கல்கி

maalan_tamil_writer

 

கல்கி

மாலன்

 

 

இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.

 

‘பூமியின் கடைசி மனிதனுக்குக் காலை வணக்கங்கள் ‘ என்றது முக்கோணம்.

 

‘என்னது ? ‘

 

‘பூமியின் கடைசி… ‘ அட்சரம் பிசகாமல் அதையே சொன்னது முக்கோணம்.

 

‘யார் நீ ? ‘ என்று அதிர்ந்தான் இவன்.

 

‘அஸ்ட்ரோ கிரகத்து ஆசாமி. நேற்று இரவு பூமி எங்கள் கையில் விழுந்துவிட்டது. மனித குலம், மற்ற ஜீவராசிகள் எல்லாம் பிரளயத்தில் போய்விட்டன. ‘

 

‘பிரளயம் ? ‘

 

‘ஆம், அலைகளின் தாக்குதல். ‘

 

‘அலைகளா ? ‘ இவன் வெளியில் எட்டிப் பார்த்தான். பொட்டு ஈரம் இல்லை.

 

‘ஆம். ரேடியோ அலைகள். உனக்குப் புரியாது. உங்கள் பாஷையில் அதற்கு வார்த்தைகள் இல்லை. ‘

 

இவனுக்குச் சுர்ரென்று கோபம் பொங்கிற்று. நேற்று இரவு உலகம் அழியும் வரைக்கும் இவன் யுனிவர்சிட்டி புரபசர். பயோ(எலக்ட்ரா)னிக்ஸில் டாக்டர். இவனுக்கு ரேடியோ அலைகள் புரியாதென்று முக்கோணம் சிரிக்கிறது.

 

‘அடேய், குள்ளா ‘ என்று கத்த விரும்பினான். புரியாதாம். அத்தனை அல்பமா மனிதன் ? சந்திரனை மிதித்ததடா எங்கள் விஞ்ஞானம். என்ன பிரயோசனம் ? இந்தப் ‘பிரளயத்தை ‘த் தடுக்க முடியவில்லையே. மனுஷகுலம் முழுவதும் போய்விட்டது ‘ இனி யூனிவர்சிட்டி டாக்டரேட் ? எலக்ட்ரானிக்ஸ் ? சட்டென்று அந்தக் கவலை பிடித்தது.

 

‘எல்லா மனுஷர்களையும் கொன்றுவிட்டு என்னை மட்டும் ஏன் பாக்கி வைத்திருக்கிறாய் ? ‘

 

‘உன்னை மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவராசியிலும் இரண்டு–ஒரு ஆண், ஒரு பெண். ஒவ்வொன்றிலும் ஒரு மாதிரி சேகரித்திருக்கிறோம். ‘

 

‘எதற்கு ? எங்களை என்ன செய்ய உத்தேசம் ? ‘

 

‘இந்தக் கிரகத்தை எங்கள் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானம். அதற்குமுன் இந்தக் கிரகத்தை முற்றிலுமாகப் பிடிக்கத் திட்டம் முழுசுமாகத் தெரிந்துகொள்ளும் நோக்கம். அதற்காக அமைத்திருக்கும்… ‘ முக்கோணம் அரை விநாடி தயங்கி வார்த்தைகளைச் சேகரித்தது… ‘ உயிர்க்காட்சிச் சாலை இது. ‘

 

‘Zoo ? ‘

 

முக்கோணம் சரிபார்த்துக் கொண்டது. ‘ஆமாம் ஆங்கிலத்தில் அப்படித்தான் அதற்குப் பெயர். ‘

 

‘ஆங்கிலம் ‘ அடப்பாவி ‘ எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாய்…இன்னும் ஏன் எங்களைப் பிடித்து… ‘

 

‘எல்லாம் தெரியாது. பூமியின் பாஷை தெரியும். வெப்ப தட்பம் தெரியும். உயிர் வகைகள் தெரியும். ஆனால் அவற்றின் குணங்கள் தெரியாது கற்றது கைம்மண் அளவு, கல்லாதது அஸ்ட்ரோ அளவு. ‘

 

‘நிறுத்து ‘ என்று இரைத்தான் இவன். ‘எங்களை உங்கள் கிரகத்துக்குக் கொண்டு செல்லத் திட்டமா ? ‘

 

‘இல்லை. அந்தச் சூழலில் உங்கள் ரசாயனம் மாறிவிடலாம். உங்கள் அமைப்பில் உங்களைப் படிப்பதற்காகத்தான் இந்த உயிர்க் காட்சிச் சாலை. ‘

 

இவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. இவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ‘சூவாம். அதில் மனிதனை அடைப்பதாம். தொந்தரவு செய்யாதே என்று வெளியில் போர்டு தொங்க அஸ்ட்ராய்ட்கள் விநோதமாகப் பார்த்துக் கொண்டு நகர, வேடிக்கையாய்ச் சீண்ட, இரக்கத்தில் பட்டாணியும் வாழைப்பழமும் இறைக்க…

 

வாட் அன் இன்ஸல்ட் ‘ நான் ஓர் எலக்ட்ரானிக்ஸ் டாக்டர். சட்டென்று பக்கத்தில் கிடந்த பூச்சாடியைத் தூக்கி முக்கோணத்தின் தலையில் வீசினான். சின்னக் கீறல் விழுந்து ரத்தம் கசிந்தது. நம்மைப் போன்ற சிவப்பு ரத்தம். அவன் அலறவில்லை. பயப்படவில்லை. கோபப்படவில்லை. வலியில் சிணுங்கவில்லை.

 

‘தாக்க முயற்சி செய்யவேண்டாம். எங்கள் ஆயுதங்கள் பலமானவை. ஆனாலும் படிப்பு முடியும்வரை உங்களைக் கொல்லத் திட்டமில்லை. மாறாகத் தேவையான வசதிகள் கொடுக்க நினைக்கிறோம். உங்கள் படுக்கை, புஸ்தகங்கள், உங்கள் உணவெல்லாம் இந்தக் கூண்டிற்குள் கொணர்ந்து அமைத்திருக்கிறோம். வேறு என்ன தேவை ? ‘

 

‘தனிமை. தொலைந்து போ ‘ ‘ என்று உறுமினான் இவன். முக்கோணம் கதவைப் பூட்டிக்கொண்டு போய்விட்டது.

 

இவன் கோபம் அடங்கி நிதானமாக யோசித்தான். எல்லாம் போய்விட்டதே ‘ மனிதன், அவன் கண்டு பிடிப்புகள், அவனுடைய விஞ்ஞானம் எல்லாம்…இல்லை. விஞ்ஞானம் கொஞ்சம் பாக்கி இருக்கிறது, என் மூளையின் செல்களில். விஞ்ஞானம் மட்டுமில்லை. உணர்ச்சிகளும். கோபம், பயம், சுதந்திரம், உயிர் வாழும் ஆசை. அப்புறம் ஈகோ எல்லாம் கையாலாகாத உணர்ச்சிகள். இவையெல்லாம் மறுபடி உலகைச் சிருஷ்டிக்குமோ ? ஈகோ இஸ்தி பவுண்டன் ஹெட் ஆப் ஹியூமன் ரேஸ். மனித குலத்தை உந்தும் சக்தி ஈகோ ‘ சொன்னது யார் ? அயன்ராண்ட் ? அடச்சே ஆளற்ற பூமியில் இனி எதற்குப் புத்தகங்கள். புத்தகங்களை எட்டி உதைத்தான். ‘புஸ்தகத்தை மிதிக்காதேடா, அது சரஸ்வதி ‘ அம்மா சொல்லியிருக்கிறாள். சின்ன வயசில். இனி அம்மாக்களுக்கு எங்கே போவது…வெயிட் ‘ என்ன சொன்னான், முக்கோணம் ? பெண். ஒரு பெண் இருக்கிறாள் ‘ இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. முயற்சி செய்து பார்க்கலாம் மறுபடி ஒரு உலகம், மனிதர்கள் எல்லாம் சாத்தியம். சாத்தியம் ? முக்கோணங்கள் மனிதர்களைப் பெருக விடுவார்களோ ? ம்ஹ்ஊம்–மாட்டார்கள். ஸோ, மனிதர்கள் தழைக்க வேண்டுமானால், அவர்கள் பூமியை விட்டு விலக வேண்டும். அவர்களாக விலகப் போவதில்லை. விலக்கப்பட வேண்டும். எப்படி ? யுத்தம் முடியாது. மிரட்டல் பலிக்கவில்லை. ஆசை காட்டுவது சாத்தியமில்லை. அவர்களுக்கு உணர்ச்சிகள் இல்லை. அவர்கள் பேச்சில் ‘விருப்பம் ‘ என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. எல்லாம் திட்டம், தீர்மானம், முடிவு இவைதான். எப்படி அவர்களை அகற்றுவது ? எப்படி ? எப்படி ? யோசித்து யோசித்துச் சலித்துத் தூங்கிப்போனான்.

 

‘மனிதா, மனிதா ‘ என்று உசுப்பியது முக்கோணம். எழுந்து உட்கார்ந்ததும் ‘உதவி ‘ என்று தயங்கியது.

 

‘என்ன ? ‘

 

‘இரவு தூங்கிய இரண்டு பிராணிகள் எழுந்திருக்கவே இல்லை. உடல் ஜில்லிட்டுப் போயிருக்கிறது. இந்தச் சமயத்தில் அவைகளை என்ன செய்து எழுப்புவது ? ‘

 

‘உடல் ஜில்லிட்டு….அவ்வளவுதான். அவை செத்துப் போய்விட்டன. ‘

 

‘செத்துப்போதல் ? ‘

 

‘ஆமாம், மரணம். ‘

 

‘மரணம். ‘

 

‘மரணம் தெரியாது ? உயிர்நீத்தல். சாகவேமாட்டார்களா நீங்கள் எல்லாம் ? ‘

 

‘சாதல்… ‘ தன் வார்த்தை அடுக்குகளில் தேடியது முக்கோணம். அவைகளில் உயிர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றா சொல்கிறீர்கள் ? ‘

 

‘உயிர் நிறுத்தம்…அப்படிச் சொல்கிறீர்களா அதை ? ஆமாம், அதுதான். ‘

 

‘அவைகளுக்கு வேண்டிய சூழல் அமைத்திருக்கிறோம். உணவு கொடுத்திருக்கிறோம். சீதோஷ்ணம் ஏற்படுத்தியிருக்கிறோம். அப்புறம் உயிர் நிறுத்தம் ஏன் ? ‘

 

‘உயிர் வாழ இவை மட்டும் போதாது. ‘

 

‘இன்னும் என்ன வேண்டும் ? ‘

 

‘அன்பு, துணை, சுதந்திரம். ‘

 

‘புரியும்படி சொல்லு. ‘

 

‘உலகின் ஜீவராசிகள் உயிர்வாழத் தேவையான ஒன்று அன்பு. அன்பில்லாத உயிரை ஆண்டவன் கொண்டுபோய் விடுவான். ‘

 

‘ஆண்டவன் ? ‘

 

‘ஆமாம். அதுதான் மரணம். நம் கண்ணுக்குத் தெரியாத சக்தி கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர். ‘

 

‘அன்பு காட்டுவது எப்படி ? ‘

 

இவன் ஒரு நிமிடம் தயங்கினான். சட்டென்று மனத்தில் ஒரு மின்னல் வர ‘வா, சொல்லித் தருகிறேன். ‘

 

அன்று மாலை அவள் இவனுடைய கூண்டிற்கு வந்துவிட்டாள். முன்னாள் அமெரிக்கப் பிரஜை. ஏழடி இருந்தாள். ஆரோக்கியம் கன்னத்தில் தெரிந்தது. மற்றொரு மனித உயிரைப் பார்த்த சந்தோஷம் முகத்தில்.

 

‘அப்பாடா ‘ நீ ஒர்த்தன் இருக்கிறாயா ‘ தாங்க் காட் ‘ ‘

 

‘வெல்கம் ‘ கையை நீட்டினான். ‘இப்படிப் பூண்டோடு அழித்துவிட்டார்களே பாவிகள் ‘ ‘

 

‘ஒன்றும் மோசமில்லை. விலைவாசி, பெட்ரோல் பஞ்சம், நியூட்ரான் பாம், கபட அரசியல், லஞ்சம்–எல்லாம் நிச்சயம் போய்த் தொலைந்துவிட்டன. ‘

 

‘பிரயோசனம் ? அதோடு மனிதகுலமும் அல்லவா போய்விட்டது ? ‘

 

‘லுக், நான் ஆன்த்ரபாலாஜி மாணவி. உங்களுடைய புராண, சமூகங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். எங்கள் பைபிள் உங்கள் புராணங்கள் எல்லாம் உலக அழிவைப்பற்றி பேசுகின்றன ‘கலி முற்றிப் பிரளயம் நேர்ந்து உலகம் அழியும் போழ்தில் என்றென்றும் ஏழு உலகத்தையும் காத்தருளும் மகாவிஷ்ணு கல்கியாய் அவதரித்து அ… ‘ என்ன சொல்ல வந்தேன் ? உலகம் அழிந்துவிடுவதைப் பற்றிய கற்பனை, கவலை, பயம் எல்லாம் காலம் காலமாக மனிதர்களிடையே இருந்து வந்திருக்கிறது. ஆனால், அதைத் தவிர்க்க நாம் என்ன செய்திருக்கிறோம் ? வி வேர் பாதர்ட் எபெளட் மூன், பட் நாட் எபெளட் எர்த். ‘

 

‘போகட்டும், பெண்ணே…இனி நாம் புதியதோர் உலகம் செய்வோம். ‘

 

‘அப்படியென்றால்… ? ‘

 

‘மறுபடி ஆதாம் ஏவாள் முயற்சி. ‘

 

‘ஸாரி, எனக்கு செக்ஸ் அலுத்துவிட்டது. பதினான்காம் வயதில் தொடங்கியது என் செக்ஸ் அனுபவம். இன்று எனக்கு இருபத்து ஆறு. இந்தப் பன்னிரண்டு வருடத்தில் மூன்று ஆண்கள். எல்லாரும் சுயநலமிகள். ‘

 

‘பர்கெட் இட். பழைய உலகத்தின் தவறுகள் பிரளயத்தில் போய்விட்டன. இன்று நமக்கு இது கடமை. ‘

 

‘யோசிக்கிறேன். ‘

 

மறுநாள் வந்து முக்கோணம் விடைபெற்றுக் கொண்டான்.

 

‘போய் வருகிறேன், நண்பனே ‘ ‘

 

‘என்னது ? ‘

 

‘இந்தக் கிரகம் நாங்கள் தங்க லாயக்கற்றது. எனவே கிளம்புகிறோம். ‘

 

‘என்ன ஆயிற்று ? ‘

 

‘எங்களுக்கு அன்பு காட்டத் தெரியவில்லை. மரணத்தை ஜெயிக்க முடியவில்லை. ஒரு நாளில் எங்களுடைய இரண்டு ஆட்களின் உயிர் நிறுத்தப்பட்டுவிட்டது. ‘

 

‘வாட் ‘ ‘என்று கூவினாள் ஆகாஸ்.

 

அவர்கள் பூமியைவிட்டுக் கிளம்புகிற வைபவத்தைக் கண்ணால் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தான்.

 

‘என்ன செய்தாய், அவர்கள் மிரண்டுபோய்ப் புறப்பட ? ‘

 

‘தந்திரம் ‘ என்று இவன் தன் நெற்றிப் பொட்டைத் தட்டிக் காண்பித்தான். ‘இதனால்தான் இவர்களை ஜெயிக்க முடியும் என்று தோன்றிற்று. முக்கோணத்தின் ரத்தத்தைப் பார்த்ததும் தோன்றியது சந்தேகம். அவர்களின் மெட்ட பாலிசம் நம்மைப்போலத்தான் எனத் தோன்றியது. அவர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் சமாசாரந்தான் எனத் தோன்றியது. அதாவது ஊட்டம் உடம்பை வளர்க்கும். விஷம் ஆளைக் கொல்லும். விஷத்திற்குக் காத்திருந்தேன். அன்பு செய்யச் சொல்லிக் கொடுத்தேன். அவன் முட்டாள்தனமாய்ப் பாம்பிற்கு முத்தம் கொடுத்தான். ‘

 

‘அது விஷம் என்று அவனுக்குத் தெரியாதா ? ‘

 

‘தெரிந்திருக்கவில்லை. விஷ ஜந்துக்கள் பூமியின் விசேஷம். நம் அமைப்பின் விளைவு என்பது பயாலஜியின் கர்ண பரம்பரைச் சந்தேகம். ‘

 

‘கிரேட் ‘ ‘ என்று கூவினாள் ஆகாஸ். தயங்கினாள். ‘முதல் நாள் பதற்றத்தில் உன் பெயரைக் கேட்டுக் கொள்ளவே இல்லை. ‘

 

‘அவ்தார் கல்கி. ‘

 

‘என்னது ? ‘

 

‘நீ எளிமையாய்க் கூப்பிட, கல்கி. ‘

 

‘வாவ் ‘ ‘ என்று முத்தமிட்டாள் ஆகாஸ்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.