ஒரு கதவு மூடிக் கொண்டபோது

maalan_tamil_writer

வெகு நாட்களுக்கு முன்பு எனக்குள் ஒரு கனவு இருந்தது. கனவிற்கு ஆதாரம் சுப்ரமணியன்.

சுப்புணி எங்கள் பள்ளியின் கபில்தேவ். விளையாட்டை ஆரம்பித்து வைக்கிற வேகப்பந்து  வீச்சாளன். பந்தை விச ஆரம்பிப்பதற்கு முன் பன்னிரண்டு தப்படி நடந்து – அது என்ன கணக்கோ ? – பாண்டி ஆடுவதுபோல் ஓட்டுச் சில்லை வீசிப் போட்டு கல் விழுந்த  இடத்தில்  இருந்து மண்ணை எடுத்துத் திருநீறு பேல் நெற்றிக்கு இட்டுக் கொண்டு திடுதிடுவென்று  ஓடி  வர ஆரம்பிப்பான். முதல் பந்து அநேகமாக இன்ஸ்விங்கர், இரண்டாவது, யார்க்கர். மூன்றாவது பந்து அளவு குறைந்து விழுந்து முகத்தைப் பார்த்து எகிறும் பவுன்ஸர். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் மசியவில்லை என்றால் டீப்ஃபைன் லெக்கில் ஆளை செட்டப் செய்துகொண்டு ஃபுல்டாஸ் வீசிச் சபலப் படுத்துவான்.

அவனுடைய பந்து வீச்சு மற்றவர்களுக்குக் கொலை மிரட்டல். எனக்கு வெறும் கொசுக் கடி.  இதற்கு  அர்த்தம்  நான்  பெரிய  கிளைவ் லாய்ட் என்பதல்ல. வைகை ஆற்று மணலில் விறகுக் கட்டைகளை ஊன்றி வழுக்கி விழுந்த பந்தைத் துரத்துகிற அவனுடைய டீமில் நான் தினமும் ஆடிக் கொண்டிருந்தேன். அதனால் அவனுடைய டெக்னிக்குகள்  எல்லாம்  எனக்கு  அத்துப்படி.

உண்மையில் கிரிக்கெட் பற்றிய அடிப்படைகளைக் கற்றுத் தந்தவன் அவன்தான். எங்கள்  தெருப்  பையன்கள்  பீல்டிங்கிற்குக் கூடச் சேர்த்துக் கொள்ளாத நேரத்தில், மட்டை பிடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தவன்.  மற்றவர்கள்  கண்ணெதிரில் என் கௌரவத்தை உயர்த்திய பிராண ஸ்நேகிதன். இந்தத் தேசத்திற்காக ஒரு நாள் மட்டை பிடித்து விளையாடப் போகிறேன் என்ற கனவை விதைத்த கருணைமிக்கத் தோழன். ஆனால் ஆற்றங்கரையில் விளையாடுவது எல்லாம் கிரிக்கெட் ஆகாது என்பது மகேந்திரனின்  கட்சி.  ஷு  மாட்டி,  காலுக்குக்  காப்புக்  கட்டிக் கொண்டு கைக்கு க்ளவுஸ் அணிந்து யூனியன் கிளப்பில் ஆடுகிற பணக்காரக் கிரிக்கெட் அவனுடையது. நெட் பிராக்டிஸுக்குக் கூட வெள்ளை பாண்ட்தான். மதுரையின் சித்திரை வெய்யிலில் ஸ்வெட்டர்  அணிந்து  ஆட  வருகிற  புரஃபஷனல்  அவன்.

அந்த  புரஃபஷனல், அமெச்சூர்த்தனமாக நடந்து கொள்ளும் தருணங்கள் சில உண்டு. அது எங்கள் முன் மைதிலி பிரசன்னமாகும் நிமிடங்கள். மைதில் எங்கள் பள்ளியின் ஒரே கிளியோபாட்ரா. சீஸர், ஆன்டனி, அகஸ்டஸ் ஃப்ரூட்டஸ், காஷியஸ், பாம்ப்பே  என்று  ஏகப்பட்ட  ஹீரோக்களுக்கு நடுவே தலைநிமிர்ந்து நடந்து கொண்டிருந்த ஒரே பெண்பிள்ளை. அந்தத் தலை நிமிர்விற்குக் காரணம், அவளுடைய அப்பா. வெள்ளைக்காரனுடைய ராணுவத்தில் கர்னல், பிரிகேடியர் என்ற உயர்ந்த பித்தளைகளை அணிந்து மெருகேற்றிய மனிதர். எங்கள் பள்ளியை நிர்வகித்து வந்த செகரட்டரி,  ஆண்,  பெண்  பேதம்  வெறும்  அனாடமி  விஷயம்  என்று  நம்புகிறவர்.

மைதிலி  அதை  அடிக்கடி  நிரூபிப்பாள்.  ஆண் பிள்ளைகளைப் போன்றே கிரிக்கெட் விசிறி. மட்டையை எடுத்துக்கொண்டு ஆடுவது கிடையாதே தவிர லெக் ஸ்பின்னிற்கும்  ஹுக்ளிக்கும்  வித்தியாசம்  தெரிந்த பெண். பிரேயர் மணி அடிக்கும் வரை நாங்கள் தட்டிக் கொண்டிருக்கும் ஓசிக் காஜியின் போது, டேக்கன் இந்த ஹாஃப் வாலி,  டேர்ன்  டு  ரன்னிங்  காமெண்டரி  கொடுக்கும்  நிபுணி.

இவளுடைய இங்கிலீஷை அடிக்கடி அமெச்சூர்த் தனமாக மட்டம் தட்டிக் கொண்டிருப்பான்  மகேந்திரன்.

“ மைதிலி,  புல்லாங்குழல்  ஏன்  நீளமா  இருக்கு  தெரியுமா ? ’‘

“ தெரியாதே, ஏன் ? ”

“ அது தான் புல் long குழலாச்சே ! ”

மைதிலி மெல்ல முறுவலித்தாள்.

“ இதெல்லாம் ஜோக். நாமெல்லாம்  சிரிக்கணுமாண்டா. ஹா ஹா ! ” என்றான் சுப்புணி  என்னைப்  பார்த்து.

“ போடா  அழுமூஞ்சி,  உங்கிட்ட  யார்ரா  சொன்னா ? ”

“ யார் அழுகுனின்னு ஸ்கூல் முழுக்கத் தெரியுமே… முட்டியில செமத்தியா வாங்கிட்டு,  எல்.பி.  இல்லைன்னு  அழுதது  யார்ரா  நானா ? ”

மைதிலி  இதற்கும்  சிரிப்பாள்.

“ உன் ஆத்தங்கரை கிரிக்கெட்டை விட இது ஒண்ணும் மட்டமில்லை ? ”

“ அதையும்தான் பார்த்திடுவோம் ! ”

பள்ளியின் ‘ இன்ட்ராம்யூரல் ’ கிரிக்கெட் போட்டி வந்தது. மொத்த பள்ளியும் நான்காய்ப் பிரிந்து மோதிக் கொள்ளும் வசந்த உற்சவம். டீமில் இடம் கிடைப்பது பூர்வ புண்ணியம் ;  பெரிய அதிர்ஷ்டம். கிடைத்த சாதனை பண்ணிக் காட்டிக் கொண்டால் டிஸ்ட்ரிக்ட்  லீக்  நாக் அவுட் வரை கிடுகிடுவென்று முன்னேறி விடலாம். அப்புறம் அண்டர்  நைன்டீன்  டெஸ்ட்  ரஞ்சி  டிராபி,  இந்தியன் டீம் !  கைக்கு எட்டுகிற தூரத்தில் கனவு !

எங்கள் பிராண சிநேகிதத்தைப் பார்த்துச் சிரித்த விதி இந்த இடத்தில் குறும்பு செய்தது. எனக்கும் சுப்புணிக்கும் இடம் கிடைத்தது. ஆனால், எதிர் எதிர் டீமில் !  என் டீமிற்குத்  தலைவன்  மகேந்தி. எங்கள் டீமில் மட்டையடி மன்னர்கள் எக்கச்சக்கம். எனக்கு ஆறாவது இடம். இரண்டும் கெட்டான் இடம். முன்னால் போனவர்கள் பிளந்து கட்டியிருந்தால் ஆறாம் மனிதன் செஞ்சுரியே போட்டாலும், சீக்கிரம் வந்து தொலைடா முண்டம் என்று கதறுவார்கள். ஆறாவது மனிதன் பௌலரும் இல்லை. பேட்ஸ்மேனும் இல்லை.  உப்புக்குச்  சப்பாணி.

எங்கள்  குழு  பைனல்ஸ்க்கு  வந்துவிட்டது.  எதிரே  நிற்பது  சுப்புணி  டீம்.

மட்டையடி மன்னர்கள் இறங்கினார்கள். போன ஜோரில் திரும்பி வந்தார்கள். மளமளவென்று மூன்று விக்கெட்டுகள் விழுந்து விட்டன. எல்லாம் சுப்புணி கைங்கர்யம். அதில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்த பந்துகளில். ஹாட் டிரிக் சான்ஸ். அடுத்த பந்தில் விக்கெட் விழுந்தால் அது ஓர் அற்புத சாதனை. பள்ளிக்கூட கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய ரிக்கார்ட். சுப்ரமணி வாழ்க்கையில் திருப்பு முனை. இந்தத் தருணத்தில்  மகேந்தி  என்னிடம்  வந்தான்.

“ கிளம்பு. ”

“ எங்கே ? ”  என்றேன் அப்பாவித்தனமாக.

“ பிட்சுக்குப் போடா ?  டூ  டௌன்  இறங்கு ! ”

“ என்ன விளையாடறியா ?  நான்  ஆறாவது . ”

“ அவன் என்னென்னமோ பந்து போடறாண்டா ! ஏதோ மந்திரம் சொல்லிட்டுப் போடறான். சரியான வெறியில் இருக்கான்.  அவனை  ஃபேஸ்  பண்ண  நீதான் சரி. ”

“ நான்  மாட்டேன்பா ! ”

“ தோலை உரிச்சுடுவோன் ராஸ்கல் !   போய் விளையாடுறா ! அவன் மட்டும் ஹாட்ரிக் எடுத்துட்டானோ,  நம்ப  மானமே போச்சு . ”

தமிழ் சினிமா போல், நட்புக்கும் கடமைக்கும் போராட்டம். நான் மானம் காக்க மட்டையேந்திப் புறப்பட்டேன். மனத்துக்குள் ஒரே உதறல். இதயம் வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

கெத்தாக, கிரீஸில் போய் நின்று கார்ட் கேட்டேன். ஆஃப் அண்ட் மிடில் கோடுகள் கிழித்துக்  கொஞ்ச நேரம் கடத்தினேன். உடம்பை இடமும் வலமும் வளைத்து, உடற்பயிற்சி செய்வது போல் பந்தா பண்ணிக் கொண்டேன். திரும்பிப் பார்த்தேன். மூன்று ஸ்லிப். ஒரு கல்லி. ஒரு பார்வேட் ஷாட் என வியூகம், என்னைப் பயமுறுத்துவதற்காக எதிரிகள்  நெருங்கி  வந்து  நின்று  கொண்டனர்.

எதிர் முனையில் சுப்புணி தடதடவென்று ஓடி வரத் தொடங்கினான். அவன் கூடவே ‘ ஹோ ’ என்று கூட்டத்தின் சத்தமும் ஓடி வந்தது.

என்ன நடந்தது என்று எனக்கு இன்றும் தெரியாது. தற்காப்பு உணர்ச்சியா, அனிச்சை செயலா என்னெவென்று தெரியாத ஓர் உணர்ச்சியில் பக்கத்தில் வந்த பந்தைக் கண்ணை மூடிக்கொண்டு விளாசினேன். மிட் விக்கெட் பக்கமாகப் பறந்து பவுண்டரியின் பக்கத்தில் போய் விழுந்தது. அவ்வளவுதான் !  புளிய மர நிழலில் – அதுதான் எங்கள் பெவிலியன் – ஒரே உற்சாகம். காலரியில் இருந்து மைதிலி ஓடி வந்தாள். இன்னும் இரண்டு பேர் பின்னாலேயே வந்தார்கள். கை குலுக்கல்கள். கட்டித் தழுவல்கள். ஒரு தற்காலிக களேபரம்.

சுப்ரமணியனுடைய ஹாட்ரிக், டிஸ்ட்ரிக்ட் லீகில் ஆடும் வாய்ப்பு, மைதிலியினுடைய பிரேமை, மகேந்தியிடம் போட்ட சபதம் எல்லாவற்றையும் என்னுடைய குருட்டாம் போக்கு விளாசல், தூக்கி தொலைவில் எறிந்துவிட்டது.

அடுத்த நாள் ஆற்றங்கரையில் எனக்குச் சீட்டு கிழித்து விட்டான் சுப்புணி. ‘நீயெல்லாம் பெரிய பிளேயர்பா’ என்ற எகத்தாளம் வேரு. தெரு டீம்காரர்கள் கொம்பில் ஏறிக் கொண்டார்கள். அத்தனை நாள் நான் அவர்களிடம் ஒட்டாததால் என்னைச் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள்.

எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. உலகமே என்னைக் கைவிட்ட மாதிரி பிரமை. என்னுடைய கிரிக்கெட் கனவுகளுக்குக் கதவு சாத்தப்பட்டு விட்டன. வீட்டிலேயே அடைந்து கிடக்க ஆரம்பித்தேன். விவரம் தெரியாமல், அம்மா வேறு, “ விளையாடப் போகலையாடா ? ”  என்று  கிண்டிக்  கொண்டிருந்தார்கள்.

அப்படி வீட்டிற்குள் அடைந்து கிடந்த ஒரு மாலைப் பொழுதில் தான் அந்தப் போஸ்டரைப் பார்த்தேன். எங்கள் வீட்டிற்கு எதிரே நெடுநெடுவென்று ஒரு மதில். ஏதோ ஒரு அரசாங்கக் கட்டிடத்தை அணைத்துக் கொண்டு ஓடுகிற அரண். நகரில் நடக்கப் போகும் சினிமா, நாடகம், இசைக் கச்சேரி, அரசியல் கூட்டம் எல்லாவற்றையும் இலவசமாக அறவிக்கும் சுவர். அதில்தான் அந்தப் போஸ்டரைப் பார்த்தேன்.

‘உலகத்துத் தீமைகள் அனைத்திற்கும் தீமூட்ட உன் தலைவனது கரங்கள் வலுவற்று இருக்கலாம். ஆனால் உனக்கு அடிமை விலங்கிடும் ஹிந்திக்குத் தீ மூட்ட அவை துவளப் போவதில்லை. ’

‘ தம்பி வா ’  என்ற  அந்த  அழைப்பு என்னைத் தனிப்பட நேரில் சந்தித்துக் கூப்பிட்ட மாதிரி இருந்தது. அடிமை என்ற வார்த்தை என் சிந்தனையைச் சீண்டிற்று. எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது. ஏதோ ஓர் அடிமை !  எச்சில் தாம்பூலத்தை ஏந்திப் பிடித்துக் கொள்ளும் அடைப்பக்காரன் !  விக்கெட்டை விட்டுக் கொடுக்கும் விசுவாசமான வேலையாள். எத்தனாவது ஆளாக இறங்கச் சொன்னாலும் எதிர்க் கேள்வி கேட்காமல் மட்டையை எடுத்துக் கொண்டு போகிற கொத்தடிமை !

அடிமை விலங்கை எப்படி உடைக்கிறார் தலைவர் என்று பார்க்கிற ஆர்வத்தோடுதான் அந்தக் கூட்டத்திற்குப் போனேன். நிறைய பேசினார்கள். கவிதை மாதிரி அழகாக இருந்தது. கொஞ்சம் புரியாமல் இருந்தது. புரிந்த வார்த்தைகள் ரத்தத்தைக் கொதிக்க வைத்தன.

பேச்சு முடிந்ததும் ஊர்வலம் கிளம்பிற்று. கலெக்டர் ஆபீஸ் வரை போய் சட்டத்தை எரிக்கப் போகிறார்கள் என்று சொன்னார்கள். ஊர்வலத்தோடு நானும் போனேன். சின்னப் பையன் என்பதால் முன்னால் போகச் சொன்னார்கள்.

வடக்கு மாசி வீதி வந்ததும் போலீஸ்காரர்கள் ஊர்வலத்தை நிறுத்தினார்கள். பின்னால் இழுத்துச் சில சின்னத் தலைவர்கள் போலீஸோடு பேசினார்கள். வாக்குவாதம் பலத்தது. கைகலப்பாக மாறியது. கம்பைச் சுழற்றிக் கொண்டு வரும் காக்கிச் சட்டைகளைக் கண்டு ஊர்வலம் கலைந்தது. தாறுமாறாக ஓடிற்று. முன்னால் நின்று கொண்டிருந்த என்னைத் தள்ளிக் கொண்டு சில பேர் ஓடினார்கள். பின்னாலிருந்து முன்னால் வர நினைத்தவர்கள் எதிர்த்திசையில் தள்ளினார்கள். எதிர்பாராத நிமிஷத்தில் என் முதுகிலும் முழங்காலிலும் அடி விழுந்தது. ‘ அம்மா ! ’ என்று அலறிக் கொண்டு ஓடத் துவங்கினேன். நெரிசலில் சிக்குண்டு கீழே விழுந்தேன். என்னைத் தாண்டிக் கொண்டு  திமுதிமுவென்று  பலர்  ஓடினார்கள்.

கண்ணைத் திறந்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலை நகர்த்த முடியவில்லை. கல் போல் கனமாக ஒரு கட்டு. இடது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு பிளாஸ்திரி. சுற்றிலும் கட்சிக்காரர்கள். தெரிந்த முகமாக யாரும் இல்லை. ஏன் என்னு தெரியாமல் அழுதேன். விட்டிற்குப் போக வேண்டும் என்று விசும்பினேன். விலாசம் வாங்கிக் கொண்டு ஒருவர் அப்பாவை அழைத்து வரப் போனார்.

மத்தியானம் தலைவர் வந்தார். பரிவாகப் பேசினார். பயப்படத் தேவயில்லை என்று ஆறுதல் சொன்னார்.  அடிமை  விலங்கை ஒடிப்பதன் ஆரம்பக் கட்டம்தான் காலைக் கட்டிப் போடுவது என்று விவரம் சொன்னார். யாரோ போட்டோ எடுத்தார்கள். மறுநாள் பேப்பரில் நான் பிரசுரமானேன்.

காயங்கள் சீக்கிரம் ஆறிவிட்டன. ஆனால் மனத்தில் வன்மம் பெரிதாக வளர்ந்துவிட்டது. அன்றைக்கு நடுரோட்டில் நான் முழங்காலிலும் முதுகிலும் வாங்கிய அடிதான், நான் வாழ்க்கையில் முதன்முதலாக வாங்கிய அடி. அப்பா என்னை அடித்து வளர்த்ததில்லை. அறைந்துவிடுவேன் என்று பயமுறுத்தலாகக் கையை ஓங்கியதுகூட இல்லை. ஆனால் அரசாங்கம் என்னை அடித்துவிட்டது. நட்ட நடு ரோட்டில், பட்டப் பகலில்.

பழி வாங்க நான் காத்துக் கொண்டிருந்தபோது தேர்தல் வந்தது. அதற்குள் நான் கல்லூரி  வாசலை  மிதித்திருந்தேன். நான் பேசினால், என்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்பதற்கு, ஜனஙகள் தயாராக இருந்தார்கள். ஆனால் எனக்குக் கட்சிக்காரர்களைப் போல் அலங்காரமாகப் பேச வரவில்லை. அடிபட்ட அந்தத் தினத்தை நினைத்துக் கொள்வேன். ஆஸ்பத்திரியில் அநாதையாகக் கிடந்ததை நினைத்துக் கொள்வேன். அழுகையும் கோபமுமாகப் பெருகும்.

அவர்களுடைய அலங்கார வார்த்தைகளை விட என் அழுகையில் அதிகம் சத்தியம் இருப்பதாகத் தலைவர் உணர்ந்தார். கேட்கிறவர்களின் உள்ளத்தை இது பலமாகத் தொடும் என்று தீர்மானித்தார். நான் அதிகம் கூட்டங்களில் பேச வேண்டும் என்று ஆணையிட்டார். தலைவர்கள் என் வீட்டிற்கு வந்து  என்  அப்பாவிடம் அனுமதி கேட்டனர். கிரிக்கெட் டீமில் ‘ யாரோ ’ வாக இருந்த நான் இப்போது ஒரு முக்கியமான ஆள் என்று மனது சிலிர்த்தது.

இங்கேதான் என் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. மெல்ல மெல்ல நகர்ந்து இன்று என் முப்பத்தி ஆறாவது வயதில் நான் ஒரு எம்.எல்.ஏ இன்னும் இரண்டு வருடத்தில் அமைச்சராக ஆகிவிடுவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இப்படித்தான், அநேகமாக நிகழ்கிறது. ஒரு கதவு மூடிக் கொள்ளும்போது இன்னொரு வாசல் திறந்து கொள்கிறது. பெரும்பாலும் தற்செயலாக.

எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்.

( குமுதம் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.