புலம் பெயர்தல், நெடுங்காலமாகத் தமிழர்கள் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. பொருள் தேட, கல்வி கற்க, ஒடுக்குமுறைக்கு அஞ்சி, விடுதலை வேண்டி, வணிகம் செய்ய,மதம் பரப்ப, இயற்கைப் பெருஞ்சீற்றத்தின் தாக்கம் எனப் பற்பல காரணங்களுக்காகத் தமிழர்கள் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாகத் தங்கள் தாய்ப்புலத்திலிருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். ஐரோப்பியக் காலனியாக்கத்திற்கு முன்பே இப் பெயர்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. புலம் பெயர்வின் வலிகள் இலக்கியத்திற்குப் புதிதல்ல.
“நீ அயலகத்தில் கஷடப்பட்டு சம்பாதிக்கும் பொருள், இவள் உயிருக்கு நிகராகுமா?”1 என்று கலித்தொகையில் தோழி எழுப்பும் வினாவில் உள்ள வெப்பம், “உங்களுக்கிருக்கும் திண்ணக்கம் எங்களுக்கு இல்லை, நாங்க முட்டாள்களா இருந்தா இருந்திட்டுப் போறோம்”2 என்ற குறுந்தொகைத் தலைவியின் சுயபச்சாதாபம், “சிறப்புக் குறையாத காவிரிப் பூம்பட்டினத்தையே தந்தாலும் என் காதலியை விட்டு விட்டு வரமாட்டேன்”3 என்னும் பட்டினப்பாலைக் காதலனின் பற்றுறுதி எனப் புலம் பெயர்தலின் துயர்களைச் சங்க இலக்கியம் பதிவு செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் காலனியாக்கத்தின் போது நேர்ந்த புலப்பெயர்வுகள் அதன் முந்தையப் புலப்பெயர்வுகளிலிருந்தும் வேறுபட்டவை. அதன் முந்தையப் புலப் பெயர்வுகள் பெரும்பாலும் கடல் தாண்டாதவை. அருகமைந்த பகுதிக்குள்ளாகவே நேர்ந்தவை. பலவும் சுயவிருப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டவை.
ஆனால் ஐரோப்பியக் காலனியாக்கம் எளிய மக்களை ஏமாற்றி/ வஞ்சித்து அவர்களை அடிமைகளாக்கிக் கடலுக்குப்பால் கடத்திப் போயிற்று..
பழந்தமிழகத்தில், சங்ககாலம் உட்பட, அடிமை முறை இருந்தது. “சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை .பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரி பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது “கொண்டி மகளிர்” என்று இவர்களைப் ‘பட்டினப் பாலை’ ஆசிரியர் குறிப்பிடுகிறார்” என்று வரலாற்றாய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் தனது நூலில்4 பதிந்துள்ளார். ‘கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம்’5 எனப் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டில் உள்ள கூழாள் என்ற சொல்லுக்கு ‘உணவின் பொருட்டு எவர்க்கேனுந் தன்னை எழுதிக்கொடுப்பவன்’ என்று பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் சொல்கிறார். சுந்தரரின் வரலாற்றைச் சொல்லும் சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் அடிமைச் சீட்டெழுதிக் கொடுப்பதை ‘ஆளோலை’6 என்று குறிப்பிடுகிறார்.
இத்தகைய அடிமைகள் வேளாண்மைக்குத் தேவைப்படும் உழைப்பாளிகளாகவும் வீட்டடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தனர். தமிழ்நாட்டிற்குள் விற்கவும் வாங்கவும்பட்டனர். ஆனால் அயல்நாடுகளுக்குப் பண்டங்களைப் போலக் கப்பலேற்றி அனுப்பப்படவில்லை. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கடற்கரைப் பகுதிகளில் வசித்த போர்த்துக்கீசியரால் வாங்கப்பட்ட அடிமைகள் கூட அவர்களோடு சேர்ந்தே அவர்களது குடியிருப்புகளில் வசித்தனர்.7
அப்போது தமிழகத்தை ஆண்ட விஜயநகரப் பேரரசு அடிமைகளின் ஏற்றுமதியைத் தடைசெய்திருந்தது இதற்கு முக்கியக் காரணம். ஆனால் 1565ஆம் ஆண்டு தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ந்த பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், 1578ல் போர்ச்சுக்கல் அரசன் செபாஸ்டியன் இறந்த பின் அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், 1580ல் இரண்டாம் பிலிப் என்ற ஸ்பெயின் தேசத்து அரசனே, போர்சுக்கல் அரசனாகவும் முடிசூடிக் கொண்ட பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
அயல் வணிகம் என்பது காலனியமாகக் கால் கொள்ளத் தொடங்கியது இந்தக் கால கட்டத்தில்தான். பழங்கால ரோமானியர்களுக்குப் பிறகு,வெகு காலம் கழித்து 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வணிகத்தின் பொருட்டு இந்தியாவில் முதலில் நுழைந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்தான். 1498ல் வாஸ்கோடாகாமா கோழிக்கோடில் வந்திறங்கிய போதும் அவருக்கு நாடுபிடிக்கும் நோக்கம் இருந்திருக்கவில்லை.
ஆனால் கோவாவில் தங்கள் தலைமையகத்தை நிறுவிக் கொள்வதற்கும் முன்பாகவே வாஸ்கோடாகாமா வந்து போன, நான்காண்டுகளிலேயே, அதாவது 1502ல் போர்த்துக்கீசியர்கள், தமிழ்நாட்டில் உள்ள பழவேற்காட்டில்,வணிக மையம் (Trade post) ஒன்றை நிறுவினார்கள் (அவர்கள் கோவாவைக் கைப்பற்றியது 1510ல்தான்8) இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கால் ஊன்றிக் கொள்ளும் முயற்சியாக அவர்கள் பழவேற்காட்டில் நுழைந்தார்கள். (ஒரு புறம் கடலும், மற்ற முப்புறத்திலும் 46,102 ஹெக்டேர் அளவு கொண்ட ஒரு பிரம்மாண்டமான ஏரியினாலும் சூழப்பட்டுள்ள பழவேற்காடு சென்னையிலிருந்து 60 கீ.மி. தொலைவில் உள்ளது) இன்றும் பழவேற்காட்டில் உள்ள கோட்டைக் குப்பம் பகுதியில் 1515ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களால் நிறுவப்பட்ட லேடி ஆஃப் தி குளோரி தேவாலயமும் அதில் அவர்கள் வருகையைக் குறிக்கும் கல்வெட்டையும் காணலாம்.
பழவேற்காட்டிற்குப் பிறகு அடுத்த ஆறாண்டுகளில் 1521ல் போர்த்துக்கீசியர்கள் மணிலாவில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவினார்கள். அங்கே ஏராளமாகக் கப்பல் கட்டுவதற்குத் தகுந்த தேக்கு, கருங்காலி, தோதத்தி மரங்கள் இருப்பதாகத் தலைமையகத்திற்குச் செய்தி அனுப்பினார்கள்9.
கப்பல் கட்டும் பணிகள் தொடங்கின.ஆனால் அதற்கு ஏராளமான மனித உழைப்புத் தேவைப்பட்டது. பிலிப்பைன்சில் கட்டப்பட்ட ஒரு கப்பலின் பாய்மரத்திற்கான மரத்தைக் கொண்டு வருவதற்கு 6000 பேர் தேவைப்பட்டதாக ஒரு குறிப்புக் கூறுகிறது. இன்னொரு பிரச்சினையும் இருந்தது. வெப்ப மண்டலக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களின் பலகைகளை அடிக்கடி மாற்ற வேண்டி வந்தது. பிலிப்பையர்களுக்குக் கப்பல் கட்டும் திறமை இருந்தது. ஆனால் அவர்களிடம் அவற்றைக் கடலரிப்பிலிருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பம் இல்லை.
அப்போது 1564ல் போர்ச்சுகீசிய அதிகாரிகள் ஒரு யோசனையை முன்வைத்தார்கள்.தென்னிந்தியாவில் நாகப்பட்டினம் கடற்கரை அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் தச்சர்கள் இந்தத் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் என்றும் (அவர்களின் பாட்டனுக்கு முப்பாட்டன்கள் ராஜேந்திர சோழனுக்குக் கப்பல் கட்டியவர்களாக இருந்திருக்கக் கூடும் என்பது என் ஊகம்) அவர்களை அடிமைகளாக வாங்கிக் கொண்டுவரலாம் என்றும், அது சம்பளம் கொடுப்பதால் ஏற்படும் செலவை மிச்சப்படுத்தும் என்றும் தெரிவித்தார்கள்10.
நாகப்பட்டினத்தில் வாங்கப்பட்டு, மலாக்கா வழியாகக் கொண்டுவரப்பட்ட அடிமைகள் திறமைசாலிகளாகவும், உழைப்பாளிகளாகவும் இருப்பதாகவும், பெண் அடிமைகள் நல்ல தையல்காரிகளாகவும், சமையல்காரிகளாக இருப்பதாகவும் பெட்ரோ சிரினியோ என்ற பாதிரியார் எழுதிய குறிப்புக் கூறுகிறது11
அடிமைகள் வாங்கிக் கொடுப்பதற்கு நாகப்பட்டினத்தில் தரகர்கள் இருந்தனர்.பஞ்சம் காரணமாகத் தமிழர்கள் தாமாகவே முன் வந்து அடிமைகளாக விற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.1620ல் மணி என்ற தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர், பசி, தேவை இவற்றின் காரணமாக, பிரான்சிஸ்கோ மக்காடோ என்ற போர்ச்சுகீசிய வணிகருக்குத் தன்னை விற்றுக் கொண்ட ஒப்பந்தம் ஒன்று லிஸ்பனில் உள்ள போர்த்துக்கீசியரது ஆவணக் காப்பகத்தில் இருப்பதாக ஆய்வாளர் ஜெயசீல ஸ்டீபன் தனது காலனியத் தொடக்க காலம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்12
போர்த்துக்கீசியர் தங்கள் அடிமைகளைக் கப்பலேற்றுவதற்கு முன், அடிமைகளை ஒரு குழுவாகத் திரட்டி,“மனசாட்சியைச் சுத்தப்படுத்துவது” அல்லது “இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்வது” என்ற பெயரில் மதம் மாற்றினார்கள் என்றும் தேவாலயங்களில் தங்க வைக்கப்பட்டுப் பின் கப்பல்கள் வந்ததும் ஏற்றி அனுப்பப்பட்டார்கள் என்றும் குறிப்புகள் கூறுகின்றன.
போத்துக்கீசியரை நிழல் போல் தொடர்ந்து இந்தியாவிற்குள் புகுந்தவர்கள் டச்சுக்காரர்கள். அவர்கள் முதலில் காலுன்றிய இடமும் பழவேற்காடுதான். 1609ல் போர்த்துக்கீசியர்களின் கோட்டையைக் கைப்பற்றித் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு அதற்கு டச்சுக்காரர்களின் தாயகமான நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயரான `ஜெல்டிரியா’ என்ற பெயரைச் சூட்டி வணிகத்தைத் தொடங்கினார்கள்.
டச்சுக்காரர்களின் முக்கிய வணிகமே தமிழக அடிமைகள்தான். 1621 முதல் 1665 வரை பழவேற்காட்டிலிருந்து 131 கப்பல்கள் மூலம் 38441 அடிமைகள் அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். 150 குழந்தைகள் அடிமைகள் கூட அனுப்பபட்டனர் அடிமைகளைப் பெறுவதற்காக எல்லா முறையற்ற வழிகளைப் பின்பற்றவும் அவர்கள் தயங்கவில்லை. அடிமைகளைத் திருடுவது, கடத்துவது, ஏமாற்றி அழைத்துச் செல்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டார்கள். நாகப்பட்டினத்திலிருந்து மணிலாவிற்குக் கிளம்பிய இரு போர்த்துக்கீசிய கப்பல்களை வழிமறித்துக் கைப்பற்றியதாகவும், அதில் 300 அடிமைகள் இருந்தார்கள் என்றும்1625 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியிட்ட டச்சு அதிகாரியின் கடிதம் ஒன்று கூறுகிறது13
சோழ மண்டலக் கடற்கரையில் கைப்பற்றப்பட்ட அடிமைகளை போர்த்துக்கீசியர்கள் மணிலாவில் கப்பல் கட்டப் பயன்படுத்தினார்கள் என்றால் டச்சுக்காரர்கள் தொடக்கத்தில் அவர்களை இந்தோனீசியாவிற்கு அருகில் உள்ள அம்பேனியா, பட்டாவியா தீவுகளில் ஜாதிக்காய், ஜாதிபத்ரி போன்றவற்றை விளைவிக்கப் பயன்படுத்தினார்கள். அவர்கள் ஈடுபட்டிருந்த ஆடைகள் தொழிலைவிட அது லாபகரமாக இருந்தது. பின்னர் பர்மாவில் மரம் அறுக்கும் தொழிற்சாலைகளிலும், நெல்சாகுபடிக்கும் அவர்களைப் பயன்படுத்தினார்கள்.பர்மாவிலும் ஆப்ரிக்காவிலும் நெல் பயிரிடக் கற்றுக் கொடுத்தவர்கள் சோழமண்டலக் கடற்கரைத் தமிழர்கள்தான். 1663ஆம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சிரியம் என்ற பர்மாவின் (மியான்மர்) சிற்றூரிலிருந்து பழவேற்காட்டிற்குக் கடிதம் எழுதிய டச்சு அதிகாரி, 48000 பவுண்டு நெல் கிடைத்தது என்று எழுதியிருக்கிறார்.
17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. கிருஷ்ணப்ப நாயக்கரது மறைவுக்குப் பின் விஜயநகர அரசின் பெரும்பகுதி மராத்தியர் கைக்கு வந்தது. தேவனாம்பட்டினம், கடலூர், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, பழவேற்காடு ஆகிய இடங்களிலிருந்து செயல்பட்டு வந்த டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரத்தை சிவாஜி தடை செய்தார்14. டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியை மூடச் செய்தார். அவர்கள் கடையைக் கட்டிக் கொண்டு மசூலிப்பட்டினத்திற்கு நகர்ந்தார்கள்
டச்சுக்காரர்களின் கை விழுகிற நேரத்தில் பிரிட்டீஷ்காரர்கள் வங்கத்தின் வழியாக நுழைந்தார்கள் 1757ல் நடந்த பிளாசிப் போரில், மீர் ஜாபரின் நயவஞ்சகத்தின் துணையோடு, வென்ற பின்னர்தான் அவர்களின் கை ஓங்கியது. அவர்களைத் தொடர்ந்து பிரன்ச்காரர்களும் வந்தது நன்கு அறியப்பட்ட வரலாறு.
பிரன்ச்காரர்கள் மொரிஷீயஸ், ரீயூனியன், கொமராஸ், தீவுகளுக்கு அடிமைகளை அனுப்பி வைத்தார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை வாங்கக் கூடாது என்ற ‘கருணை மிகுந்த’ விதிகளை பிரன்ச் கிழக்கிந்திய கம்பெனி பின்பற்றி வந்தது. ஆனால் அவர்கள் அடிமைகளை அனுப்பத் தேர்ந்தெடுத்த தீவுகள் வெகுதொலைவில் இருந்தன. அதனால் பலர் போகும் வழியிலேயே இறந்து போனார்கள். 1761ல் மொரிஷீயஸ் தீவிற்குப் புதுச்சேரியிலிருந்து அனுப்பட்ட 12196 பேரில் 870 பேர் மட்டுமே எஞ்சினார்கள்.
காசு போட்டு வாங்கிய அடிமைகள் பாதிவழியில் இறந்து போனால் அது செய்த முதலீட்டிற்கு ஏற்படும் நஷ்டம் என்பதை உணர்ந்து கொண்ட பிரிட்டீஷ்காரர்கள் ‘கெட்டிக்காரத்தனமாக’ இரு முடிவுகளை எடுத்தார்கள். 1.காசு கொடுத்து அடிமைகளை வாங்குவதற்கு பதில் அவர்களை ஒப்பந்தக் கூலிகளாக அனுப்புவது.
2.அவர்களைத் தொலைதூரங்களுக்கு அனுப்புவதற்கு பதில், தமிழகத்திற்கு அண்மையிலிருந்த தென்கிழக்காசிய நாடுகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பினர்.அவர்கள் அனுப்பியதிலேயே தொலைவான இடம்ஃபிஜி.
அயலகங்களில் குறைந்த கூலியில் கிடைக்கும் கடும் உழைப்புக்காக மட்டுமல்ல, பாலியல் தேவைகளுக்காகப் பெண்களும் பிரிட்டீஷால் வஞ்சகமாகக் கடத்தப்பட்டனர். இதைப் பற்றி பாரதி சொன்னதாக யதுகிரி எழுதுகிறார்: “ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில்,’உன் புருஷன் சாகுந் தறுவாயில் இருக்கிறான். உடனே வா!” என்றிருக்கிறது. இவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு முன் பின் யோசனை இல்லாமல் புறப்பட்டாள் அந்த நீசன் ஒரு மணிக்குப் புறப்படும் கப்பல் துறைமுகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். “கப்பலுக்கு எதற்கு வந்தார்?” என்று கேட்டாளாம். “ஆபீஸ் அதிகாரி கப்பல் தலைவனுக்கு ஒரு காகிதம் கொடுத்தனுப்பினார். கப்பலுக்கு வந்து கம்பிப்படிகளில் ஏறும் போது தலைசுற்றி விழுந்தது மண்டை உடைந்தது என்றானாம் அவன். அந்தப் பெண் அதையும் நம்பிக் கப்பலில் ஏறினாளாம். மேல் மாடிக்குப் போவதற்குள் கப்பல் புறப்பட்டு விட்டது. அங்கே இவளைப் போல அநேகம் பெண்கள் இருந்தார்களாம். எல்லோரும் கப்பல் நகர்ந்தவுடன் அழுதார்களாம். ஏன் என்று இந்தப் பெண் கேட்க, “நாம் அடிமைகள்.பிஜித்தீவில் இருக்கும் அடிமைகளுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டோம்!” என்று கதறினார்களாம். இப்படி எவ்வளவு குடும்பங்கள் நாசம் செய்யப்பட்டனவோ!”15
∞
தமிழிலுள்ளப் புலம் பெயர் இலக்கியங்கள் பல்வேறு விதங்களில் அவற்றை வகைப்படுத்தும் வாய்ப்பை நமக்கு அளிக்கின்றன.நாடு வாரியான வகைப்படுத்தல்கள், ஆண், பெண், எனப் பால் வாரியான வகைப்படுத்தல்கள் பரவலாக வழக்கில் உள்ளன. கால வாரியாக அவற்றை வகைப்படுத்தல் நாம் அவற்றை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் ஆராயவும் உதவும். மிக விரிந்த அளவில் அவற்றை நான்
1.புலம் பெயர்ந்தோர் பற்றிய (பிறரின்) படைப்புகள்
2.புலம் பெயர்ந்தோர் (தாமே) எழுதிய படைப்புக்கள்
என வகைப்படுத்த முயல்வேன்
புலம் பெயர்ந்தோர் பற்றிய படைப்புகள் குறித்து எண்ணும் போது முதலில் என் நினைவிற்கு வருபவர் பாரதி. வாழ்ந்து பெற்ற அனுபவங்களைக் கொண்ட படைப்புகள், கலையமைதியில் ஏறத்தாழ இருந்தாலும், யதார்த்தத்தின் வலுவைக் கொண்டிருக்கும். ‘பற்றி’ எழுதப்படும் படைப்புகள், வெளியிலிருந்து காணும் ஒரு பார்வையாளனின் பார்வையைக் கொண்டிருக்குமாதலின் உணர்வு ரீதியாகக் கூர்மையற்று இருக்கும் என்பது பொது நியதி. ஆனால் பாரதி அதற்கு ஒரு விதி விலக்கு.
விதியே விதியே தமிழ்சாதியை என்ன செய்யப் போகிறாய் என்று பாரதி கலங்கியது தமிழ்நாட்டுத் தமிழரைக் குறித்து மட்டுமல்ல.
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்
இப் பந்தின் கீழ்ப்புறத்து உள்ள
பற்பல தீவினும் பரவி இவ் எளிய
தமிழ்ச் சாதி தடியுதை உண்டும்
கால் உதை உண்டும் கயிற்றடி உண்டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை உள்ள தம்
நாட்டினைப் பிரிந்த நலிபினாற் சாதலும்…. 16
காலனியத்தால் கடலுக்கு அப்பால் அனுப்பட்ட தமிழர்பட்ட உதைகளையும் துயர்களையும் சுருக்கமாகவும் ஆழமாகவும் சூட்டுக் கோலால் நம் நெஞ்சில் எழுதும் கவிதை இன்னொன்றில்லை.
பிஜித் தீவு என்ற ‘கண்ணற்ற தீவினிலே’ தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் துயர்கள் குறித்து விம்மி விம்மிக் குமுறும் பாரதியின் வரிகள் இன்னொரு உதாரணம் (இதற்குக் காரணமான செய்தியை மேலே காண்க).
நாட்டை நினைப்பாரோ?-எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ?-அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே!-துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டும் உரையாயோ?-அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்
நெஞ்சம் குமுறுகிறார் — கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் — துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே — அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ — ஹே
வீர கராளி, சாமுண்டி காளி!17
இந்த வகையில் எழுதப்பட்ட புனைவுக்கு அகிலனின் பால்மரக் காட்டினிலே, மலேசிய எழுத்தாளர்களின் பல படைப்புக்கள், மலையக எழுத்தாளர்களின் படைப்புகள் என ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன
இரண்டாம் வகைப் படைப்புக்களுக்கு ஆகச் சிறந்த உதாரணங்கள் மலேயாவின் பால்மரக் காட்டிலும், இலங்கை மலையகத் தேயிலைத் தோட்டத்திலும் ஒலித்த நாட்டார் பாடல்கள். இலங்கை மலையக மக்களின் நாட்டார் பாடல்களை சி.வி. வேலுப்பிள்ளையும், மு.சிவலிங்கமும் தொகுத்தளித்துள்ளனர். இங்கு வழங்கிய நாட்டார் பாடல்களையே இங்கிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்த எளிய மக்கள் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டதில் வியப்பில்லை.
ஏத்தமடி தேவிகுளம்
ஏறக்கமடி மூணாறு
தூரமடி நைனாக்காடு
தொயந்துவாடி நடந்துபோவோம்
இது தேனிப் பகுதியில் தேயிலைத் தொழிலாளர்கள் பாடி வந்த பாடல். இது இலங்கை மலையகத்தில் இப்படி மாற்றமடைகிறது
ஏத்தமடி பெத்துராசு
இறக்கமடி ராசாத்தோட்டம்
தூரமடி தொப்பித் தோட்டம்
தோடந்துவாடி நடந்து போவோம்.
கோவைப் பகுதியிலிருந்து மூத்த நாயக்கன் வலசு என்ற கிராமத்திலிருந்து மலேயாவிற்குக் குடி பெயர்ந்த தன் குடும்பத்தின் வாழ்க்கைச் சரிதத்தை, “நாடு விட்டு நாடு” என்ற நூலில் பதிந்துள்ள முத்தம்மாள் பழனிசாமி, அவற்றில் இடையிடையே நாட்டுப்பாடல்கள் சிலவற்றையும் பதிந்துள்ளார். தாலாட்டு முதல் ஒப்பாரி வரை தோட்டத்து வாழ்க்கையைப் பதிவு செய்யும் எழுதாக் கிளவி அந்தப் பாடல்கள்
அலற அலற ஆசைப் பிள்ளையை
ஆயாக் கொட்டகையிலே விட்டு விட்டு
பெரட்டிலே பேர் கொடுத்து
பெரிய துரைக்கு சலாம் போட்டு
அஞ்சிப் பதுங்கி நின்னு
அய்யாமாருக்கு சலாம் போட்டு
ஓடி ஓடி மரம் வெட்டி
உட்கார்ந்து பட்டை ஆய்ந்து
பறக்கப் பறக்கப் பால் எடுத்து
பக்கமெல்லாம் நோகுதடி 18
இறுதியாக ஒன்றைச் சொல்லி நிறைவு செய்ய எண்ணுகிறேன்.தமிழில் காலனியம், புலம்பெயர்தல் இவை குறித்த இலக்கியங்கள் எண்ணற்றவை. ஆனால் அவை பெரும்பாலும் பிரிட்டீஷ், பிரஞ்ச்சுக்காரார்களால் ஆளப்பட்ட காலத்தைச் சார்ந்தவை
ஆனால் டச்சுக்காரர்கள் செய்த அடிமை வியாபாரத்தின் அட்டூழியங்கள் அதிகம் புனைவுகளாக உருப்பெறவில்லை. அவை உருக்கமான இலக்கியப் படைப்பாக எழுதத் தக்கன. டச்சுக்காரர்களின் நடைமுறைகள் கொடுமையானவை. தப்பி ஓட முயன்றவர்கள் கைது செய்து சிறை வைக்கப்பட்டார்கள். அல்லது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எஜமானருக்கு மட்டுமன்றி அவரது குடும்பத்திற்கும் மரியாதை காட்ட வேண்டும், இல்லையென்றால் தண்டிக்கப்படுவார்கள். ரத்த சம்பந்த வாரிசு இல்லாவிட்டால் அவர்களது சொத்தில் கால்பங்கு எஜமானருக்கு உரியது.
1662ல் மதுரையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு வேலை தேடி வந்த ஒரு தமிழனின் கதை டச்சுக்காரர்களின் ஆவணங்களில் விவரிக்கப்படுகிறது. மதுரையில் மனைவி மக்களை விட்டுவிட்டு நாகப்பட்டினம் வந்த அவன் வேலை கிடைத்ததும், ஒரு மாதம் கழித்து. அவர்களை அழைத்துவர மதுரைக்கு வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவனது பக்கத்து வீட்டுக்காரன், பணத்திற்கு ஆசைப்பட்டு, அந்த மனைவியையும் குழந்தைகளையும், டச்சுக்காரர்களிடம் விற்று விட்டான். மதுரைத் தமிழன் பதறி அடித்துக் கொண்டு தரங்கம்பாடிக்கு ஓடினான். அதற்குள் அதிக விலை வைத்து அந்த அடிமைகளை டச்சுக்காரர்கள் போத்துக்கீசியருக்கு விற்று விட்டார்கள். எனவே இவன் அவர்களைத் தன்னுடன் அனுப்பக் கோரிய போது போர்த்துக்கீசிய பாதிரி மறுத்துவிட்டதோடு அல்லாமல், இவனையும் பிடித்து வைத்துக் கொண்டார். அவன் பெரும் போராட்டத்திற்குப் பின் தன்னை விடுவித்துக் கொண்டு மயிலாப்பூர் பிஷப்பிடம் தன் மனைவி மக்களை விடுவிக்குமாறு மனுக் கொடுத்தான். மனு நிராகரிக்கப்பட்டது. சரி என் மனைவியை நான் மறுபடி மணம் செய்து கொள்கிறேன், அனுமதியுங்கள் என்று கோரிக்கை வைத்தான். பாதிரி விலைகொடுத்து வாங்கிவிட்டதால் மனைவியும் மக்களும் அவரது உடமை. அவர் சம்மதிக்காமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் தன் மனைவியையே மறுபடி மணக்க விரும்பிய அவன் கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவன் தீவிரமாக இருப்பதைக் கண்ட பாதிரி, அந்த அடிமைகளைக் கூடுதலாக விலை வைத்து ஒரு இந்து வியாபாரியிடம் விற்றுவிட்டார். அவன் மறுபடியும் இந்து மதத்திற்குத் திரும்பினான்.19
என்றேனும் ஒரு நாள் இவையும் எழுதப் பெறும். புலம் பெயர் இலக்கியம் அன்று இன்னும் செழுமை பெறும்.
***
உசாத்துணை
1. இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ, முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?” (கலித்தொகை பாடல் 7)
2. “அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள் வயிற் பிரிவோர் உரவோராயின் உரவோர் உரவோர் ஆக மடவம ஆக மடந்தை நாமே” (குறுந்தொகை)
3. முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும், வாரிரும் கூந்தல் வயங்கழை ஒழிய, வாரேன்!” (பட்டினப்பாலை)
4. பக்: 22, ஆ.சிவசுப்ரமணியன், தமிழகத்தில் அடிமை முறை காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
5. ‘கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம்’ (பெரியாழ்வார்-திருப்பல்லாண்டு-முதலாம் ஆயிரம் பாடல் 2)
6. ‘அக்காலம் உன்தந்தை தன் தந்தை ஆள் ஒலை ஈதால்’ (சேக்கிழார் பெரியபுராணம்)
7. S.Jeyaseela Stephen,’Economic Change, Institutional Development and Urbanisation in Santhome 1507-1676 P7
8. Fernandes, Gerald Goan perspectives and backdrop to colonial conquests, A History of Portugal & Portugeese Empire
9.Archivo General de Indias Servile, Spain, Section Filipinas 29-50 (1584)
10. மேலது
11 Pedro Chirino Relacion de las islas Filipinas, Manila, Historical Conservation Society 1969, P 141-2
12 எஸ்.ஜெயசீல ஸ்டீபன், காலனியத் தொடக்க காலம்,காலச்சுவடு, நாகர்கோவில் பக் 154
13 மேலது
14 K.A. Nilakanda Sastri, Shivaji’s Charters to the Dutch on the Coromandel Coast, Proceedings of the Indian History Congress Calcutta, 1936
15. யதுகிரி அம்மாள், பாரதி நினைவுகள், சந்தியா பதிப்பகம், சென்னை பக்.34
16 சுப்பிரமணிய பாரதி, ‘இருதலைக் கொள்ளியினிடையே’ பாரதியார் பாடல்கள் ஆய்வுப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், பக்: 810
17 சுப்பிரமணிய பாரதி, ‘பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரிகள்’ பாரதியார் பாடல்கள் ஆய்வுப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், பக்:747
18 முத்தம்மாள் பழனிசாமி, ‘மீண்டும் மலேயா’ நாடு விட்டு நாடு, யுனைடெட் ரைட்டர்ஸ் சென்னை, பக்124
19 Nicolao Manucci, Storio de Mogur Vol III Page 128-129