காலையில் எழுந்திருக்கும்போதே ராஜிக்குத் தலை ‘ கிண் ’ ணென்று இருந்தது. உலக உருண்டையைத் தூக்கித் தலையில் வைத்த மாதிரி ஒரு பாரம். இப்படி இருந்தால் இன்னும் சிறிது நேரத்தில் தலைவலி வரப்போகிறது என்று அர்த்தம்.
ராஜி, கண்ணாடிக்கு அருகில் இருந்த ரிப்பனை எடுத்து நெற்றியில் இறுக்கிக் கொண்டாள். தலையணையில் கன்னம் அழுத்திப் புதைய, இடப்புறம் ஒருக்களித்துப் புரண்டாள். காலடியில் கிடந்த இன்னொரு தலையணையை முகத்தின் மீது போர்த்திக் கொண்டு முழங்கையால் மடக்கிப் பிடித்தாள்.
“ என்னடி இது கூத்து ! காலங்கார்த்தாலே ! ” என்றாள் அம்மா.
இது என்னவென்று அவளுக்குத் தெரியும் . ஆனாலும் கேட்டாக வேண்டும். ராஜி பதில் ஏதும் சொல்லாமல் கண்ணை மூடிக்கொண்டாள்.
“ ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நீ மூச்சு முட்டித்தான் சாகப் போறே ! ”
சாபம் இல்லை. அதட்டலாகப் பேசுவதாக அம்மாவிற்கு நினைப்பு. அவள் கடுமையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசும்போதும் கூடவே ஒரு குழைவு இருக்கும். “ நீ திருப்பியே கொடுக்கப் போறதில்லேடி கடன்காரி. உனக்கு ஜென்மாந்திரக் கடன் ” என்று வேலைக்காரிக்கு அட்வான்ஸ் கொடுப்பாள். சம்பளத்தில் பிடித்துக் கொண்டதாகச் சரித்திரமே கிடையாது.
“ என்னடி இது ! நான் ஒருத்தி கத்திட்டே நிக்கிறேனில்லையா ? ”
“ தலைவலிம்மா ! ”
“ கல்யாணத்திற்கு நிற்கிற பெண்ணுக்கு அப்படி என்னதான் ஒரு தலைவலியோ ? ” தலையணையைத் தூக்கி நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.
ராஜி வெடுக்கென்று அதைத் தள்ளிவிட்டுப் புரண்டாள்.
ஐந்து நிமிடத்தில் மணக்க மணக்கக் காப்பி வந்தது. “ பல் தேய்க்காவிட்டாலும் போறது குடி. ”
காப்பியைக் குடித்து எழுந்து சோம்பல் முறித்தபோது சுகமாக இருந்தது. அம்மாவின் இந்த உபசாரத்திற்குப் பின் தலைவலி வராது என்று தோன்றியது. ஆனாலும் ஆபீஸுக்கு மட்டம்தான். உயரமான முக்காலியில் உட்கார்ந்து கொண்டு நாள் பூரா ஹலோ ஹலோவென்று கத்துகிற இம்சை கிடையாது. பத்தரை மணிக்கு மேல் இளம் சூடான வெந்நீரில் குளிக்கும்போது, சொல்லத் தெரியாத சுகம். பூண்டு தட்டிப் போட்டு அம்மா பண்ணியிருந்த பொரித்த ரசத்தில் சொர்க்கம். சாப்பாட்டிற்குப் பின் விழுங்கிய மாத்திரையில் என்ன கலந்திருந்தானோ, ‘ ஜிவ் ’ வென்று உயரப் பறக்கிற ஒரு கிர்.
ராஜிக்கு சட்டென்று வரதராஜன் ஞாபகம் வந்தது. அவள் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற வரதராஜன். உள் மனத்தில் குரல் எழுந்தது.
“ காம்ரேட் ! உங்களுக்கு வலி, துக்கம் இதெல்லாம் உண்டா ? ”
வரதராஜனுக்கு இரும்பால் செய்த உடம்பு என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள்., உண்ணாவிரத பந்தலில் அவன் மயக்கம் போட்டு விழும் வரை. அப்போது வரதராஜனுக்கு அரசியல் தெரியாது. தொழிற்சங்கம் தெரியாது. மனிதாபிமானத்தால் உந்தப்பட்டுத்தான் நியாயம் கேட்கப் புறப்பட்டான். மெட்டர்னிட்டி லீவில் போயிருந்த பெண் ஊழியருக்குக் குறைப் பிரசவம். குழந்தை பிறக்காததால், வேலைக்கு வராத நாட்களை மெட்டர்னிட்டி விடுமுறையாகக் கருத முடியாது. வேண்டுமானால் சம்பளம் இல்லாத லீவாக அனுமதிக்கிறோம் என்றார்கள் அதிகாரிகள். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க வரதராஜன் கிளம்பினான்.
“ பொம்பளைங்க லீவில் உனக்கென்னய்யா அக்கறை ? ” என்று கேலி எழுந்தது. பேச்சு தடித்தது.
“ வேணும்னா கோர்ட்டுக்குப் போ ! ” என்று நிர்வாகத்தின் பிடிவாதம் வலுத்தது. ஸ்டிரைக் என்று ஒன்றிரண்டு பேர் குரல் கொடுத்தார்கள். இவன் உண்ணாவிரதத்திற்கு உட்கார்ந்தான். நான்காவது நாள் நடுப்பகலில், எதிரே இருந்த ஓலைப் பந்தலில் மயக்கம் போட்டுச் சுருண்டான். டாக்டர்கள் வந்தார்கள். அசிட்டோன் உற்பத்தி ஆக ஆரம்பித்து விட்டது. அபாயம் என்றார்கள். இத்தனை நாள் ஏன் சும்மாயிருந்தீர்கள் என்று கோபித்தார்கள்.
“ எப்படித் தெரியாமல் போகும் ? அந்த ஆளுக்கு வலி வயிற்றைப் புரட்டிப் எடுத்திருக்கும். அடிவயிற்றுத் தசைகள் முறுக்கிக் கொண்ட மாதிரி வலித்திருக்கும். அவர் சொல்லலையா ? ”
“ முனகக்கூட இல்லையே டாக்டர். ”
வலிக்குச் சுருங்காத இந்த மனத்தைக் கண்டுதான் ராஜி சிணுங்கினாள். மனத்தின் குரல் வியந்து சிலிர்த்தது. என்ன மாதிரி மனது இது ! அடுத்தவருக்காக முனகாமல் சாகத் தயாரான மனிதன் ! மனிதன் தானா இவன் !
“ என்னைக் கல்லிலே அடிச்சு சாமி கும்பிட்டிடாதீங்க. நான் மனுசன் தான். இதைப் பார்த்தீங்களா, கண்ணு சிமிட்டுது, கால் மண்ணுல நிக்குது, உடம்பெல்லாம் வேர்க்குது ” என்றான் வரதராஜன்.
“ சின்ன தலைவலினா எனக்கு உயிர் போகுது. அத்தனை வலியை எப்படி உங்களாலே தாங்கிக்க முடிஞ்சுது ? ”
“பாரதியார் படிச்சிருக்கீங்களா?’
“ ம். அவரு வைத்தியம் கூடச் சொல்றாரா ? ”
“ விசையுறு பந்தினைப்போல் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன். நசையுறு மனம் கேட்டேன்.
“ என்னவோ சொல்லி ஏமாத்தறீங்க ! நிஜத்தைச் சொல்லுங்க.
“ நிஜமாவது பொய்யாவது எல்லாம் மனசுதான். ராஜி. வலி தாங்காதுன்னு நினைச்சா காலிலே கல்லு குத்தினாக்கூடச் செத்திடுவோம். யாருக்காகவோன்னு நினைச்சா சாகறப்பகூடச் சிரிப்போம்”.
ராஜி சிரிக்கக் கற்றுக் கொண்டாள். கற்றுக் கொண்டது காதலில் முடிந்தது. கண்டிஷன் போட்ட காதல். கல்யாணம் ஆனாலும் கணவனைக் காம்ரேட் என்றுதான் கூப்பிட வேண்டும் என்று கண்டிஷன் போட்ட காதல்.
கல்யாணம் முடிந்தது.
காம்ரேடின் உலகம்பெரிது. வீடு சிறிது. புகுந்த வீட்டில் நுழைந்த அன்றைக்கே தலைவலி. கல்யாணக் களைப்பா, ஜாதி மல்லி வாசனையா இல்லை புகுந்த இடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்ற படபடப்பா, எதனால் என்று தெரியவில்லை. வந்த முதல் நாளே தலைவலி. காற்றோட்டமில்லாத பட்டுப புடவை சாக்கு மாதிரிக் கனத்தது. தொடை, இடுப்பு, அக்குள் எல்லாம் கசகசவென்று வேர்த்துக் கொட்டியது. மெல்லிசாக ஹவுஸ் கோட்டை மாட்டிக் கொண்டு தலையைப் பிரித்து ஆறப் போட்டபடி தூங்கினால் தேவலாம் என்று இருந்தது.
அம்மா வீடாயிருந்தால் யாரையும் கேட்காமல் மாட்டிக் கொண்டு விடலாம். வந்த முதல்நாளே ஹவுஸ் கோட் மாட்டிக் கொண்டால் மாமியார் என்ன சொல்வாரோ ? இங்கே இதற்கெல்லாம் பர்மிஷன் கேட்க வேண்டுமா, வேண்டாமா என்று குழப்பமாய் இருந்தது..
ஒன்றும் தோன்றாமல் பாத்ரூமிற்குள் போனாள். கிண்ணம் போலக் கையைக் குழித்து நீரைப் பிடித்து முகத்தில் இறைத்துக் கொண்டாள். கன்னத்தில் அறைந்த மாதிரி சில்லென்று முகத்தில் நீர் விழுந்தபோது உடம்பு சிலிர்த்தது. மீண்டும் மீண்டும் தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டாள். புருவத்தின் நடுவில் இருந்து நீர்முத்துக்கள் கிழிறங்கி மூக்கின் முனையில் உடைந்தன. கழுத்தருகே புடவை தொப்பலாய் நனைந்தது.
முகத்தைத் துடைத்துப் புடவையை மாற்றிக் கொண்டு வந்தபோது, “ இன்னிக்கு ஒரு நாளைக்குக் கொஞ்சநாழி பட்டுப் புடவையிலேயே இருக்கக் கூடாதோ ? யாராவது வந்துட்டும் போயிட்டும் இருப்பாங்க ” என்றாள் மாமியார்.
“ மூஞ்சி அலம்பிக்கிட்டேன். புடவை நனைஞ்சிட்டுதும்மா ” என்றாள் ராஜி.
“ எல்லாத்துக்கும் உடனே பதில் சொல்லிடறியே ! ” என்றாள் மாமியார்.
உயிரே போனாலும் இனி இந்த வீட்டில் வாயைத் திறப்பதில்லை என்று அந்த நிமிடத்திலிருந்து உறுதி பூண்டாள் ராஜி.
திறந்த வாயை வரதராஜன் மூடவே இல்லை. பேச்சு… பேச்சு… பேச்சு… தொழிற்சங்கக் கூட்டத்தில், கட்சி ஆபீஸில், அரசியல் மேடையில், இப்படி நீட்டி முழக்குகிற பேச்சாக இல்லாவிட்டால் வாசல் அறையில் யாராவது நாலு விருந்தாளிகளுடன் இப்படித் தூங்குகிற நேரம் தவிர மற்றப் பொழுது எல்லாம் பேச்சு. உண்ணாவிரதத்திற்குப் போட்ட மாலை அவனைப் பேச வைத்தது. பேச்சு அவனை உயர உயரத் தூக்கிக் போயிற்று. பெரிய யூனியன் மாவட்டத் தலைமையில் முழு நேரத்திற்கு உட்கார வைத்தது.
தலைவலி மண்டையைப் பிளந்தது. வெறும் ரிப்பன் முடிச்சுக்கு அடங்கிப் போகிற தலைவலி அல்ல. காப்பிக்கு மட்டுப்படுகிற தலைவலி அல்ல. களிம்புப் பூச விலகி விடுகிற தலைவலி அல்ல. இப்போதெல்லாம் வரும்போதே உக்கிரமாக இருக்கிறது. பட்பட்டென்று பொட்டு இரண்டும் தெறிக்கிறது. தலை நரம்புகள் எல்லாம் புழுக்களாக நெளிகின்றன. அம்மிக் குழவியை எடுத்து நச்சென்று போட்டுக் கொள்ளத் தோன்றுகிறது.
ஆனால் படுத்துக் கொண்டிருக்க நேரமில்லை. வரதராஜன் விடியற்காலையில் எங்கோ கிளம்பிக் கொண்டிருக்கிறான். அயலூர் கூட்டமாக இருக்கும். இரண்டு நாளாகப் பேச முடியவில்லை. இன்றைக்கும் பேசாவிட்டால் காரியம் கெட்டுவிடும். தன் காரியம் அல்ல. அடுத்தவருக்கான பாரியம். ‘ மனசுதான் எல்லாம். நமக்குன்னு வந்ததுனா செத்திடுவோம். வேறு யாருக்கோன்னா சாகும்போதுகூடச் சிரிப்போம்”. ’
சிரிக்கக் கற்றுக் கொடுத்த வரதராஜனின் வார்த்தைகள் உயிர் கொடுத்தன.
ராஜி எழுந்தாள். கண்ணை இருட்டியது. சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றாள். காம்ரேட் ’ என்று கூப்பிட்டாள். குரலே எழும்பாத கூச்சல்.
வரதராஜன் திரும்பிப் பார்த்தான்.
“ காம்ரேட், ஒரு நிமிஷம்! .”
“ என்ன ராஜி ? ”
“ கோவிந்து மிஷின்லே கையை விட்டுட்டான் ! ”
“ அடப்பாவி ! என்னிக்கு ? ”
“ இரண்டு நாள் ஆச்சு.”
பணம் ஏதாவது கொடுத்தியா?”
“ஸ்டான்லிக்கு கூட்டிக் கொண்டு போய் சிகிச்சையை ஆரம்பிச்சாச்சு. அவன் வீட்டிலேயும் காசு கொடுத்திருக்கேம் ஆனால் இப்போ அதிலே வேறு ஒரு சிக்கல் ! ”
“ என்ன ? ”
“ நீ காஷுவல் லேபரர். கம்பெனி காம்பன்சேஷன் கொடுக்காதுன்னு சொல்றாங்க. ”
“ அது சட்டப்படி தப்பு. ”
“ அதை நீங்க வந்த சொன்னா, மேலிடத்தில் கேட்பாங்க? ”
“ நான் எப்படி வர முடியும் ? அங்கே இருக்கிறது எங்க யூனியன் இல்லியே ? ”
“அப்டீனா?
“சிநேகம் வேறே ! யூனியன் வேறே ! ”
“ காம்ரேட் ! நீங்களா பேசறீங்க ! விசாலாட்சிக்கு மெட்டர்னிட்டி லீவு தரணும்னு உண்ணாவிரதம் இருந்து சாவைத் தொட்டீங்களே, அது யூனியனுக்காகவா ? அவளுக்காகவா ? ”
“ அப்போது நான் வெறும் தனி மனிதன் ! இப்போ எனக்குப் பின்னாலே மனைவி, குடும்பம் … ”
“ அதனாலே ? ”
“ ஆபீஸில் என் நாற்காலி ஆடினால் அது குடும்பத்தில் எதிரொலிக்கும். அதை நான் விரும்பவில்லை. ”
“ ஒரு தொழிலாளிக்காக நியாயம் கேட்கப் போனால் நாற்காலி ஆடிடுமா ? ”
“ உனக்குத் தெரியாது. யூனியனில் பங்கு வகிப்பது தொழிலாளி மட்டுமல்ல. கட்சியும்கூட. சொல்லப்போனால் இப்போது கட்சிதான் எங்கள் எஜமான். கட்சிக்கு விரோதமாய் எதுவும் செய்யக்கூடாது.
“ பெரிய முதலாளிகளைத் தைரியமாக எதிர்த்துப் பேசறீங்க ! ஆனால் கட்சியைக் கண்டு பயப்படறீங்க ” “ அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்.”
விடிகாலை வெளிச்சத்தில் அவன் ஒரு நிழல் மாதிரிப் படியறிங்கிப் போனான். ஓர் அநீதியை எதிர்த்துச் சாகவும் தயாராக நின்ற இளைஞனை ஒட்டுமொத்தமாக அடித்துக் கொண்டு போனது எது ? கல்யாணம், தீரமான ஆண் பிள்ளைகளைக் கோழையாக்குகிறது. மென்மையான பெண்களைக் கல்லாய் இறுக்குகிறது என்று மனத்தின் குரல் முணுமுணுத்தது. ராஜியால் அதை அலட்சியம் செய்ய முடியவில்லை.
(குமுதம்)