“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்.”

maalan_tamil_writer

காற்றுக்குக் காது இருக்குமானால், 70களின் தொடக்கத்தில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராயநகர், குட்டிச் சுவர்களில் அமர்ந்திருந்த அந்த மூன்று இளைஞர்களின் அரட்டையில் அவ்வப்போது உச்சரிக்கப்படும் அந்தப் பெயரைக் கேட்டிருக்கும், அது: தி.ஜானகிராமன்.

பின்னொருநாளில் அந்த இளைஞர்கள் அறியப்பட்டவர்களாக ஆவார்கள் என்று அந்தக் காற்றுக்கும், குட்டிச் சுவர்களுக்கும் தெரியாது. தி.ஜானகிராமனுக்கு ஒரு வேளை தெரிந்திருக்குமோ?

என்னைப் போன்ற இளைஞர்கள் அப்போது புதுக்கவிதைகள் எழுதத் தலைப்பட்டிருந்தோம். புதுக்கவிதை பற்றிய பூசல்கள் தணிந்திருந்தன. என்றாலும் அவிந்து விடவில்லை. ஆனால் தர்க்கங்கள் எல்லாம் பெரிய தலைக்கட்டுகளுக்குள்ளேதான். ஆனால் 23 முதல் 30 வயதிற்குள்ளிருந்த இளைஞர்கள் நாங்கள் எதையும் பொருட்படுத்தாமல் கவிதைகளையும் கவிதைகள் என்று நாங்கள் நம்பியவற்றையும் எழுதிக் கொண்டிருந்தோம். கசடதபற புள்ளி என்று ஒரு உள்ளங்கை அகல கவிதைத் தொகுப்புக் கொண்டு வந்தது. ஏட்டிக்குப் போட்டி, எகனைக்குக் மொகனை என்ற கதையாக நான் முழநீளத்திற்கு ஒரு கவிதைத் தொகுப்புக் கொண்டு வந்தேன். அப்போது கலாப்ரியா திருநெல்வேலியிலிருந்து வெள்ளம் என்று ஒரு மினி கவிதைத் தொகுப்புக் கொண்டுவந்திருந்தார்.

இத்தனை அமர்களத்திற்கு நடுவில் பாலகுமாரன், தி.ஜா சொன்னதாக ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். அது: புதுக்கவிதைக்கு எதிர்காலம் இராது, சிறுகதையும்,மரபுக் கவிதைகளும்தான் வருங்காலத்தில் கோலோச்சும் என்பது.

கலாப்ரியா தனது வெள்ளம் கவிதைத் தொகுப்பை தி.ஜானகிராமனுக்கு அனுப்பி வைத்தார். ஆச்சரியம் தி.ஜா பதிலெழுதினார்!. அன்று அதிகம் அறியப்படாதிருந்த ஓர் இளம் கவிஞனின் முதல் கவிதைதொகுப்பிற்கு, அதுவும் ‘மினி’ கவிதைத் தொகுப்பைக் குறித்துக் கைப்பட பதில் எழுதியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அதுவும் சாதாரணமாக அல்லது சம்பிரதாயமாக அல்ல. அவரின் பாராட்டு வரிகளை இன்று படிக்கும் போதும் எனக்கு வியப்பு மேலிடுகிறது.எத்தனை சரியான கணிப்பு!.

“வெள்ளம் படித்தேன். மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது. நல்ல ஆண்பிள்ளை அல்லது நல்ல பெண் பிள்ளைக் கவிதைகள்” என்று கலாப்ரியாவின் கவிதைகளை மெச்சிய தி.ஜா, அதில் அவருக்குப் பிடித்த கவிதைகளையும் பட்டியலிட்டிருந்தார்

தி.ஜா சொன்னதாக பாலகுமாரன் கூறிக் கொண்டிருந்த கருத்தையும் தனது கடித்ததில் குறிப்பிட்டிருந்தார் கலாப்ரியா. அதற்கு தி.ஜா. சொன்ன பதில் சுவாரஸ்யமானது.” பாலகுமாரன் பால்யத்தினால் (அப்போது பாலாவிற்கு 27 வயது!ஆனால் எழுத வந்து மூன்று நான்காண்டுகள் இருக்கலாம்-மா) சொல்லியிருப்பார், நான் புதுக்கவிதைக்கு future இல்லை என்று சொன்னதாக. நான் புதுக்கிவிதைகளுக்குத்தான் future இல்லை என்று சொல்லி வந்திருக்கிறேன். இன்றும் சொல்லி வருவேன்” என்றவர் ஒரு அறிவுரையும் அந்தக் கடிதத்தில் சொல்லியிருந்தார். எல்லா எழுத்தாளர்களும் நினைவில் கொள்ள வேண்டிய அறிவுரை அது.

“1963ல் அப்படி சொன்னியே, போன வருஷம் இப்படிச் சொன்னியே என்று யாராவது விமர்சகர்கள், அல்லது எழுத்தாளர்கள் கத்தினால் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள், அது குழாய்ச் சண்டை மரபு. மாறாவிட்டால் வளராது.அவர்களோடு சேராதீர்கள்”

கலாப்ரியாவின் கவிதைகளை மட்டுமல்ல, திறமை கொண்ட இளைஞர்கள் எவராயினும் அவர் பகிரங்கமாகப் பாராட்டத் தயங்கியதில்லை. தில்லியில் இருந்த இலக்கியவாதிகள்- க.நா.சு, கஸ்தூரி ரங்கன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட்.சாமிநாதன்,சுஜாதா –போன்றவர்கள் கூடி இலக்கிய விவாதங்கள் செய்வதுண்டு. அது கணையாழியில் தில்லிப் பேச்சு என்று பிரசுரமாகி வந்ததது. அதில் இளம் எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர் என்று சுப்ரமண்ய ராஜுவைக் குறிப்பிட்டிருந்தார், தி.ஜா. இத்தனைக்கும் ராஜு அப்போது ஐந்தாறு கதைகள்தான் எழுதியிருந்திருப்பார்.

“தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் 1960 முக்கியமான கட்டம்.1960க்குப் பிறகு நுண்ணுர்வோடும், நிச்சயத்தோடும் – அதாவது ஒரு நல்ல கலைஞனின் நிச்சய புத்தியும் சங்கோசமும் கலந்த ஒரு திடத்தோடும் எழுதுகிற சிலரில் ஆதவன் மிக முக்கியமானவர்” இது ஆதவனின் முதல் நூலான  ‘இரவுக்கு முன் வருவது மாலை’யின் முன்னுரையில். தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் ஆதவனுக்குரிய இடத்தை யாரும் இவ்வளவு துல்லியமாக அவர் அரும்பும் போதே கணித்திருக்க முடியாது.

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான கல்லிற்குக் கீழும் பூக்களுக்கு எழுதிய முன்னுரையில் அவர் “ உண்மையை, அழகை தரிசிக்கும் போது, ஆளையே வேரோடு ஆட்டுகிற ஒளியாட்டம், நல்ல சங்கீதத்தைக் கேட்கும் போது, ஊழிக்கூத்தை பாரதியார் பார்த்தபோது, கவச குண்டலத்தைப் பிய்த்துக் கொடுத்த கர்ணனைப் பார்க்கும் போது ஏற்படும் தரிசனம், ஒளிஉதயம், மாலனின் எழுத்தில் பற்பல கட்டங்களில் கிடைக்கிறது” என்று எழுதினார். எவ்வளவு பெரிய வார்த்தை!

முன்னுரைகளில் சம்பிரதாயமாகப் பாராட்டுவது, தாட்சண்யத்திற்காக மிகை வார்த்தைகள் சொல்வது என்பது அவரது வழக்கம் இல்லை. ஏனெனில் அவரை அணுகிக் கேட்கிறவர்களுக்கெல்லாம் அவர் முன்னுரை எழுதித் தர இசைவதில்லை.  எனக்குத் தெரிந்து அவர் தனது 44 ஆண்டுக்கால எழுத்தாளர் வாழ்க்கையில் முன்னுரைகள் எழுதியது செங்கமல்லி (ஆர்.வி), நித்யகன்னி (எம்.வி. வெங்கட்ராம்) ஹெலிகாப்டர்கள் கீழ இறங்கி விட்டன (இந்திரா பார்த்தசாரதி) இரவுக்கு முன் வருவது மாலை (ஆதவன்) கல்லிற்குக் கீழும் பூக்கள் (மாலன்) என ஐந்து நூல்களுக்குத்தான்.

இதன் அர்த்தம் அவர் இறுக்கமானவர் என்பதோ அகங்காரம் கொண்டவர் என்பதோ அல்ல..அதை நான் அனுபவ பூர்வமாக பலமுறை அறிந்திருக்கிறேன். இரண்டை மட்டும் இங்கு குறிக்கிறேன்.

நான் தி,ஜாவை முதலில் சந்தித்தது அடையாறில் சிவபாதசுந்தரம் வீட்டில். தில்லியிலிருந்து வந்திருந்த தி.ஜாவிற்காக அவர் தனது வீட்டில் ஓரு இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்து, தேர்ந்தெடுத்த சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தார். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு போனதும்தான் தெரிந்தது அங்கு வந்திருந்த மற்றவர்கள் பெரும் சீனியர்கள்.சிட்டி, சிதம்பர சுப்ரமணியன், பராங்குசம் போன்றவர்கள் வந்திருந்தார்கள். சிதம்பர சுப்ரமணியம் மெதுவாக என்னிடம்,”நீங்கள்?” என்றார் நான் அப்போது வாசகன் என்ற சிறுபத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். அதைச் சொன்னேன். “நீங்கள் வேறு ஏதிலேனும் எழுதியிருக்கிறீர்களா?” என்றார் சிதம்பர சுப்ரமணியம். 70களில் நிறைய இலக்கியச் சிற்றேடுகள் வந்து கொண்டிருந்தன. அவற்றைப் பெரும்பாலும் இளைஞர்கள் நடத்தி வந்தார்கள். வேறு எதிலும் பிரசுரம் காணாதவர்கள், பிரசுர வாய்ப்பு கிடைக்காதவர்கள், சொந்தமாகப் பத்திரிகை தொடங்கி விடுகிறார்கள் என்று ஒரு அபிப்பிராயம் சீனியர்களுக்கு இருந்தது. ஏனெனில் அவர்கள் இளமைக்காலம் அப்படி. பிரம்ம ராட்சசர்கள்தான் பத்திரிகை நடத்த முனைவார்கள்.

எங்களுக்கு எதிரே இருந்த நாற்காலியில் தி.ஜா. அமர்ந்திருந்தார். நான் சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே அவர் சில வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியாகியிருந்த கெளரவர் சபை என்ற கதை பற்றிச் சொல்லி என்னை சரியாக அறிமுகப்படுத்தி வைத்தார். அது என் ஆரம்பக் காலக் கதைகளில் ஒன்று.

இரண்டாவது அனுபவம், மோனாவில் என் நாவல் வழிதவறிய வண்ணத்துப் பூச்சிகள் வெளியான போது நேர்ந்தது. நாவல் வெளியான சில தினங்களில் (5.7.1980) அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “உங்கள் நீள் கதையை நேற்றிரவு படித்தேன் அருமையாக வந்திருக்கிறது.” என்று துவங்கிய கடிதம், “ஞாபகத்தைத் தூங்கவிடாமல் அடிப்பதுதான் நல்ல படைப்பு  அதனால்தான் அருமையாக வந்திருக்கிறது” என்று சொல்கிறேன் என்று முடிந்திருந்தது.

1980க்கு முன்னால் அவரது நளபாகம் தவிர மற்ற எல்லாப் படைப்புகளும் வெளிவந்து, சாகித்ய அகாதெமி பரிசும் பெற்று, எழுத்துலகில் அவர் மூத்த ஆளுமையாக நிலைபெற்றிருந்தார். அவர் ஒரு ஆரம்ப எழுத்தாளனின் படைப்பைத் தானாகவே படித்து படித்த மறுநாளே தானே முன்வந்து தனது அபிப்பிராயத்தை எழுத்தின் மூலம் தெரிவிப்பது என்ற பண்பை எத்தனை எழுத்தாளர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள்? இன்றைக்கும் கூட இது தமிழ் எழுத்துலகில் ஓர் அரிதான நிகழ்வு.

அவரது அந்திம காலத்தில் சென்னை திரும்பி கணையாழி ஆசிரியராகப் பொறுப்பேற்பதற்கு முன்னால், எப்போதாவது, எதன் நிமித்தமாகவாவது கடிதம் எழுதிக் கொள்கிற நட்பாகத்தான் எங்கள் உறவு இருந்தது. ஆனால் அந்த நாள்களில் கூட அவர் என் மீது பொழிந்த பேரன்பு இன்னும் என்னை நனைத்துக் கொண்டிருக்கிறது. திசைகள் ஆசிரியாகப் பொறுப்பேற்க இருந்த சமயம். பாராட்டுக்கள் வாழ்த்துகள் எல்லாம் தெரிவித்து எழுதிவிட்டு அவர் எழுதினார்: ‘தலையெடுத்து தடம் பதித்து வரும் போது இத்தனை பெரும் பொறுப்பு உங்கள் மீது உட்கார்கிறது. தலையைத் தின்னும் பொறுப்பு இது. ஆனால் உங்கள் சாமர்த்தியத்திற்கு முன் இது ஒன்றும் இல்லை. ஆனால் அவ்வப்போது மன அழுத்தும் கூடும். அதை psychic energy ஐ அதிகப்படுத்திக் கொண்டால் நம்மைத் தின்னாமல் காப்பாற்றிக் கொண்டு விடலாம். என் அனுபவம் இது. தினம் ஒரு அரை மணி தியானம் செய்ய முயலுங்கள். உள்நோக்கிப் பாருங்கள் அதுதான் தியானம் வேறு ஏதும் இல்லை’.

என்ன அக்கறை! என்ன கரிசனம்!. தகப்பன் மகனுக்குச் சொல்வது போல.

என் மீது மட்டும் இல்லை. இளைஞர்கள் மீது அவர்  பெரும் வாஞ்சை கொண்டிருந்தார். திசைகள் இதழை இளைஞர்களால் இளைஞர்களுக்கு என அறிவித்துத் தொடங்கிய போது எழுதிய கடிதத்தில், “முருகன் ராமன், கண்ணன், சரஸ்வதி, லஷ்மி, என்று கடவுளர்களைக் கூட இளைஞர்களாகத்தான் பார்க்க விரும்புகிறோம். இளைஞர்களிடம்தான் நம்பிக்கைகளையும் நிறைவேற்றங்களையும் உலகம் எப்போதும் எதிர்பார்க்கிறது. கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம். சில கட்டங்களில் தனிமனிதர்களைத் தொழுவதையே அரசியல் என்றும், இல்லாத உலகங்களை ஜோடித்துக் காட்டி, பிரக்ஞை மயக்கம் ஊட்டும் சினிமாக்களே கலை என்றும் இளைஞர்கள் திசை மாறுவதுண்டு. இலட்சிய புருஷர்களும் பண்புகளும் பனிமூட்டங்களில் மறைந்து போவதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தப் பனிமூட்டங்களை இனம் கண்டு விலக்க முடிந்தால் விலக்கி, பார்வையை விளக்க வேண்டும் எனத் திசைகளை வேண்டுகிறேன்”

தனிமனிதர்களைத் தொழும் அரசியலும், மயக்கமூட்டும் சினிமாக்களும் இன்றும் – 39 ஆண்டுகளுக்குப் பின்னும் இருந்து கொண்டிருக்கின்றன. பனிமூட்டத்தை விலக்க முயன்று பாதியில் பட்டுப்போன திசைகள் என்ற கனவு மறுபடியும் புதிய தலைமுறையில் தளிர்த்தது. சினிமாவையும் அரசியலையும் விலக்கி வைத்து நடக்க முயன்றது. ஆனால் அதுவும்….. ஹூம்.

***

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.