?
பங்காளிகள் இருவர். அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் வசித்து வந்தார்கள். அண்ணனுக்கு ஊரில் நல்ல பெயர்.தம்பிக்கு அதில் பொறாமை. தானும் அண்ணனைப் போலப் பெயர் பெற வேண்டும் என்ற ஆசை தம்பிக்கு இருந்தது. அண்ணனை விடத் தான் எதிலும் குறைந்தவன் அல்ல, அவனை விட மேலானாவன் என்ற எண்ணம் அவனுக்கு
அண்ணன் ஒருநாள் வீட்டிற்குப் பின்புறம் இருந்த காலி நிலத்தைக் கொத்தி அதில் காய்கறிகள் பயிரிட்டான். உடனே தம்பி தனது நிலத்தில் பூச்செடிகள் நட்டான். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அண்ணன் கோழி வளர்க்க ஆரம்பித்தான். தம்பி நாய்கள் வளர்க்கத் தொடங்கினான். பின் அண்ணன் ஒரு நாள் அழகிய குதிரை ஒன்றை வாங்கி வந்தான். தம்பி அவசர அவசரமாகப் புலி ஒன்றை வாங்கி வந்தான்.
ஒரு நாள் அண்ணன் அந்தக் குதிரையில் ஏறிப் புறப்பட்டான். ஆவலோடு வாசலுக்கு ஓடி வந்த தம்பியைப் பார்த்து அந்த அண்ணன் சொன்னான்: “நீயும் பூக்களைப் பறித்துச் சமையல் செய்து, நாயை அடித்துக் குழம்பு வைத்துப் புலியின் மீதேறிப் புறப்பட்டு வா!”
இது கண்ணதாசன் சொன்ன குட்டிக் கதை. இந்தக் கதையை அவர் சொன்ன போது ராஹூல் பிறந்திருக்ககக் கூட மாட்டார், அல்லது ஃபீடிங் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருந்திருப்பார். ஆனால் அவருக்கென்றே எழுதியது போலிருக்கிறது இந்தக் கதை. கவிகளுக்கு தீர்க்க தரிசனம் உண்டே!
கடந்த தேர்தலில் மோதி முன்பிருந்ததை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் மீண்டும் அமர்ந்ததற்குக் காரணம் 2019 பிப்ரவரியில் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல், அதற்கு பாலகோட்டில் கொடுக்கப்பட்ட பதிலடி அதன் காரணமாக மக்களிடையே ஏற்பட்ட எழுட்சி ஆகியவைதான் காரணம் என்று காங்கிரஸ் கருதிக் கொண்டிருக்கிறது. அதைப் பல தலைவர்கள் சமூக ஊடகங்களிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும் சொல்லி வந்திருக்கிறார்கள். பஞ்சாப் அமைச்சர் ஒருவர் பொது மேடைகளிலே அப்படிப் பேசிப் பிரசாரம் செய்தார்.
எனவே லடாக் பகுதியில் இந்தியப் படைகளுக்கும் சீனப்படைகளுக்கும் இடையே நடந்த மோதலை முன் வைத்து மோதியைக் காரமாக விமர்சிப்பதன் மூலம் அரசியல் ரீதியாக ஆதாயம் பெறலாம் எனக் கருதினார் ராஹூல். நரேந்திர மோதியை சரண்டர் மோதி எனக் கிண்டல் செய்தார். சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து சில பகுதிகளைக் கைப்பற்றியதாகவும் அப்போது மோதி அமைதியாக இருந்துவிட்டதாகவும் ராஹூல் ட்வீட் செய்திருந்தார்
இதைக் கண்டு கொதித்துப் போனவர்கள் அரசியல்வாதிகளோ, பத்திரிகையாளர்களோ அல்ல. சீறி எழுந்தவர்கள் முன்னாள் ராணுவத்தினர். ஏதோ ஒருவர் இருவர் அல்ல. 71 பேர் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அதில் தங்கள் குமுறல்களைக் கொட்டியிருந்தார்கள். அந்த 71 பேரும் பல்வேறு காலகட்டத்தில் அந்தப் பகுதியில் பணியாற்றியவர்கள்.:
“உலகின் மிகக் கடினமான நிலப்பகுதியில், கடுமையான சூழலில் நம் வீரர்கள் எத்தகைய பணி செய்கிறார்கள் என்பதைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவர் இது போன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க ட்வீட்களை/ கருத்துக்களை வெளியிடுவதைக் கண்டனம் செய்கிறோம்” எனத் தொடங்குகிறது அந்த அறிக்கை. அந்தப் பகுதியைப் பற்றியோ எங்கள் வேலையைப் பற்றியோ உங்களுக்கு கொஞ்சமாவது தெரியுமா என்பதை இதைவிடக் கண்ணியமான மொழியில் கேட்க முடியாது.
“1962 எப்போதும் நினைவில் இருக்கட்டும். அப்போது இந்த நாட்டிற்குத் தலைமையேற்றவர் உங்களுடைய கொள்ளுத் தாத்தா ஜவஹர்லால் நேரு. முற்றிலும் எதிர்பாராத, தயாராக இல்லாத நிலையில் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டோம் தீரத்துடன் போரிட்டோம். அவர்களுக்கு நிறைய சேதங்களை ஏற்படுத்தினோம். ஆனாலும் தோற்றுப் போனோம்” என்று தொடரும் அந்த அறிக்கை 2017ல் டோக்லம் பிரசினை இருந்த நேரத்தில் ராஹூல் சீன தூதர்களோடு கொஞ்சிக் கொண்டிருந்ததையும் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். “நிதான புத்தியுள்ள எந்த இந்தியனும் ராணுவத்திற்கு எதிராகவோ, நாட்டிற்கு எதிராகவோ அறிக்கை விடமாட்டான். ஏனெனில் அது எதிரிக்கு சாதகமாக அமைந்துவிடும்” என்று சுட்டிக்காட்டும் அவர்கள் “அரசியல் லாபங்களுக்காக ராணுவ விஷயங்களைத் திரித்துப் பேசாதீர்கள்” என்று அறச்சீற்றத்தோடு முடிகிறது
அடிபட்டவர்களுக்குத்தானே வலி தெரியும்? லடாக் பகுதி எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் நறுக்கென்று ராஹூலுக்குத் தனது டிவிட்டரில் பதிலளித்திருந்தார். “சீனா இந்திய மண்ணை ஆக்கிரமித்ததா? ஆம் 1962ல் காங்கிரஸ் ஆட்சியின் போது அக்சாய் சின் (37244 சதுர கீ.மீ) 2008ல் ஐமுகூ ஆட்சியின் போது சுமூர் பகுதியில் 250 கீ.மீ நீளத்திற்கு, பின் 2008-09ல் 2012ல் என்று ஒரு பட்டியல் அளித்திருந்தார்.
இந்த இடத்தில் இன்னொன்றும் நினைவு வருகிறது. 2008ல் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்குமிடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, போன்ற நாடுகள் வரவேற்றன. ஆனால் சீனம் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்ட்கள் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார்கள். இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரை சீனத்திற்குப் பேச்சு வார்த்தைக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. அப்படி அனுப்பப்பட்ட பிரதிநிதி ராஹூல் காந்தி! தன் தாயாருடன் சீனம் சென்ற ராஹூல் அங்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். (அந்தச் செய்தியைப் புகைப்படத்துடன் வெளியிட்ட்ட இந்தியா டுடேயின் செய்தி நறுக்கை இணைத்துள்ளேன்)
ராஹூலின் பேச்சு அறிக்கை ஆகியவை அரசியல் கட்சிகளுக்கு அப்பாலிருந்தும் விமர்சனங்களை, முகச் சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிண்டு குழுமத்தின் முன்னாள் ஆசிரியரும் இப்போது அதன் இயக்குநருமான திரு. என்.ராம் ஜூன் 22ஆம் தேதி பதிவு செய்த தனது ட்வீட் ஒன்றில் “எல்லையில் சீனப் பகுதிக்குள் நடந்ததாக ஊடகங்கள் சொல்லும் மோதல் குறித்து, ஏன் காங்கிரஸ் தன்னைத் தானே சிதைத்துக் கொள்ளும் வெறிகொண்ட நிலைப்பாட்டை எடுத்துக் கொள்கிறது? ‘நம் பகுதிகளில் எவரும் நுழையவில்லை’ என்ற உணமையச் சொல்லும் மோதியின் அறிக்கையை அது எதிர்க்கிறது?” என்று பதிவிட்டிருந்தார். ஜூன் 22ஆம் தேதி பதிவிட்ட இன்னொரு ட்வீட்டில் “வரலாற்றிலிருந்து காங்கிரஸ் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. எதையும் மறக்கவும் இல்லை. ஜவஹர்லால் நேருவின் காலம் வரை போக வேண்டியதில்லை. ராஜீவ் காலத்திற்காவது போக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ராஹூலின் பேச்சு அரசியல் ஆதாயம் கருதியது என்றோ. முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு என்றோ ஒதுக்கித் தள்ளிவிடலாம். ஆனால் சீனத்தின் நகர்வுகளை, உலக அரசியல், (ஹாங்காங், திபெத்,) தூதரக ராஜரீக நடவடிக்கைகள், ராணுவம், பொருளாதாரம், வர்த்தகம் என்று பல முனைகளில் காய் நகர்த்தி எதிர்கொள்ள வேண்டும். சவாலானதுதான். ஆனால் சாதிக்க முடியதாது அல்ல .
8.7.2020