப்புறம் ஒரு நாள் பார்ப்போம். அசல் சதுரங்கம் அல்லவோ எனக்கு அந்த எழுட்சியைத் தந்தது.! செஸ் விளையாட்டைக் கவனித்து வரும் எவராலும் புறக்கணிக்க முடியாத ஒரு பெயர் கார்ல்ஸன். மேக்னஸ் கார்ல்ஸன்
ஆம். 2013ல் அன்று உலக சாம்ப்பியனாக இருந்த விஸ்வநாதன் ஆனந்த்தை தனது 23ஆம் வயதில் வீழ்த்திய அதே கார்ல்ஸன்தான், அவரது உலக சாதனைகள் பல. ஐந்து முறை தொடர்ந்து ஜாம்பவான்களை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் பெற்றிருக்கும் ரேட்டிங்தான் செஸ் உலக வரலாற்றிலேயே உச்சம்.
இப்படி ஒரு வெற்றி வரலாறு கொண்ட வீரரை அண்மையில் வீழ்த்தி விட்டான் ஒரு இந்தியச் சிறுவன்! அதுவும் சென்னையைச் சேர்ந்த சிறுவன்! அந்த வெற்றியின் மூலம் 16வயதில் உலகச் சாம்பியனாக ஆகிவிட்டான்!(ர்). அவர் பெயர் பிரக்ஞாயனந்தா.
இதோ இங்கே பக்கத்தில் உள்ள பாடியில் 2005ஆம் ஆண்டு பிறந்த பையன். அவரது தந்தை ரமேஷ் பாபு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ஊழியர். அவர் மாற்றுத் திறனாளி. அம்மா நாகலஷ்மிதான் பிரக்ஞாவை போட்டிக்குச் செல்லும் எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்பவர். வெளியே ஓட்டல்களில் சாப்பிடுவதை விரும்பாத பிரக்ஞாவிற்கு போகிற இடங்களில் எல்லாம்-அயல்நாட்டிலும்தான் – தமிழ்நாட்டு உணவு சமைத்துக் கொடுப்பதும் அவர்தான்
பிரக்ஞாவின் அக்கா வைஷாலியும் செஸ் சாம்பியன்தான். தனது பதினைந்து வயதில் ‘விமன் இண்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர்’ ஆனவர் செஸ் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு கொடுக்கப்படும் பட்டங்களிலேயே மிக உயர்ந்த, உச்சபட்சமான, பட்டம் கிராண்ட் மாஸ்டர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள பட்டம் இண்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர். தனது பதினைந்தாவது வயதில் விமன் இண்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி 17 வயதில் விமன் கிராண்ட்மாஸ்டராகவும் ஆனார்.
பிரக்ஞாவின் வெற்றிகளும் பிரமிக்கத்தக்கவை. பத்து வயதில் இண்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர் ஆன இளம் மேதை. அவர் கார்ல்ஸனை வீழ்த்திய விதம் இனிப்பான திகைப்பு. 39 நகர்வுகளில் அதை சாதித்தார். அதிலும் கறுப்புக் காய்களை ஆடத் தேர்ந்து கொண்டு. (வெள்ளைக் காய்களை தேர்ந்து கொள்பவர்தான் ஆட்டத்தைத் தொடங்குவார். அது ஒரு அனுகூலம். ஆட்டம் எந்தத் திசையில் நகர வேண்டும் என்ற வாய்ப்பை அவருக்கு அது தருகிறது.கறுப்புக் காய் ஆட்டக்காரர் தடுப்பு ஆட்டம்தான் ஆட வேண்டியிருக்கும்)
சாதாரணக் குடும்பப் பின்னணி கொண்ட ஒரு தமிழ்க் குழநதை நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையைத் தமிழ்ப் பத்திரிகைகள் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்க வேண்டும். அட்டைப்படமாக வெளியிட்டு ஆனந்தித்திருக்க வேண்டும். அது இன்னும் பல இளம் சாம்பியன்களை உருவாக்குவதற்கான விதையாக இருந்திருக்கும். விஸ்வநாதன் ஆனந்த் நிகழ்த்தியதற்கு நிகரான சாதனை இது. ஆனால் ஆனந்தைப் போல அதிகாரி வீட்டுப் பையன் இல்லை என்பதாலோ, அல்லது அரசியல் விளையாட்டுக்களில் அவர்கள் கவனம் குவிந்திருந்ததாலோ என்னவோ நம் ஊடகங்கள் இதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சினிமா நடிகர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து போனதற்கு ஒதுக்கப்பட்ட அளவு நேரம் கூட இதற்கு அளிக்கப்படவில்லை. எனது ஆறாத வருத்தம் இது.
ஒரே வீட்டுக்குள் இரண்டு சாம்பியன்கள் இருந்தாலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் விளையாடுவது அபூர்வம்தான். காரணம், அவர் அம்மாதான். “என் குழந்தைகளுக்குள் சண்டை வந்து விடக்கூடாது என்றுதான்” என்று அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் பிரக்ஞாவிற்கு பயிற்சி கோடுத்தது யார்? இன்று சர்வதேச சாம்பியனாகிவிட்ட பிரக்ஞா செஸ் விளையாடக் கற்றுக் கொண்டதெல்லாம் சென்னையில்தான். பிரிட்டீஷ் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் இவற்றையெல்லாம் வென்ற ரமேஷ் என்பவர் தன் மனைவி ஆர்த்தியோடு (அவரும் ஒர் சர்வதேச செஸ் சாம்பியன்) சேர்ந்து செஸ் குருகுல் என்ற செஸ் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார். அந்தப் பயிற்சிப் பள்ளிதான் பிரக்ஞாவை உருவாக்கியது.
நம் கண்ணருகில், கையருகில் எத்தனை எத்தனை திறமைகள்! விண்ணில் மேகத்தின் பின் பொலியும் நிலவு போல், மண்ணுக்குள் புதையுண்ட விதை போல் கண்டு கொள்ளப்படாமல்.
ஒரு கோணத்தில் பார்த்தால் சதுரங்கத்தில் இந்தியர்கள் சாதிப்பதில் ஆச்சரியம் இல்லைதான். அறிவால் விளையாடும் இந்த விளையாட்டை 1500 ஆண்டுகளாக இந்தியர்கள் ஆடி வருகிறார்கள். சிக்ராம் என்றொரு இந்திய மன்னன். எட்டுத் திசையும் போரில் வென்ற வீரன் காலத்தையெல்லாம் களத்திலே கழித்து முதுமை அடைந்துவிட்ட பின்னும், அந்த மன்னனின் மனம் போர்களையே நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் களத்திற்குப் போக உடலில் வலு இல்லை. மன்னரின் ஏக்கத்தைப் புரிந்து கொண்ட அவனது அமைச்சர் சேஷா என்பவர். உருவாக்கிய விளையாட்டுத்தான் சதுரங்கம் என்று முகமதிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்
இதற்கு சதுரங்கம் என்று பெயர் வைத்ததிலிருந்தே அறிவின் ஆட்டம் தொடங்குகிறது. சதுர் என்றால் நான்கு. அங்கம் என்றால் உறுப்பு. ராணுவத்தின் நான்கு உறுப்புகளான யானை, குதிரை, ஒட்டகம், காலாட்படை இவற்றைக் கொண்டு எப்படி எதிரிகளை வெல்வது, தனது அரசைத் தற்காத்துக் கொள்வது என்று அரச குடும்பத்தினருக்குப் பயிற்றுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு.
ஒரு காலகட்டம் வரை இதை அரச குடும்பத்தினரையும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசாரியன்களையுமன்றி வேறு யாரும் ஆட முடியாது என்ற நிலை இருந்தது. பொதுமக்கள் ஆடினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று விதிகள் செய்யப்பட்டன. எளிமையாகத் தொடங்கிய விளையாட்டு அரசர்கள் ஆடும் விளையாட்டாக ஆனபோது அந்தஸ்த்தின் அடையாளமாயிற்று.நவமணிகளாலும், தந்தத்திலும், சந்தனத்திலும் காய்கள் உருவாக்கப்பட்டன
மொகலாயர்கள் இதை இன்னும் பிரம்மாண்டமாக்கினார்கள். மணிகள் அல்ல, மனிதர்களே காய்களானார்கள். அரண்மனைகளில் கட்டங்கள் பதிக்கப்பட்ட கூடங்கள் உருவாகின. அவற்றில் மனிதர்கள் ஒவ்வொரு காய்க்கும் உரிய முகமூடிகள் அணிந்து காய்களாக நிற்பார்கள்.
கனோஜ் நாட்டை ஆண்ட இந்திய மன்னன் ஒருவன், முதலாம் குஸ்ரூ நெளஷர்வன் என்ற பாரசீக மன்னனுக்கு (கி.பி.521-576) அனுப்பிய பரிசுகளில் சதுரங்க ஆட்டத்திற்குரிய பொருள்களும் அடங்கியிருந்தன என்று ஷாநாமா என்னும் நூலில், பாரசீகப் பெருங்கவிஞன் பிர்தாசி குறித்திருக் கின்றார்.
பாரசீகத்திலிருந்து அரேபியா. பின அங்கிருந்து ஐரோப்பா. ஊர் ஊராகப் போன போது முதலில் பேர் மாறியது. பாரசீகத்தினர்கள் இதைத் தங்கள் மொழியில் சத்ரஞ் என்று அழைத்தார்கள். இஸ்லாமியர்கள் விலங்கு-மனித உருவங்களைத் தவிர்த்து சதுரம், வட்டம், முக்கோணம் என ஜாமிட்ரி வடிவங்களைக் கொண்டு ஆடினர்கள்.
ஐரோப்பியரகள் ரத கஜ துரக பதாதி என்பதை அவர்கள் அரசின் முக்கிய அங்கங்களான அரசன், அமைச்சன், மதகுரு, குதிரை வீரன், கோட்டை என்று மாற்றிக் கொண்டார்கள். (அவர்கள் பாவம். யானைக்கும் ஒட்டகத்திற்கும் எங்கு போவார்கள்? இந்தியாவிடமோ, அரேபியாவிலோ இரவல் வாங்கத்தானே வேண்டும்)
அரசனுக்கு அருகில் நிற்க வேண்டியது அமைச்சனா, அரசியா என்று ஒரு காலத்தில் ஐரோப்பாவில் சர்ச்சையே நடந்தது. அரசிகளுக்குப் போர்க்களத்தில் என்ன வேலை? என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பினார்கள். அவர்களை வாயடைக்கச் செய்தாள் இத்தாலிய இளவரசனுக்கு மணம் முடிக்கப்பட்ட கேதரீனா. அரண்மனை சுக போகங்களில் கிறங்கிக் கிடந்து ஆடசியை சரியாக கவனிக்காமல் இருந்தான் இளவரசன். கேதரினா களம் இறங்கினாள். போர் உடை அணிந்தாள்.சமர்களில் தன் சாமர்த்தியத்தால் எதிரிகளை வென்றாள்.
அதற்குப் பின் சதுரங்கத்தில் இருந்த அமைச்சர்கள் துரத்தப்பட்டார்கள். அவர்கள் இடத்தை அரசிகள் எடுத்துக் கொண்டார்கள்
இன்று சதுரங்கத்தில் சாதாரணர்கள் ஜெயிக்கிறார்கள் அதுவும் இளம் வயதிலேயே!