கலாசாரமும் கண்ணீரும்

maalan_tamil_writer

பறக்கப் பழகுகிற பறவையைப் போல வீதியில் கிடந்த அந்தக் காகிதம் வீசிய காற்றில் தத்தி. ஓடி, தரையிலிருந்து எழுந்து தாழப் பறந்தது.மண்ணிலிருந்து எழுந்த ஈர வாசனை மூக்கை அராவியது. நீர் சுமந்த மேகங்கள் என் ஜன்னலுக்கு வெளியே நீந்திக் கொண்டிருந்தன. வேடிக்கை பார்க்க வெளியே வந்தேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே வானத்திலிருந்து வந்த துளி தோழமையோடு தோளைத் தொட்டது.அடுத்த துளியை ஏந்த ஆசையோடு உள்ளங்கையை கிண்ணம் போல் குழித்தபோது மளமளவென்று மழை இறங்கியது.

 

உள்ளே திரும்பி தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தேன். அண்மையில் இறந்து போன ஒரு பிரபலத்திற்கு அடுத்தடுத்துப் பலர் புகழ்ச் சொற்களைப் பொழிந்து கொண்டிருந்தார்கள். அதிகாரத்திற்குத் துதி பாடுவதும், வியாபாரத்திற்குக் கவி பாடுவதுமாக வாழ்ந்து முடித்த அவருக்காக. வானமே அழுகிறது என்று வெளியே பெய்து கொண்டிருந்த மழையை வர்ணித்தார் ஒருவர்.

 

நம் தமிழர்களுக்கு கவிமனம். கவிதைக்குப் பொய் அழகு. பொய்யாக இல்லாது போனாலும் மிகையாகச் சொல்வதுதான் நம் இயல்பு. இறந்தவர்களைப் பற்றிப் பேசும் போது இந்த இயல்பு இன்னும் விகசிக்கும். சாலையைக் கடந்தது, சட்டையைத் துவைத்தது, சாவியைத் தொலைத்தது என்ற சாதாரண நிகழ்வுகள் கூட சாதனைகள் போலும் சரித்திரம் போலும் பேசப்படும். இறந்தவர் பிரபலமானவர் என்றால் அவர் தன் தொழிலில் தொட்ட சிகரங்களையும் தவறி விழுந்த பள்ளங்களையும் எடை போட்டு அவர் தந்ததையும் தவறியதையும்  எடுத்துச் சொல்வது நம் கலாசாரத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எந்தையே! எந்தையே! இவ் எழு திரை வளாகத்து, யார்க்கும், சிந்தையால், செய்கையால், ஓர் தீவினை செய்திலாதாய்!என்று இராமாயணத்து வாலி இறந்த போது அங்கதன் புலம்புகிறான், மாயாவிக்கும், வாலிக்கும் குகையில் சண்டை நடந்தபோது, பாறையிடுக்கில் ரத்தம் கசிவதைப் பார்த்த சுக்ரீவன். வாலியை மாயாவி கொன்று விட்டான் எனக் கருதி, குகை வாயிலை அடைத்து ஆட்சியில்அமர்ந்தான். மாயாவியை கொன்று, குகையை பிளந்துகொண்டு வந்த வாலி, அரியணையில் சுக்ரீவன் அமர்ந்திருந்திருக்கக் கண்டு கடும் கோபம் கொண்டான்; அவனை அடித்துதுரத்தினான். அதோடு மட்டுமின்றி, சுக்ரீவனின் மனைவி ரூபையையும் கவர்ந்துகொண்டான்எனப் போகிறது ராமாயணம். சொந்தச் சகோதரனை அடித்துத் துரத்தி அவன் மனைவியையும் கவர்ந்து கொண்டவனை இந்த உலகத்தில் சிந்தையால், செய்கையால், ஓர் தீவினை செய்திலாதாய்என அவன் இறப்பின் போது புகழ்கிறான் அங்கதன். இதுதான் நம் இரங்கல் கலாசாரம்.

கதைப் பாத்திரம் இறந்த போது கம்பன் இப்படி மிகையை நாடினான் என்றால் கம்பன் இறந்த போதும் இதுவே நடந்தது. கம்பரின்சம காலப் புலவர் வாணியன்தாதன். அவருக்கு கம்பனோடு எப்போதும் போட்டி, மோதல். கம்பன் இராமாயணத்தை எழுதியதைக் கண்டு அவர் விட்டு வைத்த  உத்தரகாண்டத்தைப் பாடியவர்வாணியன்தாதன். (உத்தரகாண்டத்தைப் பாடியவர் ஒட்டக் கூத்தர் என்று சொல்வதுண்டு. ஆனால் அவர் கம்பனின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் என்கிறது ஒரு குறிப்பு).கம்பன் எழுதிய மும்மணிக் கோவையைக் கடுமையாக விமர்சனம் செய்து அவரது கவித்திறனைச் சாடியவர் வாணியன்தாதன், கம்பன்  வாழ்ந்த போது அவரிடம் விரோதம் பாராட்டியவாணியந்தாதன் கம்பர்இறந்த போது அவரோடு கவியும், கலையும், செத்துவிட்டது,.கம்பன்றந்த நாளில் மகாலட்சுமிஇருப்பாள் பூமாதேவியும் இருப்பாள்; ஆனால் கலைவாணி கைம்பெண்ணாகி விடுவாள் என்றுபூமடந்தை வாழப், புவிமடந்தை வீற்றிருப்ப.நாமடந்தை நூல் வாங்கும்நாள்!` எனப் புகழ்ந்தும் புலம்பியும் எழுதுகிறான்.

இது இரட்டை வேடமா? அல்லது அந்தந்த நேரத்திற்கு அது சரி என்ற யதார்த்தமா?இல்லை இறந்தவர்களை இகழ்ந்துரைக்கக் கூடாது என்ற நாகரீகம் நம்முடையது என நியாயப்படுத்திக் கொள்வதா? அவரவர் மனச்சாய்வுகளே அதைத் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

அயல் கலாசாரத்தில் இப்படி உண்டா?இரங்கற்பா என்பதற்கு இணையான ஆங்கிலக் கவிதைகள் elegy (எலிஜி). இரண்டடி கொண்ட லத்தீன் elegiac couplet என்ற பா வகையிலிருந்து கிளைத்தது எலிஜி. கிரேக்க ரோமானிய கலாசாரத்தில் அந்த இரண்டடிப் பாடல்கள் மரணத்தை மட்டுமல்ல, காதலையும், போரையும், கூடப் பாடின. கல்லறை வாசகங்களாகவும் பயன்படுத்தப்பட்ட இந்த ஈரடிக் கவிதைகள்  சில நேரம் நையாண்டிக் கவிதைகளாக புன்னகைக்கவும் காரணமானதுண்டு.

நையாண்டியை நயமாகக் கையாண்டதில் புதுமைப்பித்தனைப் போல் பொலிந்தவர் எவரும் இல்லை. பொய்யாய் புகழ்வதற்கும், பொருளைச் சேர்ப்பதற்கும் இறப்பை ஒரு வாய்ப்பாய் பயன்படுத்திக் கொள்வதைக் கிண்டல் செய்து சிரிக்கிறார் புதுமைப்பித்தன்: ”ஐயா, நான்/செத்ததற்குப் பின்னால்/நிதிகள் திரட்டாதீர்!/நினைவை விளிம்புகட்டி/கல்லில் வடித்து/வையாதீர்;/“வானத்து அமரன்/வந்தான் காண்!/ வந்தது போல்/போனான் காண்”/ என்றுபுலம்பாதீர்/ அத்தனையும் வேண்டாம்/ அடியேனை விட்டு விடும். ’வையாதீர்’ என்ற வார்த்தைக்குள் இருக்கும் இரண்டு அர்த்தங்களையும் இரசிக்க முடிந்தால் இழவு வீட்டில் கூடப் புன்னகைக்கலாம்.

சுய இரங்கல் கவிதை எழுதிக் கொண்டவர்களில் கண்ணதாசனுக்கு அடுத்தாற் போல் கவனத்தில் நிற்பவர் சுந்தர ராமசாமி. பசுவய்யாவாக மாறிக் கவிதையின் பரிமாணங்களை விரிவாக்கியவர் அவர்

நான் விடை பெற்றுக் கொண்டுவிட்ட செய்தி                                       உன்னை வந்து எட்டியதும்,
நண்ப,
பதறாதே.
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.

இரங்கற் கூட்டம் போட ஆட் பிடிக்க
அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மன்ச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.

நண்ப
சிறிது யோசித்துப் பார்
உலகெங்கும் கணந்தோறும்
இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடிக் கண்கள் கலங்குகின்றன.
ஒரு கோடி நெஞ்சங்கள் குமுறி வெடிக்கின்றன

நண்ப
நீ அறிவாயா
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்
அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.

நண்ப
ஒன்று மட்டும் செய்.
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்துவிட்டான் என்று மட்டும் சொல்.
இவ்வார்த்தைகளை நீ கூறும் போது
உன் கண்ணீர்
ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.

 

மிகையில்லாத கவிதைகளைப் போல இயற்கையான கண்ணீரும் வலிமையானது

One thought on “கலாசாரமும் கண்ணீரும்

  1. தொழிலில் தொட்ட சிகரம் தவறி விழுந்த பள்ளம் எடை போட்டு – கலாசாரம் இல்லை என்றே சொல்ல வேண்டும் –

    Ya it’s true and well analysed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.