“உங்களை நான் அப்பா என்றழைக்கலாமா?”
குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். கட்டை விட்டுப் பிரிந்த தனிக் கரும்பு போல, கறுப்பல்லாத கறுப்பில், நாவல் பழ நிறத்தில், தலைக் கூந்தல் பிரிந்து தொங்க, சற்றே உயரமாய் அந்த இளம் பெண் என் இடது புறம் நின்று கொண்டிருந்தாள்.. கையில் இருந்த கட்டுப் புத்தகங்களை நெஞ்சில் சுமந்திருந்தாள். பாடப் புத்தகங்கள் அல்ல. நான் எழுதிய புத்தகங்கள்.
‘ஓ! தாத்தா என்றே அழைக்கலாம்’ என்று முதுக்குப் பின் சிலர் கிசுகிசுத்துச் சிரித்தது எனக்கும் காதில் விழுந்தது. கல்லூரி மாணவிகள். என் நரையோடிய தலையும் வயதும் அவர்களுக்கு இளப்பமாகத்தானிருக்கும்.
தாத்தா என்பதும் அப்பா என்பதும் வயதைக் குறிக்கும் சொற்களா? அவை உறவைக் குறிக்கும் பெயர்கள் அல்லவோ?
” என் பெயர் கிருத்திகா. உங்களை அப்பா என்றழைக்கலாமா?”
நான் புன்னகைத்தேன். சரி, வேண்டாம் என ஏதும் சொல்லாமல், நன்றி எனச் சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டேன். நகர்ந்துவிட்டேன்.
மறு நாள் ஒரு மின்னஞ்சல் வந்தது
” அப்பா, அதென்ன நன்றி? வாழை நாரைப் பச்சைத் தண்ணீரில் ஊறப் போட்டமாதிரி கொழ கொழவென்று ஒரு வார்த்தை. அழை, அல்லது வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம். மகள் என்று சொல்லிவிட்டால். கைக் காசைப் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லிக் கேட்டுவிடுவேன் என்று பயப்படுகிறீர்கள் போல. அல்லது இது என்ன செண்டிமெண்டல் ரப்பிஷ் என்ற அறிவுஜீவி அகந்தையா? உங்களுக்கு என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் எனக்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். உங்களைப் படிக்காமல் போயிருந்தால் என்றோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஆனால் இருக்கிறேன். இதோ உயிரோடு இருக்கிறேன். உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மறுபிறவி கொடுத்தீர்கள், அதனால் நீங்கள் என் அப்பா!”
அவளது மிகையான உணர்ச்சித் ததும்பல் எனக்கு லேசாக அச்சமூட்டியது. கண்ணாடிப் பாத்திரம் ஒன்று என் கையில் ஏறியிருக்கிறது, கவனமாகக் கையாளா விட்டால் உடைந்து நொறுங்கும் என்ற அச்சம்.
“அப்பா என்பது பெரிய வார்த்தை. உனக்கு ஒரு அப்பா இருக்கிறார். உன்னைப் பெற்றவர். இருபத்திரண்டு வருடங்களாக உன்னை உள்ளங்கையில் வைத்துக் காத்தவர்.அவருக்கு இணையாக யாரும் இருக்க முடியாது. தன்னுடைய இடத்தை நீ இன்னொருவருக்குக் கொடுக்கிறாய் என்றால் அவர் காயம் படுவார். என்னை நீ பெயர் சொல்லி அழைக்கலாம். அது மரியாதைக் குறைவு என்று நீ நினைப்பாயோ? நான் நினைக்கவில்லை. நான் படித்த அயலகப் பல்கலையில் எனக்கு ஒரு பேராசிரியர் இருந்தார். 70 வயதுக்கு மேல் இருக்கும். அவரது துறையில் அவர் பெரிய ஆள், அவர் நம்மோடு இருந்தால் நமக்குப் பெருமை என்பதால் பல்கலை அவரது வயதைப் பொருட்படுத்தாமல் அவரை வேலையில் வைத்திருந்தது. முதல் நாள், முதல் வகுப்பு, ஒரு பதினெட்டு வயதுப் பையன் வகுப்பறையில் ‘ஹே! ஜான்” என்று அவர் பெயரைச் சொல்லிக் கூவினான். எனக்கு அதிர்ச்சி. அவருக்கு என்ன வயது! என்ன படிப்பு! என்ன அனுபவம்! என்னமாதிரியான புகழ்! ஒரு பொடிப்ப்யல் அவரை அத்தனை பேர் முன்னால் பெயரைச் சொல்லி அழைப்பதா? அப்புறம்தான் கவனித்தேன். அங்கிருந்த எல்லோருமே அவரைப் பெயரைச் சொல்லித்தான் அழைத்தார்கள். சரிதானே? கூப்பிடத்தானே பெயர்?” என்று பதில் போட்டேன்
அரைமணியில் பதில் அஞ்சல் வந்துவிட்டது. அன்புள்ள்ள அப்பா சார்! என்று ஆரம்பித்த கடிதம், “ என்னைப் பெற்ற அப்பா எனக்கு உடல் கொடுத்தார். அதை நான் என்றும் மறக்க மாட்டேன். ஆனால் நான் உடலால் மட்டுமல்ல, மனதாலும் வாழ்கிறவள். அதனால் இன்னொரு அப்பா இருந்துவிட்டுப் போகட்டுமே! கிருஷ்ணனுக்கு இரண்டு அம்மா. கர்ணனுக்கு இரண்டு அம்மா. என் தோழிக்கும் இரண்டு அம்மாக்கள். மிரள வேண்டாம். அவர் அப்பா இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டார். இரண்டு அம்மாக்கள் இருக்கலாம் என்றால் இரண்டு அப்பா இருப்பது தப்பா அப்பா சார்!”
அதற்கப்புறம் நிறைய மின்னஞ்சல்கள். வாரத்திற்கு ஒன்றாவது வரும். இடுப்பில் இருந்து இறக்கிவிட்ட குழந்தை விசாலமான கூடத்தில் இலக்கில்லாமல் அங்கும் இங்கும் ஓடுவது போல இன்னதென்று இல்லாமல் சின்னச் சின்ன கேள்விகள் இருக்கும்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி எழுதவில்லையாமே? மரத்திலிருந்து பறித்த பின்னும் வாழைப்பழம், பப்பாளி எல்லாம் எப்படி பழுக்கிறது? மியூச்சல் ஃபண்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? என்னுடைய அறைத் தோழி வேறு ஜாதிப் பையனைக் காதலிக்கிறாள். இருவரும் கல்யாணம் செய்து கொள்வது என்று உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு தரப்புப் பெற்றோர்களும் எதிர்க்கிறார்கள். அவள் முடிவு சரியா? சூடாமனணியின் நான்காம் ஆசிரம சங்கரியைப் போல நிஜவாழ்வில் யாராவது இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுதான் ஆக வேண்டுமா?
எல்லாவற்றிற்கும் என்னிடம் விடை இருக்குமென்று நினைத்துக் கொண்டிருந்தாள். தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தை கைக்கெட்டும் வண்ணங்களை எல்லாம் பிடித்து விட வேண்டும் என்பதைப் போல ஒரு பேதமை அவளிடம் இருந்தது
ஒரு நாள் விடுதியில் இருந்து போன் வந்தது. அவள் எண் இல்லை. ஆனால் அவள்தான் பேசினாள்.குரலில் பதற்றமும் தவிப்பும் இருந்தது. “அப்பா சார்! நான் செத்துப் போகப் போகிறேன்” என்று அழுதாள்.
“என்ன ஆச்சு?”
“வயிறு வலி தாங்க முடியலைப்பா!”
எனக்குப் புரிந்தது. இந்தப் பருவத்தில் இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர அவஸ்தை. “உயிர் போகிறது!. தாங்க முடியவில்லை அப்பா!”
எனக்கு என்ன செய்வது என்று ஒரு கணம் புரியவில்லை. நான் திருமணம் செய்து கொள்ளாமலே தனி ஆளாக இத்தனை வருடங்களைக் கடத்திவிட்டேன். ஒரு ஆண். என்ன இருந்தாலும் அன்னிய ஆண்!
டாக்சியில் விடுதிக்குப் போய் அள்ளிப் போட்டுக் கொண்டு பெண்கள் மருத்துவ மனைக்குப் போனேன். அவர்கள் அவளது வலியை சமையலுக்குக் காய் நறுக்குவது போல சகஜமாக எடுத்துக் கொண்டார்கள். “ நீர்க்கட்டி இருக்கக் கூடும். இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு அதற்கான சிகிச்சை ஆரம்பிக்கலாம். இப்போதைக்கு வலி நிவாரணி தருகிறோம்” என்றார்கள்.
அதுதான் முதன்முறையாக அவள் வீட்டில் வந்து தங்கின தருணம். அதன் பின் வருவாள் போவாள் வீட்டில் தங்க மாட்டாள். ஒரு பிறந்த நாளின் போது இளம் நீலத்தில் மெல்லிய கோடுகள் போட்ட சட்டை ஒன்றை வாங்கி வந்து, “திரும்புங்க: என்று செல்ல அதட்டல் போட்டுத் தோளில் வைத்து அளவு பார்த்தாள். நான் கோடு போட்ட சட்டை போடுவதில்லையே என்று மறுத்த போது, “இனிமே போடுங்க. அதென்ன கிழவன் மாதிரி தொள தொளனு வெள்ளைச் சட்டை!” என்று கடிந்து கொண்டள்.
சில நாள் வந்து இறைந்து கிடக்கும் புத்தகங்களை அடுக்கித் தருவாள். நான் என் புத்தகங்களை ஆசிரியர் பெயர்களின் அடிப்படையில் அடுக்குவது வழக்கம். செம்பருத்தியும் உயிர்த்தேனும் அடுத்தடுத்து இருக்கும். இன்னும் சில நாள்களும், ஒற்றனும் ஒட்டிக் கொண்டு நிற்கும். பாலங்கள் ஒரு மனிதனின் கதையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.. இவள் எல்லாவற்றையும் கலைத்துத் தலைப்புக்களை அகரவரிசையில் அடுக்கினாள். ஆழி சூழ் உலகை அடுத்து இன்னும் சில நாள்கள் இருக்கிறது. இந்த மாற்றம் எனக்குத் தெரியாது. எதையோ தேடப் போனபோது குழம்பி, கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்து குரல் உயர்த்தி விட்டேன்.
“யார் பண்ணின வேலை இது?”
“யார் பண்ணுவா? இதற்கு வெளியில் இருந்து ஆளா வரும்?”
“இனிமேல் என் புத்தகங்களைத் தொடாதே!”
“ஏன்? இல்லை ஏன்கிறேன்? உங்க பொண்ணுனு சொல்லி சொத்திலியா பங்கு கேட்டேன்? இதை நான் செய்யக் கூடாதா?
“ என் சொத்தே இதுதான். இனி என் புத்தகங்களைத் தொட்டுப் பாரு! கையை வெட்டிவிடுவேன்” என்று கத்திய ஞாபகம்.
“ இனி என்ன? இப்பவே வெட்டுங்க!”
அவள் அலட்டிக் கொள்ளாமல் நடந்து அடுக்களைக்குள் போய் அரிவாள் மணையை எடுத்து வந்து நீட்டினாள்
எப்படியோ ஒரு ஒட்டுதல்; அழுக்கு வேட்டியும், கிழிசல் பனியனுமாக வீட்டில் புழங்குவதைப் போல இயல்பாய் ஒரு ஸ்வாதீனம்; தகப்பன்தானே என்று தயக்கம் போன உரிமை.
விடிகாலை வெயில் அனுமதி ஏதும் கேட்காமல் அதுவாகப் படியேறி வீடு முழுக்கப் பரவி விடுவதைப் போல அவள் வாழ்வில் படர்ந்தாள்
ஏதோ ஒரு விதத்தில், தொலைபேசி உரையாடலில், வாடஸப் பகிர்வில், பேஸ்புக் பதிவில், வருதல் போதல், விடுமுறைச் சாப்பாடு, பிறந்த நாள் பண்டிகை நாள் பரிசு என்று அன்றாடம் என் வாழ்வில் நிழலாடுபவளாக மாறிப் போனாள் அவள்.
அவள் கல்யாணம் நிச்சயமாகும் வரை.
வெள்ளி போல வெயில் காயும் போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் சரசரவென்று தரையிறங்கும் மழைத்தூறல் போல அவள் திருமணம் நிச்சயமாயிற்று. பையன் அமெரிக்காவில் இருந்தான், ஆனால் அறிமுகமான பையன்தான். இங்கு இருந்தபோது இருவரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறார்கள். அவன் வேறு கம்பனிக்கு வேலை மாற்றிக் கொண்டு அமெரிக்காவிற்குப் போய் விட்டதில் அறிமுகம் அறிமுகமாகவே முடிந்து போனது. காதல் ஏதும் இல்லை. அதாவது அப்படித்தான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனுக்குள் காதல் இருந்தது. கல்யாணப் பேச்செடுத்ததும் வீட்டில் சொல்லி விட்டான். பெண் கேட்டு வந்து விட்டார்கள்
“என்னால் நம்ப முடியவில்லை அப்பா சார்! அத்தனை நாள் அடுத்தடுத்த மேசையில் உட்கார்ந்து வேலை செய்திருக்கிறோம். ஒரு வார்த்தை கோடி காட்டியதில்லை. பூடகமாகக் கூடப் பேசியது இல்லை. ஒரு பிறந்த நாள் அன்று வித் லவ் என்று கையெழுத்திட்ட அச்சடித்த வாழ்த்து அட்டை கொடுத்தான். இந்த லவ்விற்குத்தான் ஆயிரம் அர்த்தம் உண்டே. நான் அன்பு என்றே எடுத்துக் கொண்டேன்.”
“ உனக்குப் பிடித்திருக்கிறதா?”
“உள்ளதைச் சொல்வதானால் எனக்கென்று அபிப்பிராயம் ஏதும் இல்லை”
“அதெப்படி? கல்யாண வயதில் இருக்கும் பெண்ணுக்குத் தன்னுடைய ‘ஆள்’ இப்படி இருக்க வேண்டும் என்ற கனவு, -இல்லை இல்லை குறைந்த பட்ச எதிர்ப்பார்ப்புக் கூட- இருந்திருக்காதா?
“அப்பா சார்! நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்கிறேன்”
“சரி இப்ப என்ன முடிவு செய்திருக்கிறாய்?”
“சரியென்று சொல்லிவிட்டேன்”
“அபிப்பிராயமே இல்லை என்றாய். பின் எப்படி சரியென்று சொன்னாய்?”
“இவனை இல்லை என்றால் இன்னொருவனைக் கொண்டு வந்து நிறுத்துவார்கள். தெரியாத தேவனைவிடத் தெரிந்த பிசாசே மேல்!”
எனக்கு சற்று ஏமாற்றம்தான். அவள் வாழ்வின் முக்கியமான இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் முன் என் அபிப்ப்ராயத்தைக் கேட்கவில்லையே என்ற ஆதங்கம். அவள் பெற்ற தகப்பனோடு பேசித்தானே முடிவெடுத்திருப்பாள். ஆனால் நான் அப்பா இல்லையே? அப்பா சார்தானே!,
கண்ணுக்கு மை எழுதுகையில் விரலில் மிஞ்சியதைச் சுவரில் தீற்றும் போது ஏற்பட்ட கறை போல அவளது மகிழ்ச்சிக்கு நடுவே எனக்குள் ஆதங்கம் குமைந்து கொண்டிருந்தது.. கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்த போது வாய்விட்டே கேட்டுவிட்டேன்
“கல்யாணத்திற்குப் பிறகு என்னையெல்லாம் மறந்து விடுவாயா கீர்த்தி?”
“அப்பா சார்!” என்று கூவியவள், “ உங்களை அறிவு ஜீவி என்று கொண்டாடுகிறார்கள். நீங்கள் எப்போதிலிருந்து இப்படி செண்டிமெண்டல் ஆசாமி ஆனீர்கள்?”
நான் கண நேரம் மெளனமாய் இருந்தேன்
“ சரஸ்வதி என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“உங்களுக்கு முதன் முதலில் பாரதியாரை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வீர்களே, அந்த டீச்சரா?”
இல்லை எனத் தலையசைத்தேன்
“மக்கு, மக்கு, என்று நெற்றியில் தட்டிக் கொண்டாள். வீணையோடு வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பாரே, அவரா?”
“நான் சொல்வது, மனிதரும் இல்லை, தெய்வமும் இல்லை. நதி”
“அப்படி ஒரு நதி இருக்கிறதா என்ன?”
“இருந்தது. 3000 வருஷத்திற்கு முன்னால்.இருந்தது. ரிக்வேதம், வேதத்திற்குப் பின் வந்த பிரமாணங்கள், மகாபாரதம் எல்லாம் அதனைப் பேசுகின்றன. கிறிஸ்டியன் லாசன், மாக்ஸ்முல்லர், ஜேன் மக்கின்டோஷ், மிஷேல் தனினோ என்று வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த வெள்ளைக்கார அறிஞர்கள் அதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பூமியைத் தோண்டி சரித்திரம் தேடுவோர், வானத்திலிருந்து செயற்கோள் வழி ஆராய்கிறவர்கள், கதிர்வீச்சின் மூலம் காலத்தை அளக்கிறவர்கள் எல்லோரும் அதை ஆராய்ந்திருக்கிறார்கள்.
“இன்ட்ரெஸ்டிங்!”
“அதன் தீரத்தில் ஞானம், வேதம், கலைகள்,எல்லாம் செழித்தன. நாகரீகம் தழைத்தது. ‘அம்பிதமே நாதிதமே தேவிதமே’ சரஸ்வதி என்பது ரிக்வேத வாக்கியம். அதாவது சிறந்த தாய், சிறந்த நதி, சிறந்த தேவி
. “அடேங்கப்பா!”
“அந்த சரஸ்வதி ஒருநாள் காணாமல் போய் விட்டாள்!
“ஐய்யய்யோ! என்ன ஆச்சு?”
“பாலைவனத்தில் இறங்கி மறைந்து விட்டாள் என்கிறது மகாபாரதம்”
“ஏனாம்?”
“ சூழல், சுற்றுச்சூழல்தான் காரணமாம்”
“ஓ!”
“நம் பெண்களும் இப்படித்தான். மகள், தாய் தேவி என எல்லாமுமாக, ஆகச் சிறந்ததாகத் திகழ்ந்து விட்டு, கல்யாணம் என்ற பாலையில் இறங்கிக் காணாமல் போய்விடுவார்கள். கல்யாணத்திற்குப் பின் அப்பாக்களை மறந்து விடுவார்கள். அப்பாக்களுக்கே அதுதான் நிலைமை. நான் அப்பா சார்தானே!”
எனக்குக் கண் கலங்கி குரல் கரகரத்தது
என் மன நிலையை மாற்ற நினைத்தாளோ, இல்லை வம்புக்கு இழுக்கத்தானோ, அவள் கேட்டாள்:
“அப்போ, என் கல்யாணம் என்பது பாலைவனம் என்றே முடிவு செய்துவிட்டீர்கள். நான் அதற்குள் இறங்கப் போகிறேன், இல்லை?”
எனக்கு சொரேர் என்றது.
கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்த பெண்ணிடம் இப்படியா நான் பேசுவேன்! ஏன் இப்படி சர்வ மூடனாகிப் போனேன்?
‘”இல்லை, இல்லை, நான் அப்படிச் சொல்ல வரவில்லை” என்று ஆரம்பித்த என்னை அவள் கையுயர்த்தி அமர்த்தினாள்
“ பாலைவனமோ, நந்தவனமோ இனி அதை மாற்றமுடியாது. பத்திரிகை அடித்து ஊர் முழுக்கச் சொல்லியாகிவிட்டது. நாங்கள், அதாவது பெண்கள், நதி என்றால் பாலைக்குள் மறைந்து விடவேண்டும். அல்லது சமுத்திரத்தில் கலந்து அடையாளமற்றுப் போய்விட வேண்டும் என்றுதான் விதித்திருக்கிறது இல்லையா?!” அவள் கடகடவென்று சிரித்தாள் கண்ணோரத்தில் நீர் துளிர்க்கச் சிரித்தாள் “ நதியின் மீது ஆசை பெருகிவிட்டால் ஒரு சொம்பில், குடத்தில், உள்ளங்கையில் கொஞ்சம் அள்ளி சிறிது நேரம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நதியோட்டத்தைத் தடுக்க முடியாது. தடுத்தால் பூகம்பமாமே!” மறுபடி சிரித்தாள்.
அழைப்பைக் கையில் கொடுத்து நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டுவிட்டாள்
அவள் அமெரிக்கா போய் மூன்று மாதத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டு மூன்று மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் இல்லை. இணையம் மூலம் பேச முயற்சித்தேன். தூக்கக் கலக்கத்தில் அவள் குரல் ஹலோ என்று சொன்னதுடன் தொடர்பு அறுந்தது. அது அவளுக்கு இரவாக இருந்திருக்க வேண்டும். அதன் பின் மறுநாள் ஒரு மின்னஞ்சல் வந்தது
“ அன்புள்ள அப்பா சார்! இந்தக் கலிபோர்னியா பாலைவனம் எனக்குப் பிடித்திருக்கிறது.இங்கு நான் கற்றுக் கொண்ட முதல் பாடம் நாம் யாரையும் எதனையும் சார்ந்திராமல் நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இரண்டாவதாகக் கற்றது சரஸ்வதி. நீங்கள் சொன்ன சரஸ்வதியை கூகுளில் தேடிப் படித்தேன். அவள் மறைந்து விடவில்லையாம். கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் ஓடி பிரயாகையில் கங்கையையும் யமுனையையும் அழைத்துக் கொண்டு கடலை நோக்கிப் போகிறாளாம். அதெப்படி கண்ணுக்குள் தெரியாமல் ஒரு நதி இருக்க முடியும் என்று நானும் சந்தேகத்தோடுதான் மேய்ந்தேன். ஒரு கவிதை அகப்பட்டது. நாங்கள் தலை பின்னிக் கொள்ளும் போது கூந்தலை மூன்றாகப் பிரித்துக் கொண்டு பின்னிக் கொள்கிறோமே, ஆனால் வெளியே சடையியில் இரண்டு இழைதானே மாறி மாறிப் பின்னிக் கொள்வது தெரிகிறது, மூன்றாவது கண்ணுக்குத் தெரிவதில்லையே. அது போலவாம் சரஸ்வதி, கண்ணுக்குத் தெரியாதாம். ஆனால் இருக்கிறாளாம் என்று அந்தக் கவிஞன் எழுதிப் போகிறான்.
இருக்கிறாள் சரஸ்வதி இருக்கிறாள். இருக்கிறேன் இருக்கிறேன் நானும்
உடம்புக்கு வயசாகும். ஒன்றும் செய்ய முடியாது. மனசைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அன்புள்ள கீர்த்தி என்ற சரஸ்வதி என்று மின்னஞ்சல் முடிந்திருந்தது
(அமுத சுரபி தீபாவளி மலர் 2018)
***