இரும்பாலான வாசற் கதவுச் சிணுங்கித் திறந்தது. சாப்பிட உட்கார்ந்தவன் எழுந்து கை கழுவிக் கொண்டு எட்டிப் பார்த்தேன். வெளியில் அக்னி வெயில் பொலிந்து கொண்டிருந்தது. அந்த வெயிலில் நனைந்து கொண்டு ஒரு பெண்மணி. கனமான உடல். கையில் கனமான இரு பைகள். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று எவரும் எளிதாகக் கணிக்க முடியும். கதவைத் திறந்தேன்
”வணக்கம் சார்! வீட்டில் அம்மா இல்லையா?” என்று விசாரித்தார். விற்பனைப் பிரதிநிதியோ என சந்தேகித்தேன்
என் மெளனத்தைப் புரிந்து கொண்டவர் போலப் பேச ஆரம்பித்தார். “தேர்தல் கமிஷனிலிருந்து வருகிறேன். பூத் ஸ்லிப் கொடுக்கணும்”
உள்ளே அழைத்து உட்காரச் சொன்னேன். அக்னி வெய்யிலின் கொடுமையோ, அல்லது அப்படி அமரச் சொல்பவர்கள் அபூர்வமோ, உடனே உட்கார்ந்து கொண்டார். உஸ்ஸ்… என்று பெருமூச்சு விட்டார். வெயிலின் கொடுமை நிழலில் தெரியும்.
குளிர்ந்த மோரைக் குவளையில் ஊற்றி நீட்டினேன். வேண்டாம் என்று உதடும் நன்றி என்று கண்களும் சொல்லின. தலையை சாய்த்துக் கொண்டு அவர் அருந்திய போது தொண்டைக் குழிக்கு மேலிருந்த கோலிக் குண்டு, தட்டி எழுப்பப்பட்ட பந்தைப் போல தாழ்ந்தும் உயர்ந்தும் ஒரு தாளகதியில் இயங்கியது. தைராட் பிரச்சினை இருக்கும் என சற்றே தடித்திருந்த கழுத்து சொல்லியது.
அவர் பட்டியலில் தேடி சீட்டுக்களை கிழித்து நீட்டினார். அதை வாங்கிக் கொண்டே, அவரை நிழலில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கும் நோக்கோடு, “அரசு ஊழியரா நீங்கள்?” எனக் கேட்டேன். “இல்லை சார் ஆசிரியர்!’ அது ஆச்சு 25 வருஷம் என்றவர் பள்ளியின் பெயரையும் சேர்த்துச் சொன்னார். அது எங்கள் பகுதியில் உள்ள பள்ளி இல்லை. வேறொரு புற நகர்ப் பகுதியில் இருந்தது ” (செகண்ட்ரி கிரேட்) ட்ரெய்னிங் முடிச்சுட்டு சேர்ந்தேன். அப்பறம் கரஸ்ல, எம்.பில் வரைக்கும் முடிச்சிட்டேன் சார்!” என்றார் பெருமிதத்தோடு. “ரொம்ப நேரமாக அலைகிறீர்களா?” என்றேன் புன்னகைத்தார். உலர்ந்த புன்னகை. “ எனக்கு இந்த ஏரியா பழக்கமில்ல. சார்! ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” என்றார் கூடவே. “உங்க தெருவிற்கெல்லாம் பேர் வைக்கக் கூடாதா? நம்பர் கூட வரிசையா இல்லை. அது பரவாயில்லைசார், பல வீட்டுக் கதவுகளில் நம்பர் கூட இல்லை சார்!. பத்திரிகையாளர்கள்தானே இந்தக் குடியிருப்பில் இருக்கீங்க. எதெல்லாமா சரி இல்லைனு எழுதறீங்க, இதையும் சரி செய்யலாம்தானே சார்?” புன்னகைத்தேன். உலர்ந்த புன்னகை. “கோவிச்சுக்காதீங்க சார், லிஸ்டல தெருப்பேர் இல்ல. டோர் நம்பர்தான் இருக்கு.. கொஞ்சம் சிரமமாயிருச்சு” விடை பெற்றுக் கொண்டு எழும் போது, ”மறக்காமல் போய் ஓட்டுப் போட்ருங்க சார்!” என்றார்.
அத்தனை நாள் அடித்த வெயில் அனைத்தும் கற்பனை என்பதைப் போலத் தேர்தல் நாளன்று பூமி குளிர்ந்து, வானிலை இதமாக இருந்தது.சாவடியில் ஏற்பாடுகள் செம்மையாகச் செய்யப்பட்டிருந்தன. வரிசையில் நிற்கத்தான் வேண்டியிருந்தது. ஆனால் கூட்டம் அதிகம் இல்லை. பத்து நிமிடத்திற்குள் கையில் மை வைத்து அனுப்பி விட்டார்கள்
இரவு. எதிரில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. ராஜேஷ் லக்கானி ஆங்கிலச் சொல் கலக்காமல் மழலைத் தமிழில் வாக்குப் பதிவு விவரங்களை வாசித்துக் கொண்டிருந்தார். பின் தங்கிய மாவட்டம் என்று சொல்லப்படும் தர்மபுரியில் 85% மழை வெளுத்து வாங்கிய திருவாரூரில் 78% இதமாக வெயிலடித்துக் கொண்டிருந்த, விவரம் தெரிந்த வாக்காளர்கள் நிறைந்த, வெள்ளத்தால் அன்றொருநாள் திணறிய சென்னையில் 60%
அதைக் கேட்ட நிமிடம் உச்சி வெயிலில் ஒவ்வொருவராக வீடு தேடிப் போய், பெற்ற பிள்ளையின் கல்யாணப் பத்திரிகை வைப்பது போல், சீட்டுக் கொடுத்த அந்த ஆசிரியை நினைவில் வந்து போனார். இனம் புரியாத ஒரு வருத்தம் இதயத்தில் கனத்து மறைந்தது.
இன்னும் என்னதான் வேண்டும் இந்தச் சென்னைவாசிகளுக்கு?