தோழமையான விரல் தோளில் தட்டுவதைப் போல வானிலிருந்து வந்தமர்ந்தது மழைத்துளி. சிலிர்த்துக் கொண்ட அவன் நிமிர்ந்து பார்த்தான். நீலவானம் இருட்டத் தொடங்கியிருந்தது. தூறலொடு நின்று விடுமா? தொடர்ந்து பொழியுமா? இறங்கி நடக்கலாமா, இல்லை எங்கேயேனும் ஒதுங்கி நிற்கலாமா என்று அவன் முடிவெடுப்பதற்குள் இன்னொரு துளி இடது மணிக்கட்டில் வந்து இறங்கியது.
ஒதுங்கி நிற்க அவகாசம் இல்லை. அவன் சிங்கப்பூர் வந்திறங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன. வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப மென்பொருளை வடிவமைத்துக் கொடுக்க அவனை அனுப்பி வைத்திருந்தது நிறுவனம். அவர்களோடு உட்கார்ந்து அவர்கள் தேவைக்கேற்பச் செதுக்க வேண்டும். வீட்டிற்கு வந்து நகை செய்யும் பழைய காலப் பொற்கொல்லன் போல ஆன் சைட் வேலை. எப்படி உழைத்தாலும் முடிய இரண்டு மாதத்திற்கு மேலாகும்.
குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர அதிகம் குறையேதுமில்லை. அலுவலகம் அபார்ட்மெண்ட் ஒன்றைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமர்த்திக் கொடுத்திருந்தது. ஒற்றைப் படுக்கையோடு ஓர் அறை. உறங்காத வேளைகளில் உட்கார, படிக்க எழுத ஏதுவாக ஓர் வதிவறை. அதன் ஓரமாய் மின்னடுப்புப் பொருத்திய சமையல் மேடை. அறை சிறியது ஆனால் வசதியானது. கோலம் போட்டதைப் போல நகரெங்கும் விரிந்து கிடக்கும் எம்.ஆர்.டி. ரயில் சேவை இன்னும் இந்தப் பகுதியை எட்டவில்லை என்பதுதான் முகத்தோரத்தில் முளைத்த மச்சம் போல ஒரு குறை. என்றாலும் மளிகைக்கடை, மருந்துக்கடை, சலவையகம், சிறுதீனிக் கடை எல்லாம் கூப்பிடு தூரத்திலேயே இருந்தன. எல்லாவற்றையும் விட எதிரிலேயே பஸ் ஸ்டாப். பத்து நிமிடத்திற்கு ஒரு பஸ் வந்து கொத்திக் கொண்டு போகும் பனிரெண்டாம் எண் பஸ்ஸில் ஏறி உடகார்ந்தால் நாற்பது நிமிடத்தில் நலுங்காமல் அலுவலகம் போய்விடலாம். அதிர்ஷ்ட நாள்களில் மாடி பஸ் கிடைக்கும்..குளிர் சாதனத்தின் சுகத்தில் புத்தகத்தை விரித்துக் கொண்டால் நேரம் நழுவுவது தெரியாது.
ஆசிர்வதிக்கப்பட்ட அந்த நகரத்தில் அன்றாட வாழ்வில் அதிகம் தொல்லை கிடையாது.எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. எல்லாம் கண்காணிக்கப்பட்டன. என்றாலும் எவரும் சுதந்திரம் இல்லை என்று அவனிடம் வாய்விட்டுச் சொன்னதில்லை.
ஒதுங்க இடம் இருந்தது. ஆனால் நேரம் இல்லை. அடுத்த பஸ் வருவதற்கு இன்னும் ஆறு நிமிடங்கள் இருப்பதாக ஆப் சொல்லியது. அதை விட்டால் இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும். அதற்கு அவகாசம் இல்லை. இன்று அலுவலகத்தில் கிளையண்ட் மீட்டிங் இருந்தது.
அவனது தயக்கங்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் சரசரவென்று இறங்கியது மழை. கோவர்த்தனக் குன்றைக் குடையாகப் பிடித்த கோபாலனைப் போலத் தோள் பையைத் தலைக்குப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்க சந்திப்பிற்கு வந்தான். நில் என்று சொல்லியது சிவப்பு விளக்கு.. சென்னையாக இருந்தால், சரிதான் போய்யா என்று சரேலென்று குறுக்கே ஓடலாம். ஆனால் இது சிங்கப்பூர்.. பெரியண்ணன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. கடவுளைப் போல கண்ணுக்குத் தெரியாமல் கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம். ஆனால் வந்த இடத்தில் வம்பெதற்கு? இரண்டு மாதமோ, மூன்று மாதமோ இருக்கிற காலத்தில் சமத்தாய் இருந்து விட்டுப் போவோம். சிங்கப்பூரில் இருக்கும்வரை சிங்கபூரியனாகவே இரு.
காமம் பெருக்கெடுத்தக் காதலியைப் போல் எதிர்பாராத தருணத்தில் வேகம் பிடித்தது மழை. சிக்னலில் காத்திருந்த சில நிமிடங்களில் தொப்பலாய் நனைந்து போனான். அறைக்குத் திரும்பி ஆடை மாற்ற அவகாசம் இல்லை. பார்வைக்கெட்டிய தூரத்தில் பச்சை வண்ண பனிரெண்டாம் எண் பஸ் வந்து கொண்டிருந்தது.
பேருந்து நிறுத்தத்தில் பெயருக்கு ஒரு கூரை இருந்தது. என்றாலும் எவரையும் ஈரமாகாமல் காப்பாற்ற அந்தக் கைக்குட்டை அகலக் கூரையால் இயலவில்லை. அனேகமாக பஸ்ஸ்டாப்பில் காத்திருந்த அனைவருமே கையில் குடையை விரித்தபடி நின்றிருந்தனர், .
சொட்டச் சொட்ட வரும் அவனைக் கண்ட சீன மூதாட்டி, தன்னுடைய விரிந்த குடையை நீட்டினார். வா, வா என்று கையை அசைத்தார். பருத்த அவரது உடலைக் கூடக் காப்பாற்ற முடியாத அந்தச் சின்னக் குடைக்குள் அண்டிக் கொள்வதற்கு இன்னொருவரா? அதற்குள் பஸ் வந்து நிற்க நன்றி கூடச் சொல்ல நேரமில்லாமல் அவசரமாய் அதில் ஏறிக் கொண்டான் அவன்.
“இதை எடுத்துக் கொள்ளுங்கள். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்” என்று சிவப்புக் குடை ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தார் செவன் இலவன் கடைச் சிப்பந்தி. சிவப்பு சீனர்களுக்கு ராசியான வண்ணம்
ஆனால் அவனுக்கு சிவப்பு பிடிக்காது. அது அபாயத்தின் அடையாளம் என அச்சுறுத்தப்பட்ட இந்திய சமூகத்தில் வளர்ந்தவன். இயல்பாகவே மென்மையான வண்ணங்களின் ரசிகன்.
“நீலம் இருக்கிறதா பாருங்களேன்”
கடைச் சிப்பந்தி உள்ளே நடந்தார். திரும்பி வந்தார். உதட்டைப் பிதுக்கினார்.
“மஞ்சள்?”
“இது ஒன்றுதான் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள். சிவப்பு அரசர்களின் வண்ணம். நீங்களும் ஒரு அரசரைப் போலத்தான் இருக்கிறீர்கள்”
அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.உரக்கவே வாய் விட்டுச் சிரித்தான்.
”சரி கொடுங்கள்” என்றான். கையில் வாங்கியவன் உறையைப் பிரித்தான். குடையின் கைப் பிடியில் இருந்த பித்தானை அழுத்திப் பார்த்தான். அந்த விசை அழுத்தக் கடினமாக இருந்தது. அமுங்க மறுத்தது. பழைய சரக்காக இருக்க வேண்டும்.
சிப்பந்தி கல்லாவை விட்டு வெளியே வந்து குடையைக் கையில் வாங்கி அழுத்தினார் விசுக்கென்று ஒரு வாணம் போல் விரைந்து பின் பூப் போலக் குடை விரிந்தது. இப்போது சிப்பந்தி வாய்விட்டுச் சிரித்தார். ஒரு என்ஜினியருக்கு வசப்படாத குடை ஒரு சேல்ஸ் கேர்ளின் கையில் பூவாக மலர்ந்தது.
“மன்னர்களுக்கு வாய்க்காத அதிர்ஷ்டம் சில நேரங்களில் தேவதைகளின் மந்திரக் கோலுக்குக் கிட்டிவிடுவது உண்டு- மந்திரக் கோல் தேவதைகளின் கையிலிருந்தால்” என்று ஆங்கிலத்தில் சொன்ன அவன் அவருடன் சேர்ந்து சிரித்தான்.
சிர்த்துக் கொண்டே குடையை மடக்க முயன்றார் கடை ஊழியர். எளிதாக மடக்க முடியவில்லை. சற்று அழுத்தம் கொடுத்து இழுக்க முயன்றார். குடையின் கம்பி ஒன்று உடைந்து பெயர்ந்து வந்தது. இதைச் சற்றும் எதிர்பாராத சிப்பந்தி அரை நிமிட நேரம் அதிர்ந்தார். அடுத்த நொடி தன்னிச்ச்சையாக “தி புச் சி” என்றார். மறுபடியும் அதை ஆங்கிலத்தில் மன்னிக்க வேண்டும் மன்னிக்க வேண்டும் என்று இருமுறை சொன்னார். காசைத் திருப்பிக் கொடுக்கக் கல்லாவிற்கு ஓடினார்.
“விடுங்கள். அரசருக்கு அதிர்ஷடம் இல்லை” என்று சிரித்தான் அவன்.
“தேவதைக்கும்தான்” என்று கடைச் சிப்பந்தியும் கூடக் சேர்ந்து சிரித்தார்.
அடுத்து வந்த வாரங்களில் வேறு ஒரு விஷயம் குடையத் தொடங்கியதில் அவன் குடையை மறந்து போனான். வாடிக்கையாளரின் பிரசினைகளையும் தேவைகளையும் தீர்க்கும் வழி என்ன என்பது அவனைத் தின்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு நள்ளிரவில் உதயமானது சூரியன்.. சில லட்சம் டாலர்களைக் கம்பெனிக்குச் சேமித்துக் கொடுக்கக் கூடிய அந்தத் தீர்வு உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அகாலத்தில் கால் கொண்டு எழுந்தது. வழக்கமான அணுகுமுறையில் அது வாய்த்திருக்க சாத்தியமில்லை. மாற்றி யோசி என்ற லேட்ரல் திங்க்கிங்தான் கை கொடுத்தது. சிந்திப்பது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் மாற்றி யோசிக்க்க மனதில் ஒரு சுடர் வேண்டும். இலக்கிய வாசிப்பு அவனுக்குள் அந்தச் சுடரை ஏற்றியிருந்தது.. வார்த்தைகளின் வழக்கமான அர்த்தங்களுக்கு அப்பால் உள்ள சாத்தியங்களைக் கண்டு கொள்ளும் கண்ணைக் கவிதைகள் அவனுக்குப் பரிசளித்திருந்தன. முதலையும் பல்லியே, மூங்கிலும் புல்லே என்ற க.நா.சுவின் கவிதை அவனது பதினைந்து வயதில் முதல் சுடரை ஏற்றியது இன்ஜினியராக ஆகிவிட்டாலும் இன்றும் அவனுக்குள் அந்தச் சுடர் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது சில நேரம் அனலாக.; சில நேரம் கனவாக
இந்தத் தீர்வுத் தனக்கு மாத்திரமே சாத்தியம் என்ற பெருமிதமும் மகிழ்ச்சியும் உந்தித் தள்ளத் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை தயாரித்தான். அத்துடன் ஒரு செய்முறை விளக்கமும் சேர்த்து அனுப்பி வைத்தான். வாடிக்கையாளரிடம் அதைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்கு அலுவலகத்திலிருந்து அனுமதி வர வேண்டும்
அனுமதி வரவில்லை. ஆள் வந்தார். அவனுக்கு இரண்டு படிகள் மேலிருந்த பாஸ் வந்தார். குளிர்ந்த அறையில் கூட்டமொன்று நடத்தி அவரே கண்டுபிடித்தைப் போன்று அந்தத் தீர்வை அறிவித்தார். இறுதி வாக்கியமாக இவனது உழைப்புக்கும் ஒருவரியில் நன்றி சொன்னார். வாடிக்கையாளர்கள் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். அபாரமான யோசனை என்று குதூகலித்துக் கொண்டாடினார்கள். நன்றி சொல்லிக் கரம் குலுக்கினார்கள். இவன் கரத்த்தையும் இழுத்துக் குலுக்கினார்கள். உழைப்பு இவனுடையது என்று அவர்களுக்குத் தெரியும். யோசனையும் இவனுடையதுதான் என்று தெரியாது. .
நடசத்திர விடுதியின் நான்காவது மாடியில் தங்கியிருந்தார் அதிகாரி. அறைக்குள் அவன் நுழைந்ததும் அணைத்துத் தழுவிக் கொண்டார். நலம் விசாரித்தார். செந்தோஸா சென்றாயா எனக் கேட்டார். அடுத்த கவிதைத் தொகுப்பு எப்போது என விசாரித்தார். எனக்கு ஒரு பிரதி மறக்காமல் அனுப்பி வை என்றார். அச்சு நூலாகப் போடாதே, மின் புத்தகமாக வெளியிடு என்று ஆலோசனை சொன்னார். எதிரே கிடந்த கிண்டிலை எடுத்துக் காட்டி இதற்குள் இருநூறு புத்தகங்கள் இருக்கின்றன என்றார் “நானும் வாசகன்தான். ஆனால் இலக்கியம் படிப்பதில்லை” என்று சிரித்தார். “ஆனால் நீ மட்டும் விதிவிலக்கு” என்று திருத்திக் கொண்டார். “மது அருந்த மாட்டாய் அல்லவா?” எனக் கேட்டபடி தன்னுடைய பைக்குள் துழாவி விலை உயர்ந்த கடிகாரத்தையும் சாக்லெட் கோளங்களையும் எடுத்துக் கொடுத்தார். கனத்த ஊதிய உயர்வு காத்திருக்கிறது என்று உறுதி சொன்னார். அவனுடைய யோசனை பற்றி அரை வார்த்தை கூடச் சொல்லவில்லை
மழைக்கு முந்திய இறுக்கம் போல அவன் மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. நிமிட நேரம் யோசித்து நேரடியாகவே கேட்டுவிட்டான்.
“இது திருட்டு இல்லையா?”
அதிகாரி திடுக்கிட்டது அவர் கண்ணில் தெரிந்தது. ஆனால் அமைதியான குரலில் அவர் கேட்டார்: “எது?”
“யோசனை என்னுடையது”
“ நீயே எங்களுடையவன்தானே?” என்று சிரித்தார். புரியாது விழித்தவனைப் பார்த்துக் கேட்டார், “ டோண்ட் யூ பிலாங் டு அஸ்?” .
கெட்டிக்காரத்தனமான கேள்வி. ஆம் என்றால் அது சரண்டர். இல்லை என்றால் வேலை போய்விடும்.
அவன் எழுந்து கொண்டான். “காசுக்காக மாத்திரம் எல்லோரும் சுவாசிப்பதில்லை. பத்துப் பாத்திரம் தேய்ப்பவளுக்குக்கூட அங்கீகாரம் தேவைப்படுகிறது” என்றான்
“இன்னும் நீ கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது” என்று முதுகில் தட்டி அறைக் கதவை மூடினார் அதிகாரி
இரண்டு வாரம் மனம் இறுக்கமாக இருந்தது. அதிகாரியிடம் அப்படி முகத்தில் அறைந்த மாதிரிக் கேட்டிருக்கக் கூடாதோ என்றொரு குழப்பம் மேகம் போல் மிதந்து கடந்தது. வேலையை விட்டுவிடலாமா? எனக் கணம் நேரம் தோன்றியது. இணையத்தில் தேடிய போது இவனுக்குப் பொருத்தமாக ஏதும் அகப்படவில்லை.இவன் தகுதிக்கான வேலை இல்லை. வேலை இருக்கும் இடத்தில் இவன் இப்போது வாங்கும் சம்பளம் இல்லை.
ஸ்கைப்பில் ஜெயாவை அழைத்தான். எதிர்பாரத விதமாக அவளின் முதல் வாக்கியமே, “வேலையை விட்டுவிடலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்ற?” என்பதாக இருந்தது.
“என்னாச்சு?”
“உனக்கு ஐஎஸ்ஜே தெரியுமா?”
“அப்படி என்றால்?”
“எங்கள் துறையில் புகழ் பெற்ற சர்வதேச ஜர்னல்.”
“அதற்கென்ன?”
“என்னுடைய தீஸிசை அந்த ஜர்னலில் தன் பெயரில் பிரசுரம் செய்து கொண்டுவிட்டார் என் புரஃபஸர். திருடர்களோடு வேலை செய்ய எனக்குப் பிடிக்கவில்லை.”
அவன் மெளனித்தான். பின் சொன்னான்: “திருடர்களோடு வாழ்கிறோம். திருடர்களைப் பாராட்டுகிறோம். திருடர்களை வணங்குகிறோம். அவர்கள்தான் நம் அரசியல்வாதிகள். அறிஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள். அவர்களைத்தான் கொண்டாடுகிறது சமூகம், வாழ்க்கை வணிகமாகிவிட்ட சமூகத்தில் திருட்டு என்பது நடைமுறை.”
“என்ன சொல்ற?”
“திருடனாய் இரு”
“என்னிக்காவது நீ புரியறமாதிரி பேசியிருக்கியா?” என்று போனைத் துண்டித்துவிட்டாள் ஜெயா
எஸ்கலேட்டரில் இறங்கி வருகிறவரை வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பது தெரியவில்லை. கட்டிடத்தின் கண்ணாடிச் சுவர்கள் ஒலியை ஊமையாக்கிவிட்டிருந்தன. பதினாறு மாடிகள் கொண்ட அந்தக் கட்டிடத்தில் பல நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எல்லோருக்கும் பொதுவாக ஒரு முன்வாயில் இருந்தது.
நம் ஊரில் பார்க்க முடியாத ஒரு நடைமுறை அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது. மழையிலிருந்து கட்டிடத்திற்குள் நுழைபவர்கள் குடையை மடக்கி அதை, அதற்கென வடிவமைக்கப்பட்டு அங்கு தொங்கவிடப்படிருந்த நீண்ட நெகிழிப் பைகளில் இட்டு ஓரமாக இருந்த குவளை போன்ற உருளைக்குள் வைத்து விட்டுச் சென்றார்கள். ஈரத்தை எல்லாத் தளங்களுக்கும் எடுத்துச் சென்று விடாமல் இருக்க இப்படி ஒரு ஏற்பாடு. தரையெல்லாம் ஈரமாகி, அதில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சேற்றின் சுவடுகள் பரவி அழகான கூடம் அம்மை வடுப்பட்ட முகம் போல ஆகிவிடக் கூடாது என்பதின் அக்கறை அது. “யாருடைய யோசனையோ இது?” என்ற கேள்வி நொடி நேரம் அவன் மனதில் ஓடி மறைந்தது.
மழை ஓய்வதாக இல்லை. அதைக் குறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவும் இல்லை. அந்தக் கட்டிடத்திற்குள் எப்போதும் போல மனிதர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். மழையின் கரங்களால் மாநகரத்தின் இயக்கத்தை நெறித்துவிட முடியவில்லை.
வருகிறவர்கள் எல்லோர் கையிலும் குடை இருந்தது. கடிதம் போட்டுவிட்டு வருகிற விருந்தினரைப் போல அறிவித்துவிட்டு வந்து இறங்கியிருக்க வேண்டும் மழை. அல்லது எந்த நேரமும் எதற்கும் தயாராய் இருப்பது என்ற எச்சரிக்கை உணர்வு அவர்கள் இயல்பாகவே ஆகியிருக்க வேண்டும்.
அரை மணி நேரமாக மழையையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அலுப்புத் தட்டியது. அலுவலகத்திற்கே திரும்பிப் போய்விடலாமா எனத் தோன்றியது. போய்? அந்தத் திருடர்களுக்காக இன்னும் கொஞ்ச நேரம் பொட்டி தட்டவா?
காத்திருக்கலாம். எதற்காகக் காத்திருக்கிறோம் என்று கேள்வி கொக்கியை வீசியது. காத்திருப்பவர்கள் ஒருபோதும் முன்னேறியதில்லை என்று மனம் சொன்னது. நெறிகள், நியாயம், அறம் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு முந்துகிறவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கவே காத்திருக்கிறது உலகம்
கிளம்பலாம் என முடிவு செய்தான். அன்று போல நனைந்து கொண்டு போய்விடலாமா என்று தோன்றியது ஆனால் அன்றிருந்த உற்சாகம் இன்றில்லை. மழை வெளியே. மனதில் வறட்சி. அன்றைக்கே குடை ஒன்று வாங்கியிருக்க வேண்டும். அதற்கு அதிர்ஷ்டமில்லை. திருடர்கள் உலகில் என்றும் அதிர்ஷ்டம் ஏமாளிகளின் பக்கம் இருப்பதில்லை. ‘இந்த செமஸ்டரில் என்ன கற்றுக் கொண்டாய் என்று யாரோ எவரிடமோ உரையாடிக் கொண்டு கடந்து போனார்கள். ‘நீ கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது” என்ற அதிகாரியின் வாக்கியம் நினைவில் மீண்டெழுந்தது. யார் மீது என்று தெரியாமல் ஆத்திரம் உள்ளே பீறிட்டது. களவாடுகிறவர்கள் களவாட, கற்றுக்கொள்கிறவர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டுமா? கற்றுக் கொள்கிறவர்களும் பாடம் கற்பிப்பார்கள், ஒருநாள்.
அந்தக் கணத்தில்தான் அவன் அந்த முடிவுக்கு வந்தான்.
குடைகள் வைத்திருந்த குவளையை நோக்கி நகர்ந்தான். அங்கிருந்த பூப்போட்ட பெரிய குடை ஒன்றை என்னமோ அவனே வைத்து விட்டுப் போனதைப் போல உருவிக் கொண்டு நடந்தான்
பொல் என்று பொழுது விடிந்த போது மழை பெய்த சுவடே இல்லை. பொட்டு நீர் கூடச் சாலையில் இல்லை. சூரியன் கூடச் சுள்ளென்று காய்ந்தது.
பல்துலக்கப் போனபோது நீர் வடிவதற்காக முதல்நாள் குளியலறைக் கதவில் மாட்டிய் குடை கண்ணில் பட்டது. மனதை உறுத்தியது.
“அடே திருடா!” எனக் குரல் கேட்டது. குடையா பேசுகிறது? திரும்பிக் குடையைப் பார்த்தான். கூப்பிட்டது குடையில்லை. குரல் உள்ளிருந்துதான் வருகிறது
என்ன அற்பத்தனமான காரியம் செய்து விட்டோம்! யாருடைய குடையோ? யார் மழையில் நனைந்து கொண்டு போனார்களோ? பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு வா வா என்று கையசைத்தச் சீனக் கிழவியினுடையதோ? அதிர்ஷடம் அவனுக்கு வாய்க்கட்டும் என வாழ்த்தியக் கடைச் சிப்பந்தியினுடையதோ? இந்த நகரத்தில் இந்த நாள் வரைத் தன்னை எவரும் ஏமாற்றியதில்லை. டாக்சியில் கூடப் பாக்கியும் கொடுத்து ரசீதும் கொடுப்பார்கள். தேதி முடிந்த தின்பண்டத்தைத் தலையில் கட்டியதில்லை. கிருஷ்ணன் கோவிலுக்கு அடுத்திருக்கும் சீனக் கோயிலுக்குப் போயிருந்த போது கழற்றி வைத்த செருப்புக் கூட அப்படியே இருந்ததே? பிக்பாக்கெட் என்று பத்து செண்ட் களவு போனதில்லை. சலவைக்குத் துணி போட்ட போது சட்டைப் பையில் மறந்து விட்டிருந்த ஐந்து டாலர் நோட்டை, அழைத்துக் கையில் கொடுத்தாளே கடைக்காரி?
யாரிடம் திருடியிருக்கிறோம்? யாரைப் பழி வாங்கியிருக்கிறோம்? அவன் செயலின் அபத்தம் அவனை விளாசியது. தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை கேட்கிறவனைப் போல அந்தக் கணம் அவன் உணர்ந்தான். அவன் கேட்பது பிச்சையா? மன்னிப்பா?
அன்று அலுவலகத்திற்குக் குடையை எடுத்துக் கொண்டு போனான். முன்வாயிலில் இருந்த குவளையில் கொண்டு செருகினான். நேற்று வந்தவர் இன்றும் வந்தால் எடுத்துக் கொண்டு போகட்டும். மதிய உணவுக்காக மாடியிலிருந்து இறங்கி வந்த போது கடைக் கண்ணால் பார்த்தான். அவன் வைத்த குடை அப்படியே இருந்தது, குவளைக்குள் செருகிய பூப் போல அங்கிருந்தது அந்த ஒரு குடை மாத்திரம்தான். வெயில் கொளுத்துகிற நாளில் வேறு எவர் குடையோடு வரப் போகிறார்கள்?
மாலை கிளம்புகிறது போது, மறித்து நிறுத்தியது ஒரு குரல். “சார் குடையை மறந்திட்டீங்களே?” என்று காவலாளி குடையைக் கையில் வைத்துக் கொண்டு நின்றார். “தமிழா?” என்று கேட்டார். “அழகான குடை. எல்லாரும் கறுப்பு, சிவப்பு மஞ்சள்னு எடுத்துட்டு வராங்க. இது கத்திரிப் பூக் கலரில் பிங்க் நிறக் குறும் பூக்கள் போட்டு அம்சமா இருக்கு” என்றார். “கவிதை எழுதுவீங்களா?” என்ற இவன் கேள்விக்கு வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டே “காலையில் வந்த போதே பார்த்தேன். கேட்கணும்னு நினைச்சேன். அவசரமா போயிட்டிருந்தீங்க” என்று சிரித்துக் கொண்டே நீட்டினார். அதை வாங்கிக் கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.
பனிரெண்டாம் எண் பஸ்ஸின் மாடி பாதிக்கு மேல் காலியாக இருந்தது. இவனும் இரண்டொரு பயணிகளும் மாத்திரம் இருந்தார்கள். இவன் குடையை இருக்கையின் கைப்பிடியில் மாட்டிவிட்டு வெளியே பார்க்கத் தொடங்கினான். மனம் காட்சிகளில் லயிக்கவில்லை. உள்ளே குத்திய முள் உறுத்திக் கொண்டே இருந்தது. மாடியில் இருந்த நால்வரில் இருவர் ராக்சி ஸ்கொயர் அருகே இறங்கிப் போனார்கள்
அடுத்த நிறுத்தத்தில் அவன் இறங்க வேண்டும். தொங்க விட்ட குடையைத் தொடாமல், மறந்து விட்டது போன்ற பாவனையோடு இவன் படியிறங்கினான். “எக்ஸ்க்யூஸ் மீ!” என்று பதற்றத்தோடு ஒரு மலாய்க்காரர் இவன் பின்னாலேயே இறங்கி வந்தார். “யுவர் அம்பர்லா!” என்று நீட்டினார். If you do not want it to rain, always carry an umbrella. என்று சொல்லி கட கடவென்று சிரித்தார். இவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ஆனாலும் புன்னகைத்தான்
அடுத்த இருநாள்கள் காபி கிளப், காய்கறிக் கடை, சலவைக் கூடம், என்று குடையைத் தொலைத்துவிட அலைந்தான். யாராவது நினைவு வைத்துக் கொண்டு எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். வண்ணக் குடையாக இல்லாமல் பூப் போட்ட துணியால் ஆன குடையை அடையாளம் கண்டு கொள்வது எல்லோருக்கும் எளிதாகவே இருந்தது. தனித்துவத்தோடு இருப்பவர்கள் தப்பிக் கொள்வது கடினம்தான்
குப்பைப் பைகளைப் போடுவதற்கென்று அவனுடைய தளத்தில் ஓர் அடி அகலத்திற்கு ஒரு பொந்து இருந்தது. அந்த Chuteல் குப்பைப் பைகளைப் போட்டால்,குழாய் வழி நேரே கீழிருக்கும் தொட்டிக்குப் போயச் சேரும். அதிலே தள்ளிவிட்டுவிடலாமா என்று தோன்றிய யோசனையை மறு பரிசீலனை செய்யாமல் செயல்படுத்த முனைந்தான். குடை உள்ளே போகத் திணறியது. கேள்விக்குறி போன்ற கைப்பிடி மாட்டிக் கொண்டு நகர மறுத்தது. நின்றபடியே தரை துடைத்துக் கொண்டிருந்த இந்தோனீசியக் கிழவி, கை வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து “மாட்டிக்கிச்சா” எனக் கேட்டு குடையை மீட்டுக் கையில் கொடுத்தார்
திறக்க எளிதாகவும் மூடச் சிரமமாகவும் இருக்கிற திருகிட்ட புட்டிகளைப் போலத் திருட எளிதாக இருந்த குடையைத் தொலைப்பது கடினமாக இருந்தது. இருக்கிற ஒவ்வொரு நாளும் திருடன் திருடன் என்ற அதன் மெளனக்குரல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது
ஆள் அரவமற்ற பூங்காவில் யாரும் காணதவாறு வைத்துவிட்டுத் திரும்பி விடலாம் என்று இருள் சூழும் மாலையில் கிழக்குக் கடற்கரைக்குக் கிளம்பினான் அவன். வேலை நாள் என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. சீறிக் கொண்டு செல்லும் அம்பு போலச் சிறுவன் ஒருவன்.சைக்கிள் தடத்தில் இ-சைக்கிளைச் செலுத்திக் கொண்டு போனான். சிலுசிலுவென்று காற்று வீசிக் கொண்டிருந்தது. அதிலும் இருவர் வேர்க்க வேர்க்க மென்னோட்டம் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அர்த்தமில்லாத வரி ஆடம்பரமாகக் கவிதைக்குள் நுழைந்துவிட்டதைப் போல அவன் அவசியமே இல்லாமல் மழை இல்லாத மாலையில் குடையை விரித்துப் பிரித்து நடந்து கொண்டிருந்தான். விலகு விலகு என்று விரட்டுவதைப் போல முதுக்குப் பின் சைக்கிள் மணிச் சத்தம் சளைக்காமல் ஒலிக்கவே திரும்பிப் பார்த்தான். குழந்தைகள் பந்தயம் வைத்துக் கொண்டு குதுகலமாகச் சைக்கிளைச் செலுத்திக் கொண்டு வந்தன.
அவன் திரும்புவதற்காகக் காத்திருந்ததைப் போலக் காற்று அந்த அசந்த தருணத்தில் அவன் கையிலிருந்த குடையைக் களவாடிக் கொண்டு போயிற்று. ஒரு பூப் போல காற்றில் மல்லாந்து பறந்த குடை கடலில் போய் விழுந்தது. படகைப் போல அலைகள் மீது சற்று நேரம் பயணித்தது. அலைகள் அதில் ஏறிக் கொள்ள அவசரப்பட்டன. குடை தன்னை அமிழ்த்துக் கொண்டு தண்ணீரை அனுமதித்தது. இன்னும் சிறிது நேரத்தில் எடை தாங்காமல் அது ஆழ்கடலில் மூழ்கிப் போகும்.
அவன் அலைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அவை அவசரமில்லாமல் திரும்பிப் போய்க் கொண்டிருந்தன.அருகே போய்க் காலை நனைக்கலாம் என்று தோன்றியது
நடக்கத் தொடங்கிய போது மழை சரசரவென்று இறங்கியது. அங்கிருந்த ஒன்றிரண்டு பேரும் மரங்களை நோக்கிப் பரபரவென்று ஓடினார்கள் .
அவன் சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினான்.
***
கல்கி தீபாவளி மலர் -2019