பஞ்சாபியில் அம்ருதா ப்ரீதம்
ஆங்கிலம் வழித் தமிழில்: மாலன்
என் அண்டை வீட்டாரின் அண்டை வீட்டின் பழைய வேலைக்காரனின் புது மனைவி அங்கூரி. அவள் அவனுடைய இரண்டாவது மனைவி. அதனால் அவள் புது மனைவி. இரண்டாம் திருமணம் செய்து கொள்பவனை பஞ்சாபியில் மறுபிறவி எடுத்தவன் என்று சொல்வது வழக்கம். ஆனால் அங்கூரிக்கு இது முதல் திருமணம் ஆதலால் அவள் புதுப் பொண்ணு. அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருஷமாகப் போகிறது. ஆனாலும் அவள் இப்போதும் புதுப் பொண்ணுதான்.
ஐந்து வருஷத்திற்கு முன்பு முதல் மனைவிக்கு இறுதிச் சடங்குகள் செய்ய பர்பதி சொந்த ஊருக்குப் போயிருந்தான். அவன் தோளில் போட்டிருந்த ஈரத் துண்டை எடுத்து அங்கூரியின் தந்தை பிழிந்தார். துக்கத்தில் இருக்கும் ஒரு கணவனின் துண்டை ஒரு பெண்ணின் தந்தை எடுத்துப் பிழிந்தால் அவர் தன் மகளை மனைவியை இழந்தவனுக்குத் மணம் செய்து கொடுக்க விரும்புகிறார் என்று அர்த்தம். அதாவது அழுதழுது ஈரமாகிவிட்ட துண்டை எடுத்துப் பிழிவதன் மூலம், “இனி நீ அழத்தேவை இல்லை. என் மகளை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன்” என்று அவர் சொல்வதாக அர்த்தம். ஆனால் எந்த ஆணின் மேல்துண்டும் அழுதழுது ஈரமானதாக வரலாறில்லை. அதைத் தண்ணீரில் நனைத்துத் தோளில் போட்டிருப்பார்கள்.
அங்கூரியை இப்படித்தான் பர்பதிக்குக் கட்டி வைத்தார்கள். ஆனால் அப்போது அங்கூரி ரொம்பச் சின்னப் பெண். அத்தோடு அவள் அம்மா மூட்டு வலியால் படுக்கையில் கிடந்தாள். அதனால் திருமணம் தள்ளிப் போனது. ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து வருடங்கள் ஓடிப் போயின. ஒருவழியாகத் திருமணம் நடந்தது. நான் திருமணம் செய்து கொண்டு அவளை அழைத்து வரப் போகிறேன் என்று அவன் எஜமானர்களிடம் சொன்னான். ஆனால் அவனது எஜமானர்கள், இரண்டு பேருக்கும் சோறு போடத் தயாராக இல்லை. அப்படியானால் நான் ஊருக்கே திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்..இறுதியில் அங்கூரி வரட்டும், வந்து வேலைக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிலில் அவர்கள் இருவருக்கும் சமையல் செய்து கொள்ளட்டும் என்று முடிவாயிற்று. அங்கூரி அப்படித்தான் நகரத்திற்கு வந்தாள்
நகருக்கு வந்த கொஞ்சகாலத்திற்கு, அங்கூரி காலனியில் இருந்த பெண்கள் முன்னால் கூட முக்காடிட்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்தாள். பின் முகத்திரை விலகியது. வெள்ளிக் கொலுசோடு அவள் நடக்கும் போது எழும் ஜல் ஜல் சத்தம் அவளைப் பிரபலமாக்கியது. அந்தக் கொலுசின் ஒலியைப் போலத்தான் அவள் சிரிப்பும் இருந்தது. அவள் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் அடைந்து கிடந்தாள். ஆனால் வெளியில் வந்தால் அவள் காலுக்குச் சிரிப்பு வந்து வந்துவிடும்
“கால்ல என்ன போட்டிருக்க அங்கூரி?”
“கொலுசு”
“கால் விரல்ல?”
“மெட்டி”
“கையில அது என்ன?”
“வளையல்”
“நெற்றியில என்ன?”
“பொட்டு”
“ ஏன் இன்னிக்கு இடுப்பில எதுவும் போட்டுக்கலை?”
“ஒட்டியாணம் ரொம்ப கனமா இருக்கு. நாளைக்குப் போட்டுட்டு வரேன். இன்னிக்கு கழுத்தில சங்கிலி கூடப் போடலை. அது அறுந்து கிடக்கு . நாளைக்கு பஜாருக்கு எடுத்துட்டுப் போய் ஒக்கிடணும். எங்கிட்ட ஒரு மூக்குத்தியும் இருக்கு. ஆனா ரொம்பப் பெரிசு. மாமியார் கொடுத்தது”
தன் வெள்ளி நகைகளை அணிந்து கொண்டு அதை ஒவ்வொருவரிடமும் காட்டுவதென்றால் அங்கூரிக்கு ஒரு குஷி
கோடைகாலம் வந்தால் அங்கூரியின் வீடு, காற்றில்லாமல் புழுக்கமாக இருக்கும். அவள் என் வீட்டருகில் வந்து உட்காந்து கொள்வாள். அங்கே ஒரு உயரமான வேப்பமரமும் ஒரு கிணறும் இருந்தது. கிணற்றை யாரும் உபயோகிப்பதில்லை.ரோடு போடும் வேலையாட்கள் வந்து தண்ணீர் எடுத்துப் போவார்கள். போகிற வழியெல்லாம் சிந்திக் கொண்டே போவார்கள். அதனால் அங்கு கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.
ஒருநாள் நான் மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன்
“என்ன படிக்கிறீர்கள் பிபிஜீ?” என்றாள்
“நீ படிக்கணுமா?” என்று நான் கேட்டேன்
“எனக்குப் படிக்கத் தெரியாது”
“கத்துக்கோயேன்”
“வேண்டாம்”
“ஏன்?”
“பொம்பளைங்க படிச்சா பாவம்”
“ஆம்பிளைங்க படிச்சா பாவமில்லையா?”
“இல்லை, அது பாவமில்லை”
“அப்டீனு உனக்கு யார் சொன்னா?”
“எனக்குத் தெரியும்”
“அப்போ நான் பாவம் பண்ணிட்டிருக்கேன்னு சொல்ற?”
“நகரத்து பொம்பளைங்க படிச்சா பாவமில்லை. ஆனா கிராமத்துப் பொண்ணுங்க படிக்கக் கூடாது!”
நான் சிரித்தேன். அங்கூரியும் சிரித்தாள். அவள் கேள்விப்பட்டவை, தெரிந்து கொண்டவை குறித்து அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எந்தக் கேள்வியும் இல்லை அதனால் நான் ஏதும் சொல்லவில்லை. அவள், அவளுடைய நம்பிக்கைகளோடு சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க முடியுமானால் அப்படியே இருக்கட்டுமே.
சிரித்துக் கொண்டிருக்கும் அவளது முகத்தைப் பார்ப்பேன். அவளுக்குக் கறுத்த மேனி.ஆனால் நன்றாகப் பிசைந்த கோதுமை மாவில் செய்ததைப் போல் அவளது சதைகள். பெண்களை ரொட்டி மாவில் செய்த உருண்டைகள் என்று சொல்லுவார்கள். ஆனால் மாவை இறுக்கமாகப் பிசையவில்லையென்றால் வட்ட வடிவில் ரொட்டி செய்ய முடியாது. மாவு பழசாக இருந்தால் ரொட்டியை இடவே முடியாது. ஆனால் இறுக்கமாகவும் மென்மையாகவும் பிசைந்த மாவைப் போல இவள் இருக்கிறாள். இந்த மாவில் ரொட்டி என்ன பூரியே கூடச் செய்யலாம். நான் அங்குரியின் முகத்தைப் பார்த்தேன். அவள் மார்புகளைப் பார்த்தேன். கைகளைப் பார்த்தேன். இறுகப் பிசைந்த மென்மையான மாவுதான். நான் பர்பதியையும் பார்த்திருக்கிறேன்.அவன் குள்ளமாக, சருகு மேனியாக இருப்பான், அவன் இந்த ரொட்டியைச் சாப்பிடத் தகுதியானவன் இல்லை. சதையையும் மாவையும் ஒப்பிடுவதை நினைத்தால் எனக்கே சிரிப்பு வந்தது
அவளது கிராமத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பேன். அவள் அப்பா அம்மா, அண்ணன் தம்பி சகோதரிகள் இவர்களைப் பற்றியெல்லாம் பேசுவோம். ஒருநாள் “உங்க கிராமத்தில் எல்லாம் கல்யாணம் எப்படி நடக்கும்?” என்று கேட்டேன்.
“பொண்ணு சின்னதா இருக்கும் போது, ஐந்தாறு வயசில, கட்டிக்கப் போகிறவர் காலில் விழுந்து நமஸ்கரிக்கணும்”
“அவ்வளவு சின்னப் பொண்ணு எப்படி நமஸ்கரிப்பா?”
“அவ பண்ணமாட்டா. அவங்க அப்பா போய்ப் பண்ணுவார். ஒரு தட்டு நிறைய பூவும் கொஞ்சப் பணமும் எடுத்துக் கொண்டு போய் அவர் முன்னால் வைத்து அப்பா நமஸ்காரம் பண்ணுவார்”
“அப்படினா, அப்பா பண்றார்னுதானே அர்த்தம். இதில பொண்ணு எங்க வந்தா?”
“அவளுக்காகத்தானே அப்பா பண்றார்?”
“ ஆனா பொண்ணு தன்னைக் கட்டிக்கப் போறவனை பார்க்கக் கூட இல்லியே?”
“பொண்ணுங்க அயல் ஆம்பிளைங்களைப் பார்க்கக் கூடாது”
“கட்டிக்கப் போறவனைக் கூடவா?”
“ஆமா”
“ கிராமத்தில அப்படி ஒரு பொண்ணு கூடப் பார்த்தது இல்லையா?”
“இல்லை” என்று சொன்னவள் சிறிது யோசித்தாள். பின் அங்கூரி சொன்னாள் “காதலிக்கிற பொண்ணுங்க பார்த்திருக்காங்க”
“உங்க கிராமத்தில காதலிக்கவெல்லாம் செய்யறாங்களா?”
“ரொம்பக் கொஞ்சப் பேர்”
“காதலிக்கிறது தப்பா?”
“தப்பு. பெரிய பாவம்”
“அப்போ அவங்க ஏன் அந்தப் பாவத்தைச் செய்யறாங்க?”
“ அதுவா…? ஆம்பிளை ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு ஒன்றை சாப்பிடக் கொடுத்தால் அவள் காதலில் விழுந்து விடுவாள்”
“அவன் எதை சாப்பிடக் கொடுப்பான்?”
“அது ஒரு காட்டுப் பூ. அதை ஒரு இனிப்பிலோ, அல்லது பீடாவிலோ மறைத்து வைத்து அவளைச் சாப்பிடச் செய்வான். அதற்குப் பிறகு அவளுக்கு அவனைப் பிடிக்க ஆரம்பித்துவிடும். அவனை மட்டும்தான். உலகத்திலிருக்கிற மற்ற எதுவும் பிடிக்காது”
“நிஜமாவா!”
“எனக்குத் தெரியும். நான் என் கண்ணால பார்த்திருக்கிறேன்”
“என்ன பார்த்திருக்க?”
“எனக்கு ஒரு சினேகிதி இருந்தா. அவ என்னை விடக் கொஞ்சம் உயரமா இருப்பா”
“அப்புறம்?”
“என்ன அப்புறம்? அவ, அவள் மனசை அவன் கிட்ட பறி கொடுத்துட்டா. ஒருநாள் இரண்டு பேரும் ஊரை விட்டு ஓடிட்டாங்க”
“உன் சினேகிதிக்கு காட்டுப் பூ கொடுக்கப்பட்டது என்று உனக்கு எப்படித் தெரியும்?”
அவன் அந்தப் பூவை பர்பியில் வைச்சுக் கொடுத்திட்டான். அப்புறம் என்ன? அது இல்லைனா அவ அவளுடைய அப்பா அம்மாவை விட்டுப் போயிருக்க மாட்டா. அவன் அவளுக்காக நகரத்திலிருந்து நிறைய பொருட்கள் கொண்டு வந்து கொடுப்பான். சேலை, கண்ணாடி வளையல், பாசிமணி மாலை….”
“இதெல்லாம் பரிசு. அவன் அவளுக்குக் காட்டுப் பூ கொடுத்தான்னு உனக்கு எப்படித் தெரியும்?”
“அதை அவன் கொடுக்கலைனா, அவளுக்கு ஏன் அவன் மேல் காதல் பிறக்கணும்?”
“இதெல்லாம் இல்லாமல் கூட ஒருவர் மேல் காதல் வரலாம்”
“அதெல்லாம் கிடையாது. அப்படியெல்லாம் வரக்கூடாது. பெற்றவங்க ரொம்ப வேதனைப்படுவாங்க”
‘நீ காட்டுப் பூவைப் பார்த்திருக்கியா?”
‘நான் பார்த்ததே இல்லை. அது இங்க கிடையாது. ரொம்பத் தொலைவிலிருந்து கொண்டு வரணும். அப்புறம் இனிப்பிலோ, பீடாவிலோ மறைச்சு வைக்கணும். எந்த ஆம்பிளைக்கிட்ட இருந்தும் இனிப்பு வாங்கிச் சாப்பிடக் கூடாதுனு நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போதே என்கிட்ட அம்மா சொல்லியிருக்காங்க”
“நீ சமத்துப் பொண்ணு. உன் சினேகிதி ஏன் சாப்பிட்டா?”
“ அவ செஞ்ச பாவத்திற்கு அவ அனுபவிப்பா” இதைச் சொன்னபோது அங்கூரிக்கு அவள் சினேகிதி மீது இரக்கம் பிறந்தது. வருத்தமான முகத்தோடு அவள் சொன்னாள்: “அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டது. ஒழுங்காத் தலை சீவ மாட்டா. நடு ராத்திரியில எழுந்து உட்கார்ந்துக்கிட்டு பாடுவா”
“என்னனு பாடுவா?”
“எனக்குத் தெரியாது. காட்டுப் பூவைச் சாப்பிட்டவங்க நிறையப் பாடுவாங்க, நிறைய அழுவாங்க”
பாடுவதிலிருந்து அழுகைக்குப் பேச்சுத் திரும்பியதால் நான் மேலும் ஏதும் அவளிடம் கேட்கவில்லை
சீக்கிரமே, வெகு சீக்கிரமே ஒரு மாற்றம் நிகழந்தது.ஒரு நாள் சத்தம் போடாமல் வந்து வேப்பமரத்தடியில் என் அருகே வந்தமர்ந்து கொண்டாள். முன்பெல்லாம் அவள் பத்தடி தூரத்தில் இருக்கும் போதே அவளுக்கு முன் அவளது கொலுசுச் சத்தம் வந்துவிடும். ஆனால் இன்று அமைதி. நான் புத்தகத்திலிருந்து தலையை உயர்த்தி,”என்ன சமாச்சாரம் அங்கூரி?” என்று கேட்டேன்.
“என் பேரை எப்படி எழுதறதுனு எனக்குச் சொல்லிக் கொடுங்க” என்றாள்
“யாருக்கும் கடுதாசி எழுதணுமா?”
அவள் பதில் சொல்லவில்லை. கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன
அப்போது நடுப்பகல். நான் அங்கூரியை வேப்ப மரத்தடியிலேயே விட்டு விட்டு என் வீட்டுக்கு வந்தேன். சாயங்காலம் அந்தப் பக்கம் போனபோது அவள் அங்கேயே கைகளால் காலை இறுகக் கட்டிக் கொண்டு குனிந்து உட்கார்ந்திருந்தாள். காற்றிலிருந்த குளிரின் கூர்மை அவள் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
நான் அவள் பின்னால் போய் நின்றேன். அவள் உதடுகள் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. நீளமான பாடல் போல் தோன்றியது.
கல் பதித்த மோதிரம் எனது
என்னவாகும் சபிக்கப்பட்ட
என் இளமை?
என் காலடிச் சப்தம் கேட்டு அங்கூரி திரும்பினாள்.
“நீ நல்லா பாடற அங்கூரி”
கஷ்டப்பட்டுக் கண்ணீரை நிறுத்தினாள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. வெட்கம் கொண்ட புன்னகையை அணிந்து கொண்டாள் “எனக்குப் பாடத் தெரியாது!”
“உனக்குத் தெரியும்”
“இது சும்மா”
“உன் சினேகிதி பாடுவாளா?”
“இந்தப் பாட்டை அவளிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன்”
“அப்டீனா எனக்காகப் பாடு”
இது ஒண்ணும் இல்லை. பருவ காலத்தை எண்ணிப் பார்ப்பது. நாலு மாதம் குளிர் நாலு மாதம் வெயில். நாலு மாதம் மழை”
பனிரெண்டு மாதத்தையும் கணக்குப் பண்ணியாகவேண்டும் என்பது போல் அங்கூரி பேசிக் கொண்டிருந்தாள்
“அப்படி இல்ல, சரி எனக்காகப் பாடேன்”
குளிர் நான்கு மாதம் –கொடும்
கோடை நான்கு மாதம்
உடல் நடுங்குகிறது-என்
இதயம் சிலிர்க்கிறது
“அங்கூரி!”
வெறுமை நிறைந்த கண்களால் அங்கூரி என்னை வெறித்துப் பார்த்தாள் எனக்கு “பெண்ணே நீ காட்டுப் பூவைச் சாப்பிட்டு விட்டாயா?” என்று அவளது தோளில் கை போட்டு கேட்க, வேண்டும் போலிருந்தது. நான் அவள் தோளில் கை போட்டுக் கொண்டேன். ஆனால் “ஏதாவது சாப்பிட்டியா?” என்று மட்டும்தான் கேட்டேன்
“சாப்பாடா?” அங்கூரி என்னை வினோதமாகப் பார்த்தாள். என் கரங்களுக்குக் கீழ் அவளது உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. மழைக்காலத்து மேகங்களின் அதிர்வோடு, கோடை காலத்துக் காற்றின் நடுக்கத்தோடு, குளிர்காலத்தின் இதயச் சிலிர்ப்போடு அவள் பாடிய பாடல், அவள் உடலில் பரவிக் கடப்பதைப் போல அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அங்கூரி அவளே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் என்பது எனக்குத் தெரியும் பர்பதி எஜமானர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நான் மீண்டும் கேட்டேன்: “நீ ஏதாவது சமையல் பண்ணினயா இன்னிக்கு?”
“இல்லை, இன்னும் இல்லை”
“காலையில்தானே சமைப்ப? டீ குடிச்சியா?”
“டீ? இன்னிக்குப் பால் இல்லை”
“ஏன் இன்னிக்குப் பால் இல்லை?”
“நான் பால் வாங்கலை”
“நீ தினம் டீ குடிக்கிறவதானே?”
“ஆமாம்,குடிப்பேன்”
‘இன்னிக்கு என்னாச்சு?”
“அந்த ராம் தாரா பால் கொண்டு வரலை”
ராம் தாரா எங்கள் காலனியின் காவலாளி. நாங்க எல்லோரும் சேர்ந்துதான் அவனுக்குச் சம்பளம் கொடுத்து வந்தோம்.அவன் இரவெல்லாம் தெருக்களைச் சுற்றி வருவான். காலையில் களைத்துப் போவான். அங்கூரி வருவதற்கு முன்னால் அவன் யாராவது ஒருவர் வீட்டில் டீ குடித்துக் கொண்டிருந்தான் என்பது எனக்கு நினைவிருக்கிறது. பிறகு அவனது கட்டிலைக் கிணற்றடியில் போட்டுக் கொண்டு பகல் பூராத் தூங்குவான். அங்கூரி வந்த பிறகு, பால்காரனிடம் சிறிது பால் வாங்கிக் கொண்டு வர ஆரம்பித்தான். அங்கூரி அவளது கரியடுப்பில் அதைக் கொண்டு டீ போடுவாள். அவள், பர்பதி,ராம் தாரா மூவரும் அந்தக் கரியடுப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டு டீயை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
மூன்று நாளாய் ராம் தாராவைக் கண்ணிலேயே காணோம் அவன் லீவில் அவனது கிராமத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்
வலியில் தோய்ந்த சிரிப்பு என் இதழில் பூத்தது. “நீ மூணு நாளாவா டீ குடிக்கலை?”
அவளால் பேச முடியவில்லை. ஆம் என்பது போல் தலையை அசைத்தாள்
“ஒண்ணும் சாப்பிடவும் இல்லையா?” மறுபடியும் அவள் மெளனமாக இருந்தாள். சாப்பிட்டிருந்தாலும் என்னத்தை சாப்பிட்டிருக்கப் போகிறாள் என்று தோன்றியது
எனக்கு ராம் தாராவின் முகம் ஞாபகம் வந்தது. மென்மையான முகத்தோடு, கம்பீரமாக இருப்பான். வெட்கப்பட்டுச் சிரிக்கிற கண்கள் அவனுக்கு. நல்லாப் பேசுவான்
“அங்கூரி?”
“ம்”
“நீ காட்டுப் பூவைச் சாப்பிட்டு விட்டாயா?”
அவள் கண்ணிலிருந்து நீர் பெருகத் தொடங்கியது. கண்ணீர் அவள் கன்னத்தையும் இதழ்களையும் நனைத்தது. அவள் வார்த்தைகள் கூட நனைந்து வந்ததைப் போலிருந்தது
“சத்தியமா சொல்றேன். நான் அவன் கையிலிருந்து இனிப்பு ஏதும் வாங்கி சாப்பிடலை. பீடாக் கூட இல்லை. டீ மட்டும்தான். டீயில கலந்திருப்பானோ?”
அவள் குரல் கண்ணீரில் மூழ்கியது
^^^
(தீராநதி அக்டோபர்:2019)