வாசற்கதவை யாரோ உலுக்கும் சப்தம் தங்கம்மாவை எழுப்பிற்று.அவள் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கனவில் விடுக்கும் அழைப்பைப் போல சன்னமாய் தொலைவில் கேட்டது. இப்போதெல்லாம் தங்கம்மாவிற்குக் கனவுகள் வருவதில்லை. கனவுகளை விற்று வாழ்க்கையை வாங்கியாயிற்று.அந்த வாழ்க்கை கணவன் கொண்டு வரும் சாராயத்தைப் போல ஆரம்பத்தில் மிதப்பைத் தருவதாய், போகப் போகக் குமட்டிக் கொண்டு வருவதாய்த் திரிந்துவிட்டது.
கணவனை குடிகாரன் என்று சொல்லிவிட முடியாது. உழைப்பாளி.வாடகைக்குக் காரோட்டிக் கொண்டிருந்தான்.ஓடிக் களைத்த பொழுதுகளில் உடல் வலி தீரக் குடிப்பான். ஆனால் அடிப்பதில்லை; உலக்கையைப் போல உடல் விறைத்துக் கிடக்கத் தூங்குவான்.
தங்கம்மாவிற்கு அடிதாங்கும் உடல் இல்லை.கையும் காலும் பார்ப்பதற்குத் தென்னம்மட்டை போலிருந்தாலும் அது உண்மையில் வாழை மட்டை. அதுவும் சில மாதங்களாய் மாதவிலக்கு நாள்களில் உதிரம் கொட்டத் தொடங்கியிருந்தது. சீலை மாற்றி முடியவில்லை. கவலைப் பட ஒன்றுமில்லை, தூரம் நிற்கப்போகிறது என்று ஆஸ்பத்திரியில் ஆறுதல் சொல்லியிருந்தார்கள்.
"தங்கம்மா!" மூன்றாவது முறையாகக் குரல் கேட்டது. "ஏய்! தங்கம்" குரலில் இருந்த அதட்டல் அவளை எழுப்பி உட்கார வைத்தது.சீலையைச் சரி செய்து கொண்டு ‘யாரு!’ என்று எழுந்து வந்தாள்.
"என்ன,இந்தத் தூக்கம் தூங்கற?" என்றபடி அடுத்தவீட்டு அம்மாள் நின்று கொண்டிருந்தாள்.
"சத்தம் போடாதீங்க மதனி. அவங்க ரவைக்கு இரண்டு மணிக்குத்தான் வந்து படுத்தாக"
"எளுப்பு"
ஏன் என்பது போலப் பார்த்தாள் தங்கம்.
"இல்ல எளுப்புன்னேன்"
"என்னத்துக்கு?"
"கூப்பன் கொடுக்காங்களாம்டி."
"என்ன கூப்பன்?"
"அடி விளங்காதவளே! வெள்ளத்தில விடிய விடிய இடுப்புத் தண்ணில நின்னுக்கிட்டு இருந்தோமே, அந்த கோராமைக்குத்தான்"
"அ…ஆங்!அதுக்கு இன்னிக்குத்தான் கொடுக்காங்களாக்கும். தண்ணி வடிஞ்சு இரண்டு நாளாச்சு!"
"ஏதோ கொடுக்கிறாங்கிய.காசா, பணமா? கொடுத்ததை வாங்கிடுவியா? அரிசி, வேட்டி, சீல, கிருஸ்ணாயில், அப்புறம் இரண்டாயிரம் ரொக்கம்"
"இரண்டாயிரமா?"
"ஆமாடி! இரண்டாயிரம்! வர்ரீயா சொல்லு, வளவளனு பேசிக்கிட்டு நிக்காதே"
"இந்த நடு ராத்திரியிலா கொடுக்கிறாங்கிய?"
"நடு ராத்திரியா? நாலு மணி ஆச்சு.இப்ப போய் நின்னாத்தான் விடியக்காலைல வாங்கியாறலாம்"
"அது சரித்தான்.ஆனா இருட்ல எப்படி மதனி போய் நிக்கிறது?"
"எங்க வீட்டு ஆம்பிளையாள் போறாங்க. ஒம் புருசனை எழுப்பு"
தங்கமாள் சற்றுத் தயங்கினாள்.எங்கேயோ திருச்சிப் பக்கம் வண்டி ஓட்டிவிட்டு நள்ளிரவுக்கு மேல்தான் வந்து படுத்தான்.காவிரி உடைப்பெடுத்து சாலையெல்லாம் அரித்துக் கொண்டு போக, குண்டும் குழியுமான சாலையில் வண்டி ஓட்டி இடுப்பெல்லாம் கடுக்கிறது என்று இரவு வந்ததுமே பாட்டிலைத் திறந்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.போன இடத்தில் சோறு தின்னக் கூட நேரமில்லை போல. சுடு சோறு போடு என இவளையும் அந்த அர்த்த ராத்திரியில் படுத்தி எடுத்து, அப்புறம்தான் தூங்கப்போனான். அவனை இப்போது எழுப்பினால் எழுந்திருக்க மாட்டான்.படிக்காசு வேறு அவன் கையில் இருக்கிறது. அவனுக்கு இப்போது இது பெரிய பணமாய்த் தோணாது.
"அண்ணனா போறாங்க? நீங்க வாங்களேன் மதனி"
"மல்லிகாவும் மாப்பிள்ளையும் வர்றேனிருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது வறுத்து, பொரிச்சு வச்சாதானே தேவலாம்? அதுவும் மாப்பிள்ளை காரசாரமா சாப்பிடறவரு.நான் மீன் கடைல போயி நிக்கவா, இல்ல கூப்பனுக்குப் போய் நிக்கிறதா? அதான் ஆம்பிளையாளை எழுப்பி விட்டேன். என்ன புருசனை எளுப்பிவிட இம்புட்டு ரோசிக்கிற?"
"இல்லக்கா நானே வாறேன்"
"ஆத்தாடி!புதுப் பொண்ணாட்டம் புருசன் மேலே இத்தினி கரிசனமா?"
தங்கமாள் போன போது கூட்டம் அவ்வளவு இல்லை.உதிரி உதிரியாக ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தார்கள்.அநேகமாக அனைவரும் ஆண் பிள்ளைகள். எல்லோருடைய கணவனுமா வாடகைக்கார் ஓட்டுகிறார்கள்? அப்படி ஓட்டினாலும் உலக்கையைப் போல உறங்குகிறார்கள்? ஐயோ பாவம், என்ன அலைச்சலோ? எம்புட்டு நேரம் உட்கார்ந்த மேனிக்கே வண்டியை ஓட்டிக் கொண்டு போனாரோ? ஒழுங்கா சோறு தின்னவும் மாட்டாரு. அப்பப்ப அரைகிளாஸ் டீத் தண்ணிய குடிச்சிட்டு ஒட்ட ஒட்ட கிடப்பாரு. அப்படியெல்லாம் அல்லாடி காசு கொண்டாறதினாலதான் மான ரோசத்தோட குடித்தனம் நடத்த முடியுது. அக்கா புருசன் மாதிரி அங்கன இங்கன அலையாம வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தா இருக்கிறவளுக்கும் இம்சை; பொறக்கறதுங்களுக்கும் இம்சை.அந்த மாதிரிப் பிடுங்கல் எல்லாம் இல்லாம இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைச்சது அப்பா செய்த புண்ணியம்தான். இராவணன் இல்லையே, கும்பகர்ணந்தானே. அந்தக் கொடுப்பினைக்கு இப்படி இருளல வந்து நிக்கலாம். குளிருல கிடந்து விறைக்கலாம்.தங்கம் சேலையை இழுத்து உடலைப் போர்த்திக் கொண்டாள் பருத்திச் சேலை. மார்கழிக் குளிரில் பதபதவென்று ஆகிவிட்டிருந்தது.
கூப்பன் வழங்கும் கூடத்தின் கதவுகள் மூடிக் கிடந்தன.நெடிய கிராதிக் கதவுகள்.உள்ளே நடப்பதைக் காண முடியாதபடி தகரம் போர்த்தி மூடிய கதவுகள்.உள்ளே ஆள் நடமாட்டம் இருக்கிறதா என் அனுமானிக்க முடியாத கதவுகள்.கட்டிடத்தின் எந்த அறையிலும் விளக்கேதும் எரியவில்லை.இருபதடி தள்ளி ஒரு தெருவிளக்கு அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது.
மதனி சொன்னது நிசந்தானா என தங்கமாளுக்கு சந்தேகம் பிறந்தது." அண்ணே! மெய்யாலுமா கூப்பன் தர்றாங்க"
"நிசந்தான் புள்ள"
"கூட்டத்தையே காணோமே?"
"நேத்திக்கே பாதிப் பேர் வாங்கிட்டாங்கிய."
"நேத்திக்கே வாங்கிட்டாங்களா?தெரியாமப் பூடுச்சே!"
"ஒரு கூ….யானும் நமக்குச் சொல்லலியே.தே….யாபசங்க, துட்டுனா பெத்த ஆத்தாளைக் கூட …க்க வந்திருவாங்க" இன்று கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் சரமாரியாக கெட்ட வார்த்தைகளை இரைக்கத் துவங்கினார் மதனியின் புருஷன். தங்கத்திற்கு சங்கடமாக இருந்தது. ஒரு பெண் நாற்பது வயதைத் தாண்டி விட்டால் அவளிடம் கூச்ச நாச்சமின்றி பாலுறவு வார்த்தைகளை உதிர்க்கலாம் என்று ஆண்கள் எண்ணுவார்கள் போலும்.
அவருக்கே சங்கடமாக இருந்ததோ என்னவோ. சிறிய அமைதிக்குப் பிறகு, "இன்னும் சித்த நேரத்தில, கூட்டம் திமு திமுனு வந்திரும். இடத்தைப் பிடிச்சுக்க வுட்டுறாதே!" என்று சொல்லி விட்டு நகர்ந்து போய் நின்று கொண்டார்.
அவரது கணிப்பு சரிதான். சிறிது நேரத்திலேயே மளமளவென்று கூட்டம் சேர்ந்தது. தங்கம் தனது கேட்டைப் பிடித்துக் கொண்டு முதல் ஆளாக நின்று கொண்டாள். மார்கழிப் பனி உட்கார்ந்திருந்த இரும்புக் கதவு சில்லிட்டது. மின்சாரத்தில் கை வைத்தவள் போல் விடுக்கென்று உதறிக் கொண்டு கையை எடுத்துக் கொண்டவள், பின் தன் இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக கேட்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
நேரம் செல்லச் செல்ல கூட்டம் பெரிதாகிக் கொண்டே போனது.பேச்சும் பெரிதாகிக் கொண்டே போனது. நேற்றைக்கே பாதிப்பேர் வாங்கி விட்டதாக அண்ணன் சொன்னாரே, அப்படியுமா இவ்வளவு கூட்டம்? என்று தங்கத்தின் மனதில் கேள்வி எழுந்தது. "என்ன இம்புட்டு ஜனம் வந்திருச்சு" என்று வாய்விட்டே அரற்றிக் கொண்டாள்.
அதற்கு பதில் சொல்வது போல், " இன்னிக்குத்தான் கடைசி நாளா?" என்று அவளை அடுத்து நின்றவள் கேட்டாள்.
"தெரியலையே!" என்றாள் இவள்.
"கூட்டத்தைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது" என்றாள் அவள் விடாமல். கூடவே" நீங்க ஏன் மிரள்றீங்க. அதான் சாமார்த்தியமா வந்து முதல் இடத்தைப் பிடிச்சிட்டுங்கள்ல?" என்றாள்.
சாமர்த்தியம்!நகர வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு அவசியம் தேவைப்படும் ஓர் அம்சம். அது தன் வாழ்வில் என்றைக்காவது இருந்திருக்கிறதா? இருந்திருந்தால் தன் வாழ்க்கை இப்படி இருந்திருக்குமா? தங்கத்தின் மனதில் கேள்விகள் ஓடின.
‘நான் இங்கனக்குள்ள இருந்துக்கிடட்டுமா?" என்ற குரல் அவள் சிந்தனையைக் குலைத்தது.எழுவது வயதைத் தாண்டிய ஒரு கிழவி தங்கத்தின் இடத்தைக் கேட்டுக் கொண்டு நின்றாள். அந்தக் கிழவியைத் தங்கம் பலமுறை பார்த்திருக்கிறாள்.பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறாள். எப்போது பார்த்தாலும் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பாள்.வைக்கோலைப் பிசைந்து வரட்டி தட்டுவது, அல்லது குத்திட்டு உட்கார்ந்தபடியே வாசலைப் பெருக்குவது இப்படி எதையாவது செய்து கொண்டிருப்பாள்.அதுவும் இல்லையென்றால், பள்ளிக்கூட வாசலில் இலந்தைப் பழத்தையோ, கொடுக்காப்புளியையோ கூறுகட்டி வைத்துக் காத்திருப்பாள். அப்படி நாள் பூராவும் வெய்யிலில் உட்கார்ந்திருந்தால் அவளுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைத்தாலும் அது அவளுக்குப் பெரிய தொகையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் இந்த வயதிலும் அவள் வேலை செய்து பிழைக்க வேண்டும்? சாமர்த்தியம் இல்லாத கிழவி? சாமர்த்தியம் இல்லாதவளா, தாமதமாக வந்து, முதலில் வந்த தன்னுடைய இடத்தைக் கேட்கிறாள்?
"நிற்க முடியலை தாயீ!.நான் முதல்ல வாங்கிட்டுப் போயிற்றேன்"
"நிக்க முடியாதவங்க ஏன் வந்தீங்க?" என்றாள் அடுத்து நின்றவள்
"எல்லாம் என் கிரகம்தான்"
"ஏன் ஆயா ஊட்ல வேறு யாரையாச்சும் வரச் சொல்றதுதானே?"
"யாரு வர்ரது? மருமவ புள்ளத்தாச்சி.மகன் வேலைக்குப் போயிட்டான்"
ஒரு வேளை இவளது மகனும் தன் கணவனைப் போல காரோட்டியோ?வேளை கெட்ட வேளையில் வேலைக்குப் போய்த் திரும்புபவனோ?
"நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாமலா தேவுடு காத்துக்கினு இருக்கோம்? இத்தை விட என்ன பெரிய வேலையாம்?" அடுத்து நின்றவள் விடாமல் கிண்டினாள்.
"டேசன்ல கூலி வேலை. விடியச் சொல்லதானே எல்லா ரயிலும் வருதாம்.அப்பப் போனாதானே நாலு காசு பாக்கலாம்"
"வக்கணையாத்தான் பேசுது கிளவி" என்று அவள் நொடித்துக் கொண்டாள்.
சரி முன்னால் வந்து நின்று கொள்ளுங்கள் என்பது போல தங்கம் சற்றுப் பின்னுக்கு நகர்ந்து இடம் விட்டாள்.
"இந்தாம்மா, யாரையும் ஊடையிலெ சேர்க்காதே!" என்று பின்னாலிருந்து அதட்டலாகக் குரல் வந்தது.
தங்கம் திரும்பிப் பார்த்தாள். "நடுவில யாரையும் சேர்க்காதீங்கோ. பின்னால நிக்கிற நாங்கள் எல்லாம் மடச்சியா?நாங்களும் கார்த்தால இருந்து நின்னுண்டிருக்கோம்மோன்னோ?" என்ற மாமிக்கு 50 வயசிருக்கும். ஜரிகைக் கரை போட்ட பருத்திப் புடவை உடுத்தியிருந்தார். இல்லை ஒரு வேளை மலிவான பட்டோ ? தங்க வளையல்களும் வைர மூக்குத்தியும் அணிந்திருந்தார்.அவரது வெளுப்பான சருமத்திற்கு அரக்கு வண்ண ஸ்டிக்கர் பொட்டு எடுப்பாகத்தான் இருந்தது. ஆனால் குளிக்காமல் அந்த அதிகாலையில் பவுடர் பூசியிருந்ததுதான் அசிங்கமாக இருந்தது.
"இங்க பாரு! கொடுமை கொடுமைனு கோயிலுக்குப் போனா அங்க இரண்டு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம். நமக்குதான் வயித்துக் கொடுமை. மச்சு வீட்டுக்காரங்களுக்கு இன்ன வந்துச்சு! அவங்கள்லாம் கூட வந்து நிக்காறாங்க?" அடுத்து நின்றவளின் விமர்சனம் ஆண்களைக் கூடத் திரும்பிப் பார்க்கச் செய்தது.
"இரண்டாயிரம் ரூவானா சும்மாவா?" என்று ஆண் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது.
"அல்லாருக்கும்தான் கொடுப்போம்னு சொல்லியிருக்காங்க.ஏளை பாளைக்கு மட்டுமினா எளுதிவச்சுருக்கு?" என்று ஒரு பதில் வந்தது.
"அண்ணா, பிரிச்சுப் பேசாதீங்கண்ணா. அல்லாரும் இந் நாட்டுல சமம்" என்று ஒரு கிண்டல் உதிர்ந்தது.
"ஆமாம் டோ ய்! எல்லாரும் இந் நாட்டில ஏளைங்க!" என்ற குரல் பாடப்புத்தகத்தை உருப்போடும் மாணவனைப் போன்ற பாவனையில், "இந்தியா ஒரு ஏளை நாடு! நாமனைவரும் சகோதரர்கள்!" என்று மிமிக்ரி செய்தான்
தங்கத்திற்குக் கால் கடுக்க ஆரம்பித்தது. இப்பொழுது பொழுது விடிய ஆரம்பித்திருந்தது. சுள்ளென்ற வெயில் வரவில்லை என்றாலும் வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. இது அவள் வழக்கமாக எழுந்திருக்கும் நேரம்.எழுந்து காலை கடன்களைக் கழிக்கப் போகும் நேரம். பழக்கம் காரணமாக வயிறு முட்டி அசெளகரியமாக இருந்தது. மதனி அவசரப்படுத்தியதில் அப்படியே எழுந்து வந்திருந்தாள் அவசரப்பட்டு வந்திருக்க வேண்டாமோ என் இப்போது தோன்றியது. அவளுக்கு இந்தக் கிண்டல் பேச்சுக்கள் ரசிக்கவில்லை.
"எல்லாருக்கும் கொடுக்கிறதுனு சொல்லிட்டாங்க, அதை வீடு வீடா வந்து கொடுத்திடலாமே? இன்னத்துக்கு க்யூல வந்து நிக்கச் சொல்லி பேஜார் பண்றாங்க?" என்று ஆண்கள் வரிசை விவாதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
"இங்க பாருடா!போனாப் போவுதுனு தானம் கொடுக்கிறாங்க. அதையும் வீட்டுக்கு வந்து கொடுக்கணுமாம்ல? எப்படி முடியும்? வீடு வீடா வந்து எப்படி கொடுக்க முடியும்?"
"தானம் கொடுக்கலை அண்ணே! பிச்சை கேட்காங்க, ஓட்டுப் பிச்சை. எலெக்சன் வருதில்ல?"
"பிச்சை கேட்கலைண்ணா. பிச்சை போடுதாங்க. கேட்கறதுனா வீட்டுக்கல்ல வந்திருப்பாங்க. நம்மளையா வந்து நிக்கச் சொல்வாங்க?"
அப்போதுதான் தங்கத்தின் மனதில் அந்தக் கேள்வி எழுந்தது. தேர்தல் போது வீடு விடா வந்து பனம், லட்டு, மூக்குத்தி எல்லாம் கொடுப்பதில்லையா? அதைப் போல இந்த ரூபாயையும் அரிசியையும் வீடு வீடாகக் கொடுக்க முடியாதா? அரசாங்கம் நினைத்தால் முடியாதது என்று ஒன்று உண்டா?
முடியும். அரசாங்கத்திற்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் அது வீடு தேடி வரும். வாக்காளர் பட்டியலா?வீட்டு வரி, தண்ணீர் வரி வசூலா, மின்சாரக் கணக்கெடுப்பா, குடும்பக் கட்டுப்பாடு பிரசரமா, அது வீடு தேடி வரும். ஆனால் தானம் கொடுக்க வீடு தேடி வராது. வாக்காளர் பட்டியல் எடுக்க வீடு வீடாகப் போகும் அரசு இயந்திரம், குடும்பக் கார்டு கொடுக்க என்றைக்காவது வீடு தேடி வந்ததுண்டோ ? குடும்பக் கார்டு தேவைப்படுபவர்கள் கொதிக்கும் வெயிலில் அந்த அலுவலகத்தைத் தேடிக் கொண்டு போய் வரிசையில் காத்திருக்கத்தான் வேண்டும்.
ஏனெனில் வயிற்றுக்குச் சோறிடுவது அதன் கடமை அல்ல. தேர்தல் நடத்துவது அதன் கடமை.
நம் அமைப்பின் விசித்திரம் தங்கத்திற்குப் புரிவது போலிருந்த நேரம் கூப்பன் வழங்கும் கூடத்தின் கதவுகள் வீசித் திறந்தன.அதுவரை வரிசையில் காத்திருந்த கூட்டம் வரிசை கலைந்து திமு திமுவெனெ உள்ளே பாய்ந்தது. உடைப்பெடுத்த ஏரியிலிருந்து பொங்கிப் பாய்கிற புனல் போல முண்டியடித்து முன்னேறியது.
தங்கத்தின் முன் நின்றிருந்த கிழவியை எதிர்பாராத இந்த மனித அலை அடித்து வீழ்த்தியது. அவள் சரிந்து குப்புற வீழ்ந்தாள். தனக்கு முன்னே விழுந்த கிழவியைத் தாங்க்ப் பிடிக்கத் தங்கமாள் குனிந்தாள்.அவள் இடுப்பை இடறிக் கொண்டு ஒருவன் தாவி ஓடினான்.தங்கம் கால் மடங்கிக் கீழே சரிந்தாள்.அவள் முதுகின் மேல் சடசடவென நான்கைந்து கால்கள் மிதித்துக் கொண்டு ஓடின. தங்கமாளுக்கு மூச்சுத் திணறியது. எழுந்திருக்க முயன்றாள். பலகையை வைத்துக் கட்டியது போல முதுகு அசைக்க முடியாமல் விறைப்பாக இருந்தது. பலமனைத்தையும் சேர்த்து முழங்காலை முன்னோக்கி இழுத்தாள்.முதுகுத் தண்டு வில் போல் மெல்ல வளைந்து சிறு குன்று போல உயர்ந்தது. சில வினாடிகள்தான். அதற்குள் மீண்டும் கால்கள், கால்கள், கால்கள். பணத்தாசை உந்த விரையும் கால்கள்.
தங்கம்மாள் செத்துப் போனாள்.
மூச்சிரைக்க, முகத்தில் மழைச்சேறும், முதுகில் செருப்புகளின் புழுதியும்படிய அவள் அந்த அதிகாலையில் இறந்து போனாள். அந்தக் கடைசி நிமிடத்தில் அவளது கணவன் முகம் மனதில் வந்து போனது. அவன் அமைதியாய் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தான் – ஓர் உலக்கை போல.