கிணுகிணுவென்று மணிச்சத்தம் கேட்டது. மாசிலாமணி உள்ளே எட்டிப் பார்த்தார். இருளாண்டி சம்பிரமமாக சம்மணம் கட்டி உட்கார்ந்திருந்தார். கண்கள் மூடியிருக்க கை அலைந்து கொண்டிருந்தது. அலைந்து கொண்டிருந்த கையில் தீபத் தட்டு, மணிக்கட்டு மாத்திரம் சாவி கொடுத்த மாதிரி அசைந்து கொண்டிருந்த மறு கையில் வெண்கல மணி.
பார்வை எதிரே இருந்த படங்களில் நிலை குத்தியிருந்தது. சிவன், பெருமாள், முருகன், லஷ்மி என்று ஒரு தேவலோகமே அங்கே இறங்கியிருந்தது. ஜோடிக் கடவுள்கள், கிடந்த தெய்வங்கள், அமர்ந்த சாமிகள், சாமியாக இல்லாமல் மனுஷனாக பிறந்து இறைவனாக உயர்ந்துவிட்ட பாபாக்கள்; மனுஷனாகவும் இல்லாமல், தெய்வத்தோடும் சேராமல் வட்டம், முக்கோணம், சதுரம் என்ற ஜாமெட்ரி வடிவங்களில் சில யந்திரங்கள். எல்லார் தலை ஆணியிலும் ஒரு முழப் பூ. ஒன்றிரண்டு பேருக்குச் செம்பருத்தி. சிவபெருமானுக்கு உகந்த வில்வம். குருவாயூர் அப்பனுக்கு சந்தனம். அனுமார் வாலில் இருந்து குங்குமப் பொட்டு வரிசை புறப்பட்டிருந்தது. சுவரில் படர்ந்த சாமிகள் தரையைத் தொடுகிற இடத்தில் வெற்றிலைச் செல்லம் போல ஒரு வெள்ளிப் பெட்டி. மேலே நீலமும் பழுப்பும் தங்க ரேகையும் கலந்த ஒரு சாலக்கிராமம்.
இருளாண்டியே லஷ்மண் ஜுலாவில், கங்கை மடியில் பொறுக்கி எடுத்த கூழாங்கல்.
கல் என்று சொல்கிறவர்களை இருளாண்டி கண்ணாலேயே எரித்து விடுவார். “ கல்லிலேயும் சாமியைப் பார்க்கக் கத்துக்கிறவன்தான்யா மனுஷன் ” என்று வாதிடுவார்.
அவர் வாதிட ஆரம்பித்தால் அவரை நிறுத்த முடியாது. தர்க்கம், விஞ்ஞானம், பகுத்தறிவு என்று படிப்பாளிகள் சொல்கிற அம்சங்கள் அந்த வாதத்தில் இராது. எதிராளியை மூலைக்கு நகர்த்தி, இந்தண்டை அந்தண்டை நகர முடியாமல் மடக்கி விடுகிற சாதுரியம் இராது.வாயைப் பிடுங்கி, அவர் வார்த்தையைக் கொண்டே இடுக்கிப் பிடிபிடித்து ஒரே போடாய்ப் போட்டு வீழ்த்தி விடுகிற புத்திசாலித்தனம் இராது. பச்சைக் குழந்தை மாதிரி, மேலே பேசத் தெரியாமல் சொன்னதையே திருப்பிச் சொல்கிற பாப்பா பேச்சாக இருக்கும். இல்லையென்றால் எங்கேயாவது கேட்டுத் திருப்பிச் சொல்கிற கிளிப்பிள்ளை பேச்சாக இருக்கும்.
“ புல்லுக்கு விதை உண்டா ? பின் எப்படிப் பூமியுள் முளைக்கிறது ? கரண்ட்டை நீ பார்த்திருக்கிறாயா ? பாலுக்குள்ளே தானே தயிரும், தயிருக்குள்ளேதானே வெண்ணெயும் இருக்கின்றன. ராத்திரியும், பகலும் ஒரு நாள் தப்பாமல் மாறி மாறி வருதே, அது எப்படி ? ” என்று தொட்டால் ஒடிந்து விடக்கூடிய வாதங்களாக வைப்பார்
மாசிலாமணியும் பத்து வருஷமாய் அவரோடு வாதிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். பொழுது போகாதபோது மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கிறார். போரடிக்கிற சமயங்களில் வாயை கிளறிக் கொண்டிருக்கிறார். சேவகனா, வழிகாட்டியா, நண்பனா, கணக்குப் பிள்ளையா இன்னதென்று சொல்ல முடியாத ஓர் உறவு அவர்களுடையது. எலியும் பூனையும் ஒர் அடுக்களைக்குள் திரிகிற மாதிரி எதிரும் புதிருமாகப் பேசிக் கொண்டு அவர்கள் இருவரும் ஒன்றாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மாசிலாமணிக்குச் சாமி, பூதம் என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. தீபாவளிக்குக் கூட எண்ணெய் தேய்த்துக் கொள்ளாத தலை. நல்ல படிப்பாளி. பைபிள் கதைகள் சொல்வதைக் கேட்டால் சினிமா பார்ப்பது மாதிரி இருக்கும். ஆனால் எதையும் வெறுமனே படித்து மூடி வைத்துவிடுகிற பழக்கம் கிடையாது.
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பிரித்து அலசிவிடுகிற ரகம். வரிகளுக்கு ஊடே மறைந்திருக்கிற பொருளைப் பிரித்துக் கண்டுபிடித்துச் சண்டை இழுக்கிற புத்தி. பாரதக் கதை முழுதும் விலாவாரியாகச் சொல்லிவிட்டு கண்ணனைப் போல அயோக்கியன் கிடையாது என்று ஆயிரம் ஆதாரங்கள் வைப்பார். அனுமானை ரவுடி என்று சொல்கிற ராவணன் கட்சி. அவர். ஆதாமிலிருந்து பிறந்ததாலே ஏவாள் அவனுக்கு மகள். ஆதாமுக்கு அப்புறம் பொறந்ததாலே தங்கச்சி. அவளை எப்படிய்யா அவன் கல்யாணம் கட்டிக்கிட்டுப் பிள்ளை பெறலாம் என்று வக்கணை பேசுவார்.
“ என்னய்யா சொல்றே. கடவுள் உண்டா, இல்லையா ? ” என்று கேட்டால்.
“ உனக்கு என்ன வேணும் ? உண்டுன்னு சொல்லணுமா இல்லைன்னு சொல்லணுமா ? ” என்று எதிர் கேள்வி போடுவார்.
“ உன்னைக் கேட்டா நான் தெரிஞ்சுக்கப் போறேன் ? நீ என்ன நினைக்கிறேன்னு தானே கேட்கிறேன். ”
“ ரோஜாப்பூவைப் பார்க்கும்போது உண்டுன்னு நினைக்கிறேன். எங்க ஊர் எம்.எல்.ஏ.வைப் பார்க்கும் போது, இல்லைன்னு நினைக்கிறேன்.
“ என்னய்யா பேச்சு இது ? முன்னாலே பார்த்தா மணியக்காரன் குதிரை, பின்னாலே பார்த்தா ராவுத்தன் குதிரைங்கிற மாதிரி. ”
“ ரோஜாப்பூவைப் பார்க்கிற போது, இப்படி ஒரு நிறம், மென்மை, வாசனை, அடுக்கு எல்லாம் லட்சம் கோடி கொடுத்தாலும் மனுஷன் பண்ண முடியுமான்னு தோணுது. எம்.எல்.ஏவைப் பார்க்கும்போது இத்தனை அழிச்சாட்டியம் பண்ற பயல்கள் எல்லாம் அமோகமா வாழ்ந்திட்டுத்தானே இருக்கான். சாமின்னு ஒண்ணு இருக்கானு நினைக்கிறேன்.
“ இத்தினி பேச்சு பேசற நீ ஒரு நா கூட கன்னத்தில் போட்டுக்கிட்டு நான் பாக்கலியே ? ”
“ சாமி ! வாழ்கன்னு கோஷம் போட்டுச் சொன்னாதானா ? ரோஜாப் பூ நல்லா இருக்குன்னு சொல்றதே சாமியை வாழ்த்தறதுதானே ! ”
“ அடேங்கப்பா! இத்தினி கர்வம் ஆவாதுப்பா ! ”
“ கர்வம் இல்லைய்யா, இது ஞானம். பாட்டுங்கறது கேக்கிறவன் காதிலேல்லே இருக்கு. ஆர்மோனியத்துக்குள்ளேயா இருக்கு. ”
“ அப்படியே இருக்கட்டும். ஆனா அந்தக் காதைத் திறந்து விடறது யாருன்னேன் ! அங்கே இங்கே கத்துவானேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி, பழையது, மிஞ்சிப் போனது, ஊசல், காரல் எல்லாம் தின்னுக்கிட்டு இருளாண்டியா இருந்தவனை இன்னிக்குச் சங்கீதச் சக்கரவர்த்தி, காவேரி வேந்தன்னு ஊர் கொண்டாடுது. எத்தினி பேரு, வருசக் கணக்கா பாட்டுக் கட்டிக் கிட்டு இருக்கான். அம்புட்டுப் பேரையும் விட்டுட்டு கொட்டாங்கச்சி வித்வானாக இருந்த என்னை சிம்மாசனத்தில உட்கார்த்தி வைச்சது யாரு ? இல்லைன்னா எது ? ” என்று பதில் பேச முடியாத கேள்வியாகப் போட்டு வாயை அடைத்து விடுவார் இருளாண்டி என்ற காவேரி வேந்தன்.
காவேரி வேந்தன் கதை நாடறிந்தது. எத்தனையோ பத்திரிகைகள் குதப்பித் துப்பிய சக்கை. கண்ணாடி அறை பகிரங்கம். பத்து வருடத்திற்கு முன்னால் இருளாண்டி, தெருத்தெருவாகச் சுற்றிக் கொட்டாங்கச்சி வயலின், டமார வண்டி, அழுகிற பலூன் விற்றுக் கொண்டிருந்தவன்தான். வெறுமனே சோற்றுக்காக நடத்தின வியாபாரம் இல்லை அது.
நான் முழுதும் சுற்றினால் ஐந்து ரூபாய் கிடைக்கும். அது கூடக் கிடைக்காத நாட்களும் உண்டு. கொத்து வேலை நடக்கிற இடத்தில தட்டுத் தூக்கப் போனால் அந்த ஐந்து ரூபாயைச் சம்பாதித்து விட முடியும். ஆனால் தட்டுத் தூக்க உடம்பு வணங்கவில்லை. சங்கீதம் தவிர எதற்கும் மனம் வணங்கவில்லை.
அப்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த இசை அமைப்பாளருக்கும், பழம் தின்று கொட்டை போட்ட டைரக்டருக்கும் இடையே நேர்ந்த உரசல் பொறி பறந்தது. யாருடைய வெற்றிக்கு யார் ஆதாரம் என்ற சவால்கள் பொரிந்தன. “ ஒரு கொட்டாங்கச்சி வித்வானை வைச்சு மியூசிக் போடறேண்டா ! ” என்று வீராப்பாய்க் கிளம்பினார் டைரக்டர். பூந்தமல்லி சந்திப்பில் வயலின் வாசித்துக் கொண்டு நின்றான் இருளாண்டி. சகானா ராகம். வழக்கமாய் வாசிப்பதுதான்.
அன்றைக்கு என்னவோ மனசே குழைந்து கிடந்தது. வாசிக்க வாசிக்க ஊற்றாய்ப் பெருகியது. டிரைவர் இரண்டு தரம் ஹாரன் அடித்தான். இருளாண்டி கண்ணைத் திறக்கவில்லை. ஆத்திரத்தோடு கீழே இறங்கி அவன் வயலினைப் பறிக்கப் போன டிரைவரைத் தடுத்தார் டைரக்டர். கார் ஓரம் கட்டி நின்றது. வேடிக்கை பார்க்கக் கூட்டம் சேர்ந்தது. சுற்றிலும் ஏதோ வித்தியாசம் இருப்பது உள் கண்ணை உறுத்த சகானா அறுந்தது. டைரக்டர் கீழிறங்கினார். “ ஏறுய்யா காரிலே ! ” என்றார். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகப் போகிறோம் என்று நினைத்தான் இருளாண்டி. வண்டி டைரக்டர் வீட்டுக்குப் போயிற்று. அன்றைக்கு ஒரு மணி வரை வாசித்தான். அவனுடைய கற்பனைகள் அவரை விழ்த்திற்று.
“ இனிமே நீ ஆண்டி இல்லடா ” என்றார். ஆண்டி வேந்தன் ஆனான். இருளை எடுத்து விட்டு அவன் கற்பனைக்குச் சன்மானமாய்க் காவேரியை முன்னால் சேர்த்தார். தேங்காய் மூடி பாகவதரைப் பிடித்து டியூஷனுக்கு ஏற்பாடு செய்தார். அடிப்படை புரிந்த பின் வேந்தனை நிறுத்த முடியவில்லை. ஆனால் படம் பாதியில் நின்று போயிற்று. டைரக்டர் காலமானார். முதல் போட்டவர் வேறு வழி தெரியாமல், பதித்து வைத்துப் பாட்டுக்களை ரிக்கார்டாய் போட்டு விற்றார். ஜனங்களுக்குப் பாட்டு பிடித்தது. ஆல் இண்டியா ரேடியோ அதற்குத்தடை போட்டது. இருளாண்டி சக்கரவர்த்தியானான்.
ஐம்பது வயது ஒரு முதுமையா ? வந்திருந்தவரைக் கிழவர் என்று தான் சொல்ல வேண்டும். தலை முழுதும் நரைத்திருந்தது. கண்கள் உள்ளொடுங்கியிருந்தன. கச்சலான உடம்பு, முதுகில், யாசகம் கேட்கிற கூனல். கூடவே நடு வயதில் ஒருவர். சினிமாத் தரகர் போல் இருந்தார்.
“ நமஸ்காரம் ” கையை உயர்த்தி பெரிய கும்பிடாகப் போட்டார்.
இருளாண்டி பதில் வணக்கம் சொல்லவில்லை,
“ சொல்லுங்க ” என்றார்.
“ எனக்கு மதுரைக்குப் பக்கத்தில திருப்புவனம்.”
“ சரி. ”
“ கோயில்ல பூசாரி. ”
“ நன்கொடைங்களா ? பணம் விஷயம்னா இவரண்டை பேசுங்க என்று மாசிலாமணியைக் கை காண்பித்தார்.
“ பணம் வேண்டாம்ங்க. உபகாரம்தான். இவருக்கு ஒரே மகன். இருபத்திரண்டு வயது வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். ஒரு நா படுத்திட்டான். எந்திரிக்க முடியலை. கிட்னி ரிப்பேர் ஆயிடுச்சு. மாத்தினா பிழைச்சுக்குவான்னு டாக்டர்கள் சொல்றாங்க. அந்த ஆப்ரேஷனுக்கு செலவு அரை லட்சம் பிடிக்குமாம். ஐந்து பத்து பூசாரி சேர்த்திடுவாரு. யாசகத்தில லட்சம் சேர்க்க முடியுமா? நீங்கதான் உதவணும். ” தரகர் தயக்கம் கூச்சமில்லாமல் மளமளவென்று பேசினார்.
“ நம்மால கூட அவ்வளவு நன்கொடை தர முடியாதுங்களே ! ”
“ பணம் வேண்டாங்க ! நீங்க இலவசமா ஒரு கச்சேரி நடத்திக் கொடுங்க வசூலைப் பூசாரி எடுத்துக்கட்டும். ”
“ கச்சேரியா? நான் வெளியூர்க் கச்சேரியெல்லாம் போறதில்லீங்க. நேரம் எங்கிருக்கு ? ”
“ இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையா பார்த்து வைச்சுக்கிறோம்ங்க. ”
இரண்டாவது ஞாயிறு, சினிமா உலகில் விடுமுறை நாள்.
“ மன்னிக்கணும். அன்னிக்கு எனக்கு மௌன தினம். மனசார கடவுளைக் கும்பிடறதுக்கு இருக்கிற ஒரே நாள். ”
“முடியாதுன்னு சொல்லிடாதீங்க. ஒரு உசிரு விஷயம்.”
பூசாரி தடால் என்று காலில் விழுந்தார். இருளாண்டி ஒரு நிமிஷத்துக்கு அதிர்ந்து போனார்.
“ எழுந்திருங்க. அட ! எழுந்திருங்க. ”
“ நீங்க வர்றேன்னு சொல்ற வரைக்கும் காலைவிட மாட்டேன். ”
“ என்னய்யா இது ! வம்பு பண்றீங்க ? எழுந்திருங்க ! ”
பூசாரி அசையவில்லை. இருளாண்டி அரைக் கணம் தயங்கினார். விடுக்கென்று காலைப் பறித்துக் கொண்டு உள்ளே நடந்தார். “ அவங்களை வெளியே அனுப்பிக் கதவை சாத்திடு” என்று குரல் மட்டும் வந்தது.
பூஜை ரூமைத் திறந்த இருளாண்டிக்குச் சொரேர் என்றது. அத்தனை படமும் கழற்றி ஒன்றன்மேல் ஒன்றாய் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிச் செல்லம் மீது இருந்த சாலக்கிராமம் பெட்டிக்குள் அடைத்திருந்தது.
“ யாரோட வேலை இது ? ” இருளாண்டியின் குரல் மொத்த பங்களாவையும் உலுப்பிற்று. தலையை நிமிர்ந்தபோது, மாசிலாமணி புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தார்.
“ நீ பண்ணின அக்குறும்புதானா இதெல்லாம் ? சாமியை ஒழிச்சுக் கட்டற வேலையை வீட்டுக்கு வெளியே வைச்சுக்க ஆமாம், சொல்லிட்டேன். ”
“ நான் எங்கே ஒழிச்சுக் கட்டினேன். நீதான் வேளியே துரத்தினே ? ”
“ விடியற்காலையே விவகாரம் பண்றதுக்குன்னே வந்திருக்கியா ? ”
“ உன் கூட எனக்கு என்ன விவகாரம் ? இல்ல, உன் சாமி கூடத்தான் எனக்கு என்ன விவகாரம் ? எப்ப விடுக்குன்னு காலை உருவிக்கிட்டு உள்ள நடந்தியோ அப்பவே உன் சாமியெல்லாம் வேளியே நடந்திருச்சு. ”
“ என்னய்யா செல்றே ? ”
“ சாமி ஒழிகன்னு ஒருத்தன் தனியா சொல்லணுமா ? இன்னொருத்தனை நாசமாய் போன்னு சொன்னாப் போதாதா ? ”
“ புரியற மாதிரி பேசவே மாட்டியா ? ”
“ கல்லுக்குள்ளே இருக்கிறது புரியுது உனக்கு. இது புரியலையா ? அடப்போய்யா ! ”
அவர் போவதையே பார்த்தபடி அரை நிமிஷம் இருந்தார் இருளாண்டி. பின் கண்ணை மூடினார். ஒரு நிமிஷம் உள்ளே எதையோ தேடின மாதிரி இருந்தது. கண்ணைத் திறந்து சூன்யத்தைப் பார்த்துக் கும்பிட்டார். அதற்குப் பின் அவர் சாலக்கிராமத்தைத் திறக்கவே இல்லை.
(அமுதசுரபி)