அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் பார்த்து வளர்ந்த அந்த இளைஞன் இறந்து விட்டான் என்றது செய்தி. மாடிப்படி ஏறும் போது மாரடைப்பு. அருகில் இருந்த ஆஸ்பத்ரிக்கு அழைத்துச் செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது எனச் சொன்னார்கள்
சற்று பருத்த சரீரம்தான். ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. மதுப்பழக்கம் இருந்தது என்பது அவனது நண்பர்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே, அல்ல அல்ல உலகிற்கே தெரிந்த்திருந்தது. நன்றி பேஸ்புக்.
குடிப்பதை ஒரு சூரத்தனமாகக் கருதுகிற மனோபாவம் எப்போது உருவாகிற்று எனத் தெரியவில்லை. ஆனால் ஏன் உருவாகிற்று என்பதை ஓரளவு ஊகிக்க முடியும்
சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற ஒழுக்க நெறிகளுக்கு எதிரான ஓர் கலகம் இது என்று சாக்குச் சொல்லிக் குடிக்கிறார்கள் இலக்கியவாதிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்கிற இளைஞர்கள்.
அப்படி அறிவித்துக் கொள்கிறவர்களை ஆராதிக்க ஒரு கூட்டம் சேர்ந்தவுடன் அவர்கள் போதை கபாலம் தாண்டியும் போகிறது. என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் எதையோ செய்ய எத்தனிக்கிறார்கள்.
கையில் கிடைத்த கல்லைக் காற்றில் வீசும் சிறு பையன்கள் போல் விளைவுகளைத் தராத வேலைகளில் குதூகலம் கொள்கிறார்கள்
முதிர்ந்த மரங்களில் திரண்ட கனிகள் எல்லாமும் ஒரு கல்லில் உதிர்ந்து . விழுவதில்லை.விழுந்தால் அவை விருந்தாகும் அல்லது உணவாகும் என்பதால் அந்தக் கல்லெறிதலுக்கு ஓர் அர்த்தம் உண்டு. கனியாகாத காய்கள் இன்று காயம்படாமல் நகர்ந்து கொண்டு சிரிக்கலாம் அந்தச் சிரிப்பினோசைக்குக் காற்றும் கை தட்டலாம். ஆனால் காலத்தால் அவை கனிந்தே ஆக வேண்டும். கனிந்தால் அவை வீழ்ந்தே ஆக வேண்டும் .
எல்லாப் பக்கங்களிலும் இறுகச் சூழப்பட்ட குளங்கள் கல்லெறிக்கு அதிர்கின்றன. அதிர்வின் அலைகள் அவசரமாகக் கரையை நோக்கி நகர்கின்றன. கரைகளைத் தகர்த்து விடும் ஆவேசம் தெரிகிறது. ஆனால் ஆவேசம் இருக்கும் அளவிற்கு அவற்றிடம் வலு இல்லை.அலைகள் காணாமல் போகின்றன கல்லை முழுங்கி குளம் அமைதி காக்கிறது.
கலகம் செய்யப் புறப்பட்ட இளைஞர்களைக் காலம் முழுங்கி நிற்பதைப் போல
கலகம் செய்யும் ஆசை கொண்ட இலக்கியவாதிகள் குளத்தில் கல்லெறிவதை விட்டுவிட்டு மரத்தில் கல்லெறிவதில் மனதைச் செலுத்தலாம்.
விளம்பச் சொல்வதானால் ஊரின் நடுவே பாசி படர்ந்து வெறும் அடையாளமாய் விரிந்து கிடக்கிறதே கலாசாரம், அதன் எச்சங்களாய் உதட்டளவில் உபதேசிக்க்கபடும் ஒழுக்க நெறிகள் என்ற பழங் குளம். அதைக் கவிதை என்னும் கல்லெறிந்து சுத்தப்படுத்த முடியாது. தூர்வாரித்தான் தூக்கிப் போட வேண்டும்.
அதற்குத் தேவை செயல். சொல் அல்ல. போதையில் புறப்பட்டு வரும் சொல் அல்ல.
அதற்கு அறிவு தேவையில்லை. ஆனால் மனம் தேவை. உழைப்புத் தேவை. உழைக்கும் உரம் கொண்ட உடல் தேவை. சாராயத்தால் சல்லடை ஆன சரிரீரங்களால் எவருக்கும் பயனில்லை. உங்களுக்கு உடபட
கபாலத்து போதையில் கசிந்து வரும் கவிதைகளை அதோ வேர் பரப்பி விரிந்து நிற்கிறதே இலக்கியம் என்றதொரு விருட்சம் அதை நோக்கி எறியுங்கள். இன்றில்லாவிட்டாலும் என்றேனும் அதன் கனிகள் கையில் விழும்.
கல்லால் விழுந்தாலும் காலத்தால் உதிர்ந்தாலும் அது விருந்து