கல்லும் கனலும்

maalan_tamil_writer

மகாபலிபுரத்திற்குப் போகும் போதெல்லாம் என் காதில் ‘கல் கல்’ என்ற உளி ஓசை கேட்கும்.காரணம் பேராசிரியர் கல்கி. அவர் அங்கு போனபோது அவரது உள்ளத்தில் “கல் கல்” என்ற உளி ஓசையோடு “ஜல் ஜல்” என்ற சதங்கை ஒலியும் கேட்டது. ஆயனச் சிற்பியும் சிவகாமியும் நரசிம்மனும் நாகநந்தியும் பரஞ்சோதியும் தோன்றினார்கள். சிவகாமியின் சபதம் பிறந்தது

அதைப் போன்ற காவியக் கற்பனைகள் ஊற்றெடுக்கும் உள்ளம் எனக்கில்லை. மகாபலிபுரம் போகும் போது என் கூட வருபவர் கல்கிதான். சின்னக் குழந்தை அம்மாவின் புடவையைச் சுற்றிக் கொண்டு அம்மாவாகிவிட்ட கற்பனையில் அழகு பார்ப்பதைப் போல நான் ஒரு கற்பாறையில் காலை தொடைமேல் போட்டுக் கொண்டு கல்கி போல் அமர்ந்து கற்பனையில் மகிழ்ந்ததுண்டு

அண்மையில் ஆழ்வார்ப்பேட்டையைக் கடக்கும் போது மனதில் கேட்டது “கல் கல்” சப்தம். ஆனால் அதில் மகிழ்ச்சி ஏற்படவில்லை. ஆத்திரத்தில் அனல் பெருகியது!

எவனோ ஒரு சோழன், யாரோ ஒரு பாண்டியன், செம்பியன் மாதேவி போல ஏதோ ஒரு பிராட்டி, கட்டிய கோயில்களில் சிவனே என்று இருந்த சிலைகள் எல்லாம் களவாடப்பட்டு, கடல் கடந்து போவதற்குப் புறப்பட இருந்த நேரத்தில், காவல் துறையால் தடுத்தாட் கொள்ளப்பட்ட செய்தியைப் படித்துக் கொதித்துப் போயிருந்தேன்.

நம் முன்னோர்கள் கலைக்காகச் சிலை வைத்தார்களா, சிலைக்காகக் கோயில் கட்டினார்களா என்ற கேள்வி ஆலயங்களுக்குச் செல்லும் தருணங்களில் எனக்குள் எழுவதுண்டு. கையால் களிமண்ணைப் பிடித்து அதைக் கணேசன் என்று கும்பிடுகிற மனமும் மரபும் நமக்குண்டு. கடவுள் என்ற ஒன்றை அடையாளப்படுத்த நம் முன்னோர்கள் எதையோ ஒன்றைச் செய்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதில் கலை மிளிர வேண்டும் என நினைத்தார்களே, அந்த மனம், அது ஆயிரம் கோடி கொடுத்தாலும் வாய்க்குமா? காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்து மடிந்திருந்தால் அது வாய்க்காது. கல்வி, அதில் கிளைத்த கற்பனை, அதைக் கையில் வடித்த முயற்சி, முயற்சி மேம்பட மேற்கொண்ட உழைப்பு இத்தனையும் ஒவ்வொரு சிலைக்குப் பின்னும் இருக்கின்றன.

தாராசுரத்தில் ஓர் அன்னப்பூரணி. இடக் கையில் அமுத கலசம் தாங்கி, இடையைச் சற்றே ஒடித்து சிலையாய் நிற்கிறாள் கையில் இருக்கும் கலசத்தைச் சுண்டிப் பார்த்தால் காலிப் பாத்திரத்தைத் தட்டும் போது கேட்கும் ஓசை. அமுதத்தைத்தான் அத்தனை பேருக்கும் வார்த்தாயிற்றே, அப்புறம் கலசம் காலியாகத்தானே இருக்கும்? அவள் கீரிடத்தின் மேல் பகுதியைத் தட்டிப்பார்த்தால் பாதி நிறைந்த பாண்டம் போல் ஓர் ஓசை. கீரிடத்திற்குள் தலை, தலைக்கு மேல் சற்று இடைவெளி எனச் சிந்தித்திருக்கிறான் சிற்பி. காலைத் தட்டிப்பார்த்தால், அப்பா! அது முழுக் கல். அவ்வளவு உறுதியாய் நிற்கிறாள் அவள். காகிதத்தில் அல்ல, இத்தனையும் கல்லிலே செய்திருக்கிறான் ஒருவன்.

இதையெல்லாம் விற்று காசு எண்ணிவிடலாம் என்று நினைத்தான் பாருங்கள், அவனை விட ஓர் அற்பன் உண்டா? என்ற ஆத்திரம் செய்திகளைப் படித்தபோது நெஞ்சில் கனன்றது.

பிரதமர் மோதியின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவரிடத்தில் நான் மெச்சுகிற விஷயம் இந்தக் கலைச் செல்வங்களைக் கொண்டுவர அவர் இடைவிடாமல் மேற்கொள்ளும் முயற்சி.  2014: ஆஸ்திரேலிய பயணம். சோழர்காலத்து நடராஜரும் (விற்கப்பட்ட விலை 5 மில்லியன் டாலர்) அர்த்தநாரீஸ்வரரும் திரும்பினார்கள். 2015: கனடா. கஜுரோகவிலிருந்து களவு போன கிளி மங்கை திரும்பினாள். 2015: ஜெர்மனியிலிருந்து காஷ்மீரத்து துர்கை திரும்பினாள். 2016: ஶ்ரீபுரந்தன் மாணிக்கவாசகரும், நடனமாடும் கணேசரும், பாகுபலியும் இன்ன பிற 200 சிலைகளும் திரும்புகின்றன.

நன்றி  என்பது நைந்து பழசாகிய சொல்தான். ஆனால் அதையன்றி சொல்ல இன்னொன்று எம்மிடம் இல்லை. நெஞ்சிலிருந்து சொல்கிறோம்: நன்றி மோதிஜி! சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.