கடிதமா? மடலா? ஓலையா?

maalan_tamil_writer

இனிய நண்பர்களுக்கு,

டையோஜெனீஸ் (Diogenes- கி.மு.412-323) என்றொரு கிரேக்க ஞானி இருந்தான். விநோதம் என்று சாதாரண மனிதர்களுக்குத் தோன்றக்கூடிய காரியங்களை செய்பவன். பகல் நேரத்தில் கையில் விளக்கொன்றை ஏந்திக் கொண்டு வீதிகளில் எதையோ தேடிக் கொண்டிருப்பான். என்ன தேடுகிறாய் என்றால் நேர்மையான மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்  என்று பதில் வரும்.

இவனை சந்திக்க விரும்பினான் அலக்சாந்தர். அரிஸ்டிப்பஸ் (Aristippus) என்ற நண்பனை டையோஜெனீசுக்குக் கடிதம் எழுதச் சொன்னான். டையோஜெனீஸ் எழுதிய பதில் கடிதம் பிரசித்தமானது:

அரிஸ்டிப்ப்ஸுக்கு,

மாசிடோனியாவின் அரசனாகிய அலெக்சாந்தர் என்னைக் காண மிகவும் ஆவலுடையவனாக இருக்கிறான் என்று சொல்லி அனுப்ப்பியிருக்கிறாய். அவனுக்கு அரசன் என்ற பட்டத்தை நீ  கொடுத்திருப்பது நல்லதுதான். மாசிடோனியர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்கென்ன? நான் யாருடைய பிரஜையும் இல்லை. அவனுக்கு- அலெக்சாந்தர் என்னும் அரசனுக்கு- என்னையும் என் வாழ்க்கைப் போக்கையும் அறிந்து கொள்ள  ஆர்வம் இருக்குமானால் அவன் இங்கே வரட்டும். அவன் தன்னுடைய மாசிடோனியா ஆத்தன்ஸுக்கு வெகு தூரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது போல், நான் என்னுடைய ஆத்தன்ஸ் மாசிடோனியாவிற்கு  வெகு தூரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

என்று போகிறது கடிதம்.

கடைசியில் ஒரு நாள் அலெக்சாந்தர் டையோஜெனீசைப் பார்க்க வந்தான். ” நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?” என்று கேட்டான். “என் மீது விழுந்து கொண்டிருந்த சூரிய வெளிச்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாய். அதற்கு வழி விட்டு நீ ஒதுங்கி நின்றால் அதுவே எனக்குப் பெரிய உதவி என்றான் டையோஜெனீஸ்!

‘மகா’ அலெக்சாந்தர் என்று வரலாறு பதிந்து வைத்திருக்கும் ஒரு நபரிடம் ஒரு ‘சாதாரண’ மனிதன் கொண்டிருந்த அபிப்பிராயத்தை அவனது கடிதம் காண்பித்துக் கொடுக்கிறது.

இலக்கியங்களைவிட கடிதங்களில் பெரும்பாலும் ஒப்பனையற்ற குரல்களைக் கேட்கலாம் (காதல் கடிதங்கள் விதி விலக்கு) உலகில் கடிதம் எழுதும் வழக்கம் எப்போது தோன்றியது என்பது இன்னமும் எளிதில் கண்டு பிடிக்க முடியாதது. ஏசுநாதரின் சீடர்கள் எழுதிய கடிதங்கள் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் ‘epistle’ என இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் கிறிஸ்துவிற்கு முன்னரே சாக்ரெட்டீஸ் எழுதிய 9 கடிதங்கள் வரலாற்றில் இடம் பெற்றிருக்கின்றன. ரோமாபுரியின் வரலாற்றை சிசாரோ 835 கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறான்.

தமிழின் முதல் காவியாமான சிலப்பதிகாரம், மாதவி செம்பஞ்சுக் குழம்பில் பித்திகை அரும்பைத் தோய்த்து  கோவலனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதி ‘சீல்’ வைத்து அனுப்பியதாகச் சொல்கிறது. சீல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை, மறைவான வார்த்தைகளில் (code words) எப்படி எழுதலாம் எனபதை சீவக சிந்தாமணியில் பார்க்க முடிகிறது.

சமகாலத்திற்கு இறங்கி வந்தால் பாரதியின் இரண்டு சீட்டுக் கவிகள் நினைவுக்கு வருகின்றன. அநேக மேடைகளில் மேற்கோளாகக் காட்டப்படும் ” சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மா கவிதை” என்ற வரிகள் அந்தச் சீட்டுக் கவியில் இடம் பெற்ற வரிகள் என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

மறைமலைஅடிகள் கடித வடிவில் ஒரு நாவலே எழுதியிருக்கிறார் (கோகிலாம்பாள் கடிதங்கள்). 20ம் நூற்றாண்டுத் துவக்கத்தில்  தமிழில் ‘ கடித இலக்கியம்’ என்ற ஒரு வகையே தோன்றியது. சுத்தானந்த பாரதியின் ‘வீரத் தமிழருக்கு ஆவேசக் கடிதங்கள்’, டி.கே.சி.யின் கடிங்கள், சத்யமூர்த்தியின் லஷ்மிக்கு, மு.வ வின் அன்னைக்கு, நண்பர்க்கு, தம்பிக்கு, தங்கைக்கு , ஜீவாவின் புதுமைப் பெண் என நினைவிலிருந்து  ஒரு பட்டியல் தயாரிக்க முடியும். இவற்றிற்கெல்லாம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கடித நூல்கள்தான் ஊற்றுக் கண்களாக அமைந்தன. விவேகானந்தரின் கடிதங்களை சுப்ரமண்ய சிவாவும். பிளாட்டோவின் கடிதங்களை வெ.சாமிநாத சர்மாவும் மொழிபெயர்த்தனர். நேருவின் கடிதங்களை ஓ.வி. அளகேசன் மொழி பெயர்த்தார். காந்தியின் கடிதங்களும் மொழிபெயர்க்கப்பட்டன டால்ஸ்டாயின் கடிதங்களும் மொழிபெயர்க்கப்பட்டு அந்த காலகட்டதில் வெளிவந்தன.

தமிழில் இவ்வளவு எழுதிக் குவிக்கப்பட்டிருந்தாலும் ‘கடிதம்’ என்பது தூய தமிழ் சொல் அல்ல. இப்போது இணைய உலகிலும் கடிதம் என்பதற்கு மடல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். (மடலாடற் குழு) ஆனால் மடல் என்ற சொல் கடிதம் என்ற சொல்லைக் குறிப்பதாக சென்னைப் பல்கலைக்கழக அகர முதலி தெரிவிக்கவில்லை. மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் குறிப்பிடவில்லை. பாண்டிச்சேரி பிரஞ்சுக் கழக சொல்லடைவு, கழகத் தமிழகரதி ஆகியவையும் கூட குறிப்பிடவில்லை. அப்படியும் மடல் என்றால் கடிதம் என்றாகிவிட்டது.

ஓலை என்பது மங்கலமல்லாத செய்திகளைத் தாங்கி வரும் கடிதத்தைக் குறிப்பது என்று சிலத் தமிழ் பேராசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.

பழந்தமிழ் இலக்கியங்களில் திருமுகம், முடங்கல் என்ற சொற்கள் கடிதம் என்ற சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று petition என்ற அர்த்ததில் வழங்கப்படும் சொல் உண்மையில் கடிதம் என்பதைக் குறிப்பதுதான். வள்ளலார் ‘எல்லாமுடையானுக்கு விண்ணப்பம்’ என்ற தலைப்பில் பாட்டு வடிவில் ஒர் கடிதம் எழுதியிருக்கிறார்.

கடிதங்களைப் போலவே கடிதத்தைப் பற்றிய குறிப்புகளும் நீண்டு விட்டன.

அன்புடன்

மாலன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.