கைக் கெட்டும் தூரத்தில்தான் கடல். என்றாலும் வெம்மையைச் சுமந்து வந்தது வேனிற்காற்று.குளிர்ச் சாதனக் கருவியில் கூட்டியும் குறைத்தும் வெப்பத்தை வேண்டியபடி செய்து கொள்ள முடிவதைப் போல இயற்கையும் ஒரு ரிமோட்டைக் கையில் கொடுத்திருக்கக் கூடாதா? ”சின்னப் பிள்ளைத்தனமால இருக்கு!” என்று என் எண்ணத்தை ஏளனம் செய்து கூவிற்று மனது. அறிவு அதற்கு ஒரு பதில் வைத்திருந்தது. அவரவர் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வாழ்வை வடிவமைத்துத் தருவது தொழில்நுட்பம். இயற்கைக்கு அது இயலாது.எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாய்க் கொடுக்கவே அதற்கு ஆசை. ஏனெனில் இயற்கை என்பது கடவுளின் கைவண்ணம். தொழில்நுட்பம் என்பது மனிதனின் குழந்தை. கடவுளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் வித்தியாசமே இதுதான்!
எழுதிக் கொண்டிருந்ததை என் முதுகுக்குப் பின்னிருந்து படித்துக் கொண்டிருந்த சகா, உருக்குலைந்து கிடக்கும் உத்ரகண்ட் படங்களைப் பார்த்த பின்னும் கூட இப்படிச் சொல்வீர்களா? என்றார். நான் புன்னகைத்தேன்
இப்போதும் கடவுள் மனிதனைக் கடிந்து கொண்டிருக்கிறர் ஆனால் கைவிட்டுவிடவில்லை என்றே சொல்வேன் என்றேன். சர்ச்சை வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ, சகா ஒன்றும் பேசாமல் உள்ளே நகர்ந்து விட்டார்.
மனிதனாக மாறிப் பார்க்க கடவுளுக்கும் ஆசை வரும். அப்படி மாறிய கதைகளை அவதாரம் எனப் புராணங்கள் போற்றுகின்றன, அப்படியே இருக்கட்டும். ஆனால் இந்த முறை இறைவன் இராணுவ வீரர்களாக அவதாரம் எடுத்தான். எழவு விழுந்ததைப் போல எதற்கெடுத்தாலும் ஒப்பாரி வைத்து ஓலமிடும் ஊடகங்கள் உங்களுக்கு அதைச் சொல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் அதை என் பேனா எழுதாமலா இருந்து விடும்?
என் உள்ளே அந்தச் செய்திகள் ஒருமுறை ஓடி மறைந்தன. நொடி நேரத்திற்கு உடல் சிலிர்த்து முதுகு சொடுக்கிற்று. உத்ரகண்டில் நடந்த மீட்புப் பணி, உலகிலேயே இதுவரை நடந்த மீட்புப் பணிகளிலேயேமிகப் பிரம்மாண்டமானது. பேரழிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட லட்சம் பேர். அவர்களில் 72 ஆயிரம் பேரை மிகச் சில நாள்களில் மீட்டெடுத்து விட்டார்கள்.
மீண்டும் மழைவரும் என மிரட்டுகிறது வானம். ஆம் ஆம் என்கிறது வானிலை நிலையம். மறுபடியும் மழைவந்தால் சிரமப்பட்டு சீரமைத்த சாலைகள் சிதைந்து போகும். அதற்குள் அங்கிருந்து இன்னும் 30 ஆயிரம் பேரை அங்கிருந்து அகற்றி ஆக வேண்டும். எனவே கடிகாரத்தோடு போட்டியிட்டுக் கொண்டு கடமையை முடிக்க வேண்டும்.
இன்னும் கூடுதலாக ஆட்களை அனுப்பினால் இதை எளிதாக முடிக்கலாமே என உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எண்ணுவதும் எழுதுவதும் சுலபம். இத்தனை தூரம் மெனக்கிடுகிறவர்களுக்கு இது கூடத் தெரியாதிருக்குமா? “மீட்பு பணிக்கு 500 வீரர்களில் தொடங்கி இப்போது 6 ஆயிரத்து 200 பேர் வரை அங்கு அனுப்பிவிட்டோம். இன்னும் அதிகமான ராணுவத்தினரை அங்கே அனுப்பினால் அது சுமையாகவே அமையும்” என்கிறார்கள் இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள். ஒரு நபர் செய்ய வேண்டிய குழம்பை ஒன்பது பேர் சேர்ந்து செய்தால் சுவை கெட்டுப் போகும் என்பது ஆங்கிலப் பழமொழி.
இது பிரம்மாண்டமான மீட்புப்பணிஎன்பது மட்டுமல்ல, மிகக் கடினமானதும் கூட. கேதர்நாத்தை அடைய சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் இந்த 15 கிலோ மீட்டர் பாதை பலஇடங்களில் துண்டிக்கப்பட்டு விட்டது.இதனால் கேதர்நாத்துக்கு சென்றுகொண்டிருந்தவர்கள், அங்கு இருந்து திரும்பிக்கொண்டிருந்தவர்கள் என சுமார் 30 ஆயிரம் பேர் வழியில் சிக்கி தவிக்கிறார்கள்.இவர்களை மீட்டாக வேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல்., அங்குஹெலிகாப்டர்கள் போய் இறங்க முடியாது. அதற்கான வசதி இல்லை. தற்காலிகஹெலிபேடுகளும் அமைக்கப்படவில்லை. விமானம், ஹெலிகாப்டர்கள் போய் சேர முடியாத நிலையில், , மலைப்பகுதிகளில் உள்ள சாலைவழியாகத்தான் சென்றாக வேண்டும். ஆனால் எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக இருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. பாதைகளில் பாறைகள் உருண்டு கிடக்கின்றன. இன்னும் சில இடங்களில் செல்போன் தொடர்புகிடைக்கவில்லை, என்பதால்யார் எந்தெந்த பகுதியில் இருக்கிறார்கள் என்றும் சரியாககண்டுபிடிக்க முடியவில்லை
பல இடங்களில்பாதைகள் அமைத்துத்தான் ராணுவம் முன்னேறிச் சென்று மனிதர்களை மீட்டெடுத்து வருகிறார்கள் மந்தாகினி கொந்தளித்து பாலங்களைப் பறித்துக் கொண்டுவிட்ட இடங்களில் தற்காலிகமாக கயிறுகளால் பாலம்அமைத்து பக்தர்களை மீட்டார்கள்
.இத்தனை இடர்களையும் கடந்து சன் பிரயாக் என்ற இடத்திற்கு முதலில் போய்ச் சேர்ந்தது இந்திய–திபெத் எல்லை பாதுகாப்பு படையின் நடைக் குழு அந்த உயரமான பகுதியில் சிக்கிதவிக்கிறவர்களைச் சமவெளிக்குச் சுமந்து செல்கிற பொறுப்பு அவர்கள் தோளில். அந்த இடம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனைக் கண்கொண்டு பார்க்க உதவும் ஒரு தகவல்: அங்கு பாய்கிற –நடக்கிற நதி என்று சொல்லத்தான் எனக்கும் ஆசை- சன்கங்கா, மந்தாகினி என்ற இரண்டு நதிகளும் சன்பிராயக் பகுதியில் இருந்த ஓட்டல்கள், லாட்ஜ்கள், கடைகள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கி விட்டன.
உயிரைக் காப்பாற்றுகிற பணி மட்டுமல்ல, உணவு கொடுக்கிற பணியும் அவர்கள் முதுகில் ஏறி நிற்கிறது.காரிருள் சூழ்ந்து, முகில்கள் வெடித்து மாரி பொழிந்து வெள்ளம் பெருக்கெடுத்தபோது கேதர்நாத் செல்கிற வழியில் உள்ள பள்ளத்தாக்குகளிலும், மலை இடுக்குகளிலும் ஓடி ஒளிந்தவர்கள் ஓர் ஆயிரம் பேர் உண்ண ஒரு வேளை உணவின்றி குடிக்கக் குவளை நீர் இன்றி பல நாட்களாக பட்டினிகிடக்கும் செய்தி தெரிந்ததும் நமது ராணுவம் அவர்களை நாடி நடந்தது பாறை இடுக்குகளில் பதுங்கிய பலரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அவர்கள் பார்த்தார்கள் உடனடியாக உணவு, ஓரளவு மருத்துவ உதவி அளித்து அவர்களை மீட்டார்கள்
இந்தப் பணிகளையெல்லாம் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், கால நேரக் கணக்குப் பார்க்காமல் மேற்கொண்டவர்கள் நம் இராணுவ வீரர்கள்நம்முடைய வணக்கத்திற்கும்,பெருமிதத்திற்கும் உரியஅந்த இராணுவவீரர்களுக்கு இந்த சாதாரண இந்தியனின் சல்யூட்!
என் ஜன்னலுக்கு வெளியே. . . ஜூலை 4 2013 எழுதியது:23ஜூன் 2013
4 thoughts on “சாதாரண இந்தியனின் சல்யூட்!”
miga arumai…Padipaalare….raanuvam pattri oru nalla karuthu…
Eppoluthum naam asadarana nihalvuhalaiae perumitham kalandu pesuhirom. Sadarana Natkalilum anda ranuva veeran vanakkathukkuriavane.
We have the habbit of admiring extraordinary circumstances happily forgetting the normal sequential occurences.
Even in normal conditions the Jawan deserves the “Salute”
My hearty salute to the JAWANS.
This is the occation to realise the value of Jawans.